சினிமா
Published:Updated:

“ரஜினியும் கமலும் ஒரே படத்தில்...” ரகசியம் சொல்லும் ஷங்கர்

“ரஜினியும் கமலும் ஒரே படத்தில்...” ரகசியம் சொல்லும் ஷங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
“ரஜினியும் கமலும் ஒரே படத்தில்...” ரகசியம் சொல்லும் ஷங்கர்

“ரஜினியும் கமலும் ஒரே படத்தில்...” ரகசியம் சொல்லும் ஷங்கர்

சென்னை வெட்டுவாங்கேணியில் பிரதான சாலையிலிருந்து விலகி, கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கிறது அந்த அலுவலகம். இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் இயக்குநர் ஷங்கர், பரபரப்பு ஏதுமின்றி நிதானமாக நம்மை வரவேற்றார். 

“ரஜினியும் கமலும் ஒரே படத்தில்...” ரகசியம் சொல்லும் ஷங்கர்

“ ‘2.0’ படத்தின் சிஜி வேலைகள் உலகின் பல்வேறு நாடுகள்ல நடந்துகிட்டிருக்கு. ஒன்றரை வருஷமா இந்த வேலைகள்தான் போயிட்டிருக்கு. உங்களிடம் நிறைய கேள்விகள் இருக்கலாம். ஆனா, அதுக்கு முன்னாடி ரெண்டு முக்கியமான விஷயங்களைச் சொல்லிடறேன். ஒண்ணு, மிகப்பெரிய பட்ஜெட், பிரமாண்டம், கிராபிக்ஸ் இதையெல்லாம் மறந்துட்டு, ‘2.0’வில் உள்ள ஆத்மார்த்தமான கதையை எதிர்பார்த்து தியேட்டருக்கு வாங்க. அடுத்து, எங்க உழைப்பின் வீரியத்தை உணரணும்னா, படத்தை 3டி திரையரங்குகள்ல பாருங்க” என்றபடி அமர்ந்தார். இரண்டு தேநீர் இடைவேளைகளுக்கிடையில் நீண்ட பேட்டியிலிருந்து...

“எந்திரன் முடிஞ்சதுமே அதோட பார்ட்-2 பண்ணணும்னு பலர் விரும்பினாங்க. தயாரிப்பாளர்கள் தயாரா இருக்காங்க என்பதற்காகப் படம் பண்ணக்கூடாது என்பதில் உறுதியா இருந்தேன். கதை வலுவா இருக்கணும்னு காத்திருந்தேன். உதாரணத்துக்கு, ஏகப்பட்ட செல்போன்கள் சாலையில ஊர்ந்து வர்றமாதிரியான காட்சி ஒருநாள் கற்பனையா தோணுச்சு. ‘இதெல்லாம் ஏன் இப்படி மொத்தமா ஊர்ந்து வருது, அதுக்குப்பின்னாடி என்ன இருக்கும், என்ன இருக்கலாம்’னு நிறைய கேள்விகள். இப்படியான அழகான காட்சிகள், சின்னச்சின்ன கதைக்கருக்கள்னு யோசிக்கும்போது அதற்குள் அழகான கதை ஒண்ணு விரிஞ்சுது. அதுதான் ‘2.0’.

ரஜினி சாருக்கு உடல்நிலை சரியில்லாம இருந்த சமயத்தில் பட வேலைகளைத் தள்ளிவெச்சோம். ‘லிங்கா’வுக்குப் பிறகு இந்தப்படம் பண்ணலாம்னு அவருக்கு நம்பிக்கை வந்துச்சு. ‘யெஸ். பண்ணலாம்’னு ஓகே சொன்னார்.”

“ரஜினியும் கமலும் ஒரே படத்தில்...” ரகசியம் சொல்லும் ஷங்கர்

“கதையைக் கேட்டுட்டு ரஜினி என்ன சொன்னார்?”

“ ‘சிட்டி’ கதாபாத்திரம் திரும்பி வர்றதே அவருக்குப் பெரிய பரவசம். ஸ்கிரிப்ட்டும் வித்தியாசமா இருக்கிறதால அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு.  ‘3டி-யில் பண்றோம்’ என்பது அவரின் எதிர்பார்ப்பைக் கூட்டியது. நம்ம ஊரு இன்னும் 3டி-க்குப் பழகலை. நம்ம ஊர்ல இருந்து இப்படி ஒரு படம் வர்றது இதுவே முதல்முறை. இந்தியாவிலும் தமிழகத்திலும் சர்வதேச அளவுல படங்கள் எடுக்க முடியும் என்பதற்கான ஒரு தொடக்கப்புள்ளியா ‘2.0’ இருக்கும்.”

