
ஷாஜி, ஓவியங்கள் : ரவி
ஒரு திரைநடிகனின் உடைநடை பாவனைகளைக்கொண்ட ‘தாமரைக்குளம் ஜெயப்பிரசாத்’ என்பவர் கல்லூரியில் எங்களுக்கு ஆசிரியராக வந்தார். சினிமாத் துறையைச் சார்ந்தவர் என்றே தன்னை அவர் அறிமுகம் செய்துகொண்டார். மாநிறத்தில் அழகான தோற்றம். கவனமாக மழித்து ஒதுக்கிய தேள்வால் மீசை. திரைப்படங்களில் ஜெயன் அணியும் உடைகளின் வடிவத்தில் அமைந்தவை அவரது உடைகள். இதமான இருண்ட வண்ணத்தில் பெல்பாட்டம் கால்சட்டை. அதன்மேல் கட்டியிருக்கும் அகலமான அரைப்பட்டைக்குள்ளே, சொருகிவிட்ட இளம்வண்ணச் சட்டை. பின்னிரவில் மலரும் ஏதோ ஒரு காட்டுப் பூவின் அடர் நறுமணம் எப்போதுமே அவரைச் சூழ்ந்திருந்தது. அவர் நடத்தும் மலையாள மொழி வகுப்புகள் சுவையாக இருந்தன. பாடம் குறைவு, பேச்சும் கதைகளும் அதிகம். கிளுகிளுப்பூட்டும் காமக் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. அத்துடன் சினிமாக் கிசுகிசுக்களும் அவரது பேச்சில் நிரம்பிவழிந்தன.

பல மலையாளத் திரை நடிகைகள் மற்றும் நடிகர்களைப் பற்றி வேறு யாருக்குமே தெரியாத கதைகளை அவர் எங்களுக்குச் சொன்னார். இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டபோது, “சினிமாத் துறையைச் சேர்ந்த ஒருவனின் தனிமனித ரகசியங்கள் அவை. இருந்தும் ஒருநாள் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்வேன்” என்றார். திரைத்துறையில் இருக்கிறேன் என்று அடிக்கடிச் சொல்வதைத் தவிர, என்னவாக இருக்கிறார் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. பொய் சொல்கிறார் என்றே மாணவர்கள் நினைத்தனர். ஆனால், அவர் சொல்வதில் எதாவது ஓர் உண்மை இருக்கும் என்றே நம்பினேன். அதை அவரிடமே ரகசியமாகக் கேட்கலாம் என முடிவெடுத்தேன். மழையின் ஈரப்பதம் கசிந்த ஒரு விடுமுறை நாளில், அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றேன்.
குளித்து, நறுமணங்களைப் பூசி, வெளியே கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்தார். என்னைச் சந்தோஷமாக வரவேற்றார். அச்சூழலில் எனது வருகையின் நோக்கத்தை அவரிடம் சொல்ல மனம் வரவில்லை. “ஓரிடத்துக்கு என்னை மதியச் சாப்பாட்டுக்குக் கூப்டிருக்காங்க. நீயும் என்கூட வந்திடு” என்றார். அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையான ராதா என்பவரின் வீட்டில்தான் விருந்து. தடித்த மூக்குக் கண்ணாடி போட்டிருந்தாலும், பழுத்த எலுமிச்சைத் தோல்வண்ணம் கொண்ட ராதா டீச்சர், இளம்பச்சை வண்ணச் சேலையையும் சிவப்பு மஞ்சள் ரவிக்கையையும் அணிந்து பேரழகியாகக் காட்சியளித்தார். திருமணமாகிக் குழந்தைகள் உள்ள அவர், வேறு ஊரிலிருந்து வேலைக்காக அங்கு வந்து வாடகை வீட்டில் தங்கியிருந்தார். நாங்கள் செல்லும்போது அவ்வீட்டில் அவர் மட்டுமே. நாட்டுக்கோழிக் கறி, காய்கறி, மீன் எனச் சுவைமிகுந்த உணவுகளுடன் விருந்து பலமாக இருந்தது. இதற்கிடையே கண் ஜாடைகளும் சைகை மொழியுமாக ஜெயப்பிரசாத் சாரும் ராதா டீச்சரும் ரகசியமாக உரையாடிக்கொண்டிருப்பதைக் கண்டேன். ஆழ்ந்த காதலில் இருக்கும் இரண்டு பதின்பருவத்தினரைப்போல் அவர்கள் காட்சியளித்தனர். திரைப்படத்தின் காதல் காட்சியை உற்றுப் பார்க்கும் பார்வையாளனின் மனநிலையுடன் அங்கு அமர்ந்திருந்தேன்.

