
ஷாஜி, ஓவியங்கள் : ரவி

சினிமா பார்ப்பதற்கான தனது ஊர்சுற்றல்களிலிருந்து என்னை முற்றிலுமாகத் தள்ளிவைத்திருந்த குஞ்ஞுவுடன் மீண்டும் நான் நட்பில் இணைவதற்கான சூழலொன்று உருவானது. ஒரு பழைய கையெழுத்து இலக்கிய இதழ்தான் அதற்குக் காரணி. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குஞ்ஞு, ஓவியர் விஜயன், பாடகர் தாமஸ், பல்லன் செல்லப்பன் போன்றவர்கள் சேர்ந்து ஒரு பெரிய கையெழுத்து இதழைக் கொண்டுவந்தனர். ஒருமுறை மட்டுமே வெளியான அவ்விதழின் கதைகள், கவிதைகள், நாவல், பயணக் கட்டுரை, திரைப்பட விமர்சனம் எனப் பெரும்பாலும் எழுதியவர் குஞ்ஞுதான். எம்.டி.வாசுதேவன் நாயரின் திரைக்கதையுடன் அக்காலத்தில் வெளியான ‘வில்க்கானுண்டு ஸ்வப்னங்ஙள்’ என்ற படத்தைப் பற்றித்தான் குஞ்ஞுவின் திரை விமர்சனம். ‘மம்மூட்டி என்று பெயரான ஒர் அறிமுக நடிகர் இப்படத்தில் நடித்திருக்கிறார். இரண்டே காட்சி களில்தான் வருகிறார். ஆனால், ஆணழகும் நடிப்புத் திறனும் ஒருங்கே இணைந்த அவர் கவனத்துடன் தன்னைத் தயார்ப்படுத்தினால், வருங்கால மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாறும் அனைத்துத் தகுதிகளும் கொண்டவர்’ என்று அதில் குஞ்ஞு எழுதியிருந்தார். அது அப்படியே பலித்ததே! மம்மூட்டி மலையாள சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக மாறிவிட்டார்!
“அந்தப் பழைய கையெழுத்து இதழ எடுத்துக்கிட்டு நாம போய் மம்மூட்டியப் பாக்கலாமா?” என்று குஞ்ஞுவிடம் கேட்டேன். அது அவருக்குப் பயங்கரமாகப் பிடித்துப்போனது. ஆனால், அக்கையெழுத்து இதழ் ஏதோ ஓர் ஏழைக் குடிசைக்குள்ளே கிடந்து கரையான்களுக்கு உணவாகிப் பலகாலமாகியிருந்தது.
அக்காலத்தில் வந்த ‘வேனலில் ஒரு மழ’ எனும் படத்தின் பெயரைத் தழுவி ‘வேனலில் ஒழுகுந்ந புழா’ என்று ஒரு திரைக்கதையை குஞ்ஞு எழுதினார். அதை அவர் எனது அப்பாவிடம் படித்துக் காட்டினார். அப்பாவுக்கு அக்கதை மிகவும் பிடித்துப்போனதாம். கேரளா காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர் ஆர்.பாலகிருஷ்ண பிள்ளாவின் மகன் கணேஷ்குமார் கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய ‘இரகள்’ எனும் படம் வழியாகக் கதாநாயகனாக அறிமுகமான காலம். குஞ்ஞு எழுதிய நாயகப் பாத்திரத்தை கணேஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அப்பா கருத்துத் தெரிவித்தார். பாலகிருஷ்ண பிள்ளாவுடன் அப்பாவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதனால், அவர் வீட்டுக்கே சென்று கணேஷை நேரில் சந்தித்துக் கதை சொல்லலாம் என்று முடிவெடுத்தார்கள். பெரிய எதிர்பார்ப்போடு அதற்காகக் காத்திருந்தார் குஞ்ஞு. ஆனால், எதுவுமே நடக்கவில்லை. கையெழுத்து இதழைப்போலவே அத்திரைக்கதையும் கரையான் தின்று மண்ணாகிப்போனது.

சிதம்பர நினைவுகள்
வெண்ணீர் அணிந்தது என்ன? என்ன? என்ன?
வேலைப் பிடித்தது என்ன? என்ன? என்ன?
கண்மூடி நின்றது என்ன? என்ன? என்ன?
காவி உடுத்தது என்ன? என்ன? என்ன?
