2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

சரிகமபதநி டைரி - 2018

சரிகமபதநி டைரி - 2018
பிரீமியம் ஸ்டோரி
News
சரிகமபதநி டைரி - 2018

இசை

சரிகமபதநி டைரி - 2018

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்...

திருப்பாவை முதல் பாசுரத்துடன் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் கச்சேரியைத் தொடங்கினார் சஞ்சய் சுப்ரமணியன். சபா அங்கத்தினர்களுக்கு அது பொன்னாள்! சில மன வருத்தங்கள் காரணமாக, பல வருடங்கள் இங்கே பாடாமலேயே இருந்திருக்கிறார் சஞ்சய். இப்போது சமரசம் ஏற்பட்டுவிட்டதால் இந்த சீஸனில் பாடினார். திரை விலகியதும் ஆடியன்ஸ் தரப்பிலிருந்து ஒருவர் எழுந்து நின்று ‘வெல்கம்’ என்று உணர்ச்சி வசப்பட்டார்!

சரிகமபதநி டைரி - 2018

கும்பகோணம் ரசிகர்கள் நல்ல சங்கீதத்தைக் கேட்க நேர்ந்தால் ‘நம்பள கொல்றதுக்குன்னே இப்படிப் பாடறான்யா!’ என்று புகையிலையைக் குதப்பிக்கொண்டே பாராட்டுவது உண்டு. அன்று சஞ்சய் பாடுவதைக் கேட்டதும் இதுவே நினைவுக்கு வந்தது!

உயர்வான சங்கதிகளால் பிலஹரியை கௌரவப்படுத்திவிட்டு... வந்தது சிம்மேந்திர மத்யமம். இதையே ‘ஸீமத்யுதி’ என்றழைக்கிறார் தீட்சிதர். Full form-க்கு வந்தார் சஞ்சய். கால்களில் சக்கர ஷூக்களுடன் ஸ்கேட்டிங் விளையாடுவது மாதிரி ஆனந்தராகத்தின் சங்கதிகளுடன் விளையாடினார். அவருடைய டிரேடுமார்க் கார்வைகளும், உறுமல்களுமாக ஒரே ஆட்டம் பாட்டம்தான்! ‘பாமரஜன பாலினி...’ கீர்த்தனை முடிந்து வந்த நிரவல், ஸ்வரங்களுடன் சஞ்சய் - வரதராஜன் - வெங்கடேஷ் - அனிருத் ஆத்ரேயா நால்வர் அணி ஜாலியாக ரம்மி விளையாடினார்கள். முக்கியமாக, வரதுவின் வயலினும், அனிருத்தின் கஞ்சிராவும் டாப் கியரில். வெங்கடேஷ்  - அனிருத் ‘தனி’ முடிந்ததும் இரண்டே கால் நிமிட கைத்தட்டல்கள்!

சரிகமபதநி டைரி - 2018

மெயினாக தோடி. ஆலாபனையின்போதே சஞ்சய் லேசாக சுரத்து குறைந்துவிட்ட மாதிரி காணப்பட்டார். தியாகராஜரின் ‘முந்து ராவண...’ பாடலும், ‘ராஜராஜ விராஜவாஹ...’ நிரவலும் ஒரே ரகம். ஸ்வரங்களின்போது சஞ்சய் மாஜிக் மிஸ்ஸிங்! குரலில் அயர்ச்சி தெரிந்தது. என்ன பிடிவாதமோ, 200 நிமிடக் கச்சேரியில் ரெண்டு சொட்டுத் தண்ணீர் குடிப்பதில்லை இவர். பிளாஸ்டிக் பாட்டில் புறக்கணிப்போ!

டென்னிஸில் இரண்டாவது செட்டில் ஜெயிக்க முடியாவிட்டாலும், அடுத்த இரண்டு செட்டுகளில் சமன் செய்துவிடுவது போல், ராகம் - தானம் - பல்லவிக்கு ‘திலங்’ ராகம் பாடியபோது தலைவர் ஃபார்முக்குத் திரும்பிவிட்டார். தானத்தில் ராகமாலிகையில் பாடியபோது சஞ்சய் பக்தர்கள் சுருண்டுபோனார்கள்! ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்...’ என்பது பல்லவி வரிகள்.

சரிகமபதநி டைரி - 2018

பிரம்ம கான சபாவில் ‘இசைப் பேரொளி’ குன்னக்குடி எம்.பாலமுரளி கிருஷ்ணா. தொண்டைக்குள் இரண்டு, மூன்று விதவிதமான குரல்களை ஒளித்துவைத்துக்கொண்டு தேவைக்கேற்ப அவற்றைப் பயன்படுத்தும் திறமைசாலி. கொள்வார் எத்தனை கம்மியாக இருப்பினும், தன் வசமுள்ள மொத்த சரக்கையும் கடைவிரித்துவிடும் ராட்சசப் பாடகன்!

