
“இனிமே சும்மா இருக்கமாட்டேன்!”
தன் கருத்துகளை மறைக்காமல் தடாலடியாகப் பேசக்கூடியவர். தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிற சமயத்தில் தன் கட்சியை பலப்படுத்திக்கொண்டி ருக்கிறார். கூடவே பாலிவுட்டிலும் கால்பதிக்கவிருக்கிறார் இலட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர். அவரை சந்தித்தோம்.

“இப்போதுள்ள சினிமா உலகின் மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“இன்றைய சினிமா உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியை ஆச்சர்யமா பார்க்கிறேன். அப்போ என்னோட படங்கள்ல பல தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு பிரமாண்டமா செட் போடுவார்கள். இப்போ அசால்ட்டா கம்யூட்டர் கிராபிக்ஸ்ல அசத்திடறாங்க. இசைத்துறையில எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்துல பாடல் வரிகள் மனசுக்குள் பச்சக்குனு ஒட்டிக்குச்சு, இப்போ இசையே கட்டிங், பேஸ்ட்டிங்தான். இதுக்கு நடுவுல பாட்டு வரிகளை சரியா சொல்றவங்களுக்கு, போட்டி வெச்சுப் பரிசு கொடுக்கலாம். அப்போ எல்லோருமே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படமெடுத்தோம். இன்னிக்குக் கதைக் களத்தைவிட டிஜிட்டல் தொழில்நுட்பம் தெரிந்தால்போதும் என்று நினைத்துக் கொண்டு சில கோடிகளைச் செலவழித்து சினிமா எடுக்கிறார்கள், கடைசியில் ரிலீஸ் செய்யும்போது படத்தை வியாபாரம் செய்யமுடியாமல் தவிக்கிறார்கள். இன்னிக்கு இருக்குற சினிமாவிலே முன்னேற்றமும் இருக்கு; தடுமாற்றமும் இருக்கு. பெரிய நடிகர்களுக்கு சம்பளம் பலகோடி கொடுக்குறாங்க. அவங்கள வெச்சுப் படமெடுத்த தயாரிப்பாளர்களோ தெருக்கோடியில் நிற்கிறாங்க.”

“இந்தி மொழி கத்துக்குறீங்கனு கேள்விப்பட்டோம்.பாலிவுட் சினிமாவுக்குத் தயாராகிட்டிருக்கீங்க போலிருக்கே?”
“இந்தியில நான் இயக்கும் படத்துக்காக ஆறுமாசமா இந்தி வகுப்புக்குப் போய் அந்த மொழியைக் கத்துட்டு வர்றேன். இப்போகூட அந்த க்ளாஸை கட் அடிச்சிட்டுதான் உங்ககூடப் பேசிக்கிட்டிருக்கேன். தமிழ்சினிமா, மொழியைத் தாண்டி அடுத்த கட்டத்துக்குப் போகணும். ‘மோனிஷா என் மோனலிசா’ படத்தையே இந்தியில் கொண்டுபோக முயற்சி பண்ணுனேன். படத்துல எல்லோரும் புது முகங்களா இருந்ததால அங்க ரிலீஸ் பண்ணணும்னா 1000 காப்பி பிரின்ட் போடணுங்கிற சூழல். அப்போ ஒரு பிரின்ட் விலை 60,000 ரூபாய். படத்துக்குச் செலவு பண்ணி பிரின்ட்டுக்கும் செலவு பண்ணி மொழி தெரியாத இடத்துல போய் ரிஸ்க் எடுக்க கஷ்டமா இருந்தது. ஆனா, இன்னிக்கு எல்லாமே டிஜிட்டல் ஆகிடுச்சு. க்யூப் சினிமாவுல ஒரு வாரத்துக்குப் பணத்தைக் கட்டி ஒரு முயற்சி பண்ணலாம்னுதான் இந்த முடிவு எடுத்தேன். இந்தியாவில் இந்தி பேசுற மக்கள்தொகை அதிகம், சினிமா மார்க்கெட் பெருசு. அதனாலே அங்கே தமிழ்சினிமாவை ஜெயிக்க வைக்கணும்னு போயிருக்கேன். இந்தி சினிமா ரசிகர்களுக்கு லவ் அண்டு மியூசிக் மேல் உயிர். அதைத்தான் என் படத்துல காட்டப்போறேன்.”

