2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

2018 - YOU TUBE STARS

2018 - YOU TUBE STARS
பிரீமியம் ஸ்டோரி
News
2018 - YOU TUBE STARS

சோஷியல் மீடியா

2018 தமிழ் யூடியூப் சேனல்களுக்கு முக்கியமான ஆண்டு. ஏராளமான இளைஞர்கள் யூடியூப் தளத்தினை விதவிதமாகப் பயன்படுத்திப்பார்க்கத் தொடங்கினார்கள். தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான பிரம்மாண்ட மேடையாக மாற்றிக்காட்டினர். லட்சக்கணக்கான ஃபாலோயர்களோடு இதை முழுநேர வேலையாகவும் செய்துபார்க்கத் தொடங்கினர். அப்படி, எவ்வித நிறுவனப் பின்புலங்களும் இல்லாமல் தன்னந்தனியாக வீடியோக்களில் வித்தியாசம் காட்டிய வீடியோ நட்சத்திரங்கள் இவர்கள். 

2018 - YOU TUBE STARS

“நான் இர்பான், பக்கா சென்னைப் பையன். பி.காம் முடிஞ்சதும் சி.எஸ் கோர்ஸ்ல சேர்ந்தேன். ஆனா, அதுல என்னால பாஸ் பண்ண முடியலை. அதுக்கப்புறம் ஒரு தனியார் நிறுவனத்துல நைட் ஷிப்ட் வேலை பார்த்துட்டிருந்தேன். அப்போதான் யூடியூப் சேனல் தொடங்கலாம்னு முடிவு பண்ணினேன். அந்தச் சமயத்துல வீடியோ ரெக்கார்ட் பண்ணும்போது அப்பாவுக்குத் தெரியாம ஒரு ரூம்ல உட்கார்ந்துதான் பண்ணுவேன். எங்களோட மத நம்பிக்கைகள் படி வீடியோல நம்ம முகம் வர்றதை வீட்ல விரும்ப மாட்டாங்க. முதல் ஒன்றரை வருஷத்துக்கு வேலை பார்த்துக்கிட்டேதான் சேனல்ல வீடியோஸ் பண்ணிட்டிருந்தேன். எனக்குப் புதுசு புதுசா ரெஸ்டாரன்ட்கள்ல பலவிதமான உணவுகளை சாப்பிடுறதுனா ரொம்பப் பிடிக்கும். அதையே வீடியோவா பண்ணி சேனல்ல போட ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல 50-60 பேர்தான் பார்த்தாங்க. அதுக்காக நான் சோர்ந்துபோய் வீடியோ பண்றதை விட்டுடல. இப்படியே ஒரு வருஷம் ஓடுச்சு... கொஞ்ச கொஞ்சமா என்னோட வீடியோஸ் நிறையபேர் பார்க்க ஆரம்பிச்சாங்க... அது நம்பிக்கை கொடுத்துச்சு. என்னோட வேலைய விட்டுட்டு முழு நேரமா இதுலயே இறங்கினேன். நிறைய இடங்களுக்கு டூர் போறதை மொபைல் கேமரால ஷூட் பண்ணி வீடியோஸ் பண்ண ஆரம்பிச்சேன். இதை ‘Travel vlog’னு சொல்வாங்க. தினமும் ஒரு வீடியோ அப்லோட் பண்ணணும்னு முடிவு பண்ணினேன். ஒரு நாளைக்கு ஒரு வீடியோ அப்லோட் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் எனக்கு அதிகமான சந்தாதாரர்கள் வர ஆரம்பிச்சாங்க. இப்போ எனக்கு 1,82,964 சப்ஸ்க்ரைபர்ஸ்... யூடியூப் என் வாழ்க்கையையே மாத்திடுச்சு!”