உணவருந்தி முடித்து சற்றுநேரத்தில், “சரிடா ஷாஜீ... அப்போ நீ கெளம்பு” என்று என்னை அங்கிருந்து அனுப்பிவிட்டார். நான் யாரிடமும் இதைப் பற்றிச் சொல்லவில்லை. உண்ட சோற்றுக்கு விசுவாசமாக இருந்தேன். அந்தக் காதல் காட்சியை மீண்டுமொருமுறை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காதா என்று மட்டும் எண்ணிக்கொண்டிருந்தேன். விரைவில், ஜெயப்பிரசாத் சாருக்கும் ராதா டீச்சருக்கும் இடையே நடக்கும் கள்ளக்காதல் விவகாரம் ஊரில் அம்பலமானது. உடனடியாக அவரைக் கல்லூரியிலிருந்து வெளியேற்றினார்கள். அழுக்குப் படிந்த ஆடைகளுடன் அலங்கோலத் தோற்றமாக வகுப்பறைக்கு வந்த அவரைப் பார்த்து மிகவும் சங்கடமடைந்தேன். எப்போதுமே ‘டிப் டாப்’ ஆகத் திரியும் மனிதருக்கு இந்த நிலைமையா... “நான் உங்களிடமிருந்து விடைபெற வந்திருக்கிறேன். இனி உங்களிடம் மறைப்பதற்கு எனக்கு ஒன்றுமில்லை. காதலிப்பது ஒரு தவறா? ஓர் ஆணும் பெண்ணும் பரஸ்பரம் வேட்கைகொள்வதில் என்ன தப்பு? அன்பைச் செலுத்தினேனே ஒழிய, எந்தப் பாவமும் நான் செய்யவில்லையே. ஆனால், பாவி என்று முத்திரை குத்தி என்னைச் சிலுவையில் அறைகிறார்கள். நான் சாதாரணமானவன் அல்ல. ராதா டீச்சருடன் எனக்கு இருந்தது போன்ற அற்புதமான உறவு, எனது அம்மாவுடன் மலையாள சினிமா நடிகர் *******க்கு இருந்தது. அதில் பிறந்த மகன் நான். ஒரு மகாநடிகனின் மகனை இப்படி அசிங்கப்படுத்துவதன் பாவம் இவர்களைச் சும்மா விடாது”.
யவனிகா
தன் மகன் ஒரு முழுநேரத் தறுதலையாக, முற்றிலும் நடத்தைக் கெட்டவனாக மாறிக்கொண்டிருக்கிறான் என்று எனது அப்பா முடிவெடுத்தார். அவருடனான எனது கருத்து வேறுபாடுகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போயின. எல்லா வகையான அடக்குமுறைகளையும் என்மேல் ஏவினார். எதிர்க்கும்போது, இழுத்துப் போட்டு அடித்தார். நான் எந்தவொரு மதிப்பும் வைத்திருக்காத ஆள்களைக் கொண்டுவந்து, எனக்குப் புத்திமதி சொல்லவைத்தார். இவ்வாறாக, அவர் செய்த அனைத்து விஷயங்களும் எங்களுக்கிடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தின. அக்கால மலையாளத் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்துப்போன ‘யவனிகா’வில் அசோகன் எனும் இளம் நடிகர் நடித்த, பதின்பருவத்தைத் தாண்டாத விஷ்ணு எனும் பாத்திரம் நானேதான் என்று எண்ணிக்கொண்டேன். தனது தந்தை தரும் தொல்லைகளைத் தாங்க முடியாமல் அவரைக் கொல்லத் துடிக்குமளவு ஆத்திரத்துடன் அலைகிறான் விஷ்ணு.
ஒரு வாரத்துக்குமேல் எந்தவொரு படமுமே ஓடாத இரட்டையார் நிர்மலாவில் மூன்று வாரம் ஓடிய ‘யவனிகா’வை நான் மூன்றுமுறை பார்த்தேன். அதைப்போன்று இயல்புத் தன்மையும் மர்மத் தன்மையும்கொண்ட ஒரு படத்தை அதுவரைக்கும் நான் பார்த்திருக்கவில்லை. கொடூரமான குணஇயல்புகளைக்கொண்ட தபேலாக் கலைஞன் ஐயப்பனாக கோபி எனும் அசாத்திய நடிகர் அதிர்ச்சியைத் தந்தார். நெடுமுடி வேணு, திலகன், வேணு நாகவள்ளி, ஜகதி, மம்மூட்டி போன்றவர்கள் காதாபாத்திரங்களாகவே வாழ்ந்தனர். ஆனால், ஜலஜா எனும் நடிகை நடித்த, பெரும் வலிகளை மனதில் தாங்கி வாழும் ரோஹிணி எனும் பாத்திரம்தான் என்னை மிகவும் பாதித்தது. ஆண்மகன்கள் இல்லாத ஏழைக் குடும்பங்களிலிருந்து, அன்னம் தேடி வெளியே செல்லும் இளம்பெண்கள் சந்திக்கும் நெருக்கடிகளைக் கிராமங்களில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். நோயாளியான அம்மாவையும் இரண்டு தங்கைகளையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் அந்த ரோஹிணியின் வாழ்க்கையைச் சிதிலமாக்குகிறது. எனக்கு ஒரு வழியிருந்தால், அவளை அங்கிருந்து காப்பாற்றி நானே அவளுக்கு ஒரு வாழ்க்கையைக் கொடுத்திருப்பேன் என்று எண்ணினேன். வேதனை விம்மிச் சிதறிப்போன அவளது அழுகுரல் என் மனதைவிட்டு நீங்கவே இல்லை.