சுந்தராம்பாளின் இப்பாடலை நான் முதன்முதலில் கேட்டது, ‘சிதம்பரம்’ எனும் மலையாளப் படத்தில்தான். தமிழ் மொழியும் தமிழ்நாட்டு வாழ்க்கையும் மலையாளச் சினிமாவுக்கு வந்திறங்கிய அனுபவமாகயிருந்தது சிதம்பரம். பாம்பாடும்பாறை ஊரில் பால் வியாபாரம் செய்துவந்த முனியாண்டி எனும் தமிழரை எனக்குத் தெரிந்திருந்தது. அவரைப் போலவே இருந்தார் சிதம்பரத்தில் ஸ்ரீநிவாசன் நடித்த முனியாண்டி எனும் தமிழ்ப் பாத்திரமும். அவ்வகை சினிமாக்கள் எங்களூர்த் திரையரங்குகளில் வரவே வராது. ஆனால், கட்டப்பனை சாகராவில் சிதம்பரம் திரையிடப்பட்டது. எங்கள் பக்கத்து ஊரான மூணாற்றிலுள்ள அரசு பால்பண்ணையில் நடக்கும் கதை அது. சிலகாலம் முன்பு, நான் பார்த்த ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தின் கதையுடன் பல ஒற்றுமைகள் சிதம்பரத்திற்கு இருப்பதைக் கண்டேன். கலைப்படங்களை இயக்குவதில் பெரும் மேதைமை கொண்டிருந்த ஜி.அரவிந்தன் இயக்கிய சிதம்பரத்தில் மராத்திய நடிகை ஸ்மிதா பாட்டீல் ‘சிவகாமி’ எனும் தமிழ்நாட்டுக் கிராமத்துப் பெண்ணாக நடித்தார். அவரது கவர்ந்திழுக்கும் கறுப்பழகும் அசாத்தியமான நடிப்பும் என்னை மயக்கின.
‘யவனிகா’ படத்தில் கெட்ட குணங்களின் மனித வடிவாகத் தோன்றிய கோபி, ‘சிதம்பர’த்தில் மென்மையான இயல்புகளும் பயந்த சுபாவமும் கொண்ட, குற்றவுணர்வில் தவிக்கும் பாத்திரமாக முற்றிலும் வேறொரு மனிதராகவே தோன்றினார். முடியில்லாத தனது வழுக்கைத் தலையைப் பொய்முடிவைத்து மறைக்காமல், உருவத்தில் எந்தவொரு மாற்றமுமே செய்யாமல், ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்துக்கு ஒட்டுமொத்தமாக உருமாறிய நடிப்பு வல்லமை கோபி. ‘சிதம்பர’த்தின் ஒரேயொரு காட்சியில் திரைநடிகர் ‘நெடுமுடி வேணு’வாகவே வந்த நெடுமுடி வேணு, அக்காலத்துத் திரைப்படங்களில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பாத்திரங்களாகத் தோன்றி, பாத்திரங்களாகவே வாழ்ந்த நடிகர். இவர்களுடன், எக்காலத்திற்கும் உரிய மலையாள நடிகர்களில் முன்வரிசையில் திலகனும் வந்து அமர்ந்தது அக்காலத்தில்தான். முன்பு ஒருமுறை, ‘ஊரில் நாடகம் நடிக்க வந்த திலகனுக்கு, நான் சாயா வாங்கிக் கொடுத்திருக்கிறேன்’ என்று பெருமையாக என்னிடம் சொல்லியிருக்கிறார் குஞ்ஞு.
சமகால மலையாள சினிமா நடிப்பின் சிகரங்களான கோபி, வேணு, திலகன் மும்மூர்த்திகளைப் பற்றி, கிராமச் சந்தியில் கூடிநின்ற எஞ்சோட்டுப் பயல்களிடம் விளக்கிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ‘கொச்சுகுந்நேல் சார்’ என்பவர் என்னிடம் “போடா உவ்வே... மலயாளத்துல நல்ல சினிமாவும் கெடயாது, நல்ல நடிகனும் கெடயாது. டென் கமான்ட்மென்ட்ஸ், பென்ஹர், மக்கென்னாஸ் கோல்ட், லாரன்ஸ் ஆஃப் அரேபியா, ஸ்பார்ட்டாகஸ், கிளியோபாட்ரா என்னு இங்கிளீஷ் சினிமா எதாவதொண்ணு நீ பாத்திருக்கியா…? எதுவுமே தெரியாமச் சும்மா கெடந்து ஒளறிக்கிட்டு…” என்று சொல்லி என்னைக் கேவலப்படுத்தினார். பழைய காலத்தில் வந்த பிரமாண்ட ஆங்கிலப் படங்களின் தீவிர ரசிகராகயிருந்தவர் என் அப்பாவின் நண்பராகயிருந்த கொச்சுகுந்நேல் சார். யூள் ப்ரின்னர், சால்டன் ஹெஸ்டன், அலெக் கின்னஸ், கிர்க் டக்ளஸ், லாரன்ஸ் ஒலிவியர், ரிச்சார்ட் பர்டன், சோஃபியா லாரென் போன்ற பெயர்களையெல்லாம் நான் முதன்முதலில் கேட்டது அவர் சொல்லித்தான்.

