
ரா.சீனிவாசன்
ஹாரி பாட்டர் உலகின் மந்திர வார்த்தைகளான, எக்ஸ்பெல்லியார்மஸ் (Expelliarmus), அக்கியோ ( Accio), விங்கார்டியம் லெவியோசா ( Wingardium Leviosa) போன்றவை மீண்டும் ஒலித்து, நம்மை உற்சாகப்படுத்துகிறது.
ஹாரி பாட்டர் பாகங்களுடன் மாயாஜால உலகம் (Wizarding World) முடிந்துவிட்டதோ என வருந்திய நேரத்தில், ‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்டு வேர் டு ஃபைண்டு தெம்' (Fantastic Beasts and Where to find them) என்ற முன்கதையைத் தொடங்கிவைத்தார், ஜே.கே.ரௌலிங். ஹாரி பாட்டருக்கு முன்பு நடக்கும் இதன் முதல் பாகம், 2016-ம் ஆண்டு வெளியானது. மொத்தம் 5 பாகங்கள் வெளியாகும் என்ற செய்தி, சுட்டிகளை குஷிப்படுத்தியது.

ஹாக்வர்ட்ஸ் (Hogwarts) எனும் மந்திரப் பள்ளி, அதைச் சுற்றியுள்ள இடங்கள் என இதற்கு முன்பு இங்கிலாந்திலேயே வட்டமடித்த கதைக்களம், இந்தப் புதிய தொடரில் உலகம் முழுக்க விரிந்தது. முதல் பாகத்தில், ஹாக்வர்ட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவனான நியூட் ஸ்கமண்டர் (Newt Scamander) வாழ்வையும் அவர் வளர்க்கும் மாயாஜால விலங்குகளைச் சுற்றியும் நகர்ந்தது. பிறந்தது முதலே தன் மேஜிக் திறனைப் பயன்படுத்தாமல் இருக்கும் ‘அப்ஸ்க்யூரியல்' க்ரிடன்ஸ் என்பவனின் கதையாகவும் இருந்தது. படத்தின் இறுதியில், கிரிண்டல்வால்டு எனும் கொடூர வில்லனாக அறிமுகமானார் ஜானி டெப். அந்த கிரிண்டல்வால்டு கைது செய்யப்படுவதோடு முதல் பாகம் முடிந்தது. இதன் இரண்டாம் பாகமே, ‘தி க்ரைம்ஸ் ஆஃப் கிரிண்டல்வால்டு' (The Crimes of Grindelwald).
கிரிண்டல்வால்டு சிறையிலிருந்து தப்புகிறான். அவனின் கொள்கைப்படி, மேஜிக் தெரிந்த விஸார்டுகள்தான் உலகை ஆளவேண்டும். ‘மக்கில்ஸ்' (Muggles),‘நோ-மேஜ்ஸ்' (No-Majs), ‘கான்ட் ஸ்பெல்ஸ்' (Can't Spells) என அழைக்கப்படும் சாதாரண மனிதர்கள், அவர்களின் கீழ்தான் என்பது அவன் எண்ணம். அதற்காக படையைத் திரட்டுகிறான். இதற்குப் பெரிய முட்டுக்கட்டையாக வருவது, ஹாக்வர்ட்ஸ் பேராசிரியரான, டம்பிள்டோர் (Dumbledore).

