
கனா - சினிமா விமர்சனம்
தந்தையின் கிரிக்கெட் கண்ணீரைத் துடைக்க மகள் எடுக்கும் பெரு முயற்சி களே இந்த ‘கனா.’

குளித்தலை வட்டாரத்தில் பெரிய விவசாயி சத்யராஜ். மகள் ஐஸ்வர்யாவும் கிரிக்கெட்டும்தான் அவருக்கு உலகத்திலேயே பிடித்தமான விஷயங்கள். உலகக்கோப்பை யில் இந்தியா தோற்றுப்போ வதைப் பார்த்து அவர் அழ, அப்பாவை குஷியாக்கு வதற்காக கிரிக்கெட் விளையாடத் தொடங்குகிறார் மகள். ஒருகட்டத்தில் விளையாட்டே லட்சியமாக மாறி அவரை இந்திய மகளிர் அணிவரை இழுத்துச் செல்கிறது. அங்கே அவர் அடிக்கும் சிக்ஸர்களை, கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கருத்து எனக் கலந்துகட்டிச் சொல்லியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

கிராமத்தில் நம்மோடு வளர்ந்த பிள்ளைகளை அச்சில் வார்த்ததுபோல, குறும்பும் துடுக்குமாக அப்படியே இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கோபம், ஏக்கம், சோகம், ஏமாற்றம் என ஏகப்பட்ட ஏரியாக்களில் ஸ்கோர் செய்து மிட்விக்கெட், ஸ்கொயர், லாங் என திசைக்கொன்றாக சிக்ஸர்களைப் பறக்க விடுகிறார்.
பாசக்கார அப்பாவாக சத்யராஜ். நக்கல் கம்மியாக... சென்டிமென்ட் தூக்கலாக... படத்தைத் தாங்கி நிற்கிறார். முதல்முறையாக முழுக்க முழுக்க இறுக்கமான ரோல் சிவகார்த்தி கேயனுக்கு! கோச்சாக சிவா கிரவுண்டுக்குள் இறங்கியபின் விறுவிறு வேகம் பிடிக்கிறது மேட்ச்.

கொஞ்சம் வளர்ந்த ஐஸ்வர்யாவாக வரும் கீர்த்திகா நடிப்பில் அசரடிக்கிறார். திபு நினன் தாமஸின் பாடல்களும் பின்னணி இசையும் ஸ்போர்ட்ஸ் மூவிக்கான டெம்போவைத் தக்க வைக்கின்றன. புழுதி பறக்கும் களத்துமேடு தொடங்கி பச்சைப் பசேல் கிரிக்கெட் கிரவுண்டு வரை பளிச்செனப் பாய்கிறது தினேஷ் கிருஷ்ணனின் கேமரா.
‘எப்படியும் ஜெயிக்கத்தான் போறாங்க’ எனத் தெரிந்தாலும், கடைசி ஓவரில் வரும் அந்தச் சின்ன ட்விஸ்ட் செம! அதைத்தவிர, புது மேஜிக்குகள் எதுவுமில்லாமல் ஸ்போர்ட்ஸ் படங்களுக்கான அதே பழைய டெம்ப்ளேட்டில் படம் அடங்கிப்போவதுதான் குறை.

வளர்ந்துவரும் கிரிக்கெட், தேங்கி நிற்கும் விவசாயம் என இரட்டைக் குதிரையில் பயணிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால், அதில் கிரிக்கெட் மட்டுமே சீறிப் பாய்கிறது. விவசாயத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
- விகடன் விமர்சனக் குழு