சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

ன்ஸ்டாகிராமில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் படையே வைத்திருக்கிறார் திஷா பட்டானி! 14 லட்சம் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் திஷாவின் ஃபிட்னெஸ் வீடியோக்களுக்கு லைக்ஸ் குவிகிறது. சல்மான்கானின் அடுத்த படமான ‘பாரத்’தில் திஷாதான் நாயகி. படத்தில் சர்க்கஸ் கலைஞராக நடிக்கவிருப்பதால், அதற்காக உடலை சூப்பர்ஃபிட்டாக மாற்றிக்கொண்டிருக்கிறார். ஃபிட்டானி!

கொல்கத்தாவில் உள்ள ‘நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜூரிடிகல் சயின்ஸஸ்’ என்ற கல்லூரியில் புதிதாக ஒரு படிப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ``An interface between Fantasy Fiction Literature and Law: Special focus on Rowling’s Potterverse’’ என்கிற இந்தக் கோர்ஸில் ஹாரிபாட்டர் நாவல்களில் இருக்கிற பிரச்னைகள் அடிப்படையில் சட்ட நுணுக்கங்கள், சிக்கல்கள் எல்லாம் கற்றுத்தர ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஹாரிபாட்டர் மாதிரி ஹரி படங்கள் பத்தியும் ஒரு கோர்ஸ் கொண்டுவாங்க!

இன்பாக்ஸ்

ன்னடத்தில் ஷிவராஜ்குமார் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘டகரு’. இதன் தமிழ் ரீமேக் உரிமையை ‘கொம்பன்’ இயக்குநர் முத்தையா வாங்கியிருக்கிறார். அதிரடி போலீஸ் த்ரில்லரான இப்படத்தில் விஷால் அல்லது கார்த்தியை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. காக்கி டாக்கி!

ஸ்வீடன் போட்டோகிராபர் செபாஸ்டியன் சர்டி, உலகிலுள்ள முக்கியச் சுரங்கங்களைப் புகைப்படம் எடுக்கும் பணியில் கடந்த பத்தாண்டுகளாக முயற்சி செய்து வருகிறார். அவற்றுள் சீனா, ரஷியா, கஜகஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் அடங்கும். இந்தியாவில் ‘நிலக்கரித் தலைநகர்’ என்று குறிப்பிடப்படும் ‘தன்பாத்’ பகுதியைத் தேர்வு செய்த சர்டி, நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்துச் சேகரித்துள்ளார். அவற்றை ஒருங்கிணைத்து, ‘பிளாக் டைமண்டு ( Black Diamond)’ என்று தலைப்பிட்டு, தனது பிரத்யேக புத்தகத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியிடவுள்ளார். இதனை, ‘கேரேர் வெர்லாக்’ எனும் ஜெர்மன் பதிப்பகத்தார் வெளியிடவுள்ளனர். வாழ்த்துகள் சர்டி!

இன்பாக்ஸ்

ந்தியத் திரையுலகில் பயோபிக்கைப்போல்விண்வெளிப் படங்களுக்கும்நல்ல வரவேற்பு கிடைக்கத்தொடங்கியிருக்கிறது.  தமிழில் ‘ஜெயம்’ ரவி நடிப்பில் ‘டிக் டிக் டிக்’ விண்வெளிப் படத்தைத் தொடர்ந்து, இந்தியில் மாதவன் மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் ‘சந்தா மாமா தூர் கே’ என்கிற படமும், தெலுங்கில் வருண் தேஜ் நடிப்பில் ‘அந்தராக்‌ஷ்யம் 9000KM/HR’ என்கிற படமும் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இதுபோக மங்கள்யான் விண்கலம் பற்றிய கதையில் அக்‌ஷய் குமாரும், ராகேஷ் ஷர்மா பயோபிக்கில் ஷாருக்கானும் நடிக்கவிருக்கிறார்கள். டாப்புல எகிறும்!

மிழர்களுக்கு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனே போர் அடித்ததாகச் சில விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இந்திக்காரர்கள் பொறுமைசாலிகள். 12வது சீசனில்தான் மொக்கை போட ஆரம்பித்திருப்பதாக விமர்சனம் பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். சல்மான்கானின் ஒரே மாதிரி காமெடி காம்பியரிங், உப்புச்சப்பில்லாத டாஸ்க்குகள், அதே பஞ்சாயத்துகள், போலியான சண்டைகள் என மக்களெல்லாம் மொத்தமாகத் திட்டித்தீர்க்க... டிஆர்பி சரியத்தொடங்கி பாதாளத்திற்குப் போயிருக்கிறது. சல்லுபாய்க்கே சரிவா!

சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் சுயசரிதை ‘நோ ஸ்பின்’ கடந்த வாரம் வெளியாகியுள்ளது. வார்னேவின் வாழ்க்கை, மார்க் நிகோலஸின் வார்த்தைகளில் படிப்பவர்களைச் சுழற்றியடிக்கிறது. குழந்தைகளுக்குக் கொடுத்த கஷ்டங்களால் தனக்கு ஏற்பட்ட குற்றவுணர்விலிருந்து, தான் கொண்டாடிய, நெகிழ்ந்த, வருந்திய சம்பவங்கள் அனைத்தையும் பேசியிருக்கிறார் வார்னே. அதேசமயம் தன் டிரேடுமார்க் ஸ்டைலில் பலரையும் போட்டுத்தாக்கியுள்ளது இந்தச் சுழல் சூறாவளி. அவர் வீசிய லெக் ஸ்பின்னில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், முன்னாள் பயிற்சியாளர் ஜான் புக்கனன் ஆகியோர்கூடத் தப்பவில்லை. சுத்துங்க எஜமான் சுத்துங்க!

``ராட்சசன்’’ வெற்றி பெற்றதில் உற்சாகத்தில் இருக்கிறார் இயக்குநர் ராம்குமார். அடுத்து தனுஷ் நடிக்க ஒரு ஃபேன்டஸி காமெடிப் படத்தை இயக்கும் முனைப்பில் இருக்கிறார். ‘முண்டாசுப்பட்டி’ படத்தின் அடுத்த பாகத்துக்கான வேலைகளையும் ஆரம்பித்திருக்கிறார். ராட்சச உழைப்பு!

இன்பாக்ஸ்

டுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்துவரும் வெனிசுலா நாட்டிலிருந்து, அந்நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பெரு நாட்டுக்கு அகதிகளாக இடம்பெயரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த அகதிகளை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி அவர்களுக்கான உதவிகளுக்கு ஏற்பாடு செய்யும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் நடிகை ஏஞ்சலினா ஜோலி. அகதிகளாக வருகிற மக்களை அன்போடு ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குபவர்களையும் மனதாரப் புகழ்ந்து பேட்டி கொடுத்திருக்கிறார். கடவுள் உள்ளமே...