“ஒருகாலத்தில் ரஜினி -கமல் படங்களுக்கே வசூலில் சவால் விட்டவை உங்கள் படங்கள். திரும்பிப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?”
“நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துல படிச்சிக்கிட்டிருந்தப்போ சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும், உலகநாயகன் கமலுக்கும் பயங்கரமான ரசிகன். கடந்த 40 வருஷமா தன்னோட சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைத் தக்கவெச்சுக்க அவர் போராடுறதை ஆச்சர்யமா பார்த்துட்டிருக்கேன். கமலும் நடிப்புல முதல்மாடி, ரெண்டாவது மாடின்னு எல்.ஐ.சி உயரத்தைத் தாண்டிப் போயிட்டிருக்கார். எல்லோரும் எவ்வளவோ போராடுறாங்க. அவங்க முன்னாடி நான் ஒண்ணுமே இல்லை. அவங்க எல்லாம் பெரிய ஸ்டார்; அதனால ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடலாம். நான் சாதாரண ஆளு. விரலுக்கு ஏத்த வீக்கம்னு நினைச்சுக்கிட்டு கையேந்தி பவன்ல சாப்பிடற சாதாரண மேக்கர். நான் படிச்ச காலேஜ்ல, நான் வந்த ரயில்லன்னு நான் எங்கெல்லாம் படம் எடுக்கணும்னு நினைச்சேனோ அங்கெல்லாம் படமெடுத்தேன். புதுமுகங்களை வெச்சுதான் பண்ணணும்னு நினைச்சேன்; பண்ணுனேன். என் ஊர்லயே தயாரிப்பாளர் பிடிப்பேன்னு நினைச்சேன்; பிடிச்சேன். இப்படி எல்லாமே சொல்லிச் சொல்லி அடிச்சேன். காரணம், எனக்குள்ள இருந்த நம்பிக்கை 99% அல்ல; 100%. தன்னம்பிக்கை, தன்முனைப்பு, தடையில்லா முயற்சி, தளராத மனம். இந்த நாலு ‘த’வும் இருந்தால் வெற்றியைக் கடவுள் தந்துகிட்டே இருப்பார்.”

“தி.மு.க. ஆதரவு, எதிர்ப்பு என்று இரண்டு நிலையிலும் இருந்திருக்கீங்களே, அதற்கான அடிப்படை என்ன?”
“மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு தீர்க்கதரிசி. அவர் என்னை ‘அரசியலுக்கு வா’ன்னு கூப்பிட்டாரு. நான் அப்போ அவரை நல்ல நடிகனா, ஒரு நல்ல மனிதனா, ஒரு மாமேதையா பார்த்தேன். ஆனா ஒரு தமிழனா அவரைப் பார்க்க முடியலை. அவர் தமிழன் இல்லாத காரணத்தால தலைவரா ஏத்துக்க முடியலை. எனக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்தான் பிடிக்கும். அவரோட தீவிர ரசிகன். ஆனால், மக்கள் திலகம் தி.மு.க-வை விட்டுப் போகும்போது அவர் பின்னால் போக முடியாமல் என்னைக் குடும்பம் கட்டிப்போட்டது. `நீ ஒரு தமிழன், கலைஞர் ஒரு தமிழன். ஒரு தமிழன் பின்னால்தான் நீ நிற்க வேண்டும். நீ போகக்கூடாது’ன்னு வீட்டில் தடுத்தாங்க அதனால நான் நின்னுட்டேன். ஆனால் இன்னிக்கு அதுக்காக வருந்துறேன். மறைந்துவிட்ட மாவீரன், தமிழ்க் குலப்புலி, புறநானூற்றுப்புலி பிரபாகரனுக்குக் கரம் கொடுத்து உதவுனது எம்.ஜி.ஆர் மட்டும்தான். என் குடும்பம் எனக்குக் காட்டிய பாரம்பர்யம் தப்புன்னு இப்போ உணர்கிறேன்
முன்பு தி.மு.க, காங்கிரஸுடன் கூட்டணி வெச்சிருந்தப்போ. இவங்க நினைச்சிருந்தா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க முடியும். என்னோட இலட்சிய தி.மு.க. சார்பில் 225 தொகுதியில தி.மு.க வெற்றிக்காகப் பிரசாரம் செய்தேன். தி.மு.க ஜெயிச்சவுடனே, என் கட்சி சார்பா எனக்கு மாநில சிறுசேமிப்புத் துணைத் தலைவர் பதவி கொடுத்தார், கலைஞர்.

