கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“அறியாமையும் சுயமரியாதையின்மையும்தான் எல்லா பிரச்னைகளுக்குமான ஆணிவேர்!”

“அறியாமையும் சுயமரியாதையின்மையும்தான் எல்லா பிரச்னைகளுக்குமான ஆணிவேர்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அறியாமையும் சுயமரியாதையின்மையும்தான் எல்லா பிரச்னைகளுக்குமான ஆணிவேர்!”

சனல்குமார் சசிதரன்சந்திப்பு : வெய்யில், சா.ஜெ.முகில் தங்கம், படங்கள் : க.பாலாஜி

“என் படைப்புகள் குறித்து என்னை விளக்கச் சொல்லாதீர்கள், நாளையேகூட நான் இந்தப் பூமியிலிருந்து மறைந்துவிட வாய்ப்பு உண்டு. எனது படைப்புகள் இங்கே உங்களோடு இருக்கும். எனவே, நீங்கள் உங்கள் கேள்விகளை எனது படைப்புகளிடம் கேளுங்கள்.” என்கிறார் சனல்குமார் சசிதரன். மலையாள சினிமா உலகின் மதிப்பிற்குரிய அடையாளம். ‘ஒராள்பொக்கம்’, ‘ஒழிவு திவசத்தே களி’, ‘எஸ் துர்கா’ போன்ற அழகியலும் அரசியல்நுட்பமும் காத்திரமாக முயங்கப்பெற்ற திரைப்படங்களை உருவாக்கிய இயக்குநர். ‘படப்பெட்டி’ இயக்கத்தினர் ஒருங்கிணைத்திருந்த ‘ஒழிவு திவசத்தே களி’ திரையிடல் நிகழ்வுக்கு சென்னை வந்திருந்தவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...

“ஒரு குறிப்பிட்ட இடத்தில் கேமராவைப் பொருத்திவிட்டு, ஒரு முழுநாள் கழித்துவந்து எடுத்துப் பார்த்தோமானால், நிச்சயம் அதில் ஒரு நல்ல சினிமா இருக்கும் என்று சொல்கிறீர்கள். உண்மைதான்! அப்படியானால், ஓர் இயக்குநருக்கு அங்கு என்ன வேலை? ஏனென்றால், நீங்கள் சொல்கிறபடி நம்மைச் சுற்றிலும் சினிமா நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கொஞ்சம் விளக்குங்கள் உங்களைப் பொறுத்தவரை, எந்த இடத்தில் ஒரு சினிமாவை நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள்... அந்த முதற்புள்ளி குறித்துக் கேட்கிறேன்...”

“அது ஒரு மேஜிக் நிகழ்வது மாதிரிதான். இருபது வருடங்களுக்கும் மேலாக, ஒரு குறிப்பிட்ட சூழலோடு வாழ்க்கையோடு நமக்குப் பரிச்சயமிருக்கும்; அதில் நாம்  பங்கேற்றிருப்போம். ஆனால், அந்தத் தருணம் வரை, அங்கே ஒரு சினிமா இருப்பதை நாம் உணர்ந்திருக்க மாட்டோம். திடீரென ஒரு காலைப்பொழுதில் அங்கே ஒரு சினிமா இருப்பதை உணர்வோம். அது ஒரு மேஜிக்தான்!

“அறியாமையும் சுயமரியாதையின்மையும்தான் எல்லா பிரச்னைகளுக்குமான ஆணிவேர்!”

உதாரணமாக, ‘ஒழிவு திவசத்தே களி’ படத்தின் மையக்கதையான உன்னியின் சிறுகதையை, என்னுடைய முதல் படத்திற்கு முன்பாகவே வாசித்திருந்தேன். அப்போதே அதில் ஒரு சினிமா இருப்பதை உணர்ந்திருந்தேன். ஆனால், அந்த சினிமாவை எப்படி உருவாக்குவது என்பது குறித்த தெளிவான புரிதல் இல்லை. என்னுடைய முதல் படமான ‘ஒராள்பொக்க’த்திற்குப் பிறகு, வேறொரு படத்தை இயக்கும் வேலையிலிருந்தேன். இந்தச் சிறுகதையை முற்றிலுமாக மறந்துவிட்டிருந்தேன். ஒருநாள் காலையில், செய்தித்தாளில் இடைத்தேர்தல் பற்றிய அறிவிப்பைப் பார்த்தேன். அப்போதுதான் அந்தச் சிறுகதை மீண்டும் நினைவுக்கு வந்தது. அந்தக் கதைக்குள்ளிருந்த சினிமாவுக்கான வடிவம் கிடைத்துவிட்டதாக உணர்ந்தேன். தொடங்கியிருந்த படத்தை நிறுத்திவிட்டு, இந்தப் படத்திற்காக அடுத்த நாளிலிருந்தே தேர்தல் மான்டேஜ்களைப் படம்பிடிக்க ஆரம்பித்தேன்.”

எனது நண்பர்களையும் இன்னும் சிலரையும் அழைத்துக்கொண்டு, படப்பிடிப்புக்கான இடத்திற்குச் சென்றுவிட்டேன். ஒவ்வொருவரும் வேறு வேறு வேலைகளில் இருப்பவர்கள்.  ஆனால், நடிப்பின்மீது ஆர்வமுள்ளவர்கள். அவர்களிடம், ‘நாம் இங்கே ஒன்றாகத் தங்கி, ஒரு சினிமாவை உருவாக்க முயற்சி செய்யப்போகிறோம்’ என்று மட்டும்தான் சொன்னேன். அப்போது, உன்னியின் ஆறு பக்கச் சிறுகதையைத் தவிர, என்னிடம் ஸ்கிரிப்ட் என்று கையில் எதுவும் இல்லை. படப்பிடிப்பு நடந்த 25 நாள்களில் எல்லோருமாகச் சேர்ந்து ஒரு சினிமாவைக் கண்டுபிடித்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கையிலிருந்து சினிமாவைக் கண்டுபிடிப்பது, ஒரு மேஜிக் என்றுதான் நினைக்கிறேன்.”