கதை, திரைக்கதை, வசனம் – பி.கெ.ஷாஜி
`எம்.டி.வாசுதேவன் நாயரின் திரைக்கதைகள்’ என்றொரு புத்தகம் பி.கெ.ஸ்ரீநிவாசன் எனும் நண்பனின் கையில் இருப்பதைக் கண்டேன். தவணை முறையில் பணம் செலுத்தி ‘வீட்டில் ஒரு நூலகம்’ திட்டத்தின்கீழ் பல புத்தகங்களை வாங்கியிருந்தான். அவற்றையெல்லாம் இரவல் வாங்கி நானும் படித்தேன். ஆனால், ‘எம்.டி.வாசுதேவன் நாயரின் திரைக்கதைகள்’ மட்டும் ஸ்ரீநி எனக்குப் படிக்கத் தரவேயில்லை. யாருக்குமே கொடுக்காமல் சதாநேரமும் அதைப் படித்துக் கொண்டிருந்தான். பள்ளியில் என்னைவிட மூன்று ஆண்டுகள் முன்பு படித்தவன் என்றாலும், சினிமா மேலும் இலக்கியத்தின்பாலும் இருந்த பெரும் மோகம் எங்களை நெருங்கிய நண்பர்களாக்கியது. ஷாஜி என்றுதான் அவனுடைய விளிப்பெயருமே. நாடகங்களை எழுதி அவற்றில் நடிக்கவும் செய்துவந்த ஸ்ரீநி, பட்டப் படிப்பை முடித்து குஜராத் சென்று அங்கு ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தான். அதன் பின்பு தொடர்பு எதுவுமில்லை. சிலகாலம் கழித்து, அவன் ஊருக்குத் திரும்பி வந்ததோ ஒரு மலையாளத் திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியராக! படம் ‘தென்னலே நின்னேயும் தேடி. கதை, திரைக்கதை, வசனம் – பி.கெ.ஷாஜி!
கமல்ஹாஸன் கதாநாயகனாக நடித்த ‘ஞான் நின்னெ பிரேமிக்குந்நு’, ஸ்ரீதேவி முதன்முதலில் கதாநாயகியான ‘நாலு மணிப் பூக்கள்’, மது – ஜெயபாரதி இணைந்து நடித்த ‘காயலும் கயறும்’ போன்ற பெரும் படங்களை இயக்கிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின்* படத்தைத்தான் பி.கெ.ஷாஜி எனும் ஸ்ரீநி எழுதினான். வாணி விஸ்வநாத் கதாநாயகியாக அறிமுகமான படம். ‘லவ் ஸ்டோரி’ எனும் படத்தில் ரோஹிணியின் நாயகனாக அறிமுகமான ஷபீக் கதாநாயகன். சோமன், உம்மர், பிரேம் நஸீரின் மகன் ஷானவாஸ், வின்சென்ட், சுதீர் என மிகப் பிரபலமான பல நடிகர்கள் நடித்த அப்படத்தின் இசையோ தமிழ்த் திரையிசையின் இதிகாசமாகயிருந்த கே.வி.மகாதேவன். ‘சங்கராபரணம்’ வழியாக அவர் மிகவும் பிரபலமாகயிருந்த காலம். எல்லா வகையிலுமே ஸ்ரீநி எழுதிய படம் ஒரு சிறந்த சினிமா முயற்சி. ஆனால், பல சிக்கல்களைத் தாண்டி காலங்கடந்து அப்படம் வெளிவந்தபோது அதில் இயக்குநரின் பெயர்கூட இருக்கவில்லை!
பலானப் படங்களை மட்டுமே எடுக்கும் இயக்குநர் என்கிற கெட்ட பெயர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்மேல் அதற்குள்ளே பதிந்துவிட்டிருந்தது. கௌதம் எனும் பெயர்கொண்ட யாரோ ஒருவர் இயக்கியதாக வேஷம்போட்டு, ‘மங்கல்யச் சார்த்து’ என்று பெயரையும் மாற்றி ஓரிரு திரையரங்குகளில் அப்படம் வெளியானது. எங்கள் ஊர்களில் எங்கேயும் வராததால் ஸ்ரீநி எழுதிய படத்தை எங்களால் பார்க்க முடியவில்லை. இருந்தும், எங்கள் ஊர்களிலிருந்து முதன்முதலில் ஒரு திரைப்படத்திற்குத் திரைக்கதை எழுதிய கலைஞன் என்று அவனைப் பற்றி நாங்கள் பெருமிதம்கொண்டோம். நெருங்கிய நண்பன் திரைத்துறையின் அங்கமாகிவிட்டானே என்கிற சந்தோஷம் எனக்கு. விரைவில் அப்படம் வழியாக ஸ்ரீநி பெற்ற அனுபவங்களைப் பரிசீலித்துப் பார்க்க எங்கள் ஊரிலேயே ஒரு வாய்ப்பு வந்தது.

