2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

அடங்க மறு - சினிமா விமர்சனம்

அடங்க மறு - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
அடங்க மறு - சினிமா விமர்சனம்

அடங்க மறு - சினிமா விமர்சனம்

வேலையில் இருந்தபோது செய்யமுடியாததை, பொதுமக்களில் ஒருவராக செய்துமுடிக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரியின் ஆவேசம்தான் ‘அடங்க மறு.’

 ஒரு கொலை வழக்கில் அதிகாரபலமிக்க குற்றவாளிகளை ‘ஜெயம்’ ரவி கைது செய்ய, பழிக்குப்பழி முயற்சியில் ரவியின் குடும்பம் பலியாகிறது. வேலை, குடும்பம் என சகலவற்றையும் இழந்தவரிடம் எஞ்சியிருப்பது கோபம் மட்டுமே! தன் டெக்னாலஜி மூளையை மூலதனமாக வைத்து எதிரிகளைத் தேடித் தேடி வேட்டையாடுவதே கதை.

அடங்க மறு - சினிமா விமர்சனம்

இறுக்கமான முகமும் ஆறடி உருவமுமாக போலீஸ் செலக்‌ஷனுக்குச் சென்றால் உடனே சேர்த்துக்கொள்ளும்படியான தோரணை ‘ஜெயம்’ ரவிக்கு. ராஷி கண்ணா ஒரு பாடலுக்கும், இரண்டு காட்சிகளுக்கும் மட்டும் என்ட்ரி தரும் வழக்கமான ஹீரோயின். பொன்வண்ணன், பாபு ஆண்டனி, ராமதாஸ், சம்பத், மைம் கோபி, பூர்ணா என நிறைய பேர் இருந்தாலும் அழகம்பெருமாளுக்கு மட்டுமே வெயிட் அதிகம். சாம் சி.எஸ்ஸின் இசையில் ‘சாயாளி’ பாடல் மட்டும் ஈர்க்கிறது. சத்யன் சூரியனின் ஒளிப்பதிவும் ரூபனின் எடிட்டிங்கும் ஓகே ரகம்.

அடங்க மறு - சினிமா விமர்சனம்

போலீஸ் அதிகாரிகளை கம்பீரமாகக் காட்டும் படங்களின் லிஸ்ட் நீளம். ஆனால், அவர்களின் தடுமாற்றங்களை அப்படியே காட்டும் படங்கள் மிகக் குறைவு. அந்தப் பட்டியலில் ப்ளஸ் ஒன் போடுகிறது ‘அடங்க மறு.’ 

பார்த்துப் பழகிய பழிக்குப் பழி கதை என்றாலும் திரைக்கதை ட்ரீட்மென்ட்டில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருப்பதால் த்ரில்லருக்குண்டான திக் திக் தன்மை ஓரளவுக்கு எடுபடுகிறது. ஆனால், மேல்தட்டு மக்களுக்கு மனிதம் மருந்துக்கும் கிடையாது, பலாத்காரம், கொலை எல்லாம் அவர்களுக்குக் குடும்பத்தோடு செய்யும் பொழுதுபோக்கு போன்ற ஸ்டீரியோ டைப் காட்சிகள் இன்னும் எத்தனை நாள்களுக்கு?

படத்தில் ஜெயம்ரவி அதீத புத்திசாலியாக இருக்கிறார். ஆனால் அதை நிரூபிக்கும் காட்சிகள் அனைத்தும் வழக்கம்போல உட்டாலக்கடி. படத்தில் அவர் ஹேக் செய்யாத ஒரே விஷயம் வில்லனின் ஹார்ட்பீட்தான்.

டெக்னாலஜிமேல் முழு பாரத்தையும் போடாமல் கொஞ்சம் கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் அடங்க மறுத்து நிமிர்ந்து நின்றிருப்பார் இந்த ஆபீஸர்!


- விகடன் விமர்சனக் குழு