“ ‘ஒழிவு திவசத்தே களி’ சிறுகதையின் இறுதியில், தாஸ் பாத்திரத்தை பாட்டிலால் குத்திக் கொல்வதாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும். ஆனால், படத்தில் நீங்கள் தூக்கில் தொங்கவிடுவதாகக் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள். எதனால் அப்படி மாற்றினீர்கள் ?”

“அந்தக் கதையை நமது அரசியல் ஜனநாயகத்தோடு தொடர்புபடுத்த நினைத்தேன். உண்மையைச் சொல்லப்போனால், ‘ஒழிவு திவசத்தே களி’ சிறுகதையின் உள்ளடக்கத்தைவிடவும், அந்தக் கதையின் தலைப்புதான் என்னை அதிகம் கவர்ந்தது. ‘ஒரு விடுமுறை நாளின் விளையாட்டு’ என்ற பொருள் தரும் தலைப்பு, அரசியல்பூர்வமாக வேறோர் அர்த்தத் தளத்துக்கு நகர்ந்தது. ஒரு விடுமுறை நாளில், நான்கைந்து பேர் சேர்ந்து ஒரு விளையாட்டை விளையாடுகிறார்கள், இதே விஷயம்தான் நமது தேர்தல் நாளிலும் நடக்கிறது. அன்றும் விடுமுறைதான், வாக்குச் சாவடிகளுக்குச் சென்று மக்கள் தங்களுடைய வாக்கைச் செலுத்துகின்றார்கள். அதுவும்கூட ஒரு வேடிக்கையான விளையாட்டான விஷயமாகத்தான் படுகிறது. அந்த நாளின் முடிவில், அவர்கள் விளையாடிய அந்த விளையாட்டுக்காக அவதியுறுகின்றனர். சிறுகதையை இப்படி இந்தியத் தேர்தல் அரசியல் சரடோடு இணைத்துப் பேச விரும்பினேன். விளையாட்டின் இறுதியில், கத்தியால் குத்துவதுபோலக் காட்சி வைத்திருந்தால், அதை நாம் அரசியல் அம்சத்தோடு பொருத்திப் பார்க்க முடியாது. ஏனென்றால், படத்தில் சித்திரிக்கப்படுவது அரசு அமைப்பின் கொலை. எனவே, தூக்கிலிடுவதாகக் காட்சிப்படுத்தினேன். சாதி அரசியல், பெண்ணிய அரசியல் என எந்த ஒரு குறிப்பிட்ட அரசியலையும் மையமாகக்கொண்டு நான் அதில் பேசவில்லை. ஆனால், எல்லாமும் அதில் இயல்பாக இடம்பெறுமாறு பார்த்துக் கொண்டேன். படத்தில் அதற்காகத் திட்டமிட்டு நிறைய விஷயங்களைச் செய்திருந்தேன். படத்தின் தொடக்கத்திலேயே,  நமது அரசியலமைப்பின் முகவுரை இடம்பெறும். ஆனால், எத்தனை பேர் அதைச் சரியாகக் கண்டுகொண்டார்கள் எனத் தெரியவில்லை.”

“படத்தில் நிறைய இடங்களில் ரத்தத்தைக் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தன.ஆனால், நீங்கள் திட்டமிட்டு அதைத் தவிர்த்திருக் கிறீர்கள் என்று நினைக்கிறேன்...”

“ஆமாம், நிச்சயமாக. வன்முறை மிக ஆழமாகப் பார்வையாளர்களைப் பாதிப்பது, அது மறைமுகமாக நிகழும்போதுதான்.  ஒருமுறை உக்கிரமான வன்முறைக் காட்சியை நேரடியாகக் காட்டிவிட்டால், அதன்பின் வன்முறையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ளும் நுண்ணுணர்வை நாம் இழந்துவிடுவோம். மேலும், இரத்தம் ஒரு காட்சியில் சினிமாத்தனத்தை அதிகரிக்கச் செய்துவிடும். வன்முறையின் நிகழ்தருணத்தைவிட, வன்முறைக்குத் தயாராகும், வன்முறையை நெருங்கும் தருணம் என்பது கூடுதல் தாக்கத்தைப் பார்வையாளர்களிடம் உருவாக்கும். இது எனது புரிதல், இது சரியாக இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம். ‘எஸ் துர்கா’விலும் இதே அணுகுமுறையைத்தான் பின்பற்றியுள்ளேன். ‘எஸ் துர்கா’வும் வன்முறை நிறைந்த படம்தான். ஆனால், எங்கேயும் வெளிப்படையான வன்முறை இருக்காது. ஒரு காட்சியில் மட்டுமே ஆயுதத்தை வெளிப்படையாகக் காட்டியிருப்பேன். அதையும்கூட இறுதிவரை பயன்படுத்தவிடமால் செய்திருப்பேன். எதார்த்தத்தில் நாம் மிகவும்  வன்முறையானவர்கள். வன்முறையானது நமது சமூகத்தில், அன்றாட வாழ்வில் இயல்பான ஒன்றாக இருக்கிறது. ஆனால், அப்படி இல்லாததுபோல மறைக்கப் பட்டிருக்கிறது. நாம் அதை அறிந்தும் அறியாமலும் அந்த வன்முறையோடே உழன்று வாழ்கிறோம்.”

