மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - பயம்கிற பேச்சுக்கே இடமில்லை! - குஷ்பு

1980s evergreen Heroins - Kushboo
News
1980s evergreen Heroins - Kushboo ( Ananda vikatan )

ராதிகா, ரேவதி, ஊர்வசினு மூவரின் நடிப்பைப் பார்த்து பயந் திருக்கேன்...

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் புதிய தொடர். இந்த இதழில் குஷ்பு.

1980s evergreen Heroins - Kushboo
1980s evergreen Heroins - Kushboo
Ananda vikatan

ழகு, நடிப்பு, தைரியம் எனக் கடந்த 30 ஆண்டுக்காலத் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஐகான். சமூக நிகழ்ச்சிகள் குறித்து தைரியமாகப் பேசுபவர். அரசியல் பிரபலம் (காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்). தன் பயணம் பற்றி பகிர்கிறார், நடிகை குஷ்பு!

இளமைக் காலமும்... மன வருத்தமும்!


எட்டு வயசுல, இந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமா அறிமுகமானேன். அதுக்கு சூழ்நிலையும், என்

அப்பாவின் ஆசையும்தான் காரணம். 1983-ம் ஆண்டு, என் 13 வயசுல போனி கபூர் என்னை ஹீரோயினாக்கினார். அப்போவே ரஜினி சார்கூட இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. ‘தென்னிந்திய மொழி நடிகர்கூட நடிக்கிறது சரிவராது’னு அப்பா சொல்லிட்டார். ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தின் இந்தி ரீமேக்ல ரிஷி கபூருக்கு ஜோடியாகும் வாய்ப்பு வந்துச்சு. சம்பள விஷயத்தில் அப்பாவுக்கு உடன்பாடில்லை என்பதால், அந்த வாய்ப்பை மறுத்துட்டார். அவருக்குப் பணம்தான் முக்கியம். அதனால கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காம, பல இந்திப் படங்கள்ல என்னை நடிக்க வெச்சார். பல படங்கள் சரியா ஓடலை. நிறைய நல்ல படங்கள் கைவிட்டுப்போச்சு. ஒருவித மன வருத்தத்துடன் அப்போதைய என் பாலிவுட் நடிப்புப் பயணம் போயிட்டு இருந்துச்சு.

16 வயதில் குடும்பப் பொறுப்பு!

தென்னிந்திய மொழி வாய்ப்புகளால்,1986-ல் சென்னைக்கு ஷிஃப்ட் ஆனேன். தெலுங்கில் பெரிய வாய்ப்புகள் அடுத்தடுத்து வர, நல்லா சம்பாதித்தேன். ஆனா, எல்லா முடிவையும் அப்பாதான் எடுப்பார். அவர் அனுமதிச்சால்தான், மும்பையில் வசிக்கும் என் அம்மாகிட்டயே என்னால் போன்ல பேச முடியும். நான் பொம்மை மாதிரியும் என்னை இயக்குபவராக அப்பாவும் இருந்தோம். என் சம்பாத்தியம் என்னவாகுதுனு தெரியலை. அப்போ எனக்காகப் பேசவும் யாருமில்லை. அந்த அடிமை வாழ்க்கை பிடிக்கலை.

ஒருநாள் துணிச்சலாக, ‘நான் சம்பாதிச்ச பணமெல்லாம் எங்கே?’ என்பது உட்பட எனக்குள் இருந்த எல்லா கேள்விகளையும் அப்பாகிட்ட கேட்டேன். அது பிடிக்காதவர், அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதவர், உடனே எங்களைவிட்டுட்டுப் போயிட்டார். அப்படியோர் அப்பா இல்லாமல் இருப்பது மேல்னு தோணுச்சு. அந்த வயசுலேயே, வாழ்க்கைன்னா என்னன்னு புரிய ஆரம்பிச்சுடுச்சு. அம்மா, மூணு அண்ணன்கள்னு குடும்பமே என் வருமானத்தை நம்பிதான் இருந்தது. அந்த 16 வயசுல சுயமாகச் செயல்படத் தொடங்கினேன்; ஒரு வருஷம் பொருளாதார ரீதியாகச் சிரமப்பட்டேன். சாப்பாடு இல்லாம தண்ணியைக் குடிச்சுட்டு தூங்கியிருக்கேன். மோதிரம், வளையல், கம்மல்னு இருக்கிறதை வித்து, தேவைகளைப் பூர்த்தி செய்திருக்கேன்.

தமிழ் சினிமா என்ட்ரி!