அந்த ஆண்டு எங்கள் பக்கத்து ஊரில் நடந்த தேவாலயப் பெருநாளில், மூவாற்றுபுழையிலிருந்து வந்த இசைக்குழுவின் திரைப்பாடல் கச்சேரி நடந்தது. அதில் அவர்கள் பாடிய ‘காயல் ஒந்நு சிரிச்சால் கரயாகெ நீர்முத்து, ஓமல் ஒந்நு சிரிச்சால் பொட்டிச் சிதறும் பொன்முத்து’ எனும் புத்தம்புதிய பாடல் அனைவருக்கும் பிடித்தது. ‘கக்க’ எனும் படத்திற்காக கே.வி.மகாதேவனின் இசையில் வந்த பாடல் அது. அப்படத்தின் மற்ற பாடல்களையும் தேடிப் பிடித்துக் கேட்டேன். பாடல்கள் ஏற்படுத்திய மோகத்தினால் அந்தப் படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தேன். 30 மைல் தொலைவிலிருக்கும் குமுளியில் அப்படம் ஓடுவதாக அறிந்துகொண்டு, அங்கே சென்று அதைப் பார்த்தேன். முன்பு ஜெயனின் மரணத்திற்குக் காரணமான ‘கோளிளக்கம்’ படத்தின் குழு எடுத்த அடுத்த படம் இது. ஆனால், இது ஒரு வீரசாகசப் படம் அல்ல. காயலின் அடியாழத்திலிருந்து சுண்ணாம்புச் சிப்பிகளை அள்ளியெடுத்து அவற்றை விற்றுப் பிழைக்கும் ஏழைமக்களின் கதை. முன்பு, கோட்டயம் சந்தையில் தலைச்சுமைத் தூக்கும் தொழிலாளியாக இருந்த அச்சன்குஞ்ஞு, ஒருமுறை எங்களூர்க் கோவில் திருவிழாவில் ‘நகைச்சுவைக் கதாப்பிரசங்கம்’ நிகழ்த்திய வி.டி.ராஜப்பன் போன்றவர்கள் அப்படத்தில் நடித்திருந்தனர். மலையாளத்தில் ‘கக்க ரவி’ என்று பின்னர் அழைக்கப்பட்ட நிழல்கள் ரவியும், ரகுவரனும் அறிமுகமான படம் அது. ஆனால், இவர்களையெல்லாம்விடக் கதாநாயகியாக நடித்த ரோஹிணிதான் என்னை மிகவும் கவர்ந்தாள்.
காயல் அலைகளில் இளகியாடும் ஒரு சிறு படகின் பின்னால் தண்ணீரிலிருந்து சிப்பிக் கூடையுடன் பொந்திவருகிறாள் அந்த மாநிற அழகி. கடும்வண்ணம்கொண்ட கைலியையும் ரவிக்கையையும் அணிந்திருக்கிறாள். பாட்டில் வருவது போலவே முத்து கொட்டிச் சிதறுவதைப் போன்ற சிரிப்பு; ஒளிரும் கண்கள். வடிவான பெரிய மூக்கு. நான் கனவு காணும் தோற்றம்கொண்ட பெண். வயதும் எனக்குப் பொருத்தமானது. மேலும், ‘யவனிகா’ படத்தில் நான் காதல் வயப்பட்டுபோன பாத்திரத்தின் பெயரும் ரோஹிணிதானே!
சினிமாவில் பார்த்த ஒரு நடிகையிடம் நான் ஆழ்ந்த காதலில் விழுந்துபோனேன். ‘தீரா’, ‘ஆரான்டெ முல்ல கொச்சுமுல்ல’, ‘குயிலினேத் தேடி’ போன்ற படங்கள் பார்த்த பின்னர், ரோஹிணியின் மேலான எனது காதல் எல்லை கடந்தது. ‘குயிலினேத் தேடி’யில் ரோஹிணியைக் காதலிக்கும் மாஸ்டர் ரகு நான்தான் என்று எண்ணிக்கொண்டேன். ரோஹிணி இருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக அவள் நடித்த உப்புச் சப்பில்லாத பல படங்களைப் பார்த்தேன். ‘ஆரோருமறியாதெ’, ‘இவிடெத் துடங்ஙுந்நு’ போன்ற படங்களின் காதல் காட்சிகளில் ரஹ்மான் எனும் இளம் நடிகனுடன் ரோஹிணி மிகவும் நெருங்கி நடித்தது எனக்குக் கவலையை உண்டாக்கியது. எனது காதல் தோல்வியுற ஆரம்பித்தது!