“அறியாமையும் சுயமரியாதையின்மையும்தான் எல்லா பிரச்னைகளுக்குமான ஆணிவேர்!”

“கருத்தியல் ரீதியாக, இந்தியச் சமூகம் குறித்த அதன் பிரத்தியேகச் சிக்கல்கள் குறித்த, மிக நுட்பமான புரிதலைக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்கள் படங்களின் வழியே உணரமுடிகிறது. சரியான புரிதல் என்றுகூடச் சொல்லலாம். இந்தக் கச்சிதமான அரசியல் கருத்துநிலையை, ஆளுமையை எப்படி அடைந்தீர்கள்?”

“நிறைய வேறுபாடுகளுடைய அரசியல் சூழல்களைச் சந்தித்ததால் இருக்கலாம். நான் பள்ளியில் படிக்கும்போது இந்திய மாணவர் சங்கத்தில் இருந்தேன். அதன் பிறகு கல்லூரியில் ஏ.பி.வி.பி-யில் இருந்தேன்.  விவரம் அறியாத வயதில் ஆர்.எஸ்.எஸ்-ன் சகாவிற்கும்கூடச் சென்றுள்ளேன். இந்தப் பலதரப்பட்ட அனுபவங்கள்தான் எனக்குள் இப்படியொரு கருத்துநிலையை உருவாக்கியிருக்கும் என்று நினைக்கிறேன். அறிந்தும் அறியாமலும், சரியானது எது? சரியில்லாதது எது? என எனக்குள்ளேயே பகுப்பாய ஆரம்பித்தேன். ஒரு தனிமனிதனின் இயல்பான படிப்படியான முன்னேற்றத்தில் உருவான கருத்துநிலைதான் இது.

நான் கேரளத்தின் ஓர் ஆதிக்க சாதிக் குடும்பத்தில் பிறந்தேன். சாதியில் மட்டுமே உயர்ந்தநிலை,  பொருளாதாரரீதியாக அல்ல. என்னுடைய தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என எல்லோரும் தங்களுக்குச்  சாதிரீதியாகச் சில அனுகூலங்கள் இருப்பதாக நினைத்தார்கள். அதேநேரம் பொருளாதார ரீதியாக நிறையவே சிரமப்பட வேண்டியிருந்தது. சாதிரீதியான பிரிவினைகள், வர்க்கரீதியான பிரிவினைகள் குறித்த சிக்கலான அனுபவங்கள், என்னை யோசிக்கவைத்தன. சில சமயங்களில், நான் முற்றிலும் தவறான பாதையில் சென்றிருக்கலாம். அதன்பின் அந்தப் பாதையை மாற்றியிருக்கலாம். இப்போதும்கூட, எது சரி என நான் ஆராய்ந்துகொண்டுதானிருக்கிறேன்.அரசியல்ரீதியாக, இடதுசாரி கருத்தியலில் நம்பிக்கை உடையவனாக இருக்கிறேன். அதேசமயம், ‘இடதுசாரி சித்தாந்தம் என்றால் என்ன?’ என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இங்கு, இடதுசாரி சித்தாந்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் உண்மையில் இடதுசாரித்தன்மையுடன் இருக்கின்றனவா? அப்படியானால் நான் எங்கே நிற்க வேண்டும்? இந்தக் கேள்வி இயல்பாக என்னுள் எழுகிறது.

தனிமனிதனாக, எனது மனதை எப்போதும் திறந்துவைத்திருக்க வேண்டும் என்று நினைகிறேன். ஒருவர் தவறான செயலைச் செய்யும்போது, அவரது பின்னணியை ஆராய்ந்தால், அவரின் செயல் நியாயமானதாகத் தோன்றலாம். அதைக்கொண்டு நான், ‘அவரின் தவற்றைப் புரிந்துகொள்ள முயல்கிறேன்...” என்று சொன்னால், இந்தச் சமூகம் நான் தவறான பாதையில் செல்வதாகச் சொல்லும். முன்முடிவோடு எதன்மீதும் தீர்ப்பளிக்கக் கூடாது, வாழ்க்கை பலவற்றை வைத்திருக்கலாம். எதுவும் நமது கையில் இல்லை. நம்மால் முடிந்தது நமது கண்களையும் மனதையும் திறந்துவைத்துக் கொள்வதே. ‘இது மிகச்சிறந்த படம், இந்தப் படைப்பை உருவாக்கிய நீங்கள் சிறந்த மனிதர்!’ எனக் கூறும்போது, எனக்கு அது அபத்தம் என்றே தோன்றுகிறது. ஒருவேளை அது சிறந்த படமாக இருக்கலாம், மிகச் சரியான அரசியலைப் பேசியிருக்கலாம், இந்தச் சமூகத்திற்கு தேவையான ஒன்றாகக்கூட இருக்கலாம், ஆனால், அது முழுமையாக என்னுடையதல்ல. வாழ்க்கையின் ஓட்டத்தில் அதை உருவாக்கியிருக்கிறேன். அதில் சூழலுக்குப் பெரிய பங்கிருக்கிறது. எனது ஆளுமை மட்டுமே எனது படங்களைத் தீர்மானிப்பதில்லை.”

“ ‘ஒழிவு திவசத்தே களி’ கதாபாத்திரங்களின் பெயர்கள்கூட அசோகன், தர்மன், திருமேனி, வினயன், தாஸன், நாராயணன், கீதா, கணேசன்  என அரசியல்ரீதியாகக் குறியீடுகள் நிறைந்தவை. இதைக் கேரளாவில் பார்வையாளர்கள் உள்வாங்கிக் கொண்டார்களா?