“அர்னால்டில் தொடங்கிய வில்லன் வேட்டை, அக்‌ஷய்குமாரில் எப்படி முடிந்தது?”


“எல்லா உலக நாடுகளையும் இணைக்கக்கூடிய கதை இது. ஏன் ஒரு இன்டர்நேஷனல் ஸ்டார் வரக்கூடாதுன்னு தோணுச்சு. ‘ஐ’ இசை வெளியீட்டு விழாவுக்கு வந்ததிலிருந்து அர்னால்டுடன் எங்களுக்குள் ஓர் இணக்கம் இருந்தது. ஏற்கெனவே அவர் ‘எந்திரன்’ பார்த்திருக்கார். அவரைச் சந்திக்கும்போது, எழுந்து நின்னு, ‘டடடடட’னு கன் வெச்சு சிட்டி கேரக்டர் பண்ற மாதிரி பண்ணிக் காட்டினார். ‘இந்தப் படத்தை சீனாவுக்குக் கொண்டுபோகலாம். அங்கே ஒரு பெரிய மார்க்கெட் இருக்கு’ன்னு சொல்லி ரொம்ப ஆர்வமா இருந்தார். ஷூட்டிங் தேதிகளெல்லாம்கூட ஒதுக்கித் தந்துட்டார். பிறகு ஹாலிவுட்டுக்கும் இந்தியன் சினிமாவுக்குமான கான்ட்ராக்ட் ஃபார்மெட்கள் ஏதோ ஒரு புள்ளியில் பொருந்திப்போகலை.

“ரஜினியும் கமலும் ஒரே படத்தில்...” ரகசியம் சொல்லும் ஷங்கர்

அர்னால்டு வாய்ப்பு அமையலைங்கவும்  கமல் சாரை வெச்சுப் பண்ணலாம்னு தோணுச்சு. ஒரே படத்தில் ரஜினி சாரும் கமல் சாரும் பண்ணினா நல்லா இருக்கும் என்பது என் ஆசை. ஜெயமோகன்தான் இந்தப் படத்துக்கு வசனம். அவரும் நானும் கமல் சாரிடம் பேசினோம். நேரிலும் சந்திச்சோம். ஆனால், கமல் சார் ‘இந்தியன் 2’ பண்ணுவதில் ஆர்வமா இருந்தார். அந்த வாய்ப்பும் மாறிடுச்சு.

லைகா தரப்பில் ‘கத்தி’ பட இந்தி ரீமேக்கை அக்‌ஷய் குமாரை வெச்சுப் பண்றதுக்காக அவரிடம் பேசிட்டிருந்தாங்க. அப்ப இந்தப் படத்தைப் பற்றிப் பேச்சு வந்திருக்கு. ‘அக்‌ஷய் பண்ணினா நல்லா இருக்குமே’ன்னு லைகாவுக்கும் தோணியிருக்கு. நான் அவரிடம் கதை சொன்னேன். ரொம்ப ஆர்வம் காட்டினார். கடைசியில அது யாருக்குப் போய்ச் சேரணுமோ அவருக்குப் போய்ச் சேர்ந்திருக்கு, அல்லது போய்ச் சேர்ந்தது நல்லபடியா வந்துச்சுன்னும் சொல்லலாம்.”

“அவரோட கதாபாத்திரம் எப்படி இருக்கும்?”

“அது கொஞ்சம் மர்மமாகவே இருக்கட்டுமே.ஆனால், இதில் அக்‌ஷய் வெறும் வில்லன் மட்டும் கிடையாது. அதில் சில டைமென்ஷன்ஸ் இருக்கு. அதனாலும் அவருக்கு ரொம்பப் பிடிச்சது. படம் பார்க்கும்போது உங்களுக்கும் பிடிக்கும்.”

“ரஜினியும் கமலும் ஒரே படத்தில்...” ரகசியம் சொல்லும் ஷங்கர்

“சிட்டி தன்னைத்தானே டிஸ்மாண்டில் பண்றதோட ‘எந்திரன்’ படம் முடியும். இது அதனுடைய தொடர்ச்சியா, தனிக்கதையா?”