வீடியோ சினிமா
வி.பி.ராஜன் எனும் எங்கள் பொது நண்பர், வெளியூர்க் கல்லூரியில் படிக்கும்போது ஒரு நக்சலைட்டாக மாறிவிட்டிருந்தார். படிப்பை உதறிச் சிலகாலம் நக்சல் குழுக்களுடன் அலைந்த பின்னர், நீண்ட தாடியுடன் ஊருக்குத் திரும்பி வந்தார். ‘சமூக ஆராய்ச்சி மையம்’ எனும் ஒரு காகித அமைப்பை உருவாக்கி, அதன் பெயரில் ஒரு வீடியோ திரைப்படத்தை எடுக்கத் திட்டம்போட்டார். மளிகை மொத்த வியாபாரம் நடத்தும் தனது உறவினர் ஒருவரை எப்படியோ அதன் தயாரிப்பாளராகச் சம்மதிக்கவைத்தார். படத்தின் பெயர் ‘ஒரு கிராமத்தில் ஒரு வசந்த காலத்தில்’. எழுத்து, இயக்கம் வி.பி.ராஜன், துணை இயக்கம் பி.கெ.ஷாஜி எனும் ஸ்ரீநி. கோட்டயம் நகரத்தில் திருமணக் காணொளிகளை எடுத்துக் கொடுக்கும் ஒருவர்தான் ஒளிப்பதிவு. தனது நெருங்கிய நண்பர்கள் பலரை அந்தப் படத்தில் பணிபுரிய வைத்தார் ராஜன். எனக்கும் ஒரு வேலையைத் தந்தார்.
அச்சு இதழ்களில் அப்படத்தைப் பற்றியான செய்திகளை வரவைப்பதுதான் எனது வேலை. சிலகாலம் முன்பிருந்தே நான் கோட்டயத்திலிருந்து பிரசுரமாகும் அச்சு இதழ்களில் எழுத ஆரம்பித்திருந்தேன். அந்த ஒரே காரணத்தால்தான் வயதில் இளையவனான என்னையும் படக்குழுவில் சேர்த்துக்கொண்டார்கள். ‘நன்மையற்ற கிராம வாழ்க்கையைப் பற்றி ஒரு வீடியோ சினிமா’, ‘இடுக்கி மலைகளிலிருந்து ஒரு சலனச் சித்திரம்’ போன்ற தலைப்புகளுடன் நான் எழுதிக் கொடுத்த குறிப்புகள் இதழ்களில் அச்சிடப்பட்டு வந்தன. எதிர்பாராமல் தனது படத்திற்குக் கிடைத்த இந்தக் கவனம், ராஜனின் தன்னம்பிக்கையை வானளவு உயர்த்தியது. “கிராமத்து நூலகங்களின் உதவியுடன் நமது படத்தைக் கேரளம் முழுவதும் திரையிட்டுப் பயங்கரமான வசூலை உருவாக்கவில்லை யென்றால் என் பெயர் வி.பி.ராஜன் இல்லை” என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். படப்பிடிப்பிற்காக ஒளி ஒலிக் கருவிகளுடன் குழு வந்திறங்கியது. கதாநாயகனாக நடிக்க, கம்யூனிஸ்ட் இளைஞர் அணித் தலைவரும் நாடக நடிகருமான வடக்கில்லம் கோபிநாத் ஆயத்தமானார். ஆனால், கதாநாயகியான முஸ்லீம் பெண்ணாக நடிக்க யாருமே முன்வரவில்லை. தான் அழைத்ததும் ஓடி வருவார்கள் என்று ராஜன் நினைத்த பெண்கள் முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டனர். இறுதியில், நடிகையைக் கண்டுபிடிப்பது எனது பொறுப்பு என்றார் ராஜன்! “ஒரு சினிமாவின் பி.ஆர்.ஓன்னா என்னான்னு நெனச்சே?” என்னவென்று நினைக்கணும்? எனக்கு என்ன தெரியும்! நடிகை கிடைக்கவில்லை என்றால் படம் நடக்காது. ஒரு சினிமாவின் எதிர்காலமே இப்போது என் கையில். வேறு வழியில்லாமல் வருவது வரட்டுமென்று நடிகையைத் தேடிப் புறப்பட்டேன்.