“முழுமையாக அப்படியே கதையிலிருந்து எடுத்துக்கொண்ட விஷயம் என்றால், அது கதாப்பாத்திரங்களின் பெயர்கள்தான். ஏனென்றால், அவை அவ்வளவு உக்கிரமான அரசியலைக்கொண்டிருந்தன. பெரும்பாலானோர் இந்த நுட்பமான அடையாள அரசியலைப் புரிந்து கொள்ளவில்லை. இந்தச் சிறுகதையின்மீதும் எந்தவோர் அரசியல் விவாதமும் கேரளாவில் நிகழவில்லை.”

“அறியாமையும் சுயமரியாதையின்மையும்தான் எல்லா பிரச்னைகளுக்குமான ஆணிவேர்!”

“உங்களுடைய படைப்புகள் நீங்கள் நினைப்பதைவிட அதிகமாகப் பேசிவிடுவதாக நினைக்கிறீர்களா?”

“என்னுடைய சினிமாவில், நான் திட்டமிட்டு வைத்த நிறைய விஷயங்களை மக்கள் முற்றிலுமாகப் புறக்கணித்திருக்கிறார்கள். பெரிய திட்டமற்று வைத்த சில விஷயங்களைப் பெரிய அளவில் உள்வாங்கி விவாதித்திருக்கிறார்கள். இதுவொரு பரஸ்பர கொடுக்கல் வாங்கல். எல்லா நேரத்திலும் இது வெற்றிகரமாக அமைந்துவிடுவதில்லை. ‘ஒழிவு திவசத்தே களி’ படத்தின் இறுதிக் காட்சியின் நுட்பத்தைப் பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆனால், தாஸன் பாத்திரம் குறிப்பிடுகிற, ‘When I born, I black... When I grow up, I black’ என்ற கவிதையோடு எளிதாக மக்கள் தங்களைத் தொடர்புபடுத்திக்கொண்டார்கள். வெகு நாள்களுக்குப் பிறகு, நான் இப்போது படம் பார்க்கும்போது, அந்தக் கவிதையை அவ்வளவு சத்தமாகப் பயன்படுத்தியிருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். ஆனால், மக்கள் அக்காட்சியோடும் கவிதையோடும் ஒன்றுவதைப் பார்க்கும்போது, சினிமா செய்ய வேண்டியதைச் செய்துவிட்டது எனத் தோன்றுகிறது.

ஒரு காட்சியை ஏன் அப்படி அமைத்தோம் எனப் படைப்பாளி மறந்துவிடலாம், ஆனால் மக்கள் அதைக் கண்டுபிடிப்பார்கள். மக்கள் ஒரு படத்தைப் பார்க்கும்போது, இயக்குநர் சொல்ல வருவதைத் திரையில் பார்ப்பதில்லை. அவர்கள் அதில் என்ன காண விரும்புகிறார்களோ அதையே காண்கிறார்கள். தவிர, படைப்பாளியின் முனைப்பைத் தாண்டி, படைப்பானது அதற்கெனத் தனித்த பொருளைத் தன்னுள் கொண்டிருக்கிறது என்றே நினைக்கிறேன்.”

“ ‘ஒழிவு திவசத்தே களி’ மிகச் சிறந்த தலித் அரசியல் படம். கேரளாவில் தலித்திய இயக்கங்கள் படத்தை எப்படி உள்வாங்கிக்கொண்டன?”

“வருந்தத்தக்க விதமாக, அவர்கள் அந்தப் படத்தை என்னுடைய சாதி அடையாளத்துடன் தொடர்புபடுத்திப் பார்த்தார்கள். ஆதிக்கச் சாதியில் பிறந்தவன்  நான் என்பதால், அந்தப் படத்தில் வெளிப்பட்ட சாதிய விமர்சனம் பொய்யானது என நினைத்தார்கள். அதனால், அவர்கள் சினிமாவின் உண்மையான சாரம்சத்தை உணரும் வாய்ப்பை இழந்தார்கள். என்மீது அதிகமாகக் கவனம் செலுத்தி, என்னைப் பற்றி அதிகம் பேசியதில், அவர்கள் சினிமாவைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதையும் பார்க்கிறேன். நம்பிக்கையிருக்கிறது...

என்னுடைய வருத்தம் என்னவென்றால், இந்தச் சமூகம், சினிமா எனும் முக்கியமான கருவியை ஊடகத்தைப் புரிந்துகொள்ளாமல் அதன் தீவிரமான பயன்பாட்டை இழந்துகொண்டிருக்கிறது. குறிப்பாகக் கேரளாவில் இப்போது சாதியப் பிரச்னைகள், தீண்டாமைக் கொடுமைகள் என நிறைய விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. சபரிமலை பிரச்னைக்குப் பிறகு, இது வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிகிறது. அதேநேரத்தில், இந்தியாவிலேயே மிகவும் முற்போக்கான மாநிலம் என்று கேரளா கருதப்படுகிறது. வேடிக்கைதான்!”

“நீங்கள் ஒரு வழக்கறிஞரும்கூட, படைப்பாளியாக அது உங்களுக்கு எவ்வளவு தூரம் உதவுகிறது எவ்வளவு தூரம் பிரச்சனையாக இருக்கிறது?”