பிரதானமாக வராளி. இந்த மூன்றெழுத்து ராகத்திடம் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக்கொண்டு, போர்வெல் இயந்திரத்தில் குழி தோண்டுவதுபோல் ஆழமாகச் சென்று அத்தனை வராளி சங்கதிகளையும் வாளியில் வாரி வாரி வழங்கினார். முக்காலங்களிலும் அநாயாசமாகப் பயணிக்கிறது இவரது குரல். அதுவும், மேல் ஸ்தாயியில் ரவுண்டு கட்டி விளையாடிவிட்டு, சறுக்கு மர லாகவத்தோடு கீழிறங்கி வந்து, ‘இந்த வராளி போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?’ என்று கேட்காமல் கேட்டார்! தீட்சிதரின் ‘மாமவமீனாக்ஷி...’ பாடலில் ‘ஸ்யாமே சங்கரி திக்விஜய ப்ரதாபினி’ வரிகளில் நிரவல் செய்தபோது நமக்குக் கிடைத்தது போனஸ் வராளி சங்கதிகள்!

சரிகமபதநி டைரி - 2018

ஆபோகியில் ஆலாபனை முடிந்ததும் தானம். பல்லவிக்கு நான்கு வரிகளை எடுத்துக்கொண்டு ‘கண்ட ஜாதி திரிபுட தாளம். கண்ட நடையில் அஞ்சு இடம் தள்ளி...’ என்றெல்லாம் பூச்சாண்டி காட்டாமல், தியாகராஜரின் ‘நந்து ப்ரோவ நீ கிந்த தாமஸமா...’ கீர்த்தனையை முழுவதுமாகப் பாடியதும் நன்றாகவே இருந்தது.

நாளேடுகளில் கச்சேரி தொடக்க நேரம் 6.45 மணி என்று போட்டிருந்தார்கள். ஆனால், தொடங்கியது 7.20 மணிக்கு! தாமதம் பற்றிக் கவலையே படாமல், முந்தைய கச்சேரியை முடித்த கலைஞர்களை நிற்க வைத்து சால்வை அணிவித்து, பாராட்டி நான்கு அல்ல, நாற்பது வார்த்தைகள் பேசி... ஆர்.ஆர்.சபாவின் மூன்றாவது மாடியிலுள்ள சூப்பரான சிற்றரங்கில் டிரினிட்டி கலை விழா நடத்தியவர்களுக்கு டைம் சென்ஸ் நஹி!

பி.யூ. கணேஷ் பிரசாத் (வயலின்), சாய்கிரிதர் (மிருதங்கம்) கார்த்திக் (கடம்) மூவரின் பக்க பலத்துடன் அக்கரை சகோதரிகள் சுப்புலட்சுமி, சொர்ணலதாவின் வாய்ப்பாட்டு டூயட். இருவருக்கும் பாலில் தேன் கலந்த இனிமைக் குரலெல்லாம் கிடையாது. கொஞ்சம் கரகரப்புதான், இணைந்து பாடும்போது அதுவும்கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது.

சரிகமபதநி டைரி - 2018

சொர்ணலதா பாடிய சலநாட்டையில் அதன் சொரூபம் அழுத்தமாக வெளிப்பட்டது. ‘நான் பாடறது சரிதானே அக்கா?’ என்று கேட்பது போல் அடிக்கடி வலது பக்கம் கழுத்து திருப்பிக் கேட்டுக்கொண்டிருந்தார். பணிவுமிக்க இளைய சகோதரி!

இந்துஸ்தானி முலாம் பூசப்பட்ட குமுதக்ரியாவில் தீட்சிதரின் ‘அர்த்தநாரீஸ்வரம்...’ தொடர்ந்து சண்முகப்ரியா. ஆலாபனையை தன் பொறுப்பில் ஏற்றார் சுப்புலட்சுமி. கீழ் ஸ்தாயியில் நாகஸ்வரப் பிடிகள் கொஞ்சின. சங்கதிகளில் மனோதர்மம் புலப்பட்டது. பாடலில் பார்வதி நாயகனிடம் சரணடைந்தார்கள் சகோதரிகள்.

சாய்கிரிதர் - கார்த்திக் இருவரும், பாடிய இருவரையும் குஷிப்படுத்திக்கொண்டே வாசித்து கச்சேரிக்கு கலர் கூட்டினார்கள்.

பலருக்கும் பக்கவாத்தியமாக வயலின் வாசிக்கிறார்கள் அக்கறை சகோதரிகள். இருவரும் இணைந்து வயலின் டூயட் வாசிக்கிறார்கள். வாய்ப்பாட்டிலும் அப்படியே. புயல்(கள்) முடிவாக எங்கே கரையைக் கடக்கும் என்பதுதான் தெரியவில்லை!

ணிவிழா காணும் நாரத கான சபாவின் ‘நாதபிரம்மம்’ விருதும், ஒரு லட்ச ரூபாய் பணமும் பெற்றார் சீனியர் மிருதங்க வித்வான் காரைக்குடி மணி. ஏற்புரையில் பணத்தை இரண்டாக உடைத்தார். ஐம்பதாயிரம் ரூபாயை, விருது வழங்கிய சுவாமி ஓம்காரானந்தா செய்து வரும் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டினார். மறுபாதியை, நாரத கான சபாவுக்குக் கொடுத்து, தன் குருவின் பெயரில் ஒவ்வொரு வருடமும் ஒரு மிருதங்கக் கலைஞருக்கு அறக்கட்டளை விருது வழங்கக் கேட்டுக்கொண்டார். மணிக்கு எப்போதுமே ‘மணி’ ஒரு பொருட்டல்ல!