“இரண்டும்தான். அதோட தொடர்ச்சியாவும் இருக்கும்; தனிக்கதையா பார்த்தாலும் புரியும். `இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல’ - இதுதான் படத்தின் டேக்லைன்.  இப்போதைக்கு கதையை அவ்வளவுதான் சொல்ல முடியும்.”

“இன்னைக்குத் தமிழ்ல வர்ற பெரும்பாலான பெரிய படங்களில் லைகாவின் பங்களிப்பு இருக்கு. அவங்க எப்படி ‘2.0’வை ரிசீவ் பண்ணினாங்க?”

“ ‘நாம சேர்ந்து ஒரு படம் பண்ணணும்’னு சுபாஸ்கரன் சொல்லிட்டே இருந்தார். அப்படி ஒரு சந்திப்பில், ‘பட்ஜெட்டைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க. நல்ல படம் பண்ணணும்’னு சொன்னார். இவ்வளவு போட்டா, இவ்வளவு வரும்னு பேப்பர்ல கணக்குபோட்டுப் பண்ணினா இந்தப் படமெல்லாம் பண்ணவே முடியாது. சுபாஸ்கரனுக்கு சினிமா மீதான வேட்கைதான் இந்தப் படத்துக்கான காரணம்.”

“ஏகப்பட்ட ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு படம் தள்ளிப்போயிட்டே இருக்கே. என்னதான் பிரச்னை?”

“ரஜினியும் கமலும் ஒரே படத்தில்...” ரகசியம் சொல்லும் ஷங்கர்

“படத்துல 2100 ஷாட்ஸ் வி.எஃப்.எக்ஸுக்காக எடுத்திருக்கு. ஒரு கம்பெனிக்கு ஃபுட்டேஜ் கொடுக்கும்போது, ‘தீபாவளி ரிலீஸ் ஆகுற மாதிரி முன்னாடியே கொடுத்துடுறோம்’னு சொன்னாங்க. அதனால ‘தீபாவளி ரிலீஸ்’னு அறிவிச்சோம். ஆனா அவங்களால முடிச்சுக் கொடுக்க முடியலை. இது, ரொம்பவே சிரமமான வி.எஃப்.எக்ஸ்! இறங்கிப் பார்க்கும்போதுதான் அவங்களுக்கே புரிஞ்சிருக்கு. அதனால் வேற தேதி சொன்னாங்க. அதை நம்பி, துபாய்ல ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனை அறிவிச்சோம். ஆனா, திடீர்னு, ‘எங்களால சொன்ன தேதியில கொடுக்க முடியாது’ன்னு சொல்லிட்டாங்க. இது, அந்த வி.எஃப்.எக்ஸ் கம்பெனியின் சக்திக்கு மீறிய படம்னு பிறகுதான் தெரிஞ்சது. ‘எப்பதான் கொடுப்பீங்க’ன்னு கேட்டப்ப, ‘இன்னும் ஒரு வருஷம் ஆகும்னாங்க. ‘சரி, இதை சீக்கிரம் பண்ணக்கூடிய வேற பெரிய கம்பெனிக்குக் கொண்டுபோவோம்’னு முடிவு பண்ணினோம். ஆனா திட்டமிட்டதைவிட பட்ஜெட் அதிகமாகும்னு புரிஞ்சது. அதுவும் சாதாரண விஷயமா இல்லை. நுணுக்கமான வேலை இது. அத்தனை சின்னச்சின்ன விஷயங்களையும் எடுத்து இன்னொரு கம்பெனியில கொண்டுபோய்ச் சேர்ப்பது என்பது, பெரிய மரத்தைப் பிடுங்கி இன்னொரு ஊர்ல கொண்டுபோய் நடுறமாதிரியான வேலை. அதுக்கொரு டைம் எடுத்துச்சு. அதனாலதான் இவ்வளவு தாமதம்.”

“ரஜினியும் கமலும் ஒரே படத்தில்...” ரகசியம் சொல்லும் ஷங்கர்

“2100 ஷாட்ஸ் வி.எஃப்.எக்ஸ் என்றால், ரஜினி நடிப்பின் பங்கு குறைவா இருக்குமோன்னு தோணுதே?”