“நான் எப்போதும் இயக்குநராகவே விரும்பினேன். ஆனால், குடும்பத்திற்காகவும்  மரியாதைக்காகவும் பிறரிடம் சொல்லிக்கொள்வதற்காகவும் மட்டுமே வழக்கறிஞரானேன். ஆயினும், சமூகத்தில் உள்ள முக்கியமான பல பிரச்னைகளை அடையாளம் காண அந்த வேலை எனக்கு உதவியுமிருக்கிறது. அந்தவகையில் மற்ற எந்த வேலையும், எனக்கு இவ்வளவு தூரம் உதவியிருக்குமா எனத் தெரியவில்லை. குற்றவாளிகள் அவர்களாகவே வந்து தங்களுடைய கதைகளைக் கூறுவார்கள். சிலர் குற்றமே செய்திருக்கமாட்டார்கள். சிலரின் கதையில் நியாயம் இருக்கும், சிலரின் கதையில் இருக்காது. சிலர் குற்றவுணர்வுடன் இருப்பார்கள், சிலரிடம் அதைப் பார்க்க முடியாது. ஆயினும், சட்டத்தின்படி எல்லோரையும் ஒன்றுபோலவே நீதியை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும். வழக்கறிஞர் பணி அனுபவம் என்பது, எனக்கு உதவிய அளவிற்குப் பிரச்னையாக இருந்ததில்லை.”

“எந்தப் பருவத்தில் சினிமாவை விரும்ப ஆரம்பித்தீர்கள்? எது உங்களைச் சினிமாவை நோக்கி இழுத்தது?”

“எங்களுடைய கிராமத்தில் தியேட்டர் இருந்தது. வெளியாகும் எல்லாப் படத்துக்கும் அப்பா போய்விடுவார், என்னையும் அழைத்துச் செல்வார். ஆனால், ஒருகட்டத்தில் நான் சினிமா பார்ப்பதையே வழக்கமாக்கிக்கொள்வேன் என அவர் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். நீ அதிகமாகப் படம் பார்ப்பதை நிறுத்த வேண்டும், டாக்டர் ஆக வேண்டும் எனச் சொன்னார். (சிரிக்கிறார்)
எங்கள் கிராமத்து தியேட்டரில்தான் அனைத்துவிதமான கமர்ஷியல் படங்களையும் பார்த்தேன். ஆனால், அதன்பிறகு தொலைக்காட்சியில் பார்த்த கலைப்படங்களில்தான் என்னால், அதிகமாக ஒன்ற முடிந்தது. அப்பாவிடம், நான் படம் எடுக்க விரும்புவதைச் சொன்னேன். அது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.”

“கமர்ஷியல் சினிமாவும் ஒரு சமூகத்திற்கு உளவியல்ரீதியாக மிகத் தேவையான ஒன்றுதான் எனும் கருத்து அறிவுஜீவிகள், கோட்பாட்டாளர்கள் மத்தியில் உள்ளது. உங்களுடைய சினிமா பாணி முற்றிலும் வேறு வகைமையானது. கமர்ஷியல் சினிமாக்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“கமர்ஷியல் சினிமாவுடன் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, கமர்ஷியல் சினிமாவும் தேவைதான். ஆனால், பல நேரங்களில் அவை உணர்வுரீதியாக, உளவியல்ரீதியாக அதிகமாக மக்களைச் சுரண்டுகின்றன. எந்தவோர் அமைப்பும் வடிவமும் மக்களைச் சுரண்டுவது ஆபத்தானது; ஏற்றுக்கொள்ளவியலாதது.

எதார்த்த வாழ்க்கைக்கு, சூழலுக்கு  அப்பாற்பட்ட கதாபாத்திரங்களினால் மக்கள் ‘உண்மை’யிலிருந்து விலகுகிறார்கள். இதனால், மக்கள் உண்மைநிலையை அடையாளம் காண்பதில்லை. கமர்ஷியல் திரைப்படங்கள், நாம் அமைதியான சமூகத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கி றோம், இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதுபோன்ற தோற்றத்தை மக்களுக்குக் கொடுக்கின்றன. மக்கள் தங்களைச் சுற்றியுள்ள பிரச்னைகளை அடையாளம் காண வேண்டும். அப்போதுதான், அதைச் சரி செய்ய முடியும். கமர்ஷியல் படங்கள் என்ன செய்கிறதென்றால், கதையில் நேர்மறையான முடிவைக் கொடுத்து மக்களைச் சிந்திக்கவிடாமல் செய்கின்றன. இதுவும் ஒருவகையான சுரண்டல்தான்.

இந்தப் படங்கள் உருவாக்கும் பிரமையில், ஏன் பிரச்னைகளைப் பற்றி மட்டும் பேசுகிறீர்கள்? ஏன் அரசியல் பேசுகிறீர்கள்? என்பதுபோன்ற கேள்விகளை மக்கள் எங்களைப் போன்றவர்களை நோக்கி எழுப்புகின்றனர். அதிலும், முக்கியமாகச் சாதியப் பிரச்னைகளைப் பற்றி பேசும்போது, பெரும்பாலான மக்கள் ‘இப்போதுதான் சாதியப் பிரச்னைகள் இல்லையே?’,  ‘இப்போதுதான் தீண்டாமை இல்லையே... ஏன் அதைப் பற்றியே பேசுகிறீர்கள்?’ என எதிர்க்கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள், இங்கே இருக்கும் சாதியப் பிரச்னையையும் தீண்டாமையையும் உணரவே இல்லை. ஏனென்றால், கமர்ஷியல் சினிமாக்கள் அப்படியான ஒரு போலிச் சமூகத்தைச் சினிமாவில் சித்திரிக்கின்றன. அரசியல் கட்சிகளும்கூட இதையேதான் செய்கின்றன.  நமது நாடு மிகப்பெரிய கலாசாரத்தையும் வரலாற்றையும் கொண்டது, இங்கே எந்தப் பிரச்னைகளும் இல்லை என்று நம்பச் சொல்கின்றன. என்னுடைய படங்களின் மீதான மிகப்பெரிய விமர்சனமே, நான் எப்போதும் எதிர்மறையான விஷயங்களையே படமாக்குகிறேன் என்பதுதான். ஒரு படத்தை நேர்மறையாக முடிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர். அப்போதுதான் அது மக்களை ஊக்குவிக்கும் விஷயமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் அது மக்களை ஊக்குவிக்காது. மக்கள் பிரக்ஞையற்று உறங்க உதவும் தூக்க மாத்திரையாகத்தான் இருக்கும்.”