‘கக்க’ சினிமாவில் ரோஹிணியை ஆழமாகக் காதலிப்பவன் ரவி. அவள் தன்னையும் காதலிக்கிறாள் என்று அவன் நம்புகிறான். ஆனால், ரோஹிணியின் காதலோ ரகுவரன்மேல். ரோஹிணியும் ரகுவரனும் உல்லாசமாக இருப்பதைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்த ரவியின் இதயம் உடைந்து நொறுங்குகிறது. அந்த ரணவேதனையைத் தாங்கிக்கொண்டே அக்காதலிலிருந்து விலகிக்கொள்கிறான் ரவி. அந்த அப்பாவியைக் கைவிட்ட ரோஹிணியை வசமாக ஏமாற்றிவிட்டு, ரகுவரனும் விரைவில் அங்கிருந்து விலகுகிறான். திரையில் பார்த்த நடிகையைக் காதலித்த மடத்தனத்திலிருந்து நானும் மெள்ள விலகினேன். இருந்தும், மாநிறமுள்ள சினிமா அழகிகளின்மேலான எனது மோகம் மேலும் சிலகாலம் நீடித்தது. அவர்களில் முக்கியமானவர் ஸ்ரீவித்யா. அழகான முகமும் பளீர் கண்களும் பேரழகுடைய புன்னகையும்கொண்ட ஸ்ரீவித்யாவின் உடல், ஒவ்வொரு படத்திலும் மேலும் மேலும் குண்டாகிக்கொண்டே வருவதைப் பார்த்து பயந்து அந்த மோகத்தையும் விரைவில் விட்டுவிட்டேன்.
ஹிந்தியும் தமிழும்
‘அப்னே ப்யார் கே சப்னே சச் ஹுவே..., கோயல் போலீ துனியா டோலீ...’ பொருள் புரியவில்லை என்றாலும், வானொலியில் வரும் ஹிந்திப் பாடல்களை நான் மிகவும் ரசித்துக் கேட்டுக்கொண்டிருப்பேன். சில ஆண்டுகளுக்கு முன்பு செண்பகப்பாறைப் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கருணாகரன் சார், எங்களையெல்லாம் ஹிந்திக்காரர்கள் ஆக்க மிகவும் முயன்றார். ‘படீ ஊ கீ மாத்திரா..., சோட்டீ ஈ கீ மாத்திரா.., ஆத்தா... ஆத்தீ... ஆத்தே... ஆயேகா... ஆயேகீ... ஆயேங்கே... ஒரு சின்ன விஷயத்தைச் சொல்ல நூறு இலக்கணச் சிக்கல்கள்!
மாணவர்களுக்கு ஹிந்தி பெரும் சோதனையாக மாறியது. ஆனால், ஹிந்தித் திரைப்படங்களின்மேலும் ஹிந்திப் பாடல்களின்மேலும் இருந்த பெரும் மோகத்தால் ஹிந்தியை நான் கூர்ந்து கவனித்தேன். தென்னிந்திய ஹிந்திப் பிரசாரச் சபையின் முகவராக இருந்த கருணாகரன் சார், எனக்குத் தனியாக ஹிந்தியைச் சொல்லித்தந்து சில தேர்வுகளையும் எழுதவைத்தார். ஹிந்திப் பட வசனங்களையும் பாடல்களையும் பொருளறிந்து நான் ரசித்தது கருணாகரன் சாரின் கருணையால்தான். ஆனால், தமிழ்ப் பேச்சை எனக்குக் கற்றுத்தந்தது தமிழ்த் திரைப்படங்கள்.
தமிழ் மொழிமேல் எனக்கிருந்த மோகத்தினால், ஊர்களில் வந்த தமிழ்ப் படங்களை ஒன்றுவிடாமல் பார்த்தேன். தமிழ் படிக்கத் தொடங்கிய பின்னர் ‘பொம்மை’, ‘பேசும் படம்’, ‘முத்தம்’, ‘கற்கண்டு’, ‘குங்குமச் சிமிழ்’, ‘ராணி’, ‘தேவி’ போன்ற இதழ்களிலிருந்து கிடைக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். ‘பதினாறு வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’ போன்றவை இப்படிப் பார்த்துப் பிடித்துப்போன படங்கள். பாரதிராஜா எனும் இயக்குநர் உருவாக்கிய தாக்கம் அது. எகிறிக் குதித்து வானத்தை இடித்துத் தள்ளும் சாகச நாயகர்களின் அடிதடிகளிலிருந்து தமிழ் சினிமா, வழிபிரிந்த காலம் அது. ரஜினிகாந்த் நடித்த ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ படங்கள் எனக்கு மிகவும் பிடித்தன. மகேந்திரனின் இயக்கத்திலான அவரது ‘உதிரிப் பூக்கள்’ என்னை அழவைத்தது. பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’, ‘மூடுபனி’, ‘மூன்றாம் பிறை’ படங்களும் என்னைக் கவர்ந்தன. ஆனால், எழுத்தையும் இயக்கத்தையும் நடிப்பையும் ஒரே லாகவத்துடன் கையாண்ட கே.பாக்யராஜ்தான் அக்காலத் தமிழ் சினிமாவில் எனது ஆதர்சமாக இருந்தவர்.