சரிகமபதநி டைரி - 2018

விழா முடிந்ததும், தவில் வித்வான் ஏ.கே. பழநிவேல் தலைமையில் ஃபுல் பெஞ்ச் கச்சேரி. மேடையில் நடுநாயகமாக ஏ.கே.பி. குழுவில் நிர்மலா ராஜசேகர் வீணை, திருவண்ணாமலை காந்தி நாகஸ்வரம், பி.வி.ராகவேந்திரராவ் வயலின், ராஜேந்திர நகோட் தபலா, பெங்களூர் ராஜசேகர் மோர்சிங்.

அனைவரும் சேர்ந்து இசைத்த துவஜாவந்தியும், கீரவாணியில் ராகம், தானமும், ‘தேவி நீயே துணை’ பாடலும் ஒரு பக்கம் இருக்கட்டும். ‘பழநிவேல் அண்ணா... நீங்களே துணை...’ என்று மற்றவர்கள் ஒதுங்கிக்கொள்ள, ஏ.கே.பி., வாசித்த அரைமணி நேர தனித் தவிலில் அவரின் கை விரல்கள் ருத்ர தாண்டவம் ஆடின! ஆதி தாளம் பிரதானம். அதில் ஒரே ஆவர்த்தனத்தில் சதுஸ்ரம். திஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்று பஞ்ச நடையில் வாசித்து ‘லய விஸ்வரூபம்’ எடுத்தார்!  அங்கங்கே தபலாவும், மோர்சிங்கும் சேர்ந்துகொள்ள, சர்வம் தாள மயம்!

சரிகமபதநி டைரி - 2018சீஸனில் தொடக்க விழா உரை என்றால் சங்கீதம் பற்றி வரலாறு பேசுவார்கள். பேசும் சபாவின் அருமை பெருமைகளை அலசுவார்கள். ஒருசிலர் பண் ஆராய்ச்சியும் செய்வதுண்டு. மியூசிக் அகாடமியின் 92-வது ஆண்டுத் தொடக்க விழா மேடையில் பெப்சிகோ தலைவர் இந்திரா நூயி நிகழ்த்திய உரை, அகாடமியின் அடிமடியில் கைவைப்பதாக இருந்தது! பவர் பாயின்ட் பிரசன்டேஷன் செய்யவில்லையே தவிர, இந்திராவின் உரை அகாடமி நிர்வாகத்துக்கு `வகுப்பு’ எடுக்கும் அறிவுரை. பழம்பெருமைகளையே பேசிக்கொண்டிருக்காமல், அடுத்த கட்டம் நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றார் நூயி. அமெரிக்க நிறுவனங்கள் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்து எப்படி இன்றளவும் தாக்குப்பிடிக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார். நியூயார்க்கில் லிங்கன் சென்ட்டரின் வெற்றி ஃபார்முலாவை விளக்கினார். இசைத்துறையிலும் டிஜிட்டல் புரட்சி நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் லைவ் கச்சேரிகள் நோக்கி இளம் சமுதாயத்தை ஈர்க்க அடுத்தகட்டமாக நிறுவனத்தை எப்படி நடத்திச்செல்ல வேண்டும் என்று அகாடமியை சிந்திக்கச் சொன்னார். ‘`இதற்குத் தீர்வு என்னிடம் கிடையாது. அது உங்கள் கையில்தான் இருக்கிறது” என்ற ரீதியில் பெப்சிகோ தலைவர் உரையை முடித்தபோது, அகாடமி தலைவர் என்.முரளியின் முகத்தில் `ஏதாவது ரிசல்ட் காண்பிக்கணும் போலிருக்கே...’ என்ற கவலை தெரிந்தது!

“நாங்க சஞ்சய் சுப்ரமணியன் மாதிரி இளம் வயதுக்காரர்களுக்கு சங்கீத கலாநிதி விருது கொடுக்கிறோம்... வரும் ஜனவரியில் டிரினிட்டி ஆங்கில நாடகத்தை மேடையேற்றப் போகிறோம்...” என்று தொகுத்து வழங்கிய பெண்மணி சொன்னது சிறுபிள்ளைத்தனமான சமாதானம்!

Tail piece : இந்த சீசஸினில் எந்த ராகம் அதிகம் பாடப்பட்டது என்பதில் தோடிக்கும், பந்துவாராளிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாக இசை நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். ஜனவரி முதல் தேதி ஓட்டு எண்ணிக்கை.

- டைரி புரளும்...

வீயெஸ்வி - படங்கள்: கே.ராஜசேகரன்,சு.குமரேசன்,ப.பிரியங்கா