“உங்களுடைய நம்பிக்கையில், ஒரு கலை வடிவத்தின் அதிகபட்ச வெற்றி என்பது என்ன?” 

“என்னுடைய சினிமா, பெரும்பாலான மக்களுக்குப் பிடிக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை, எனக்கு அது தேவையுமில்லை. மிகக் குறைவான மக்கள் என்னுடைய சினிமாவைப் புரிந்துகொண்டு, உணர்ந்துகொண்டு, அதை மற்றவர்களிடமும் பகிர்ந்துகொண்டால் போதும். சினிமாவுக்கு மட்டுமில்லை, எந்தவொரு கலை வடிவத்தையும் மிகக்குறைவான மக்களே புரிந்துகொள்வார்கள். அவர்களின் வழியே கலையானது பெரும்பாலான மக்களுக்குச் சென்று சேரும். கமர்ஷியல் சினிமாவைப் பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்வார்கள். அதனால், எந்தப் பயனும் இல்லை. முன்பே நான் குறிப்பிட்டதுபோல, அவை வெறும் தூக்கமாத்திரைகள். என்னுடைய சினிமா, கண்டிப்பாக மக்களைத் தொந்தரவு செய்யும்.  ‘ஒரு சினிமாவைப் பார்த்த பிறகு, ஏன் நாம்  தொந்தரவாக, பாரமாக உணர வேண்டும்? அது தேவையா?’ என்று நினைப்பவர்கள் கமர்ஷியல் சினிமாவுக்குச் செல்கிறார்கள். அதேசமயம், கேரள சர்வதேசத் திரைப்பட விழாவில் எனது படத்தைப் பார்த்தவர்கள் என்னைக் கட்டிப்பிடித்து அழுதார்கள். அவர்களின் உணர்வை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. என்னைப் பொறுத்தவரையில், மிகப்பெரிய வெற்றி என்பது, மிகக்குறைவான மக்களைத் தொந்தரவு செய்வது; சிந்திக்கச் செய்வது.”

“அறியாமையும் சுயமரியாதையின்மையும்தான் எல்லா பிரச்னைகளுக்குமான ஆணிவேர்!”

“ ‘எஸ்.துர்கா’ பட விஷயத்தில் தணிக்கை ரீதியாக உங்களுக்கு நிறைய சிக்கல்கள் வந்தன. தொடர்ச்சியாக வரும் பிரச்னைகள், ஒரு கலைஞனுக்குள் சுயதணிக்கையை உருவாக்குகிறதா?”

“நான் இப்போது இந்த சிஸ்டத்தை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளேன். முன்பு, நமது ஜனநாயகம் மிக வலிமையானது என்றும், தனி மனிதன் போராடினால் அவனுக்கான நீதி கண்டிப்பாகக் கிடைக்கும் எனவும் நினைத்திருந்தேன். நமது ஜனநாயகம் மிகவும் பலவீனமானது. ஆனால், சிஸ்டம் மிகவும் வலிமையானது. சிஸ்டத்திற்கு முன்னால் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை இப்போது புரிந்துகொண்டேன். இந்தியச் சூழலின், கடினமான யதார்த்த நிலை இதுதான். கலைஞனுக்கு மட்டுமில்லை, தனிமனிதனுக்கும் இதுதான் யதார்த்த நிலை. கலைஞனுக்கு எந்தவொரு நிலையும் அனுபவம்தான். ஆனால், ஒரு தனிமனிதனுக்கு இந்த நிலை, பேரச்சத்தைத் தரக்கூடியது. இங்கிருக்கும் அனைத்துத் தடைகளையும் தாண்ட வேண்டியது ஒரு கலைஞனாக எனக்கு அவசியமானது. ஆனால், தனிமனிதாகத் தடைகளைத் தாண்டி முன்னேறுவதற்கு இங்கு வழியே இல்லை. நாட்டைவிட்டு ஓடுவதுதான் ஒரே வழி. தனிமனிதனாக இதை நான் வருத்தத்தோடு உணர்ந்திருக்கிறேன். கலைஞனுக்குத் தடைகள் அவசியம், எனவே, கலைஞனாக இந்த நாட்டில் வாழ நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.”

“பெரும்பாலும் நீங்கள் கதையோ திரைக்கதையோ தயார்செய்துகொண்டு படமாக்குவதில்லை. என்ன நிகழ்கிறதோ அதைப் படம்பிடிக்கும் உத்தியைக் கையாள்கிறீர்கள். அதைப் பெரும்பாலும் நேர்மறையான விஷயமாகவே சொல்கிறீர்கள். இதில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னையென்று எதுவுமே இல்லையா?”

“இதில் நேர்மறை, எதிர்மறை என்றெல்லாம் ஒன்றுமில்லை. திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடும் எல்லா இயக்குநருக்கும், இறுதியாக உருவாகக்கூடிய ஒரு முழுமையான திரைப்படம்தான் குறிக்கோள். அதை அடைவதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வழிமுறையைப் பின்பற்றுகிறார்கள். நான் எனக்குத் தெரிந்த ஒரு வழிமுறையைப் பின்பற்றுகிறேன், அவ்வளவுதான்!