‘விடியும்வரை காத்திரு’, ‘அந்த ஏழு நாட்கள்’, ‘தூறல் நின்னு போச்சு’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘முந்தானை முடிச்சு’, ‘தாவணிக் கனவுகள்’ போன்ற படங்களின் கண்ணீர் ஈரம் படிந்த நகைச்சுவை வழியாக அவர் என் மனதில் ஏறி அமர்ந்தார். அழகான தோற்றம்கொண்ட நடிகர் அல்ல அவர். பார்வைக் குறைவுக்கான மூக்குக் கண்ணாடியை அணிபவர். கனவுப் பாடல் காட்சிகளில்கூட அந்தக் கண்ணாடி இருக்கும். வீரசூரப் பராக்கிரமனோ அதிமானுடனோ அல்லாத பாக்யராஜ் அடிக்கடி அடி வாங்குகிறார், அவமானப்படுகிறார், காதலில் தோல்வியுற்றுக் கதறி அழுகிறார், வாழ்க்கையில் தோற்றுப்போகிறார். ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் அவர் பாடி நடித்த ‘ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்’ எனும் பாடலைப் பாடி, என்னுடன் படித்த ஜெயினம்மாவைக் காதலிக்க முயன்று தோல்வியைச் சந்தித்தவன்தானே நானும்.
அரைகுறைப் பாடகன்
தமிழ்த் திரைப்பாடல்கள் எனக்குப் பெரும் மோகமாக மாறிவிட்டிருந்தன. புத்தம்புதிய பாடல்களைக் கேட்க, தமிழ்நாட்டு எல்லையிலுள்ள ஊர்களின் பாட்டுக் கடைகளுக்கு முன்னால் சென்று பல மணி நேரம் நிற்பேன். அங்கே கேட்கும் பாடல்களை முழுமையாக மனப்பாடம் பண்ணிப் பாடித் திரிவேன். அதைக்கேட்ட சிலர், எங்கள் ஊரில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளில் என்னையும் தமிழ் பாடல்களைப் பாட அழைத்தார்கள். பின்னர், சில தூரத்து ஊர்களிலிருந்தும் இசை நிகழ்ச்சிகளில் பாட அழைப்பு வந்தன. டி.எம்.எஸ், மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பி ஆகியோர் பாடிய தாளவேகம்கொண்ட துள்ளல் பாடல்களை மட்டும்தான் பாடுவேன். ஆர்.டி.பர்மன், பப்பி லஹிரி போன்றவர்கள் இசையமைத்து, அவர்களே பாடிய வேகமான ஹிந்திப் பாடல்களையும் பாடுவேன். மெதுவாக நகரும் மெல்லிசைப் பாடல்களைத் தொடவே மாட்டேன். அவற்றைப் பாடினால் இந்த அரைகுறைப் பாடகனின் சாயம் வெளுத்துப்போகும்.

ஒருமுறை, சாந்தம்பாறை என்ற ஊரில் ஒரு பெரிய நிகழ்ச்சியில் பாட அழைத்தார்கள். தமிழர்கள் அதிகமாக வாழும் ஏலத்தோட்டப் பகுதி அது. தமிழ் ஆள்களுக்கு முன்னால் தமிழ்ப் பாடல்களைப் பாடுவதை யோசித்தபோதே எனக்குக் கைகால்கள் நடுங்கின. என்னிடம் பாடச் சொன்ன பாடல்கள் அனைத்துமே யேசுதாஸ் பாடியவை, சிந்து பைரவியின் ‘தண்ணித் தொட்டி தேடிவந்த’, படிக்காதவன் படத்தின் ‘ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன்’, நல்லவனுக்கு நல்லவனில் வரும் ‘வெச்சுக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ளே’. இது எதுவுமே எனக்குத் தெரியாது. மட்டுமல்லாமல், யேசுதாஸ் பாடிய பாடல்கள் எனது குரலில் நன்றாகவும் இருக்காது. ஆனால், ஒரு பெரிய மேடையில் பாடும் வாய்ப்பு முதன்முறையாக வந்திருக்கிறது. அதை விடவும் மனமில்லை. கடைசியில், வருவது வரட்டும் என்று ஒப்புக்கொண்டேன். அவசர அவசரமாக எங்கிருந்தெல்லாமோ அப்பாடல்களைத் தேடிப்பிடித்து ஓரளவிற்குக் கற்றுக்கொண்டு ஒத்திகைக்குச் சென்றேன்.
