
வெல்கம் 2019 - சினிமா
இந்த வருடம் சினிமா உலகம் எப்படி இருக்கும்? எந்தப் படங்களுக்கு எல்லாம் நாம் தயாராகலாம்? இதோ ஒரு லிஸ்ட்...

Alita: Battle Angel
குப்பையில் கண்டெடுக்கப்பட்ட ‘அலிட்டா’ எனும் ரோபோவுக்குத் தன் இறந்த காலம் குறித்த நினைவுகள் இல்லை. நாள்கள் செல்ல செல்ல தான் யார் என்பதை உணர்கிறாள். வரவிருக்கும் மாபெரும் யுத்தத்துக்குத் தயாராகிறாள். ‘அவதார்’ ஜேம்ஸ் கேமரூன் திரைக்கதை எழுதி தயாரிக்கும் இந்தப் படம், ஜப்பானின் மாங்கா காமிக்ஸ் அடிப்படையிலான அதிரடி திருவிழா.

How to Train Your Dragon: The Hidden World
டிராகன்களுடன் மனிதர்கள் இணக்கமாக வாழலாம் என்று நிரூபித்து வருகிறது, ஹிக்கப்பின் கிராமம். புதிதாக வரும் டிராகன் அந்த எண்ணத்தைச் சிதைக்க, அமைதியை நிலைநாட்ட ஹிக்கப்பும் டிராகன் டூத்லெஸ்ஸும் மேற்கொள்ளும் சாகசத்தின் மூன்றாம் பாகம். இது.

Captain Marvel
‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ படத்தில் பாதி உலகம் அழிந்துவிட்டது. உலகை மீட்க வரப்போகும் கேப்டன் மார்வெல்லின் முன்கதை இது. இரண்டு ஏலியன் இனங்கள் பூமியில் சண்டையிடத் தொடங்க, அதன் நடுவே மாட்டிக்கொண்ட கேரோல் டேன்வர்ஸ், தான் யார் என்பதை உணர்கிறாள். DC காமிக்ஸின் வொண்டர்வுமன் போல இதுவும் ஹிட் அடிக்குமா?

Avengers: Endgame
அவெஞ்சர்ஸ் படத்தொடரின் இறுதிப் பாகம். முந்தைய பாகத்தில் வில்லன் தானோஸ், பாதி உலகத்தை அழித்துவிடுகிறான். மீதமிருக்கும் அவெஞ்சர்ஸ் அணி, கேப்டன் அமெரிக்கா தலைமையில் எப்படி உலகை மீட்கப்போகிறது என்பதே கதை. சென்ற பாகத்தில் இல்லாத ஹாக்ஐ மற்றும் ஏன்ட்மேன் இந்தப் பாகத்தில் இடம்பெற்றுள்ளனர். மொத்தமா வாங்கலே!

Shazam
14 வயது சிறுவன் பில்லி பேட்சனுக்கு மாயாஜாலச் சக்திகள் கிடைக்கின்றன. அவன் நினைத்த நேரத்தில் ‘ஷாஷாம்’ என்ற மந்திரச் சொல்லுடன் பெரிய சூப்பர் ஹீரோ ஆகிவிடலாம். அவனின் சாகசங்களே இது. முழுக்க காமெடி படம். சொல்லி அடிப்பானா பில்லி?

Aladdin
‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ கதையில் வரும் பூதம் செய்யும் சாகசங்கள் எல்லாம் வேறு லெவல். அதே கதையை லைவ் ஆக் ஷன் சினிமாவாக அளிக்கிறது டிஸ்னி நிறுவனம். பூதமாக நடிப்பது, வில் ஸ்மித். 1992-ல் வெளியான அனிமேஷன் படமான Aladdin-ஐ தழுவி எடுக்கப்பட்டது. சீக்கிரம் பூதத்தை வெளியே விடுங்கப்பா!

The Secret Life of Pets 2
மனிதர்கள் வேலைக்குக் கிளம்பிச்சென்றதும், வளர்ப்புப் பிராணிகள் அடிக்கும் லூட்டிதான் படம். முதல் பாகத்தில் வந்த மேக்ஸ் நாயையும் அதன் சகாக்களையும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம். அதே நண்பர்கள் குழுவின் கலாட்டாக்கள். ‘இண்டியானா ஜோன்ஸ்’ ஹாரிசான் ஃபோர்டும் வாய்ஸ் கொடுத்துள்ளாராம். திருவிழாக் களைக்கட்டும்!


The Lion King
சென்ற வருடம் வெளியான ‘தி ஜங்கிள் புக்’ வெற்றி அடைந்ததுமே இதை அறிவித்துவிட்டது டிஸ்னி. 1994-ம் வருடம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற, ‘தி லயன் கிங்’ அனிமேஷன் படத்தின் ரீமேக். போட்டோரியலஸ்டிக் தொழில்நுட்பம் மூலம் ஒரு ரியலான விலங்குகள் படமாகவே எடுக்கிறார்கள். சீக்கிரமே வாங்க சிங்கராஜா!
ர.சீனிவாசன்