1987-ல் கன்னடத்திலும் பிஸியானேன். 1988-ல் ‘தர்மத்தின் தலைவன்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானேன். அப்போ தமிழ் தெரியாது. ஷூட்டிங் ஸ்பாட்ல, பெரிய ஆட்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் ‘வாடா... போடா’னு பேசிக்கிறதைப் பார்த்துட்டு, அது மரியாதைக்குரிய வார்த்தைனு நினைச்சுக்கிட்டேன். ஒருநாள் ரஜினி சார் வந்தபோது, ‘ஹாய் டா, வா டா!’னு அவரைப் பார்த்துச் சொன்னேன். சுத்தியிருந்த எல்லோரும் அதிர்ச்சியாக, அவர் சிரிச்சுட்டே போயிட்டார். உடனே பிரபு சார் என்பக்கம் வந்து, ‘டா’க்கு விளக்கம் கொடுத்தார். ரஜினி சார் ரிட்டர்ன் வரும்போது, ஸாரி கேட்டேன். ‘இதுல இருந்து நம்ம ஃப்ரெண்ட்ஷிப் ஆரம்பிக்குது’னு சொல்லிச் சிரிச்சுட்டுப் போயிட்டார். நாகார்ஜுனாகிட்டயும் இதுபோன்ற அனுபவம் உண்டு. அதனால எந்த மொழி டயலாக்கா இருந்தாலும், அதை இந்தியில் எழுதி வெச்சு, அர்த்தம் உணர்ந்துதான் பேசுவேன். இப்படித்தான் தென்னிந்திய மொழிகளைக் கத்துக்கிட்டேன்.

ஒரு வருஷத்துக்குப் பிறகு, ‘வருஷம் 16’-ல் நடிச்சேன். என் நடிப்பை மக்கள் ரொம்ப ரசிச்சுக் கொண்டாடினாங்க. தமிழ் சினிமாவில் எனக்கான இடம் உண்டுங்கிறதை உணர்ந்தேன். அப்போ ராதிகா, ரேவதி, ஊர்வசினு மூவரின் நடிப்பைப் பார்த்து பயந் திருக்கேன். ஆனாலும், எனக்கான இடத்தை தக்கவெச்சுக்க ரொம்பவே உழைச்சேன்.

1980s evergreen Heroins - Kushboo
1980s evergreen Heroins - Kushboo
Ananda vikatan

எனக்குள் இருந்த வைராக்கியம்!

என்னுடன் பிறந்த அண்ணன்கள்மீது எனக்கு அளவுகடந்த பாசம் உண்டு. அவங்களோடு விளையாடணும், நேரம் செலவிடணும்னு ஆசைப்படுவேன். ஆனா, நடிப்பைத் தவிர வேற எதற்கும் நேரமில்லை. வீட்டுக்கே ரெண்டு வருஷங்கள் போக முடியாத அளவுக்கு நடிப்பில் பிஸி. அப்படியே போனாலும் சில மணிநேரம்தான் இருப்பேன். சாப்பிடுவதும் தூங்குவதும் காரில்தான். அதுக்காக ஒருபோதும் வருத்தப்படலை. தொடர்ந்து 10 வருஷங்களுக்கும் மேல படு பிஸி. பொருளாதார ரீதியா பலம் பெற்றேன். ஆனாலும், எனக்குன்னு ஒரு மேனேஜரை வெச்சுக்கலை. நானே கதைகள் கேட்பேன்; கால்ஷீட் கொடுப்பேன்; சம்பளம் பேசுவேன். இரவு பகலா, நாலு ஷிஃப்ட்  நடிச்சேன். எந்தச் சொதப்பலும் இல்லாம சரியா நடிச்சுக்கொடுப்பேன். எனக்குள் இருந்த வைராக்கியம்தான் என்னைச் சிறப்பா இயக்குச்சு.

‘மக்கள் ஏன் நம்ம மேல இவ்வளவு அன்பு காட்டுறாங்க?’னு எனக்குள் கேள்வி எழுந்துச்சு. அந்தக் கேள்வி இப்பவும் எனக்கு உண்டு. அதைவிட அந்த அன்புக்கு உண்மையா இருக்கணும்னுதான் இப்போவரை நினைக்கிறேன். தமிழ் மக்களுக்கு வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன்பட்டிருக்கேன்.

வழக்குகளில் வெற்றியும்... அரசியல் என்ட்ரியும்!

2005-ம் ஆண்டு, கற்பு குறித்து நான் கூறிய கருத்தைப் பலரும் பலவிதமா புரிந்துகொண்டு, அதைப் பெரும் பிரச்னையாக்கினார்கள். அது இந்தியா முழுக்கப் பரவியது. நிறைய அச்சுறுத்தல்கள், வார்த்தைக் கணைகள், வழக்குகளை எதிர்கொண்டேன். அதுவரை மக்கள்கிட்ட நான் சம்பாதிச்சு வெச்சிருந்த அன்பையெல்லாம் அழிக்கிற வகையில, எனக்கு எதிராகப் பலரும் பலவிதமாகச் செயல்பட்டாங்க. என்னை ஒடுக்கணும்னு நினைச்சாங்க. ஆனா, நான் யாரையும் நாடிப் போகலை. காரணம், நான் தவறா எதையும் பேசலை. அதைவிட முக்கியம், என் கருத்தில் கடைசிவரை உறுதியா இருந்தேன். சமூகத்துல இன்னும் தைரியமா செயல்படணும், அரசியல்ல ஈடுபடணும்னு முடிவெடுத்தது அந்தத் தருணத்துலதான். என்றாலும், அந்த நேரத்துல நான் அரசியல் கட்சியில சேர்ந்திருந்தால், வழக்குகளை எதிர்கொள்ள முடியாமல் இந்த முடிவை எடுத்தேன்னு பலரும் சொல்லியிருப்பாங்க. `இது உன்னுடைய போராட்டம்; தனி ஆளா நின்னு ஜெயிக்கணும்’னு என் கணவர் சுந்தர் ஊக்கப்படுத்தினார். அந்த அஞ்சு வருங்களும் தனியாளாக நீதிமன்றங்களுக்குப் போய் வழக்குகளை எதிர்கொண்டேன். கூடவே, நடிப்பிலும் தயாரிப்பிலும் கவனம் செலுத்தினேன். இறுதியா உச்ச நீதிமன்றத்துக்குப் போனேன். 2010-ம் ஆண்டு, எல்லா வழக்குகளிலும் எனக்கு வெற்றி கிடைச்சுது. அதையே, என் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன். அப்போதுதான் குஷ்பு தைரியமானவள்னு எல்லோருக்கும் தெரிஞ்சுது. அதன் பிறகே அரசியலில் இறங்கினேன்.