தொடக்கத்தில், நான் மூன்று குறும்படங்களை எடுத்தேன். அவற்றிற்கு ஸ்கிரிப்ட் இருந்தது. என்னுடைய முதல் திரைப்படமான ‘ஒராள்பொக்க’த்துக்கு ஸ்கிரிப்ட், ஸ்டோரி போர்டு என எல்லாமே இருந்தது. ஆனால், நான் சினிமாவின் இந்த வழக்கமான உத்திகளை மாற்ற விரும்புகிறேன். எனக்கு சினிமாவின் வழக்கமான உத்திகளும் வழிமுறைகளும் தெரியும். ஆனால், நான் கையாளும் இந்த உத்தி எனக்குக் கூடுதல் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.”

“இந்தியச் சமூகச் சூழலில் கணக்கிலடங்கா பிரச்னைகள் இருக்கின்றன. ஒரு படைப்பாளியாக எல்லா பிரச்னைகளுக்குமான ‘ஆணிவேர்’ இதுதான் என்று எதைக் கருதுகிறீர்கள்?”

“அறியாமைதான் பெரிய பிரச்னை. மேலும் நமக்குச் சுயமரியாதையே இல்லை. ‘நாம் கீழானவர்கள், நமக்கு அதிகாரம் கிடையாது, நாம் கீழேயே இருக்க வேண்டும்’ எனச் சொன்னால், நாமும் அதைக் கேட்டுக்கொண்டு, அமைதியாகக் கீழேயே இருக்கிறோம்; நாம் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். யாரெல்லாம் அதிகாரத்திற்கு வருகிறார்களோ அவர்கள் மீது விமர்சனமற்று அவர்களையெல்லாம் வழிபாடு செய்ய ஆரம்பித்துவிடுகிறோம். இங்கே எத்தனை கட்சிகள், குடும்பம் குடும்பமாக... வாரிசு வாரிசாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். நாம் கொஞ்சம்கூட சுயமரியாதையற்று அதை ஏற்றுக்கொண்டுள்ளோம். சுதந்திரம் பெற்றுவிட்டோம், முடியாட்சி ஒழிந்துவிட்டது என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால், இன்னும் வாரிசு அரசியலால் ஆளப்படுகிறோம்.  நாமெல்லாம் நவீனமானவர்கள்தானா? கல்வியறிவு பெற்றவர்கள்தானா? நாமெல்லாம் எதன்பொருட்டாவது யார்மீதாவது கோபம்கொள்ளத் தகுதியானவர்கள்தானா? நாம் முற்றிலும் அறியாமையில் இருக்கிறோம்; சுயமரியாதையற்றவர்களாக இருக்கிறோம். தன்னைப்போலவே சகமனிதனை மதிக்க வேண்டும் எனும் அடிப்படையைக்கூட அறியாமலிருப்பதுதான் நமது ஜனநாயகத்தின் மாபெரும் தோல்வி. அறியாமையும் சுயமரியாதையின்மையும்தான் இந்தியாவின் எல்லாப் பிரச்னைகளுக்குமான ஆணிவேர்.”

“உங்களுக்கும் மலையாள இலக்கியத்திற்குமான தொடர்பு குறித்துச் சொல்லுங்கள்?”

“கல்லூரிக் காலத்தில் நிறைய வாசித்திருக்கிறேன். இளங்கலை விலங்கியல் படிக்கும்போது, வகுப்பறையைக் காட்டிலும் நூலகத்தில்தான் அதிக நேரம் இருப்பேன். ‘தஸ்தயேவ்ஸ்கி’, ‘டால்ஸ்டாய்’ என வாசித்துக்கிடப்பேன். தற்போது அந்த அளவிற்கு வாசிப்பதில்லை. இணையத்தில்தான் அதிகம் வாசிக்கிறேன். இலக்கியம் எனக்கு நிறைய உதவியிருக்கிறது. ஒன்றரை வருடங்கள் நான் வளைகுடாவில் இருந்தேன். அந்தச் சமயம்தான் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். தினமும் மூன்று கவிதைகள் எழுதி, எனது வலைத்தளத்தில் பதிவிடுவேன். அப்படியாக முந்நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை அக்காலத்தில் எழுதினேன்.”

“உங்களை நீங்கள் கவிஞராகக் கருதுகிறீர்களா?”

“உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இயக்குநராகிய பின், கவிதைகள் எழுதுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். இயக்குநர் என்பதுதான் என் மகிழ்ச்சிக்குரிய அடையாளமாக இருக்கிறது.”

“அலுவல் ரீதியாக நீங்கள் ஓர் இந்தியன், அதை நீங்கள் மறுக்க முடியாது. ஆனால், உங்களை நீங்கள் மனப்பூர்வமாக ஓர் ‘இந்தியனா’க உணர்கிறீர்களா?”

“இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று நான் சொல்வதால், இந்த நாட்டிற்கோ எனக்கோ என்ன நல்லது நடந்துவிடப்போகிறது? நடைமுறை நிர்வாகத்திற்காகவே இதுபோன்ற அடையாளங்கள் தேவைப்படுகின்றன. மனிதம் மட்டும்தான் நிலைத்தது; பரந்துபட்டது. இதைச் சொன்னால், ‘இவன் ஆன்டி இண்டியன்’, ‘இவன் இந்தியாவை மதிக்கவில்லை’ என்று சொல்வார்கள். எல்லைகள், நாடுகளெல்லாம் நிர்வாகத்திற்கானவை. அவற்றைப் பயன்படுத்தி, சிலர் அதிகாரத்தை உருவாக்குகிறார்கள்; பெறுகிறார்கள். மீண்டும் மீண்டும் அதைச் சொல்வதின் வழியே அதைத் தக்கவைத்துக்கொள்கிறார்கள். எனது முதன்மையான அடையாளம் என்பது மனிதன் என்பதுதான்!”