“நீங்க படம் பாருங்க. அவரின் பங்களிப்பு ஜாஸ்தியாவே தெரியும். ‘எல்லாமே சிஜியில பண்ணியிருப்பாங்களோ’ன்னு பலருக்கும் வரக்கூடிய சந்தேகம்தான். சிஜியில பண்றதை சிஜியிலதான் பண்ண முடியும். நடிப்பின்மூலம்  பண்ண வேண்டியதை நடிகர்களாலதான் பண்ண முடியும்.”

“3டி ஓகே.  வேற என்ன டெக்னிகல் மிரட்டல் இருக்கு இதுல?”

“எந்திரன்லயே 3டி தேவைப்பட்டுச்சு. அதுவும் கிளைமாக்ஸ் மாதிரியான சில காட்சிகள்ல தேவைப்பட்டுச்சு. 3டி-யையும் இழுத்துப் போட்டோம்னா இன்னும் தாமதமாயிடும்னு அதுல தவிர்த்தோம். ஆனா இந்தப் படத்தை 3டி-யில்தான் பண்ணணும்னு முடிவு பண்ணினோம்.  3டி போக, இன்னொண்ணு இருக்கு. யெஸ்... பத்திரிகையாளர் முன்னிலையில் ஒரு புதிய சவுண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தப்போறோம். உலகின் எந்த மூலையிலும் அந்த சவுண்ட் சிஸ்டம் கிடையாது.நாமதான் முதல்முறையா பண்ணப்போறோம்.  ‘மை காட். யூ கில்டு மீ மேன்’னு ரசூல் பூக்குட்டி ரொம்ப சவாலா எடுத்துட்டு ஒர்க் பண்ணிட்டிருக்கார்.”

“ஐஸ்வர்யா ராய்க்கு இருந்த அதே முக்கியத்துவம் எமி ஜாக்சனுக்கும் இருக்குமா?”

“‘எந்திரன்’ முக்கோணக் காதல் கதை. இதில் வேறொரு விஷயம்தான் கதைக்களம். ஐஸ்வர்யா ராயை நினைவூட்டற மாதிரியான காட்சிகள் படத்துல வரும். ஆனா படத்துல அவங்க இருக்கமாட்டாங்க. எமி ஜாக்சன் ஐஸ்வர்யா ராய் கேரக்டரில் நடிக்கலைங்கிறதை மட்டும் இப்போதைக்குச் சொல்ல முடியும்.”

“ ‘2.0’ படம் பார்த்துட்டு ரஜினி என்ன சொன்னார்?”

“ரஜினியும் கமலும் ஒரே படத்தில்...” ரகசியம் சொல்லும் ஷங்கர்

“‘சிக்குபுக்கு ரயிலே’ பாட்டு பண்ணும் போதே, வாலி சார், ‘என்னமோ அம்பு வருதுன்ற. பூ வருதுன்ற. ஏம்பா இதெல்லாம் பண்ணுவியா’ன்னு கேட்டார். ‘ஒரு முயற்சிதான். பண்ணிக் காட்டுறேன்’னேன். அதேமாதிரி ‘எந்திரன்’ க்ளைமாக்ஸை ரஜினி சாரிடம் சொல்லும்போது, பத்து நிமிஷம் யோசித்தவர், ‘ஷங்கர் சார், இதெல்லாம் சாத்தியமா?’னு கேட்டார். ‘உறுதியா முடியும் சார்’னு சொன்னேன். செஞ்சும் காட்டினோம். ஆனா, ‘2.0’ படத்தில் அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஒரு விஷயத்தைச் சொன்னதும், அவருக்குப் படபடன்னு மனசுல அந்தக் காட்சி விரிஞ்சிடுச்சு. படம் பார்த்துட்டு ரொம்பத் திருப்தியா இருக்கார்.”

“22 வருஷங்களுக்குப்பிறகு ‘இந்தியன்’ படத்தின் அடுத்த பாகம் இயக்கப்போறீங்க. எப்படித் தயார் ஆகிறீங்க?”

“ரஜினியும் கமலும் ஒரே படத்தில்...” ரகசியம் சொல்லும் ஷங்கர்



“ ‘இந்தியன்’ மாதிரியான படங்களை நானே நிறைய பண்ணிட்டேன். மற்றவர்களும் பண்ணிட்டாங்க. அதனால் எப்படிப் பண்ணணும் என்பதை விட, எந்தமாதிரி பண்ணக் கூடாதுன்னு தவிர்க்கவே நிறைய நாளாகிடுச்சு. முழுக் கதையையும் கமல் சாரிடம் சொன்னேன். நான் எப்படி ரசிச்சு எழுதினேனோ அதே ஆர்வத்தில் அவரும் கேட்டார். டிசம்பர் ஷூட்டிங் போறோம். இதைத்தவிர வேறொரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையும் எழுதி வெச்சிருக்கேன். அதை ‘இந்தியன் 2’க்கு அடுத்து பண்ணுவேன்னு நினைக்கிறேன்.”

