சினிமா
Published:Updated:

ஜருகண்டி - சினிமா விமர்சனம்

ஜருகண்டி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜருகண்டி - சினிமா விமர்சனம்

ஜருகண்டி - சினிமா விமர்சனம்

மாற்றி வாங்கிய லோனே, கடன்காரர்களை லோலோவென அலைய வைக்கும் கதை. 

ஜருகண்டி - சினிமா விமர்சனம்

டிராவல்ஸ் நிறுவனம் தொடங்க, இல்லாத இடத்தைக் காட்டி லோன் வாங்குகிறார் நாயகன். அதற்கு உத்தரவாதம் தருவது நாயகனின் நண்பன். இந்த மோசடி கசியாமலிருக்க கட்டுக்கட்டாய்ப் பங்கு கேட்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. போலீஸ் கேட்ட பணத்தை மீண்டும் குறுக்குவழியிலேயே புரட்டப்போய் நிகழும் அசம்பாவிதங்கள் மொத்தமாய் வாழ்க்கையையே புரட்டிப் போடுகின்றன. இப்படி கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பி, கிணற்றையும் வெட்டி, பூதத்தையும் `ஜருகண்டி... ஜருகண்டி’ என நாயகன் விரட்டிவிடுகிறார்.

இறுக்கமான சட்டை, ட்ரிம் செய்த தாடி, கிறக்கத்திலேயே இருக்கும் கண்கள் என எப்போதும் ஜெய் எப்படி இருப்பாரோ அப்படியே தான் இதிலும் இருக்கிறார். அறிமுக நடிகை ரெபா மோனிகா ஜானுக்குக் கவர்ந்திழுக்கக் கூடிய கதாபாத்திரம். இனி நிறைய படங்களில் இவரைப் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் அரிதிலும் அரிதாய் நிகழும் குணச்சித்திர, நகைச்சுவைக் கதாபாத்திரம் டேனியலுக்கு. நடிப்பை அள்ளித்தந்திருக்கிறார்; நகைச்சுவையை மட்டும் கிள்ளிக் கொடுத்திருக்கிறார். அமித் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட், ஜெயகுமார், ஜி.எம்.குமார் என ரகரகமாய் வில்லன்களை இறக்கியிருக்கிறார்கள். ரோபா சங்கரின் சில காமெடிகள் `குபீரெ’ன இருந்தாலும், படத்திலிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றன. அவரது மைண்ட் வாய்ஸ் கொஞ்சம் ஓவர் டோஸ்.

ஜருகண்டி - சினிமா விமர்சனம்



எழுத்து மற்றும் இயக்கம் ஏ.என். பிச்சுமணி.  சிம்பிளான கதை, சிக்கலான திரைக்கதை ஆகியவற்றில் கவனம் ஈர்க்கிறார். ஆனால், அதை இயக்கியதில் பல இடங்களில் தடுமாறியிருக்கிறார். நடிகர்களின் சுமாரான நடிப்பு, படத்தின் மிகப்பெரும் குறை. நகைச்சுவையும் அவ்வளவாக எடுபடவில்லை. கச்சிதமான திரைக்கதையும் அதன் முடிச்சுகளிலுள்ள சுவாரஸ்யமும்தான் `ஜருகண்டி’யைக் காப்பாற்றுகின்றன.

போபோ சசியின் பின்னணி இசை ஓகே. பாடல்களும் காதுகளுக்கு இதம். ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர், கண்களை பிரமிக்க வைக்கவும் இல்லை, உறுத்தவும் இல்லை. போதுமானதை மட்டுமே தந்திருக்கிறார். படத்தொகுப்பாளர் பிரவீன்.கே.எல் தன்னால் முடிந்த அளவு படத்தின் வேகத்தைக் கூட்டியிருக்கிறார். 

ஜருகண்டி - சினிமா விமர்சனம்

சிக்கலான சுவையான `இடியாப்ப’த் திரைக்கதை. நம் கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டவிடாமல் அவர்களே தடுத்துவிடுகிறார்கள்!

- விகடன் விமர்சனக் குழு