‘தரிசனம் பூங்கிரிச்சு’
முன்பு ஒரு திரையிசைக் கச்சேரியில் என்னுடன் பாடிய ‘கருப்பழகிச் சேச்சி’யின் முகவரியைத் தேடிப்பிடித்து, அவரது வீட்டிற்குச் சென்று உதவி கேட்டேன். அவர் வண்டிப்பெரியாற்றிலுள்ள ஒரு நாடக நடிகையின் முகவரியைத் தந்தார். சினிமா என்று கேட்டவுடனேயே அந்த நடிகை அரண்டுபோனார். முடியாது என்று முடிவாகவே சொன்னார். மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் அலையும்போது, சிலநாள் முன்பு ஒரு துக்கடா திரையிசைக் கச்சேரியில் என்னுடன் பாடிய நஸீமா எனும் பெண்ணின் நினைவு வந்தது. அவருமே வண்டிப்பெரியாறு ஊரைச் சேர்ந்தவர். ஒரு தேயிலைத் தோட்டத்தின் புறம்போக்கு நிலத்தில் உள்ள அவரது வீட்டைத் தேடிப்பிடித்தேன். அவருக்குத் தெரிந்த யாராவது நடிக்க வருவார்களா என்று தயக்கத்துடன் கேட்டேன். “நான் வந்தாப் போதுமா? நாடகத்திலெல்லாம் நடிச்சிருக்கே” அவர் அப்படிச் சொல்வார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு அளப்பரிய சந்தோஷம். பார்க்க அழகான பெண். மட்டுமல்லாமல், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர். கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துவார்.
அரைமணி நேரத்தில் நஸீமா என்னுடன் புறப்பட்டு வந்தார். துணைக்கு யாருமே இல்லை. பேருந்தில் ஒரே இருக்கையில் அவருடன் அமரத் தயங்கி நின்றுகொண்டிருந்த என்னிடம் “எங்கூட ஒக்கார வெக்கப்படுறியா, இல்ல அசிங்கமா நெனக்கிறியா?” என்று கேட்கிறார். வெட்கம் கொஞ்சம் இருக்கிறது. ஆனால், இதில் அசிங்கமாக நினைக்க ஒன்றுமில்லையே! அவர் என்னுடன் வந்தது எனக்குப் பெருமிதமாகவே இருந்தது. அழகான ஒரு பெண் தன்னுடன் வருவதை எந்தப் பதின்பருவத்தினன் விரும்பமாட்டான்? நான் நஸீமாவின் அருகில் அமர்ந்தேன். “நல்ல குடும்பத்துல நல்ல நெலயில வாழ்ந்தவங்க நாங்க. எஸ்டேட்டுல கங்காணி வேல பாக்கும்போது, பைக்கு சரிந்து வாப்பாக்கு ஒடம்பு முடியாமப் போயிடுச்சி. நான்தான் மூத்தவ. மூணு தங்கைங்க. என்ன பண்றது? பாட்டு பாட, நாடகத்துல நடிக்க எறங்கிட்டேன். இதுல என்ன தப்பு, இல்ல? கலைதானே! சின்ன வயசுலேர்ந்தே ஒரு கலைக்காரி ஆகணும்னுதானே ஆசப்பட்டேன்...” யவனிகா படத்தில் வந்த ரோஹிணி எனும் ஜலஜாவின் சோகக்கதை இங்கேயும் தொடர்கிறதே! நில்லாமல் பேசும் குணம்கொண்ட நஸீமா, தமிழ்த் திரைப்பாடல்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார். “மெல்ல தொறந்ந கதகு படத்தோட ‘தரிசனம் பூங்கிரிச்சு’ பாட்டக் கேட்டியா? நல்ல ஒண்ணாம்தரம் பாட்டு”. அவர் பாடத் தொடங்கினார். ‘தரிசனம் பூங்கிரிச்சு..., பூதக்காட்டும் அடிச்சிடிச்சு…” அந்த ஊரில் ஒரு தமிழ்ப் பாடகியாக அறியப்படும் நஸீமாவுக்குத் தமிழ் அறவே தெரியாது என்று எனக்குப் புரிந்தது. ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்தின் ‘ஊருசனம்’ அவருக்கு ‘தரிசன’மாகிப்போனது.