அவரை நேரடியாக வீழ்த்த முடியாது என்பதால், ‘அப்ஸ்க்யூரியல்' க்ரிடன்ஸை ஆயுதமாகப் பயன்படுத்துகிறான் கிரிண்டல்வால்டு. இதை அறிந்துகொண்ட டம்பிள்டோர், அந்த கிரிடன்ஸைக் காப்பாற்ற, தன் நம்பிக்கைக்குரிய முன்னாள் மாணவனான நியூட் ஸ்கமெண்டரை அனுப்புகிறார். அதேசமயம், மேஜிக் மினிஸ்ட்ரி பணியிலிருக்கும் லீட்டா லெஸ்ட்ரேன்ஜ்ஜின் தொலைந்துபோன சகோதரன்தான் க்ரிடன்ஸை எனச் சந்தேகிக்கின்றனர் அதிகாரிகள். அவனைக் கவர்ந்துவர அவர்களும் ஓர் ஆளை அனுப்புகிறார்கள். மூன்று அணிகளும் தேடும் க்ரிடன்ஸ் உண்மையில் யார்? அவன் எந்தப் பக்கம் சாயப்போகிறான்?
‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' என்றால், மாயாஜால விலங்குகள் இல்லாமல் இருக்குமா? ஜானி டெப் சிறையிலிருந்து தப்பிக்கும்போது, பறக்கும் குதிரைகளாக வரும் தெஸ்ட்ரல்ஸ், துறுதுறு சுபகாப்ரா, எவ்வித பூட்டுகளையும் திறந்துவிடும் பிக்கட், ‘பலே திருடன்’ நிஃப்லர், கடல் டிராகன் போன்ற கெல்பி, மடகோட் எனும் ரோமங்கள் அற்ற காட்டுப்பூனைகள், ஆகுரே, மான்கள் போன்ற லுக்ரோட்டா, சிங்கமாகச் சீறிவிட்டு, கிலுகிலுப்பையை ஆட்டியதும் வளர்ப்பு நாயாகப் பதுங்கும் ஸுவூ, ஹாரி பாட்டர் புகழ் ஃபீனிக்ஸ் பறவை என மாயாஜால விலங்குகளின் அணிவகுப்பு, உற்சாகத்தில் துள்ளவைக்கிறது.
இந்த விலங்குகளின் சேட்டைகளைத் தாண்டி கவனம் ஈர்ப்பது, இளம் வயது டம்பிள்டோராக நடித்திருக்கும் ஜூட் லா (Jude Law). வெண்தாடி, பிறை நிலா போன்ற மூக்குக் கண்ணாடியுடன் வயதான தோற்றத்திலே பார்த்திருந்த அவரை, புதிய கம்பீரத்துடன் இளைஞராகப் பார்ப்பது அழகு. மினிஸ்ட்ரியைச் சேர்ந்த அதிகாரிகள், ஹாக்வர்ட்ஸ் பள்ளிக்கு வந்து விசாரிக்கும்போது, அவர்களை மிடுக்குடன் டீல் செய்து அசத்துகிறார். இந்தப் பாகத்தில் அவருக்கான வேலை குறைவுதான் என்றாலும், இனிவரும் பாகங்களில் ஜானி டெப்புடன் போட்டி போட்டு அதிரவைப்பார் எனத் தெரிகிறது.

நியூட்டின் காதலியாக வரும் டீனா, காமெடியான ஜேக்கப் கோவல்ஸ்கி, அவரைக் காதலிக்கும் டீனாவின் சகோதரி என முதல் பாகத்தின் அதே படை இதிலும். இந்தப் பாகத்தின் முக்கிய கதாபாத்திரங்கள், க்ரிடண்ஸாக வரும் எஸ்ரா மில்லர், அவன் காதலி நாகினி, மினிஸ்ட்ரியில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் நியூட்டின் அண்ணன் தீசிஸ் ஸ்கமேண்டர் எனக் கவர்கிறார்கள். இதில், எல்லோரையும் ஆச்சர்யப்படவைப்பது நாகினி என்ற பாம்புப் பெண்தான்.
ஹாரி பாட்டர் வில்லன் லார்டு வோல்டர்மோர்ட்டின் 7 உயிர்களில் ஓர் உயிராக, கூடவே உலாவும் அதே நாகினி பாம்புதான். அவள், முழுவதும் பாம்பாக மாறுவதுக்கு முன்பு நடக்கும் கதை இது என்பதால், நினைத்தபோது பாம்பாக மாறும் பெண்ணாக உலாவுகிறாள்.
இதில் வரும் வில்லன் கிரிண்டல்வால்டுக்கும், ஹாரி பாட்டரின் வில்லன் வால்டர்மோர்ட்டுக்கும் ஒரே லட்சியம்தான். அது, மேஜிக் தெரிந்தவர்கள்தான் உலகை ஆளவேண்டும் என்பது. அந்த இலக்கை நோக்கி நகரும் கிரிண்டல்வால்டுக்குச் சிம்ம சொப்பனமாக டம்பிள்டோரும் அவரின் மாணவன் நியூட் ஸ்கமென்டர் மற்றும் மாயாஜால விலங்குகளும் இனிவரும் பாகங்களில் துணை இருக்கப்போவது நிச்சயம்.
மீண்டும் ஹாக்வர்ட்ஸ் மற்றும் அதன் மாயாஜால உலகுக்குள் சென்றுவந்த மகிழ்ச்சி.