எந்தவொரு தன்னம்பிக்கையும் இல்லாமல் தயக்கத்துடன் உள்ளே சென்றவுடன் “ஷாஜியோட பாட்டப் பாப்போம்...” என இடி முழங்குவதுபோல் இசை நடத்துநரின் குரல் காதில் விழுந்தது. “மொதல்ல அந்த டூயட்... வெச்சிக்கவா பாடுங்க...” அதோ மாநிறத்தில், முகப்பருக்கள் நிறைந்த கவர்ச்சியான தோற்றம்கொண்ட ஒரு ‘சுந்தரிச் சேச்சி’ என்னுடன் ‘டூயட்’ பாட வருகிறார். எனது இதயம் படபடவென இடிக்கத் தொடங்கியது. இசை உயர்ந்து தாளம் முறுகியது. முதல் இரண்டு வரி ஒருவழியாகப் பாடினேன். இரண்டாவது வரியான ‘சொக்கத் தங்கத் தட்டப்போல’ பாடியதும் “தப்பு... அது அப்டி இல்ல” என்று பின்னாலிருந்து ஓர் ஆண்குரல். திரும்பிப் பார்த்தேன். கன்னங்கரேலெனக் கறுத்த முகத்திற்குமேலே தடித்த கறுப்புக் கண்ணாடியையும்வைத்து விரும்பத்தகாத தோற்றங்கொண்ட ஒருவன்தான் எனது பாட்டைக் குறை சொல்கிறான்.
மூஞ்சியும் முகரக்கட்டையும்... அவனை அடித்துக் கொல்லுமளவுக்குக் கோபம் தலைக்கேறியது. குயிலினேத் தேடி எனும் படத்தில் ‘கிருஷ்ணா நீ வருமோ’ என்று வி.டி.ராஜப்பன் பாடும்போது, “சீ... தப்பு... அது அப்படியல்ல” என்று மாஸ்டர் ரகு கிண்டலடிப்பதும் உடனே வி.டி.ராஜப்பன் “அப்பொ நீ சரியாப் பாடி காட்டுடா காட்டுக் குரங்கு...” என்று எதிர்த்தடிப்பதும் நினைவுக்கு வந்தது. “ஏதோ சின்னப்பையன் ஆசப்பட்டுப் பாட வந்திருக்கான்... நீங்க ஒருமுற பாடிக்காட்டுங்க விஜயகுமார்” என்று நடத்துநர் சொன்னதும் அந்தக் கண்ணாடிக்காரன் எழுந்துவந்து, ‘ஒன் டூ த்ரீ ஃபார்’ சொல்லி, ‘வெச்சுக்கவா’ பாடலை ஒரேயடியில் அசத்தலாகப் பாடி முடித்தார். எனக்குக் கண்கள் வெளியே தள்ளின. செம்மையான தமிழ் உச்சரிப்புடன் அற்புதமாகப் பாடினார் மனிதர். அந்த ஐந்தே நிமிடங்களில் விஜயகுமார் எனக்கு ஒரு கதாநாயகனாக மாறிப்போனார்.
இடுக்கி மாவட்டத்தின் பசுப்பாறை எனும் தேயிலைத் தோட்டப் பகுதியில் பிறந்து வளர்ந்த தமிழர், விஜயகுமார். மலையாளமும் சிறப்பாகப் பேசுவார். அன்றைக்கு டி.எம்.எஸ், மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பி பாடல்களைப் பாடவந்தவர், நான் பாடவந்த யேசுதாஸ் பாடல்களையும் பாடி, பலத்த கைத்தட்டல்களைப் பெற்றார். ஓரிரு ஹிந்திப் பாடல்களை நானும் பாடினேன். சின்னப்பையன்தானே... போனால் போகட்டும் என்று எனது பாடல்களுக்கும் ஓரளவுக்குக் கைத் தட்டல் கிடைத்தது. மீண்டும் சில மேடைகளில் விஜயகுமாரைச் சந்தித்தேன். தமிழ் மொழியின்மேல் எனக்கு இருக்கும் மோகத்தைக் கண்ட விஜயகுமார், என்னிடம் தமிழிலேயே பேசினார். என்னை ‘மாப்ளே’ என்று அழைத்தார். அரசு விவசாயத் துறையில் அவருக்குச் சிறிய வேலை இருந்தது. சின்ன வயதில் ஓடிவிளையாடும்போது தடுக்கிவிழுந்து, அவரது இடது கண்ணில் ஒரு செடியின் அடிக்குற்றித் துளைத்தேறி கண் தகர்ந்து, குரூபமாகிப்போனது. அதை மறைக்கத்தான் அந்தக் கறுப்புக் கண்ணாடி. “கண்ணாடி வெக்க எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஆனா, ஒடஞ்சு அசிங்கமான என் கண்ணக் காட்டி ஒங்கள பயமுறுத்த வேண்டாமேன்னு வெக்குறேன்…”
