சினிமா
Published:Updated:

அண்டை வீட்டார்!

அண்டை வீட்டார்!
பிரீமியம் ஸ்டோரி
News
அண்டை வீட்டார்!

அண்டை வீட்டார்!

எதிர்பார்ப்பில் இருக்கும் பிறமொழிப் படங்கள்...

அண்டை வீட்டார்!

Lucifer

நடிகர்கள் இயக்குநர்கள் ஆகும் வரிசையில் லேட்டஸ்ட் வரவு மலையாள நடிகர் ப்ரித்விராஜ். அதுவும் முதல் படத்திலேயே லாலேட்டன் மோகன்லால். விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், மம்தா மோகன்தாஸ், சானியா ஐயப்பன் என மல்ட்டி ஸ்டாரர் கூட்டணியில் களம் இறங்கவிருக்கிறது ‘லூசிஃபர்.’ லெஃப்ட் ரைட் லெஃப்ட், கம்மார சம்பவம் போன்ற படங்களுக்குக் கதை எழுதிய முரளி கோபியின் எழுத்தில் உருவாகிறது.  அரசியல் த்ரில்லரான ‘லூசிஃபர்’ அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகவிருக்கிறது. இதுபோக இந்த ஆண்டு இறுதியில் ‘ஒடியன்’ என்ற ஃபேண்டஸி படம் ஒன்றிலும் நடிக்கிறார் மோகன்லால். உடலமைப்பை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்ட ஒருவனாக இதில் வருகிறார். புதுமுக இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு சாம் சி எஸ் பின்னணி இசையமைத்திருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் டீசரும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

அண்டை வீட்டார்!

Thugs of Hindostan

1795-ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதற்கு எதிராக, குதாபக்ஷ் ஆஸாத் என்ற கொள்ளையர்களின் தலைவன் சிம்மசொப்பனமாக இருந்தான். அவர்களைத் தங்கள் வழிக்குக் கொண்டுவர, ஃபிராங்கி என்ற திருடனை அனுப்புகிறது கிழக்கிந்திய கம்பெனி.  300 கோடி பட்ஜெட்டில் ஃபிராங்கியாக அமீர் கான், குதாபக்ஷ் ஆஸாத்தாக அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க, கத்ரீனா கைஃப், ‘தங்கல்’ புகழ் ஃபாத்திமா சனா செய்க் என ஒரு பெரிய பட்டாளமே இதில் நடித்திருக்கிறது. ‘தூம் 3’ படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ‘சாய்ராட்’, புகழ் அஜய்-அதுல் இதற்கு இசையமைத்துள்ளனர். முதலில் பிலிப் டெய்லரின் ‘Confessions of a Thug’ என்ற நாவலின் தழுவல்தான் இந்தப் படம் என்று செய்திகள் வந்தன. ஆனால், இது முழுக்க முழுக்க வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு புனைவுக் கதை மட்டுமே என்று விளக்கம் தரப்பட்டது.

அண்டை வீட்டார்!

The Favourite

2000-ம் ஆண்டுக்குப் பின் வந்த இயக்குநர்களில் தன் ஒவ்வொரு படத்திலும் முத்திரை பதித்த இயக்குநர்கள் வெகு சிலர் மட்டுமே. டாக்டூத், தி லாப்ஸ்டர், தி கில்லிங் ஆஃப் ஏ சேக்ரெட் டீர் படங்களை இயக்கிய யார்கோஸ் லாந்திமோஸ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் படம் ‘தி ஃபேவரைட்.’ 18-ம் நூற்றாண்டில் ராணி ஆன்னியின் குட் புக்கில் இருந்தவர் சாரா சர்ச்சில். எல்லாம் சுபமாகப் போய்க்கொண்டிருக்க, சாராவின் உறவினரான அபிகல் மாஷம் அங்கே வருவது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. பொறாமை, கோபம், வன்மம் எனச் சண்டையிட்டுக்கொள்கிறார்கள் சாராவும் அபிகலும். இறுதியில் என்ன நடக்கிறது என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக எடுத்திருக்கிறார் லாந்திமோஸ். சாராவாக ரேச்சல் வெய்ஸ், அபிகலாக எம்மா ஸ்டோன் என இந்தப் படம் முழுக்கவே பெண்கள் ராஜ்ஜியம்தான். ஏற்கெனவே திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்துவரும் இத்திரைப்படம் நவம்பர் மாதம் இறுதியில் வெளியாகவிருக்கிறது.

அண்டை வீட்டார்!

Zero

பவ்வா சிங்கிற்குப் பிரபல நடிகை ஒருவர் மீது காதல். பிரச்னை என்னவென்றால் பவ்வா குள்ள உருவம் கொண்ட மனிதர். ஆனால், காதலுக்குத்தான் இடம், பொருள் எல்லாம் தெரியாதே! ஷாருக்கான், கத்ரீனா கைஃப், அனுஷ்கா ஷர்மா, அபய் தியோல் ஆகியோரின் நடிப்பில் ‘தனு வெட்ஸ் மனு’, ‘ராஞ்சனா’ புகழ் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இப்படத்தை இயக்கியுள்ளார். பிரத்தியேக கிராபிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் ஷாருக்கானைக் குள்ள மனிதனாக மாற்றி படத்தில் உலாவ விட்டுள்ளனர். இதனாலேயே படத்தின் பட்ஜெட் 200 கோடியைத் தொட்டுள்ளது. சல்மான் கான், கஜோல், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, அலியா பட், கரிஷ்மா கபூர், ஜூஹி சாவ்லா, மாதவன் என ஒரு மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி சில காட்சிகளில் வருகிறார். அவரின் கடைசி படமாக இந்த ‘ஜீரோ’ இருக்கும்.

கார்த்தி, ர.சீனிவாசன்