நான் சராசரி பெண்ணா?

நல்லா படிப்பேன்; 90% மார்க் எடுப்பேன். ஆனா, சினிமா வாய்ப்புகளால், ஒன்பதாம் வகுப்பிலேயே பாதியில் ட்ராப் ஆக வேண்டிய சூழல். ஏர்ஹோஸ்டஸ் கனவு பொய்த்துப்போனது. சினிமாவுக்கு வந்த புதுசுல சம்பாதிச்ச பணத்தை எப்படிச் சேமிக்கணும்னு தெரியலை. சினிமாவைத் தவிர இப்போவரை எனக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது. இதில் சம்பாதிக்கிறதை, இத்துறையிலயேதான் முதலீடு செய்யணும். முறையா படிச்சிருந்தா, அந்த அனுபவம் முன்கூட்டியே கிடைச்சிருக்கும். 16 வயசுல என் அப்பாவை எதிர்த்துக் கேள்வி கேட்டபோதே எனக்குள் துணிச்சல் வந்துடுச்சு. ‘ஹீரோயினா இருந்த அந்தக் காலகட்டத்துல தைரியமா பேசாம இருந்தது ஏன்?’னு சிலர் கேட்கிறாங்க. யார் எங்கிட்ட அப்போ கேள்வி கேட்டீங்க? எந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லாம இருந்தேன்? நான் எப்போதும் சமூக நிகழ்ச்சிகள் பத்தி தைரியமா பதில் சொல்லத் தயார்தான். 2005-ம் ஆண்டுதான் எங்கிட்ட கேள்வி முன்வைக்கப்பட்டுச்சு. நான் பதில் சொன்னது, எனக்கு ஒரு புதிய பயணத்தை ஆரம்பிச்சு வெச்சது.

நம் வளர்ச்சியைத் தடுக்க, எப்போதும் எதிர்ப்புகள் வரும். அதை எதிர்த்துப் போராடினால்தான் முன்னுக்கு வர முடியும். அப்படி இருக்கிறதாலதானே, இப்பவும் மக்கள் என்னை மறக்காம இருக்காங்க. என் வாழ்க்கையில பயம்ங்கிற பேச்சுக்கு இடமில்லை. எதையும் ஒரு கை பார்த்திடணும் என்பதுதான் என் பாலிசி.

-கு.ஆனந்தராஜ்

படங்கள் : சொ.பாலசுப்ரமணியன், க.பாலாஜி

 நாயகிகள் பேசுவார்கள்!

“அங்கே கூடவா குஷ்பு இட்லி!”

“ ‘ர்மத்தின் தலைவன்’ ஷூட்டிங் நேரங்களில், என் கன்னத்தைப் பிடிச்சு, ‘இட்லி மாதிரி இருக்கு’னு பிரபு சார் கிண்டல் பண்ணுவார். பிறகு ‘குஷ்பு இட்லி’ வணிக ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுச்சு. ஆனா, சின்ன வயசுல இருந்து எனக்கு இட்லி பிடிக்காது; சாப்பிடவும் மாட்டேன். எனக்கு இட்லி செய்யவும் தெரியாது. என் வீட்டில் கணவர், குழந்தைகளுக்கு இட்லி பிடிக்கும். ‘குஷ்பு இட்லி சாப்பிடுறேன்... குஷ்பு செய்த இட்லியைச் சாப்பிட முடியலையே’னு என் கணவர் கிண்டலா சொல்வார். ஒருமுறை கோவா, தாஜ் ஹோட்டலுக்கு ஃப்ரெண்டு ஒருத்தர் போயிருக்கார். அங்க ‘குஷ்பு இட்லி’ முக்கியமான மெனுவா இருந்திருக்குது. அதை போட்டோ எடுத்து அவர் எனக்கு அனுப்ப, ‘தாஜ் ஹோட்டல்ல கூடவா குஷ்பு இட்லி’னு பயங்கரமா சிரிச்சேன்!”