‘எம்.பி-க்கள் எல்லோரும் ராஜினாமா செய்யப்போறோம்னு சொன்னாலே காங்கிரஸ் அரசு ராஜபக்சேவுக்கு ஆதரவு கொடுக்காது. தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை அழிக்கணும்னு போடுற திட்டத்துக்குத் தமிழக அரசு துணை போனால் நீங்க தமிழினத் தலைவர்ங்கிற பெயரை இழந்திடுவீங்க’னு அனைத்துக் கட்சிக் கூட்டத்துல தைரியமா சொன்னேன். `டி.ராஜேந்தர் பேச்சு ரொம்ப உணர்ச்சிவசப்பட வைக்குது. எம்.பி-க்கள்கிட்ட ராஜினாமாக் கடிதம் வாங்குறேன்’னு சொன்னார் கலைஞர். வாங்குன கடிதத்தை வெச்சுக்கிட்டு சரியான வியூகத்தைப் பயன்படுத்தியிருந்தால் இன்னைக்கு ஈழத் தமிழர்கள் காப்பாத்தப்பட்டிருப்பார்கள். போர் நிறுத்தம் நடக்கணும்னு அண்ணா சமாதியில போய் உண்ணா விரதம் இருந்தார்்.
உண்மையில் போர் நிறுத்தம் நடந்ததா? இல்லை. ராஜபக்சே கைகளில் படிந்த அதே ரத்தக்கறை, கலைஞரின் கைகளிலும் படிந்திருந்தது. இலங்கைத் தமிழரை அழித்த காங்கிரஸோடு கைகோத்த தி.மு.க-விற்கு அதில் பங்குண்டு. ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரஸை, நான் பதவியில் இருந்துகிட்டுச் சாடுவது சரியா இருக்காதுன்னு என்னோட பதவியை ராஜினாமா செய்யப்போனேன். என் வீட்டுக்கு ஆற்காட்டாரை அனுப்பி வைத்தார். நான் தவிர்த்தேன். அதன்பிறகு கலைஞரே எனக்கு போன் செய்தார். நான் எடுக்கவில்லை.”
“காங்கிரஸ் எதிர்ப்புதான் உங்கள் தி.மு.க. எதிர்ப்புக்கு அடிப்படையா?”
“நான் காங்கிரஸுக்கு எதிரா தொடர்ந்து குரல் கொடுத்திட்டு வர்றேன். `பாரதப் பிரதமரா இருந்த இந்திரா காந்தி மரணத்திற்குக் காரணமாக இருந்த சீக்கியர்களை மன்னிச்சிருக்கீங்க. ஆனா ராஜீவ் காந்தி கொலைக்கு மறைமுகமாக காரணமா இருந்த தமிழர்களை மட்டும் ஏன் பழிவாங்கணும்னு நினைக்கிறீங்க?’னு சோனியா காந்தியிடம் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். தமிழர்கள் மேல அவ்ளோ வன்மம், பழிவாங்கும் உணர்வு. அதனாலதான், ராஜபக்சேவின் சிங்கள அரசோடு கைகோத்து அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது. அந்தப் பாவம் காங்கிரஸுக்கும் சேரும், தி.மு.க-வுக்கும் சேரும். பா.ஜ.க மீது விமர்சனங்கள் இருக்கு. ஆனா காங்கிரஸ்மீது எதிர்ப்பு இருக்கிற அளவுக்கு, பா.ஜ.க மீது எனக்கு விமர்சனங்கள் இல்லை. இப்போ ‘ஐயோ மதவாதம்’னு கூச்சல்போடுற தி.மு.க, அப்போ வாஜ்பாய் காலத்தில ஏன், பா.ஜ.க கூட கூட்டணி வெச்சது?”

