
“அஜித் சார்... பிரியாணி செஞ்சு குடுங்க!”
ரீஎன்ட்ரிக்குத் தயாராகிவிட்டார் லைலா. விழா ஒன்றிற்காக மும்பையிலிருந்து சென்னை வந்தவரிடம் ஹலோ சொல்ல, “அட... நேர்ல வாங்க பேசலாம்” என்றழைத்தார்.

“எந்த மாதிரியான கதைகளைக் கேட்டுக்கிட்டிருக்கீங்க?”
“பெண்களை மையப்படுத்திய நல்ல படங்கள்ல நடிக்கணும். வெப் சீரிஸாக இருந்தாலும் அதில் நடிக்க ஆர்வமா இருக்கேன். இதுவரை ஜாலியான, துறுதுறுனு இருக்கிற கதாபாத்திரங்களில் நடிச்சதுனால, எனக்கு சீரியஸான ரோலோ, நெகட்டிவ் கேரக்டரோ பண்ண வராதுன்னு நினைக்கிறாங்க. எனக்கு நெகட்டிவ் ரோல்ல... வில்லியா நடிக்கணும்னு ஆசை இருக்கு.”
“இந்த பிரேக் டைம்ல எந்தளவுக்குத் தமிழ் சினிமாவோடு தொடர்பில் இருந்தீங்க?”
“மாளவிகாவும் நானும் ஒரே அப்பார்ட்மென்ட்லதான் இருக்கோம். பார்க்கறப்ப எல்லாம் கோலிவுட் டாக் தான்! டைம் கிடைக்கிறப்போ, தமிழ்ப் படங்கள் பார்க்கிறேன். கடைசியா பாலா சார் இயக்கிய `நாச்சியார்’ படத்தைப் பார்த்தேன்.”

“ ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘உன்னை நினைத்து’, ‘பிதாமகன்’, ‘உள்ளம் கேட்குமே’ இப்படிப் பல டபுள் ஹீரோயின் படங்கள்ல நடிச்சிருக்கீங்க. அப்போதெல்லாம் உங்களுக்கு ஏதாவது தயக்கம் இருந்ததா?”
“இல்லையே... (அதே ட்ரேடுமார்க் சிரிப்பு!) ஒரு படத்துல எத்தனை பேர் நடிச்சாலும், நான் ஸ்கோர் பண்ணுவேன்னு எனக்குத் தெரியும். அந்த நம்பிக்கை இப்பவும் இருக்கு.”
“ `Me Too’ பிரச்னை உங்களுக்கும் இருந்ததா?”
“எஸ்... ஆனா அதையெல்லாம் இப்போ சொன்னா, பலரையும் சங்கடமான நிலைக்குக் கொண்டுபோகும். ஏன்னா, அந்த ஆள்கள் எல்லோரும் இப்போ கல்யாணம் பண்ணி, குழந்தைகளோடு இருக்காங்க. தவிர, நான் எப்போதெல்லாம் அந்த மாதிரி பிரச்னைகளைச் சந்திச்சேனோ, அதைப் போலீஸ்ல புகார் கொடுத்துத் தீர்த்து வைக்கணும்னு காத்திருக்காம, பிரச்னையைச் சந்திச்ச நொடி அங்கேயே அதைப் பேசி முடிச்சுக்கிட்டேன்.”
“சினிமாவில் கலக்கிய ஹீரோயின்ஸ் சீரியல் பக்கம் தலைகாட்டுவது வழக்கம். உங்களுக்கு அப்படி எதுவும் ஐடியா இருக்கா?”

“எனக்கும் நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தது. ஆனா, நான் எதுக்கும் ஓகே சொல்லலை. தவிர, எனக்கு சீரியல்ல நடிக்கிற ஐடியாவும் இல்லை. ஏன்னா, எனக்கு அழறது பிடிக்காது; சீரியல்ல கமிட்டாகிட்டு தினமும் என்னால அழ முடியாது.”
“ஃபேமிலி?”
“கணவர் மெஹ்டி, பிசினஸ்மேன். எனக்கு ரெண்டு பசங்க. மூத்த பையன், டேரியன் 6-ஆம் வகுப்பு படிக்கிறார்; ரெண்டாவது பையன் கியான், 4-ஆம் வகுப்பு படிக்கிறார். பசங்களுக்கு லீவ் விட்டா போதும், ஸ்கூபா டைவிங்கிற்குக் கிளம்பிடுவாங்க. நானும் அவங்ககூடச் சேர்ந்து ஸ்கூபா டைவிங் பண்ணுவேன்.”
லைலா ரீவைண்ட்ஸ்!