ராஜன் இயக்குநருக்கு நடிகையை மிகவும் பிடித்தது. அவரின் அக்காவின் வீட்டில் மகிழ்வாகத் தங்கிக்கொண்டு நஸீமா படப்பிடிப்பில் பங்கேற்றார். வேலையும் கூலியும் இல்லாமல், சதா நேரமும் ஊர் முச்சந்தியில் அமர்ந்து வெற்று அரசியல் பேசும் ஆள்களில் ஒருவனாக ஒரு துண்டுக் காட்சியில் நானும் நடித்தேன். கேமராவுக்கு முன் எனது முதல் நடிப்பு. ஆனால், தொழில்நுட்பச் சிக்கல்கள் எங்கள் சினிமாவை முன்நகர விடவில்லை. தூக்க முடியாத அளவுக்கு எடைமிக்க கேமராவாகயிருந்தும் எடுக்கப்படும் காட்சிகளை உடனுக்குடன் பார்க்கும் வசதி அதில் இருக்கவில்லை. உள்ளேயிருக்கும் ஒளிநாடாப் பேழையை எடுத்துக்கொண்டு நெடுங்கண்டத்தில் உள்ள மைக்கேல் வக்கீலின் வீட்டுக்குச் சென்று, அங்கிருக்கும் காணொலிக் கருவியில்தான் படம் பார்க்கவேண்டும். ஒவ்வொரு நாளும் அதைப் பார்க்கும்போது, சினிமா எடுப்பது குறித்து இயக்குநருக்கு மட்டுமல்ல ஒளிப்பதிவாளருக்கும் ஒன்றுமே தெரியாது என்பது எங்களுக்கு விளங்கியது. எடுத்தது எதுவுமே சரியில்லை என்கின்ற உணர்வு எங்களுக்கு மேலோங்கியது.
“அதெல்லாம் உங்க பிரமை பிரதர். இத நான் எடிட் பண்ணி எப்டி மாத்றேன் பாரு” என்றார் இயக்குநர். “இத எடிட் பண்ணியெல்லாம் ஒண்ணுமே புடுங்க முடியாது. ஒட்டுமொத்தச் சொதப்பல். இப்டியெல்லாம் சினிமாவும் எடுக்க முடியாது, ஒரு மண்ணாங்கட்டியும் எடுக்க முடியாது” என்று கடுமையாகச் சொல்லிவிட்டு ஸ்ரீநி துணை இயக்குநர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அன்றைக்கே நானும் அங்கிருந்து கிளம்பினேன். ஓரிரு நாள்களில் “இந்தச் சிறுபிள்ள வெளயாட்டுக்கு இனிமே பணம் செலவு செய்ய முடியாது” என்று தயாரிப்பாளரும் விலகிக்கொண்டார் எனக் கேள்விப்பட்டேன். ஒரு கிராமத்தின் ஒரு வசந்தகாலம் நாலைந்து நாள்களிலேயே முடிந்துபோனது. நடிகை நஸீமாவுக்குச் சரியாகப் பணம் கொடுத்திருப்பார்களா? அவர் சந்தோஷமாக வீடு திரும்பியிருப்பாரா? எதுவுமே தெரியவில்லை. நான் வேறு எது எதற்கோ திசைமாறிப் போய்விட்டிருந்தேன்.

சோவியத் நாட்டுக்காரன்
‘மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள்’ எனும் படத்தைப் பார்த்த காலத்திலிருந்தே மோகன்லாலின் தீவிர விசிறியாக இருந்தவன் கடப்ளாக்கல் ஜோயி எனும் எனது கல்லூரி நண்பன். மோகன்லாலின் பெயர் இருந்தால் அப்படத்தைப் பார்த்துத்தான் தீர்வான். அவனும் என்னைப்போலவே ஒரு சினிமா வெறியன். சினிமா பார்க்கப் பணம் திரட்ட ஜோயியும் நானும் சேர்ந்து பள்ளி மாணவர்களுக்காக ஒரு தனிப்பாடப் போதனை வகுப்பையே சில நாள்கள் நடத்தியிருக்கிறோம். ப்ரீ டிக்ரி முடித்து ஜோயி எங்கேயோ போனான். பிறகு எந்தத் தகவலுமில்லை. எனக்கு வீட்டில் எண்ணற்ற பிரச்னைகள். என்னால் அங்கே இருக்கவே முடியவில்லை. எங்கேயாவது போகவேண்டும். மண்டை வெடிக்கும் அளவுக்குச் சிக்கல்களோடு ஒருநாள் பாதையோரத்தில் அமர்ந்திருக்கும்போது அதோ ஜோயி வருகிறான்!
அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது. கோட்டயத்தில் உள்ள ‘லியோ’ புத்தக விற்பனை நிறுவனத்தின் முகவர். “எங்கூட வாடா, வேல வாங்கித் தாரேன்... கம்பெனிச் செலவில ஊர் சுத்தலாம். கொஞ்சம் காசும் கெடைக்கும். நமக்கென்ன? சினிமா பாக்கணும்... சாப்பாடு திங்கணும்… அவ்ளொதானே... நீ வா” அடுத்த நாளே நான் ஜோயியுடன் புறப்பட்டேன். சென்ற உடனே வேலையும் கிடைத்தது. சோவியத் நாடு, சோவியத் லேன்ட், சோவியத் யூனியன், ரஷ்யன் லைஃப், ஸ்புட்னிக் போன்ற ருஷ்ய இதழ்களுக்கு ஊர் ஊராகச் சென்று சந்தாக்காரர்களைச் சேர்க்கவேண்டும். எனக்கு வேலை கற்றுத்தரும் வேலையை ஜோயி ஏற்றுக்கொண்டான். ஒரு வாரம் அவனுடன் நடந்து தொழிலைக் கற்றுக்கொண்டேன். பின்னர் இருவரும் வழிபிரிந்தோம். ஆறுமாத காலம், அந்த வேலைக்காகப் பெருநகரங்களும் பட்டணங்களும் சிறு கிராமங்களும் தாண்டி கேரளம் முழுவதும் பயணம் செய்தேன். போன இடமெல்லாம் திரைப்படங்களைப் பார்த்தேன். மலையாளம், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என வாரத்தில் ஐந்தாறு படங்கள். சாயங்காலம் வேலை முடிந்தவுடன் நேரடியாக சினிமாதான். நல்ல படம் கெட்ட படம் என எந்தவொரு பாகுபாடுமில்லாமல் சகலமான திரைப்படங்களையும் பார்த்துக் குவித்த அக்காலத்தில் ஜோயியைப்போலவே நானும் ஒரு மோகன்லால் ரசிகனாக மாறினேன்.
ஒருநாள் காயம்குளம் எனும் ஊரில் கடைகடையாக ஏறியிறங்கி சோவியத் நாட்டிற்குச் சந்தாச் சேர்க்க அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், யாருமே சேரவில்லை, வியாபாரம் படுமந்தம். ஒரு கட்டடத்தின் முன்னால் நிறைய பேர் குழுமி நிற்பதைக் கண்டு அங்கு சென்றேன். உள்ளே படப்பிடிப்பு நடந்துகொண்டி ருக்கிறதாம். மோகன்லால் நடிக்கும் படம்! அவர் உள்ளே இருக்கிறார் என்றார்கள். எனக்கு இனிமேல் சந்தாவும் வேண்டாம் வியாபாரமும் வேண்டாம். மோகன்லாலைப் பார்த்தால் போதும். கூட்டத்தில் ஒருவனாக நானும் ஏறி நின்றேன். நேரம் கடந்தும் மோகன்லால் வெளியே வரவில்லை. நின்று நின்று கால் வலித்தது. நான் அங்கிருந்து நகர்ந்து அடுத்த கடைக்குச் சென்று சோவியத் நாட்டை மொத்தமாக விற்க ஆயத்தமானேன். அப்போது திடீரென்று படப்பிடிப்புத் தளத்திற்கு வெளியே ஒரு சலனம். மோகன்லால் வந்தாரா? நான் திரும்பி ஓடினேன். சங்கராடி எனும் நடிகர் உள்ளேயிருந்து வேகமாக நடந்து வந்து ஒரு காரில் ஏறிப்போனார். கணநேரம் மட்டும்தான் பார்த்தேன் என்றாலும் வாழ்க்கையில் முதன்முதலில் நான் நேரடியாகப் பார்த்த திரைநடிகர் மலையாளத்தின் எக்காலத்திற்கும் உரிய குணச்சித்திர நடிகர் சங்கராடி. சங்கராடி வந்தாரே! மோகன்லாலும் அவசியம் வருவார். மறுபடியும் அக்கூட்டத்துடன் சென்று நின்றேன். நெடுநேரம் கடந்த பின்னர் படப்பிடிப்புத் தளத்திலிருந்து வெளியே வந்த ஒருவர் “உங்களுக்கெல்லாம் வேற வேலயே இல்லியா? இங்கே எதுக்கு வந்து நிக்கிறீங்க?” என்று கேட்டார். “மோகன்லாலைப் பார்க்க” என்று நான் சத்தமாகச் சொன்னேன். “மோகன்லாலா? அவரு எதுக்கு இங்கே வரணும்? இது அவரு நடிக்கும் படமில்லியே”.

நஞ்சை ஊற்றிய வஞ்சகி
அக்காலத்தில் ஒருநாள் ‘ஆலப்புழை சாந்தி’ எனும் திரையரங்கில் ‘சாகர்’ எனும் ஹிந்திப் படத்தைப் பார்க்கச் சென்றேன். கூட்டம் குறைவு, எனக்கு அடுத்த இருக்கைகளில் ஒரு குடும்பம் வந்து அமர்ந்தது. வாசலுக்கு அருகேயுள்ள இருக்கையில் அப்பா, அடுத்த இருக்கையில் அம்மா, அடுத்ததில் ஒரு நடுவயதுப் பெண், அடுத்து 17 வயது இருக்கக்கூடிய பேரழகியான ஓர் இளம்பெண். எனக்கு அடுத்த இருக்கையில் ஒன்பது வயது இருக்கும் ஒரு பையன். ரிஷி கபூர், டிம்பிள் கபாடியா, கமல்ஹாஸன் நடிக்கும் முக்கோணக் காதல் கதை ‘சாகர்’. டிம்பிள் கபாடியாவை உயிர்விட்டுக் காதலிக்கிறார் கமல்ஹாஸன். ஆனால், நிலா நிரப்பிய இரவுக் கடற்கரையில் தனியாகக் குளிக்க வரும் டிம்பிளை ரிஷி கபூர் பார்க்கிறார். முக்கால் நிர்வாணமாகயிருக்கும் டிம்பிள், ரிஷியைப் பார்த்ததும் வெட்கத்தில் சிவந்துபோகிறார். அக்கணமே அவர்கள் காதலில் விழுகிறார்கள். கமலை முற்றிலுமாகப் புறக்கணித்து டிம்பிள், ரிஷியின் பின்னால் அலைகிறார்.
