
சினிமாடார்மிக் லீ - படங்கள்: ப.சரவணகுமார்
`மீசைய முறுக்கு’ மூலம் நாயகனாக பிரமோட் ஆனவர் இசையமைப்பாளர் `ஹிப்ஹாப்’ ஆதி. இப்போது மீண்டும் நாயகனாக `நட்பே துணை’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். பட வேலைகளில் பிஸியாக இருந்தவரைச் சந்தித்தேன். ``ஜல்லிக்கட்டு டைம்ல நடந்த விசாரணையை எல்லாம் என்னால மறக்கவே முடியாது ப்ரதர். படத்துல பார்க்கிற மாதிரியெலாம் கோர்ட் இல்ல. பயங்கரமா இருந்துச்சு...” என ஜாலியாகப் பேசத் தொடங்கினார்.

“ `மீசைய முறுக்கு’ மாதிரியேதான் ‘நட்பே துணை’யும் இருக்குமா?”
“காதல், விளையாட்டு, நகைச்சுவைன்னு பக்கா கமர்ஷியல் படமா `நட்பே துணை’ இருக்கும். அறிமுக இயக்குநர் பார்த்திபன் இயக்கியிருக்கார். படத்துல விக்னேஷ்காந்த், ஷா ரா, பாண்டியராஜன் சார், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன் சார், கௌசல்யா மேம்னு ஒரு பெரிய பட்டாளமே இருக்கு. `மீசைய முறுக்கு’ விவேக் சார் இடத்தை, இந்தப் படத்துல பழ.கருப்பையா சார் நிரப்பியிருக்கார். இந்தப் படம் மூலமா ‘பிஜிலி’ ரமேஷ்ங்கிற சூப்பர் ஸ்டாரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துறோம். ‘எரும சாணி’ விஜய்யும் இந்தப் படம் மூலமா சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார். ‘மீசைய முறுக்கு’ படத்துல விக்னேஷ்காந்துக்குக் கிடைச்ச கைத்தட்டல், இந்தப் படத்துல விஜய்க்குக் கிடைக்கும். செம ரகளை பண்ணியிருக்கான். என் வாழ்க்கையை மாற்றினதுல என் நண்பர்களுக்கு நிறைய பங்கிருக்கு. அதனால்தான் படத்துக்கு ‘நட்பே துணை’ங்கிற டைட்டிலை வெச்சேன். ‘மீசைய முறுக்கு’ படத்தைவிட இந்தப் படத்தோட பட்ஜெட் அதிகம். சுந்தர்.சி அண்ணாவும், ‘எவ்வளவு வேணாலும் செலவு செய், ஆனா படத்தை சூப்பரா பண்ணு’ன்னு சொல்லிட்டார். ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிஞ்சது. 2019-ல ரிலீஸ்!”

“இந்தப் படத்தோட பின்னணியா ஹாக்கியை ஏன் தேர்ந்தெடுத்தீங்க?”
“ஹாக்கி விளையாட்டு பார்க்கத்தான் சிம்பிளா இருக்கும். ஆனா, அது ரொம்ப கஷ்டமான விளையாட்டு. எல்லா விளையாட்டுலேயும் ஒரு சின்ன கேப்ல ரெஸ்ட் எடுக்கலாம். ஆனா, ஹாக்கியைப் பொறுத்த வரை அதெல்லாம் பண்ண முடியாது. அப்படிப்பட்ட கஷ்டமான விளையாட்டுக்கு இங்கே போதுமான அங்கீகாரம் இல்லை. அதைப் பதிவு செய்யணும்னு நினைச்சோம். இந்தப்படத்துக்காக நாலு மாசம் ஹாக்கி பயிற்சி எடுத்தோம். நிறைய நேஷனல் பிளேயர்ஸ்கூட பழக்கம் ஏற்பட்டது. ஒரு நாள் ட்ரெயினிங் எடுத்தா, ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு உடம்பு வலி பின்னியெடுக்கும்.”
“பாரதியார் உங்க வாழ்க்கைக்குள்ள எப்படி வந்தார்?’’

“அப்பா, பாரதியார் பல்கலைக்கழகத்துலதான் வேலை பார்த்தார். அங்க வாசல்ல பாரதியாருடைய சிலை இருக்கும். அதுக்கு எதிர்லதான் நான் ஸ்கூல் படிக்கும்போது பஸ் ஏறுவேன். அந்தச் சிலையைப் பார்க்கும் போதெல்லாம், ‘யார்ரா இந்த மனுஷன். கோட் சூட் போட்டிருக்கார், டர்பன்லாம் கட்டியிருக்கார்’னு வியந்து பார்த்துட்டிருப்பேன். அப்பாகிட்ட ‘யார்ப்பா இவர்’னு கேட்டேன். ‘அவர் யாருன்னு தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி, அவர் என்ன பண்ணார்னு தெரிஞ்சுக்கோ’ன்னு சொன்னார். அப்போதான் அவருடைய கவிதைகளைப் படிக்க ஆரம்பிச்சேன். எனக்கு அவருடைய கவிதைகள் ஒரு பக்கம் ஈர்த்தாலும், அவருடைய ஸ்டைலை ரொம்ப ரசிக்க ஆரம்பிச்சேன்.”
“சுந்தர்.சி தொடர்ச்சியா உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கிறாரே... அவருக்கும் உங்களுக்குமான நட்பு எப்படிப்பட்டது?”