2018 - YOU TUBE STARS

“ஸ்ரீவில்லிபுத்தூர்ல பி.டெக் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பு முடிஞ்சதும் பெங்களூருல எம்.பி.ஏ., அதுக்கப்புறம் நியூயார்க்ல எம்எஸ். 2016-ல என்னோட லவ் பிரேக் அப் ஆச்சு. அப்போ அந்தப் பொண்ணுக்கு ஏதாவது மெசேஜ் சொல்லுவோம்னுதான் யூடியூப்ல வீடியோஸ் போட ஆரம்பிச்சேன். இதை ஒரு சேனலா கொண்டு போகணும்னு எந்தவொரு நோக்கமும் அப்போ எனக்கு இல்லை. 9 சப்ஸ்க்ரைபர்ஸ் வர்றதுக்கே மூணு மாசம் ஆகிடுச்சு! பத்தாவது சந்தாதாரரா நானே ஃபேக்ஐடி ஆரம்பிச்சு சப்ஸ்க்ரைப் பண்ணினேன். ஆனா என்னோட முகநூல் பக்கத்துல எனக்கு 33,000 ஃபாலோயர்களுக்கு மேல இருந்தாங்க. அந்த பேஜ் டீ-ஆக்டிவேட் ஆகிடுச்சு. பயங்கர அதிர்ச்சி. அந்த பேஜ் வழியாதான் என்னோட வீடியோஸ் எல்லாத்தையும் ஷேர் பண்ணிட்டிருந்தேன். ஒரு தனியார் சேனலைக் கலாய்ச்சுப் போட்டிருந்த மீம்ஸை ஷேர் பண்ணதுக்காக என்னோட பேஜை பேஸ்புக்ல இருந்து நீக்கிட்டாங்க. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சேன்.  கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சுதான் என்னோட வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பிச்சுச்சு. எனக்குக் கிடைக்குற கமென்ட்களை வெச்சு அடுத்தடுத்த வீடியோக்கள் பண்ண ஆரம்பிச்சேன். காதல், அரசியல், பெட்ரோல் விலை உயர்வு, அமானுஷ்யம்னு இன்டர்நெட்ல இருந்து வித்தியாசமான தகவல்கள் சேகரிச்சு, அதை என் கருத்துகளோடு சேர்த்து மக்கள்கிட்ட பகிர்ந்துப்பேன். ஆரம்பத்துல ‘மதன் கௌரி’ சேனல் இந்தளவுக்குப் பெருசா வளரும்னு நினைக்கவே இல்லை. ஆனா, இப்போ எனக்குப் பத்து லட்சம் ஃபாலோயர்ஸ் இருக்காங்கன்னு நினைக்கும்போது நிறைய பொறுப்புகள் வந்திருச்சுன்னு உணர்றேன்.”

2018 - YOU TUBE STARS

“ஜப்பானிய மொழியில ‘கெய்சன்’னா ‘தொடர் முன்னேற்றம்’னு அர்த்தம். நான் 12-வது படிச்சு முடிச்சவுடனேயே வீட்ல எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. மேற்படிப்பு படிக்கிறதுக்கு வீட்ல ஒத்துக்கலை. ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் என் கணவர் உதவியோட மதுரை காமராஜ் யூனிவர்சிட்டியில பி.ஏ ஆங்கில இலக்கியம் படிச்சேன். நர்சரி ஸ்கூல்ல இங்கிலீஷ் டீச்சரா கொஞ்ச வருஷம் வேலை பார்த்தேன். பார்ட்-டைமா ஸ்போக்கன் இங்கிலீஷ் சென்டர்ல பாடமும் எடுத்தேன். அப்புறம் தனியாகவே ஸ்போக்கன் இங்கிலீஷ் சென்டர் வைக்கலாம்னு முடிவெடுத்து தான் ‘கெய்சன்’ இன்ஸ்டி ட்யூட் ஆரம்பிச்சேன். 2017 ஜனவரி மாசத்துல என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமப்போயிடுச்சு. ஹாஸ்பிடல்ல சர்ஜரி பண்ண வேண்டிய நிலைமை! அவர் முழுசா குணமடையிறதுக்கு சரியா ஒரு மாத காலம் ஆச்சு. அந்த ஒரு மாதம் ஹாஸ்பிடல்லயே இருந்ததுனால சென்டரை சரியா கவனிக்க முடியலை. அந்தச் சமயத்துல ‘கெய்சன்ல’ படிச்சிட்டிருந்த குழந்தைகள் வேற வேற இன்ஸ்டிட்யூட்ல சேர ஆரம்பிச்சிட்டாங்க. பிசினஸை திரும்பப் பழையபடி கொண்டு வர்றதுக்கான முயற்சிகள்ல இருந்தேன். என்கிட்ட படிச்ச சில மாணவர்கள் இப்போ அமெரிக்கா, லண்டன் மாதிரியான வெளிநாடுகள்ல வேலை பார்க்கிறாங்க. அவங்க என்கிட்ட ஆங்கில மொழியில ஏற்படுற சில சந்தேகங்களை போன், வாட்ஸ் அப் மூலமா கேட்பாங்க. அதுல ஒருத்தர் கொடுத்த யோசனைதான் ‘யூடியூப் சேனல்.’ ‘மேடம், நீங்க தினமும் யூடியூப்ல பாடம் நடத்தினா, நாங்க இங்க இருந்தே பார்த்துத் தெரிஞ்சுப்போம். கத்துப்போம்’னு சொன்னாங்க. அப்போ வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற வீடியோகிராபரைக் கூப்பிட்டு இந்த ஐடியாவைச் சொன்னேன். அவர் சம்மதிச்சதும் வீட்ல சொல்லி யூடியூப் சேனல் தொடங்கினேன். அந்த வீடியோகிராபரே ஷூட் அண்டு எடிட்டிங் பண்ணிக் கொடுத்துருவார். ஒரு நாளைக்கு ஒரு வீடியோ போட ஆரம்பிச்சதும் கெய்சன் சேனலுக்குக் கணிசமான சந்தாதாரர்கள் வர ஆரம்பிச்சாங்க. கெய்சன் இன்ஸ்டிட்யூட் தொடங்கி மொத்தம் பத்து வருஷமும், சேனல் தொடங்கி இரண்டு வருஷமும் ஆச்சு... ஒன்றரை லட்சம் சந்தாதாரர்கள் இருக்காங்க... வாழ்க்கை சிறப்பா போகுது!”