விஜய் :
“ ‘உன்னை நினைத்து’ படத்துல முதலில் விஜய் சார்தான் ஹீரோவா கமிட்டாகியிருந்தார். அந்தப் படத்துக்காக ஒரு பாடலை ரெண்டுநாள் ஷூட் பண்ணாங்க. பிறகு சில பிரச்னைகளால விஜய் அந்தப் படத்துல நடிக்கல. நான் அவர்கிட்ட, ‘உங்க ஒருத்தரோடதான் ஷூட்டிங் வரைக்கும் வந்து என்னால நடிக்க முடியாமப்போச்சு. கண்டிப்பா ஒருநாள் உங்ககூட நடிப்பேன்’னு அடிக்கடி சொல்லியிருக்கேன். அது இப்போவரை நடக்கலை. செகண்ட் இன்னிங்ஸ்ல லக் இருக்கான்னு பார்ப்போம்!”

விஜயகாந்த் :
“ ‘கள்ளழகர்’ என்னோட முதல் தமிழ்ப்படம். அதுக்கு முன்னாடி இந்தி, தெலுங்குப் படங்கள்ல நடிச்சிருக்கேன். ‘கள்ளழகர்’ படம் பண்ணும்போது எனக்குத் தமிழ் அவ்வளவா தெரியாது. எனக்கு அவர்தான் வசனங்களைச் சொல்லிக்கொடுத்தார்.”

அஜித் :
“அஜித் சார்தான் என் கிரஷ். அவரோடு ‘தீனா’, ‘பரமசிவன்’, ‘திருப்பதி’ படத்துல ஒரு பாட்டுன்னு சில படங்களில் நடிச்சிருக்கேன். நாங்க சேர்ந்து நடிச்ச ‘தீனா’ படத்தில் இருந்துதான் அவருக்கு ‘தல’ன்னு அடைமொழி வந்தது. அஜித் சார் ஷூட்டிங் ஸ்பாட்ல பிரியாணி சமைச்சுப் போடுவார்னு கேள்விப்பட்டேன்; ஆனா, நான் அவரோட நடிக்கும்போது எனக்கு பிரியாணியெல்லாம் செஞ்சு தரலை. அடுத்து அவரைப் பார்க்கும்போது எனக்கு பிரியாணி செஞ்சு கொடுங்கன்னு கேட்கணும்.”

பாலா :
“பாலா சார் ஷூட்டிங் செட்லயும் நான் செம ஜாலியாதான் இருப்பேன். ஆனா, டேக்னு வந்துட்டா அவர் செம கறார். காமெடிக் காட்சிகளைத் தவிர மற்ற காட்சிகளை ஷூட் பண்ணும்போது டேக்ல சிரிச்சுட்டா, அவ்வளவுதான். மத்தபடி டேக் இல்லாத சமயங்களில் அவரும் நம்மகூட சேர்ந்து ஜாலியா சிரிச்சுக்கிட்டுதான் இருப்பார்.”

சூர்யா :
“பல ரசிகர்களோட ஃபேவரைட் காம்போ நாங்க! ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘உன்னை நினைத்து’ அப்புறம் ‘மெளனம் பேசியதே’ படத்துல கேமியோ கேரக்டர்... இப்படி சூர்யாவும் நானும் நான்கு படங்களில் நடிச்சிருக்கோம். எனக்கு சூர்யாகூட நடிக்கிறது ரொம்பப் பிடிக்கும். அதனாலதான், நாங்க சேர்ந்து நடிச்ச எல்லா படங்களும் நல்லா வந்தது.”
மா.பாண்டியராஜன் - படங்கள்: ப.சரவணக்குமார்