“சுந்தர்.சி அண்ணாவோட மகள்களுக்கு ‘வாடி புள்ள வாடி’ பாட்டு ரொம்பப் பிடிக்கும். யாரோட சாங் இதுன்னு விசாரிச்சுட்டு என்னைக் கூப்பிட்டு சந்திச்சார். ‘என் படத்துக்காக நீ ஒரு பாட்டு பண்ணணும்பா’ன்னு கேட்டார். ‘நான் நிறைய படத்துல சிங்கிள் ட்ராக் பண்ணிருக்கேன் சார். அதுக்கான க்ரெடிட் எங்கேயும் கொடுக்கலை. இனிமே பண்ணுனா மொத்தமாதான் சார் பண்ணுவேன்’னு சொன்னேன். ‘யாரு இவன் ரொம்பப் பேசுறானே’ன்னு மேலேயும் கீழேயும் பார்த்தார். ‘இல்ல பா அஞ்சு நாள்ல ஆல்பத்தை முடிக்கணும். இன்னும் அஞ்சு மியூஸிக் டைரக்டர்கள்கிட்ட கேட்டிருக்கேன்’னு சொன்னார். அவ்ளோதானே, மொத்தமா நானே முடிச்சுக் கொடுக்கிறேன்’னு செம வெறில எல்லாப் பாட்டையும் கம்போஸ் பண்ணிக் கொடுத்தேன். எல்லாப் பாட்டும் ஒரே டேக்ல ஓகே ஆகிடுச்சு. அப்போ இருந்துதான் சுந்தர். சி அண்ணா எனக்கு ரொம்ப க்ளோஸ் ஆனார். அவர் எந்தளவுக்குப் பாசமா இருப்பாரோ, அதே அளவு கோபமாவும் இருப்பார். டீமோட ஆறு மாசம் நாங்க காணாமப்போயிட்டோம். அப்போதான் ‘டக்கரு டக்கரு’ டாக்குமென்ட்ரி வேலைகள் போயிட்டிருந்த சமயம். ‘எங்கடா போயிட்டீங்’கன்னு கேட்டதுக்கு, ‘ஒரு டாக்குமென்ட்ரி எடுக்க வந்திருக்கோம்ணா’ன்னு சொன்னேன். செம டோஸ்... அப்போ ‘தனி ஒருவன்’ படம் முடிச்ச சமயம். ‘ஒழுங்கு மரியாதையா வந்து படம் பண்ற வேலையைப் பாருங்கடா’ன்னு திட்டினார். அதுக்குப் பிறகு ‘டக்கரு டக்கரு’ டாக்குமென்ட்ரியை அவருக்குப் போட்டுக்காட்டினேன். என் முகத்தையே ரெண்டு செகண்ட் பார்த்தார், ‘நீங்க இதுவும் பண்ணுங்க டா’ன்னு சொன்னார். அவர் எனக்கு ஒரு நல்ல மென்டார்.”
“யூடியூப் அப்போ... இப்போ...?”
“யூடியூப் இப்ப மொத்தமா வேறயா இருக்கு. முன்னாடி அளவு கம்மியா இருக்கும், தரம் அதிகமா இருக்கும். இப்போ தரம் கம்மியா இருக்கு, அளவு அதிகமா இருக்கு. இப்போ போய் நீங்க யூடியூப் ட்ரெண்டிங் வீடியோக்கள் எடுத்துப் பாருங்க. ஒரு சில வீடியோக்கள் குவாலிட்டியா இருந்தாலும், நிறைய வீடியோக்கள் ‘இந்த நடிகை செய்த காரியத்தைப் பாருங்களேன், அந்த நடிகை எங்கு சென்றார் தெரியுமா’ வகையறாவாதான் இருக்கு. அதுமாதிரி மோசமான வீடியோக்களுக்கு மில்லியன் கணக்குல வியூஸ் வேற வரும். இதனாலதான் இண்டிபென்டன்ட் மியூஸிக் அடி வாங்குது. நான் ஆல்பம் பண்ணுன டைம்ல ‘க்ளப்புல மப்பு’ல பாட்டுக்கு மில்லியன் கணக்குல வியூஸ் வந்துச்சு. அதுக்காக ‘திங்க் மியூஸிக்’ல விழா வெச்சுப் பாராட்டினாங்க. இப்போ நிறைய இண்டிபென்டன்ட் மியூஸிக் ஆல்பங்கள் வருது. ஆனா, ட்ரெண்டிங்ல வரமுடியாமப்போயிடுது. டெக்னாலஜிங்கிறது ஒரு தீக்குச்சி மாதிரிதான். அதை வெச்சு எரிக்கவும் முடியும், ஒளி கொடுக்கவும் முடியும்.”
“ ‘தமிழி’ ஒரு சிறு குறிப்பு வரைக?”
“தமிழ் எழுத்துகளின் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்ப்பதன் மூலம் தமிழர்களின் பெருமையை முன்னோக்கி எடுத்துச்செல்லும் ஒரு முயற்சி. நம்முடைய மொழி பற்றி ஆதாரபூர்வமான சில விஷயங்களை, தெளிவா இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லணும்னு நினைச்சுப் பண்ணுனதுதான் `தமிழி’ ஆவணப்படம். என்கிட்ட ஒருத்தன் திடீர்னு வந்து, ‘80,000 வருஷத்துக்கு முன்னாடியே தமிழ் இருந்தது தெரியுமா’ன்னு வாதாடுறான். எப்படிடான்னு கேட்டா, வாட்ஸ் அப் ஃபார்வேர்டு மெசேஜைக் காட்டுறான். முழுக்க விண்வெளி மனிதன், ஏலியன் கற்கள்னு வதந்திகள். ஒரு பக்கம் இதையெல்லாம் பார்த்துச் சிரிப்பா இருந்தாலும், இதுக்குப் பின்னாடி நிறைய ஆபத்தும் இருக்கு. தமிழ் மொழி பற்றி இப்படிக் கிளம்புற வதந்திகளை மனசுல வெச்சுதான் தமிழியைத் திட்டமிட்டோம். அதுக்காக நிறைய இடங்களுக்கு நேரடியா போனோம், நிறைய நிபுணர்களோட பேசினோம். இது உங்களுக்குப் பார்க்கும்போது தெரியும். கிட்டத்தட்ட வேலைகளெல்லாம் முடிஞ்சிருச்சு. நிறைய இடங்கள்ல திரையிடவும் திட்டமிருக்கு. அமெரிக்காவுல இருக்கிற `ஃபெட்னா’லகூடக் கேட்டிருக்கோம். முக்கியமா நிறைய பள்ளி மாணவர்கள்கிட்ட கொண்டு போகணும், அதுக்கான வேலைகளும் நடந்துகிட்டிருக்கு.’’