2018 - YOU TUBE STARS

“எனக்கு சொந்த ஊர் கிருஷ்ணகிரி. எம்.டெக் படிக்கும்போதே இங்கிலிஷ்ல ‘How is it’னு ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன். அந்தச் சேனல்ல 1,000 சந்தாதாரர்கள் வர்றதுக்கே எனக்கு ஒரு வருஷம் ஆச்சு. காரணம், ஜியோ வர்றதுக்கு முன்னாடி யூடியூப் சேனல்களோட வளர்ச்சி மிகக் குறைவு. காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம், ‘யூடியூப் சேனல் நடத்துறதை நான் முழுநேர வேலையா பார்க்கப் போறேன்’னு அம்மாகிட்ட சொன்னேன். சரியா ஜியோ வந்த காலகட்டமும் அதுதான்! ‘How is it’ சேனல்ல வீடியோ பண்ணி நண்பர்களுக்கு லிங்க் அனுப்பினா அதை யாரும் பார்க்கவே மாட்டாங்க. ஏன்னா, அது இங்கிலிஷ்ல இருந்துச்சு. அதனால தமிழ்லயே புதுசா ஒரு சேனல் ஆரம்பிக்கலாம்னு யோசிச்சேன். சேனல் பெயர் ‘தமிழ் டெக்.’ ஏற்கெனவே, தமிழ்ல இருந்த ரெண்டு மூணு டெக் சேனல்களையும் பார்த்தேன். அதுல அவங்க சொல்ற தகவல்களும் விளக்கங்களும் அவ்வளவு சிறப்பா இல்லை. மேலும், மார்க்கெட்டுக்கு வந்த புது கேட்ஜெட்ஸ் பத்தின தகவல்களையும் அவங்க உடனுக்குடன் வீடியோ பண்றதில்லை. அதனால தமிழ்ல டெக் சேனல் ஆரம்பிச்சா நல்ல வரவேற்பு கிடைக்கும்னு தோணுச்சு. ஆரம்பத்துல சில கேட்ஜெட்களை ரிவ்யூ பண்ணணும்னு யோசிக்கும்போது அதுக்கான வசதி என்கிட்ட இல்லை. என் நண்பர்கள் யாராவது புது போன், லேப்டாப், கேமரா இப்படி எது வாங்குனாலும் அதை, ‘மச்சான்...கொஞ்ச நாள் நான் யூஸ் பண்ணி ரிவ்யூ பண்ணிட்டு தர்றேன் டா’னு கேட்டுப் பார்ப்பேன். சிலர் கொடுப்பாங்க; பலர் நம்ம தொடர்பை அதோட  வெட்டி விட்டுடுவாங்க. ஆனா, சிலர் செஞ்ச உதவிகளாலதான் ‘தமிழ் டெக்’ சேனல் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கு. இப்போ யூடியூப்ல வர்ற காசை வெச்சு சில கேட்ஜெட்ஸ் சொந்தமா வாங்கி ரிவ்யூ பண்றேன். கேட்ஜெட்ஸ் வாங்கி கொஞ்ச நாள் யூஸ் பண்ணி, ரிவ்யூ முடிஞ்சதும் அதை ஆன்லைன்ல வித்துடுவேன். இன்னைக்கு என்னோட வீடியோஸ பத்து லட்சம் பேர் பார்க்கிறாங்க... இதுவே என்னோட முழுநேர வேலையா ஆகிடுச்சு!”