சித்ரம்

சனல்குமார் சசிதரன், தமிழாக்கம்: ரீனா ஷாலினி

உறுதி…
ஒருநாள் நீங்கள் என்னைக் கொல்வீர்கள்
என் பேனா முனையால்
உங்கள் தெய்வத்தின் மானம் அவிழ்ந்துவிட்டதென்று
என் கேமராக்கண்
உங்கள் நம்பிக்கைமீது
அவநம்பிக்கையோடு உற்றுப் பார்த்ததென்று
நீங்கள் என்னை விசாரணை செய்வீர்கள்
கல்லெறிந்து கொல்லவோ
கழுமரத்தில் ஏற்றவோ
நடுவழியில் துண்டமாக்கவோ
உங்கள் நீதிமன்றம் எனக்குத் தீர்ப்பெழுதும்
தெருவழியே என்னை நீங்கள்
நிர்வாணமாக்கி நடத்துவீர்கள்
இருபுறமும் ஆட்கள்
தீர்ப்பு நிறைவேற்றப்படுவதைக் காணக் கூடுவார்கள்
பசுங்கொடிகளுக்கிடையே
அவர்களது கண்கள்
பனித்துளிகள்போல் கோத்து நிற்கும்
அதில் வெயில்பட்டுக்
கண்ணாடிச் சில்லுகள்போல் சிதறும்…

என் தேசத்தினுள் ஓசையில்லாமல்
சருகுகளைக்கூட அசைக்காமல்
உங்கள் ஆட்சி வருகிறதென்று
எனக்குப் பீதி தொடங்கியது
நீங்கள் சத்தமாக ஊளையிட்டு
எல்லாவற்றையும் ஒழுங்குசெய்யத் தொடங்குகிறீர்கள்
இலைகள் உதிர்வதும்
பூக்கள் பூப்பதும்
எனக்குக் கேட்கவில்லை
உங்கள் நடையில்
ஒரு பூனையின் பதுங்கலை
நான் பார்க்கிறேன்
நீங்களென்னை அன்பாக வருடுகிறீர்கள்
உங்கள் வாஞ்சையில் மறைத்த கோரைப்பல்
இருட்டில் விளக்குபோல் ஒளிர்கிறது
அதன் வெளிச்சத்தில்
சமாதானப் பிரியரான நீங்கள்
நிசப்தத்தால் நெய்வது என்ன?
நிச்சலனத்தால் கட்டி உயர்த்துவது என்ன?

நீங்கள் தேசபக்தியைக் குறித்து
வாய் ஓயாமல் அசைபோடுகிறீர்கள்
நீங்கள் நம்பிக்கையைக் குறித்து
கடமையைக் குறித்து
ஒழுக்கத்தைக் குறித்து
உரக்க உரக்கப் பாட
குழந்தைகளைப் பயிற்றுவிக்கிறீர்கள்
உங்கள் பாட்டைக் கேட்டுப் பயந்து
பறவைகள் பாடாமல் போகின்றன
இப்போதெல்லாம் தியேட்டருக்குப்
போக முடியவில்லை
சினிமா தொடங்கும் முன்பு
உங்களுடைய அதே ஸ்வரத்தில்
தேசபக்தி முழங்குகிறது
பொதுக் கழிவறையிலும் நீங்கள்
தேசபக்தியைப் பற்றி எழுதுகிறீர்கள்
என் நெற்றியில் நான் யாரென்று போர்டு வைப்பதில்
என்ன தவறென்று என் நண்பர்கள்கூடக் கேட்கிறார்கள்
நான் சுதந்திரமானவன் என்பதை எனக்கு நினைவூட்ட
என்னை நீங்கள் வழியில் தடுத்து நிறுத்தி
சிநேகத்துடன் சுதந்திரன் ஆக்குகிறீர்கள்
எத்தனை விசாலமானவர்கள் நீங்களென்று
பார்ப்பவர்கள் பூரிக்கிறார்கள்…
உங்கள் பாதைகள்வழி என் விருப்பம்போல நடக்கலாமென
உங்கள் வரிகள்வழி என் விருப்பம்போல எழுதலாமென
உங்கள் ஆணைகளை என் விருப்பம்போலப் பின்பற்றலாமென
நீங்கள் எனக்குப் பணிவுடன் கற்பிக்கிறீர்கள்
உங்கள் பணிவு என்னைப் பயமுறுத்துகிறது...

ஒருநாள் நீங்கள் என்னைக் கொல்வீர்களென
எனக்கு உறுதியாகத் தெரிகிறது
என் பேனா முனையால்
உங்கள் தெய்வத்தின் மானம் அவிழ்ந்துவிட்டதென்று
என் கேமராக்கண்
உங்கள் நம்பிக்கைமீது
அவநம்பிக்கையோடு உற்றுப்பார்த்ததென்று
நீங்கள் காயப்படுவீர்கள்
என்னைக் கொல்லாமலிருக்க முடியாதென்று
நீங்கள் இறுதியாக முடிவெடுப்பீர்கள்
அதிலெனக்கு இப்போது பயமில்லை
பயம் வேறொன்று
“என்னைக் கொல்லாமலிருக்க முடியுமா?” என்று
சித்ரம்* சினிமாவின் மோகன்லால் போல்
நிறைந்த கண்களோடு உங்களிடம் கேட்டுவிடுவேனோ நான்…
கடமையை நிறைவேற்றுவதில்
தவறாத நீங்கள்
என்னை என்னிடமிருந்து இரக்கமில்லாமல் பறித்தெடுத்து
இந்த ஃபிரேமிலிருந்து அந்த ஃபிரேமுக்கு மறைந்துபோவீர்களோ…
என்னையும் உங்களையும் குற்றம் சொல்ல முடியாமல்
பாதையோரப் பசுங்கொடிகளில் துளிகள் அஸ்தமிக்குமோ?

(10/17/2013)

(*ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த மலையாளப் படம்)