வாழும் புரூஸ் லீ
பத்தாவது முடித்த இளைஞர்களுக்குச் சுயமாகத் தொழில் செய்ய, தொடுபுழையில் உள்ள மாவட்டச் சிறுதொழில் அமைப்பு, வட்டியில்லாக் கடன் வழங்குவதாகத் தகவலை அறிந்தேன். எப்படியாவது அதை வாங்கினால் செலவுக்குப் பணம் கிடைக்குமே, சென்று பார்க்கலாம். கிடைத்தால் பணம், இல்லையென்றால் ஒரு பயணம். 65 மைல் தொலைவில்தான் தொடுபுழை. அம்மா வழியாக அப்பாவிடம் அனுமதி கேட்டபோது, “ஒண்ணும் வேண்டாம். அவன்ட்டச் சும்மா இருக்கச் சொல்லு” என்று பதில் வந்தது. என் கையில் கொஞ்சம் பணமிருந்தது, போகவே முடிவெடுத்தேன். அப்பாவுக்குத் தெரியாமல் அதிகாலையில் புறப்பட்டு, தொடுபுழை சென்று அந்த அலுவலகத்தைத் தேடிப்பிடித்தேன். பல காகிதப் படிமங்களை நிரப்பித் தரவேண்டியிருந்தது. அவற்றையெல்லாம் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். சுவரான சுவர் மேலெல்லாம் புரூஸ் லீ நடித்த ‘என்டர் த டிராகன்’ படத்தின் சுவரொட்டிகள்!
கராட்டேயிலும் குங்ஃபூவிலும் உலக நட்சத்திரமாகயிருந்த புரூஸ் லீயின் புகைப்படங்களைப் பார்த்தும் அவரைப் பற்றிப் படித்தும் அவரது தீவிர ரசிகனாக நான் இருந்துவந்த காலம் அது. அப்போது மோஸ்தராகயிருந்த ‘புரூஸ் லீ கட்டிங்’ முறையில்தான் எனது தலைமுடியை வெட்டியிருந்தேன். அத்தகைய ப்ரூஸ் லீயை ‘உயிருடன்’ பார்க்க இதோ வாய்ப்பு வந்திருக்கிறது. வங்கிக் கடன்வாங்க வந்த கதையையெல்லாம் மறந்துவிட்டு, ‘நியூ’ சினிமாக் கொட்டகைக்குள்ளே புகுந்தேன்.கையில் பணம் குறைவாக இருந்ததால், முன்வரிசையில் அமர்ந்துதான் டிராகனின் வருகையைப் பார்த்தேன். ஆங்கிலம் புரிந்துகொள்ளப் பெரிய சிரமம் எதுவும் ஏற்படவில்லை. ஙீ... ஃபீ... ஈ... யா... நடனமாடுவதுபோல் நளினமாக புரூஸ் லீ நடத்தும் அசத்தலான சண்டை!

அடிதடியென்றால் இதுதான். மலையாளத்திலும் தமிழிலுமெல்லாம் வருவது வெறும் பொய்ச்சண்டை. காலில் சிறகு முளைத்த ஒருவனைப்போல் குதித்துக்கொண்டுதான் படம் முடித்து வெளியே வந்தேன். கொலைப் பசி, பக்கத்தில் தெரிந்த உணவுக் கடையிலிருந்து ஆப்பமும் உருளைக் கிழங்குக் குழம்பும் வாங்கிச் சாப்பிட்டுப் பணம் கொடுத்தபோதுதான், திரும்பிப்போக பேருந்துக் கட்டணத்திற்குப் பணம் பற்றாது என்பதை அறிந்தேன். மீதமிருந்த சில்லறைத் துட்டுக்களை வைத்து அறக்குளம் எனும் ஊரை வந்தடைந்தேன். அவ்வழி போகும் ஏதாவது ஒரு வண்டியில் என்னைத் தெரிந்த யாராவது இருப்பார்கள் என்ற நம்பிக்கையில், பல மணி நேரம் அங்கேயே நின்றேன், யாருமே வரவில்லை. கட்டப்பனைக்குப் போகும் பல பேருந்துகள் மலைச்சாலை ஏறிக் கடந்துபோயின. நேரம் போகிறது, என்ன செய்யலாம்?