“ரஜினி, கமல் இருவருமே அரசியல் களத்தில். அவர்களை இயக்கிய உங்கள் பார்வை என்ன?”

‘‘இருவரையும் அரசியல் கோணத்தில் யோசிச்சுப் பார்த்ததில்லை என்பதுதான் உண்மை. யார் வந்து நல்லது பண்ணினாலும் நல்ல விஷயம்தான். ஆனா சிக்கலான இன்றைய அரசியல் சூழல்ல யார் வந்தாலும் நல்லது பண்றது ரொம்பக் கஷ்டம்னுதான் நினைக்கிறேன்.”

“கதைத் திருட்டு என்பதுதான் இப்ப பெரிய சர்ச்சையா பேசப்படுது. மற்றவர்களின் கதைகளை வாங்கி, அதற்கான கிரெடிட் தருவதில் என்ன பிரச்னை?”


“ ‘எந்திரன்’ கதையின்மீதுகூட அப்படி ஒரு வழக்கு இருக்கு. அடுத்தவங்க கதையைத் திருடிப் பண்ணணும்னு அவசியம் இல்லையே. நமக்குத் தோணும் கற்பனையை அழகா வளர்த்து வடிவம் கொடுத்துப் பண்ணினாலே போதும். திருடித்தான் பண்றோம்னா அடுத்தடுத்துப் பண்ணிட்டே இருக்கலாமே. அதுக்கு இவ்வளவு கால அவகாசம் தேவையில்லையே. அப்படி ஏதாவது கதை பிடிச்சா, காசு கொடுத்து ரைட்ஸ் வாங்கிப் பண்ணப்போறோம். ‘நண்பன்’ அப்படிப் பண்ணின படம்தானே? ஏழைப்பையன் ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலிச்சான்னு  200 கதைகள் வரும். ‘என் கதையிலும் அது இருக்கு. கதையைத் திருடிட்டாங்க’ன்னு எப்படிச் சொல்ல முடியும்? மூணு மணிநேரப் படத்தை இழை இழையா பின்னிப் பின்னிக் கொண்டுவர்ற உழைப்பை, ஏதோ ஒன்றிரண்டு விஷயங்களை வெச்சு, ‘இது என் கதை’ன்னு சொல்றது சரியில்லை. எனக்குத் தெரிய நம் இண்டஸ்ட்ரியில் படைப்பாளிகளிடம் நேர்மை இருக்கு. அவங்க மனசுல உதிச்சதைத்தான் பண்றாங்கன்னு நம்புறேன்.”

“உங்களோட எஸ் பிக்சர்ஸ்ல நிறைய படங்கள் தயாரிச்சிருக்கீங்க. ‘24-ம் புலிகேசி’யில் வடிவேலுவுக்கும் உங்களுக்கும் மனஸ்தாபம்னு கேள்விப்பட்டோம். என்ன பிரச்னை?”

“ஒன்பது படங்களைத் தயாரிச்சிருக்கேன். மூணு படங்களை வினியோகம் பண்ணியிருக்கேன். ‘புலிகேசி’யைப் பொறுத்தவரை வடிவேலு சாருக்கெனச் சில தனிப்பட்ட கருத்துகள் இருக்கு. ஒரு படமா பண்ணும்போது அவருக்கும் கதாபாத்திரத்துக்கும் எது சரியானதோ, அதை நோக்கிப் போறோம். அவருடைய தனிப்பட்ட கருத்தும் படத்துக்கான விஷயங்களும் பொருந்திப்போகாததால பிரச்னையில் நிக்குது. அவரை மறுபடியும் பார்க்கணும்னு எல்லோருமே விரும்புறாங்க. உங்களை மாதிரியே நானும் வடிவேலு சாரின் தீவிர ரசிகன். அவரை புலிகேசியிலும் வெவ்வேறு படங்கள்லயும் பார்க்க உங்களைமாதிரியே நானும் ஆவலா காத்திருக்கேன்.”

ம.கா.செந்தில்குமார் - படம்: ப.சரவணகுமார்