சினிமா
Published:Updated:

ஜீனியஸ் - சினிமா விமர்சனம்

ஜீனியஸ் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜீனியஸ் - சினிமா விமர்சனம்

ஜீனியஸ் - சினிமா விமர்சனம்

குழந்தைகளின் படிப்புமீதான பெற்றோரின் கனவு, பேராசையாக மாறினால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதுதான் ‘ஜீனியஸ்.’

ஜீனியஸ் - சினிமா விமர்சனம்

ஏற்கெனவே நன்றாகப் படிக்கும் தன் மகனை இன்னும் நன்றாகப் படிக்கச் சொல்லி விரட்டுகிறார் ‘ஆடுகளம்’ நரேன். சதா படிப்பு படிப்பு எனச் சுற்றி, வேலையில் அமரும் ஹீரோ ரோஷனுக்கு ஒருகட்டத்தில் மூளை சூடாகி, ஸ்கீசோபெர்னியாவால் பாதிக்கப்படுகிறார். அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை காமெடியாகவும் சீரியஸாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

ஜீனியஸ் - சினிமா விமர்சனம்



ஹீரோவாக ரோஷன், படத்தின் தயாரிப்பாளரும் அவரே. ஓரிரு காட்சிகளில் மட்டும் ஓகே. பிரியா லாலுக்கு வழக்கமான ஹீரோயின் வேஷம் தாண்டி, பெரிதாக வேலை இல்லை. அமெச்சூர்த்தனமான நடிப்புகளுக்கு மத்தியில் ஒற்றையாளாக ஸ்கோர் செய்கிறார் ‘ஆடுகளம்’ நரேன். மீரா கிருஷ்ணன் தமிழ்சினிமாவின் தாய் என்னவெல்லாம் செய்வாரோ அவற்றைச் செவ்வனே செய்துவிட்டுச் செல்கிறார்.

பாடல்களில் சில சமயம் ஏமாற்றினாலும் பின்னணி இசையில் அதிரடிப்பார் யுவன் ஷங்கர் ராஜா. ஏனோ இந்தப் படத்தில் இரண்டிலுமே ஏமாற்றம். கிராமத்துக் களத்துமேட்டுக் காட்சிகளை குருதேவ் படமாக்கிய விதம் பார்த்து நமக்கும் சேற்றில் இறங்கக் கால்கள் பரபரக்கின்றன. 

ஜீனியஸ் - சினிமா விமர்சனம்

மன அழுத்தத்தை படம் முழுக்க ஏதோ சளி, இருமல் ரேஞ்சுக்கு டீல் செய்திருக்கிறார்கள். ஒரே ஒருமுறைதான் மருத்துவரிடம் போகிறார்கள். கடைசியாக, மன அழுத்தத்திற்கு மருந்தாக செக்ஸ், திருமணம் போன்றவற்றை முன்வைக்கிறார்கள். மன அழுத்தம் தற்கொலைகள் வரை இட்டுச்செல்லும் இன்றைய பணிச்சூழலில் ‘கால்கட்டு போட்டா சரியாயிடுவான்’ என்கிற பழைய பஞ்சாங்கம் வாசிப்பதெல்லாம் அபத்தம்.

சுசீந்திரனின் பெரிய பலமே வசனம்தான். ஆனால், இந்தப் படத்தில் அதுதான் மிகப்பெரிய பலவீனமாக உறுத்துகிறது. காதல், செக்ஸ் பற்றிய வசனங்கள் எல்லாம் ‘இது நிஜமாவே சுசீந்திரன் படம்தானா’ எனக் கேட்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. என்னாச்சு சுசீ? வெண்ணிலா கபடிக்குழு, மாவீரன் கிட்டு போன்ற நல்ல படைப்புகளை உங்களிடமிருந்து மீண்டும் எதிர்பார்க்கிறோம்.

- விகடன் விமர்சனக் குழு