
மிஸ்டர் மியாவ்

தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ., பிஎல் என்ற தெலுங்கு படத்தில், சந்தீப் கிஷனுக்கு கதாநாயகியாக ஹன்சிகா நடிக்கவுள்ளார். அதில், வரலட்சுமியும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கப்போகிறாராம்.

‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர். இதன் டீசரில், அவர் குளியலறையில் இறந்துகிடப்பது போன்ற காட்சி வருகிறது. அதைப் பார்த்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், இந்தப் படத்தின் குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மஹத் - ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்துக்கு ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என்று பெயர் வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ஆரியுடன் ஐஸ்வர்யா நடிக்கும் மற்றொரு படத்துக்கு ‘அலேகா’ எனப் பெயரிடப் பட்டுள்ளது.

‘படைவீரன்’ பட இயக்குநர் தனசேகர், மணிரத்னம் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப்போகிறார். அதில், முக்கிய ரோல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், ஐஸ்வர்யா ராஜேஷ்.

‘மயக்கம் என்ன’, ‘ஒஸ்தி’ படங்களில் நடித்த ரிச்சா கங்கோபாத்யாய், சினிமாவிலிருந்து விலகி வெளிநாட்டில் பிசினஸ் ஸ்கூல் ஒன்றில் பணியாற்றிவருகிறார். அவர், தன் காதலர் ஜோவுடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, விரைவில் திருமணம் என்று பதிவிட்டுள்ளார்.

வினோத் வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி நடிக்கும் ‘சின்ட்ரல்லா’ படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி முதல் வாரத்தில் ஆரம்பமாகிறது. இதில் முக்கியமான ரோலில் நடிக்க சாக்ஷி அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார்.

கேள்வி கார்னர்
சமுத்திரக்கனி
‘நாடோடிகள் 2’ படத்தை முடிச்சிட்டீங்க. ‘அப்பா 2’ படத்தை எப்போ ஆரம்பிக்கப்போறீங்க?
“ ‘அப்பா’ படத்துல நடிச்ச பசங்களேதான் ‘அப்பா 2’ படத்துலேயும் நடிக்கிறாங்க. அதுல பள்ளி வாழ்க்கையைக் காட்டினோம். இதுல அவங்களோட கல்லூரி வாழ்க்கையைக் காட்டப்போறோம். அடுத்து, ‘சாட்டை 2’ பட வேலைகளும், நான் நடித்துவரும் பட வேலைகளும் போய்க்கிட்டிருக்கு. இதையெல்லாம் முடிச்சுட்டு ஜூன் மாசத்துக்கு அப்புறமா, ‘அப்பா 2’ பட வேலைகளை ஆரம்பிக்கணும்.”
சைலன்ஸ்
அரசாங்கம் படத்துக்கு அடுத்தபடியாக உச்ச நடிகரை இயக்கும் இயக்குநர், அந்தப் படத்தில் ‘ஓ.எம்.ஜி’ பொண்ணையே நடிக்க வைக்கவுள்ளார். இதற்கும் அந்த இருமொழிப் படம்தான் காரணமாம்.
அரசியல் நடிகரின் இரண்டாம் பாகப் படத்தில் விரல் நடிகர் நடிப்பதாக இருந்தது. இப்போது, அவருக்குப் பதிலாக, ‘180’ நடிகரை நடிக்க வைப்பதற்குப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

போட்டோ ஷாப்
தொகுப்பாளினி மணிமேகலை :
எனக்கு கிளி என்றால் ரொம்பப் பிடிக்கும். வீட்டுல ரெண்டு கிளி வளர்க்கிறேன். என் கணவர் ஹுசைனுக்கு நாய் வளர்க்கணும்னு ஆசை. கிளி இருக்கிற வீட்டுல நாய் வளர்க்கக்கூடாதுனு அவர்கிட்ட செல்லச் சண்டைப் போட்டு கிளியை மட்டும் வெற்றிகரமா வளர்த்துட்டு வர்றேன். என் கிளியுடன் நான் எடுத்த எல்லா போட்டோஸுமே எனக்கு ஃபேவரைட்தான். இதில் என் கணவரும் இருக்கிறதால மோஸ்ட் ஃபேவரைட்னு சொல்லலாம்.’’