“ ‘டக்கரு டக்கரு’ ஆவணப்படத்துல கார்ப்பரேட் அரசியல் பற்றிப் பேசியிருந்தீங்க. இந்த மாதிரி விஷயங்களை உங்க திரைப்படங்கள்ல கொண்டு வருவீங்களா?”
“ஒரு ஸ்க்ரிப்ட் வேலை போயிட்டிருக்கு. அந்தக்கதை முழுக்கவே இதுமாதிரியான விஷயங்கள்தான் பேசும். எனக்கு ரொம்பப் பிடிச்ச இயக்குநர்தான் அதை எழுதிக்கிட்டிருக்கார். சமூகம் சார்ந்து எழுதுற ஆள், அவர் பத்திரிகைத் துறைலேயும் வேலை பார்த்திருக்கார். இதுக்குமேல ஹின்ட் கொடுத்தா நீங்க கண்டுபிடிச்சிடுவீங்க. இப்போதைக்கு இதுதான்.”
“ஜல்லிக்கட்டு டைம்ல உங்களைக் கல்வித்துறை அமைச்சர்னு மீம் போட்டதை எல்லாம் பார்த்து என்ன நினைச்சீங்க?”
“பண்ணவனைப் பார்த்து, ‘ஏன்டா?’ன்னு ஒரே ஒரு கேள்வி மட்டும் கேக்கணும் ப்ரதர். மீம்ல இருக்கிற நல்லதும் கெட்டதும் ஒரே விஷயம்தான்... யார் மீம் போடுறாங்கங்கிறது தெரியாது! ஒரு சின்ன போட்டோவுல வயிறுகுலுங்கச் சிரிக்கவும் வைப்பாங்க, ‘ஏன் இந்த மாதிரி’ன்னு சங்கடப்படவும் வெச்சிடுவாங்க.”
“சமீபத்துல இளையராஜாவைக்கூட விமர்சிச்சு நிறைய மீம்கள் வந்ததே?”
“ஐ.பி.ஆர்.எஸ் பத்தி புரிதல் இல்லாமலே அவரை ரொம்பவே விமர்சனம் செஞ்சுட்டாங்க. விமர்சனம் வேற, கருத்து வேற. நிறைய மீம் அவரை ரொம்ப கேலி செஞ்ச மாதிரி இருந்தது வருத்தம் தந்தது. நம்ம வீட்டுல இருக்கிற அப்பாவை, தாத்தாவை அப்படிக் கிண்டல் பண்ணுவோமா, சொல்லுங்க? அவரைப் பத்தியும், அவர் செஞ்ச சாதனைகள் பத்தியும் முழுமையா தெரிஞ்சிருந்தா இப்படியெல்லாம் மீம்ஸ் போட்டிருக்க மாட்டாங்க. இந்த மாதிரி சென்சிட்டிவ் விஷயங்கள்ல மீம் கிரியேட்டர்ஸ் புரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கும்.”