கட்டப்பனையில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகேதான் நான் ஆங்கில இதழ்களை வாங்கும் புத்தகக் கடை. கடைக்காரனுடன் எனக்கு நட்பு இருந்தது. பயணம் முடிந்ததும் அங்கேயிருந்து பணம் வாங்கித் தரலாம் என்ற நம்பிக்கையில் இரண்டு பேருந்துக்கான ஆள்களை நிரப்பி, வலிந்து வந்த ஒரு பேருந்தில் நானும் நெருக்கியடித்து ஏறினேன். அப்பேருந்து, பல கொண்டைஊசி வளைவுகளைத் தாண்டி குருதிக்களம் எனும் ஊரை அடைந்தபோதுதான், சீட்டைக் கொடுக்க நடத்துநர் என்னிடம் வந்தார். நான் கூனிக்குறுகி மிகவும் தாழ்ந்த குரலில் அவரிடம், “இப்பொ என் கைல காசு இல்ல. கட்டப்பனால எறங்கிய ஒடனே புத்தகக் கடைலேர்ந்து வாங்கித் தாரேன்...” என்று சொன்னேன். “வண்டியேறி பாதி தூரம் முடிஞ்சதுக்கப்பறமாடா காசில்லன்னு சொல்றே? இவ்ளொ நேரம் நீ என்ன மைரப் புடுங்கிட்டு இருந்தே? காசில்லாத பிச்சக்காரப் பய நீயெல்லாம் எதுக்குடா பஸ்சுல வந்து ஏறினே?” நடத்துநர் உச்சகட்டக் குரலில் கத்தி வசைகிறார். அப்பேருந்தில் பயணிக்கும் அனைவரும் என்னையே பார்க்கிறார்கள். அவமானத்தின் அடியாழத்தில் சென்றுவிழுந்தேன். “இவனயெல்லாம் அடிச்சுக் கொல்லணும், அப்பத்தான் புத்தி வரும். வண்டிய நிறுத்துங்க...” நடத்துநர் மணியடித்து வண்டியை நிறுத்தினார்.
“என்ன ஷாஜீ? என்ன பிரச்ன?” என்று ஒரு குரல். பேருந்தின் முன் பகுதியிலுள்ள ஓர் இருக்கையிலிருந்து குதறி எழுந்து, ஆள்களை வேகமாக விலக்கி அகற்றி நான் நிற்கும் இடத்தை நோக்கி வருகிறார் தமிழ்ப் பாடகன் விஜயகுமார்! நொடி நேரத்தில் நான் அவமானத்தின் ஆழ்துளையிலிருந்து குதித்து வெளியேறினேன். விஜயகுமாரின் பக்கம் எட்டி அவரது சட்டைப் பையில் கைவிட்டு ஐந்து ரூபாய்த் தாளை எடுத்து நடத்துநரின் கையில் கொடுத்தேன். வழிந்த ஒரு மஞ்சள் சிரிப்புடன் அவர் சீட்டும் சில்லறையும் தந்தார், பேருந்து நகர்ந்தது. பக்கத்திலிருந்தவரிடம் கொஞ்சம் ஒதுங்கச் சொல்லி என்னையும் தனது இருக்கையில் அமரவைத்தார் விஜயகுமார். உண்மையில் நடந்தது என்னவென்று அவரிடம் சொல்ல முயன்றேன். ஆனால், அதைக் கேட்க விஜயகுமார் விருப்பமே காட்டவில்லை.
“என்ன மாப்ளே? பாத்து ரொம்ப நாளாச்சு! இப்பல்லாம் கச்சேரி ஒண்ணும் இல்லையா? நெறய ப்ராக்டீஸ் பண்ணுங்க மாப்ளே... நெறயப் பாடுங்க. ஒங்க ஊர்ப் பக்கம் எதாவது கச்சேரி வந்தா என்னையும் கூப்டுங்க. சேந்து அசத்திருவோம்…” என்று நில்லாமல் பேசிக்கொண்டு புதிதாக வந்த பல தமிழ்ப் பாடல்களின் முதல் வரிகளை எனக்குப் பாடிக் காட்டினார். “இந்தப் பாட்ட இன்னும் நீங்க கேக்கலயா? ஆச்சரியமாருக்கே...” என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பாடல்களைப் பற்றி மட்டுமே பேசினார். பைனாவு என்ற ஊர் வந்தபோது “இங்கே கலெக்டர் ஆப்பீசுல வேல செய்யற ஒரு ஃபிரண்ட பாக்கணும்... நான் இங்கே எறங்கிக்கிறேன். மீண்டும் சந்திப்போம் மாப்ளே...” என்று அவர் இறங்கினார். இவ்வுலகின் மிகவும் அழகான மனிதர் அவர்தான் என்று எனக்குத் தோன்றியது. வெளிச்சம் பரப்பும் புன்னகையுடன் எனது கைகளைக் குலுக்கி விடைபெற்றுச் சென்ற விஜயகுமாரைப் பின்னர் ஒருபோதும் நான் பார்த்ததில்லை.
(தொடரும்)