“உங்கள் திரையுலக நண்பர் விஜயகாந்த் அரசியலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்துவிட்டதே?”
“கடந்த தேர்தலில் அந்த அம்மா மறுபடியும் ஜெயிக்கணும்னா தி.மு.க வாக்குகளை உடைக்கணும்ன்ற நிலை இருந்தது. அதை மக்கள் நலக்கூட்டணிங்கிற பேர்ல விஜயகாந்த் செய்தார். அது எவ்வளவு பெரிய தப்பு. வைகோ ‘மக்கள் நலக்கூட்டணி’ன்னு ஒண்ணு ஆரம்பிச்சு, அதுக்கு விஜயகாந்த் தலைமை தாங்கப்போறார்னு என்னையும் கூப்பிட்டாங்க. அப்போ ‘இது ஒரு ‘தற்கொலை முயற்சி’ன்னு சொன்னேன். அன்றைக்கு விஜயகாந்த் எடுத்த தவறான முடிவுதான் அவரோட கட்சியை அழிச்சுடுச்சு. தமிழ்நாட்டுக்கே ஆபத்தாகிடுச்சு. இப்போதுள்ள சூழ்நிலையில் அவர் உடல்நலம்பெற வாழ்த்துகிறேன்.”
“இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“ஐந்நூறு, ஐயாயிரம்னு வாக்காளர் ஓட்டை விக்கிறான், அரசியல்வாதி நாட்டை விக்கிறான். எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து வளர்த்த கட்சி, அம்மா கட்டிக்காத்த கட்சி. இன்னைக்கு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., டிடிவி-னு மூணு மூன்றெழுத்துக்குள் சிக்கிக் கிடக்குது. இன்று ஈ.பி.எஸ் முதல்வர். ஓ.பி.எஸ் பெரியம்மா தயவால் முதல்வரானார். சின்னம்மா முதல்வராக முடியாது என்பதால் ஈ.பி.எஸ் முதல்வரானார். யார் இந்த ஈ.பி.எஸ்? எம்.ஜி.ஆர் போல் பல படங்களில் நடித்தாரா, கதாநாயகியின் கரம் பிடித்தாரா, இவர் என்ன தியாகம் பண்ணினார்? அதிர்ஷ்டத்துல முதல்வராக இருக்கிறார். இவர்கள் தருகிற ஆட்சி எப்படி இருக்கும்?!”
“லட்சிய தி.மு.க சின்னமே இல்லாத சின்னக் கட்சி என்று விமர்சிக்கிறார்களே, டி.ஆர் சொல்லும் பதில் என்ன?”
“எங்களை விமர்சனம் செய்யுறதுக்கு எல்லோருக்கும் எல்லா உரிமையும் இருக்கு. நான் என்ன சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தொகுதியிலும் நின்னேனா, இல்லை நாடாளுமன்றத் தேர்தல்ல போட்டியிட்டேனா, இல்லை சின்னம்தான் வாங்கிட்டேனா? எங்கள் கட்சியை அங்கீகாரம் இல்லாத கட்சிதான்னு அவங்க சொல்றதுல என்ன தப்பு இருக்கு? எப்போதும் விமர்சனங்களைத் தாங்கணும். யதார்த்தம்னு ஒண்ணு இருக்கு. கலைஞர் அழைத்ததும் நான் நடத்திக்கிட்டிருந்த தாயக மறுமலர்ச்சிக் கழகத்தைக் கலைச்சுட்டு தி.மு.க-வில் சேர்ந்தேன். அதுக்குப் பிறகு வெளியே வந்து ஆரம்பிச்ச இலட்சிய தி.மு.க-வை முன்பு இருந்த அளவுக்கு வளர்க்க முடியலை.”
“திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் இலட்சிய தி.மு.க போட்டியிடுமா?”
“அன்றைய காலகட்டத்துல இறைவன் என்ன சொல்றானோ அந்தமாதிரி நடப்பேன். நிறைய தேர்தல்களில் எதுவும் செய்யாம சும்மா இருந்திருக்கேன். ஆனா, இனிமே சும்மா இருக்கமாட்டேன்!”
எம்.குணா, உ.சுதர்சன் காந்தி - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்