2018 - YOU TUBE STARS

“பிறந்தது ஒடிசா, வளர்ந்தது தமிழ்மண், படிச்சது விலங்கியல் முதுகலை. காலேஜ்ல எப்பவுமே ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து காமெடி பண்ணிட்டே இருப்பேன். அப்பப்போ யூடியூப்ல சில காமெடி சேனல்கள் பார்க்கிறதையும் பழக்கமா வெச்சிருந்தேன். ஒரு நாள், ‘நானும் நல்லாதான் காமெடி பண்றேன். தனியா ஒரு சேனல் ஆரம்பிச்சு வீடியோஸ் பண்ணுனா என்ன’ன்னு தோணுச்சு. காலேஜ் முடிச்சிட்டு வீட்ல இருந்த நேரத்துல சில ஸ்கிரிப்ட் எழுதி ஷூட் அண்டு எடிட் பண்ணினேன். சேனலுக்கான எல்லா வேலைகளையும் நானேதான் பண்ணுவேன். தினமும் நம்ம வாழ்க்கையில நடக்கிற விஷயங்களைக் கலாய்ச்சு யூடியூப்ல வீடியோவா போடும்போது ஆரம்பத்துல யாருமே பார்க்கலை. காமெடிங்கிறதுனால தினமும் என்னால வீடியோஸ் போட முடியாது. வாரத்துல ரெண்டு பண்ணலாம்னு முடிவெடுத்தேன். இப்போ இதையே நான் முழுநேர வேலையா பார்த்துட்டிருக்கேன். சில பேர் என் வீடியோவைப் பார்த்துட்டு, ‘போண்டா மாதிரி இருக்க’ன்னு கிண்டல் பண்ணுனாங்க. ‘என்னை என்ன நீங்க கிண்டல் பண்றது, நானே பண்ணிக்கிறேன்’னு என்னை நானே கலாய்ச்சு வீடியோஸ் போட ஆரம்பிச்சேன். இதனால நிறைய பொண்ணுங்ககிட்ட இருந்து சப்போர்ட் வர ஆரம்பிச்சுச்சு. கலாய்த்தல், காமெடி, சரவெடிதான் என்னோட வீடியோஸ்ல முழுக்க முழுக்க... ஒவ்வொரு வருஷமும் யூடியூப்ல 10,000 - 1,00,000 சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்கிற சேனல்களுக்கு  ‘YouTube Next Up’னு ஒரு வொர்க்‌ஷாப் நடத்துவாங்க. இந்தியாவுல இருந்து 12 சேனல்கள் மட்டும்தான் இதுக்கு செலக்ட் ஆகும். இதுக்கு நானும் அப்ளை பண்ணியிருந்தேன். ஒரு மாசம் கழிச்சு என்னை டெல்லிக்குக் கூப்பிட்டாங்க. அங்க யூடியூப்ல இருந்து சில நிபுணர்கள் பாடம் எடுத்தாங்க. அதுல இருந்து நிறைய விஷயங்கள் தெரிஞ்சுகிட்டேன். நான் ஒரு வளரும் யூடியூப் ஆள், இன்னும் சிறப்பா பல காமெடி வீடியோக்களை உங்களுக்குத் தரணும் என்பதுதான் வாழ்வின் ஒரே லட்சியம்!”

2018 - YOU TUBE STARS

சுஜிதா சென் - படங்கள்: கே.ராஜசேகரன்,எல்.ராஜேந்திரன்,சொ.பாலசுப்ரமணியன்,பசரவணகுமார்