ஆர்.டி.பர்மனின் அசாத்தியமான பாடல்கள். ‘சாகர் ஜைசே ஆங்கோம் வாலீ…’ கடல்நீலக் கண்ணுடையாளே உனது பெயர் என்ன? ‘ஜானே தோனா பாஸ் ஆவோனா’ எனும் பாடலில், காதலாலும் காமத்தாலும் சூடு ஏறிப்போன இருவரும் நெருங்கி இணைகிறார்கள். இதையெல்லாம் உற்றுப் பார்த்து சூடு எகிறிப்போய் அமர்ந்திருந்த என் கைமேல், கம்பளிப் பூச்சி ஊர்வதுபோல் எதோ ஒன்று ஊர்கிறதே! என்னதிது? அதிர்ந்து அந்தப் பக்கம் பார்த்தேன்.
அந்தப் பேரழகுப் பெண்ணின் இடது கைவிரல்கள் என் கைமேல் தொட்டு ஊர்கின்றன! பையனின் இருக்கையின் பின்பக்கம் வழியாகத் தனது கையை நீட்டி எனது வலது கைமேல் லேசாகத் தடவுகிறாள் அப்பெண். வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு பெண் என்னைத் தொடுகிறாள். அதுவும் ஒரு பேரழகி... தன்னிலை மறந்து அப்பெண்ணின் கைமேல் பிடித்தேன். அவள் தனது விரல்களை எனது விரல்களுடன் பிணைத்தாள். பாலுணர்வுக் கொந்தளிப்பில் டிம்பிள் கபாடியா, ரிஷி கபூரைப் பார்ப்பதுபோல் அடிக்கடி அவள் என்மேல் வசீகரப் பார்வையை வீசினாள். எனது இதயம் துடிதுடித்தது. இனிமேல் இவள்தான் எனக்கு எல்லாமே. வெளியே சென்று ஒரு காகிதமும் பேனாவும் வாங்கி எனது முகவரியை அவள் கையில் எழுதிக் கொடுக்கலாமா? வேண்டாம். அவ்வளவு நேரம் அவள் கையைவிட விருப்பமில்லை. உலகையே மறந்து முத்தமிட்டுக்கொள்ளும் ரிஷியையும் டிம்பிளையும்போல் கைகளை ஆறத் தழுவிக்கொண்டு நாங்கள் அமர்ந்திருந்தோம். என்னை அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்த அவளது கை எதிர்பாராமல் அந்தப் பையனின் முதுகில் இடித்தது.
அதிர்ந்துபோன பையன் திரும்பிப் பார்க்கும்போது, யாரோ ஒருவன் தனது அக்காளின் கையை இறுகப் பற்றியிருப்பதைப் பார்த்தான். மின்னல் வேகத்தில் பெண் கையை இழுத்தாள். அவளிடம் பையன் ஏதோ கேட்டான். அதற்கு அவள் சொன்ன விடை என் காதில் இடிபோல் விழுந்தது. “அதோ ஒக்காந்திருக்கிறானே.. அந்த நாயி ரொம்ப நேரமா அக்காவ நோண்டுறான். படம் முடியட்டும். அப்பாட்டச் சொல்லி அவனுக்கு தரும அடி வாங்கிக் கொடுப்போம்..” பயந்து நடுங்கி எனது உடல் ஆடிப்போனது. படம் முடியும்வரை காத்திருந்தால் இந்த உடல் மிஞ்சாது. இருக்கைகளின் இடையினூடாகத் தடுக்கியும் விழுந்தும் நடந்து மறுபக்கம் இருந்த கதவை இழுத்துத் திறந்து வெளியே இறங்கித் திரும்பிப் பார்க்காமல் ஓடினேன். காதல் பூஞ்சோலையில் நஞ்சை ஊற்றியப் பிஞ்சு வஞ்சகி. நொடிநேரத்தில் அவள் என்னை ரிஷி கபூரிலிருந்து கமல்ஹாஸன் ஆக்கிவிட்டாளே...
(தொடரும்..)
* பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அல்ல.