
ஷாஜி, ஓவியங்கள் : ரவி
‘‘இதுல படிச்சுத் தெரிஞ்சுக்க ஆயிரம் விசயமிருக்கு சார். படிக்கத் தெரியலேன்னாலும் பரவாயில்ல. பள்ளிக்கூடம் தொறக்குற நேரத்துல கொழந்தைங்களோட புத்தகத்துக்குச் சட்ட போடலாமே! அருமையான ஆயில் பேப்பரு. தொட்டுப் பாருங்க” -சோவியத் இதழ்களுக்குச் சந்தா சேர்க்கும் வேலைக்காக அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, பக்கத்து இருக்கைப் பயணிகளிடம் அவ்விதழ்களின் அருமைபெருமைகளை விளக்கிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் முன்னால் நின்றுகொண்டிருந்த ஆளைக் கவனித்தேன். நடத்துநரின் கையிலிருந்து சில காகிதங்களை வாங்கிப் பரிசோதித்துக்
கொண்டிருந்தார். நன்கு பரிச்சயமான முகம். ஐயோ... இவர் ஒரு சினிமா நடிகர் அல்லவா!

கறுப்பு வெள்ளை காலத்திலிருந்து சமகால வண்ணப்படங்கள் வரை சிறு வேடங்களில் நடிக்கும் நடிகர்! “சார் நீங்க சினிமா நடிகர்தானே?”. “ஆமா. ஐ ஆம் கொல்லம் ஜி.கெ.பிள்ள”. அவர் எனது கையைக் குலுக்கினார். திரைப்படங்களில் மடையன், விட்டேத்தி, ஆற்றங்கரையில் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து பார்க்கிறவன்போன்ற பாத்திரங்களில் நடிக்கிறவர் இதோ கறாராகப் பேசுகிறார். “நீங்க இந்த பஸ்சுல... எப்டி...?”. “நான் ஒரு பஸ் டிக்கட் செக்கர் தம்பி. சினிமாவ நம்பி வாழமுடியாது. பொழப்புக்கு இந்த வேலையும் செய்றேன்...” அடுத்த நிறுத்தத்தில் அவர் இறங்கினார். வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு திரைப்பட நடிகருடன் கைகுலுக்கிப் பேசிய மகிழ்ச்சி எனக்கு. இருந்தும் நிறைய படங்களில் நடிக்கும் நடிகர் ஒரு சாதாரண பேருந்துச் சீட்டுப் பரிசோதகரின் வேலையை ஏன் செய்கிறார் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

கோட்டயத்திற்குப் பக்கத்திலுள்ள ஏற்றுமானூர் பகுதியில் பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று வெள்ளை ஜிப்பா மேலே வெள்ளை வேட்டியை மடித்துக்கட்டி வி.டி.ராஜப்பன் எனும் நகைச்சுவைத் திரைநடிகர் நான்கைந்து பேருடன் வந்து ஏறினார். மிகவும் பிரபலமானவர். கதா காலட்சேபம் போன்ற கதாப்பிரசங்கம் எனும் நிகழ்த்துக்கலை வழியாக சினிமாவுக்கு வந்தவர். நின்றுகொண்டே அவர் நண்பர்களுடன் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தார். இருக்கைகள் காலியாக இல்லை. இவ்வளவு பிரபலமான ஒரு நடிகருக்கு யாருமே எழுந்து இருக்கையை வழங்காதது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நான் எழுந்து நின்று எனது இருக்கையில் அமர்ந்துகொள்ளுமாறு அவரிடம் சொன்னேன். “அட... நல்ல பையன். ஸீட்டு வேண்டா தம்பீ... அடுத்த ஸ்டாப்புல எறங்கிருவேன்…”. அவர் என் கையைக் குலுக்கினார். “சார்... நீங்க எங்களூரில் வந்து கதாப்பிரசங்கம் பேசியிருக்கீங்க”. “அப்படியா? சினிமா நேத்து வந்ததுதானே! கதாப்பிரசங்கம்தானே நமக்குச் சோறு”. “நீங்க மொதல்ல நடிச்ச ‘கக்க’ படத்துலேர்ந்து எல்லாம் நான் பாத்திருக்கே...” அவர் நடித்த படங்களைப் பட்டியலிட்டுச் சொன்னேன். “அட... எல்லாமே பாத்திருக்கியா! இதுல பல படங்கள நானே பாத்ததில்லயே! தம்பிக்கு சினிமா பாக்கறது மட்டும்தா வேலபோல..” என்று சிரித்தார். இறங்கிப் போகும்முன் மீண்டுமொருமுறை அவர் எனது கையைக் குலுக்கினார். நான் பூரித்துப்போனேன். என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஆள் என்னிடம் கேட்கிறான், “நீ எதுக்குத் தேவையில்லாம எழுந்து அவனுக்கு ஸீட்டக் கொடுக்கப் போனே? நீண்டூர் டௌணில பார்பர் கடை வெச்சு நடத்திக்கிட்டிருந்த ஒரு அம்பட்டன் அவன். தெர்மா ஒனக்கு?” எல்லா மலையாளிகளுக்கும் தெரிந்த ஒரு கலைஞனை இப்படிக் கீழ்த்தரமாக அவமதிக்கிறானே! நான் அவனருகிலிருந்து எழுந்து வேறு இருக்கைக்கு மாறினேன்.
திருவனந்தபுரத்திற்கு அருகேயுள்ள சிறயன்கீழ் என்ற ஊரில் சுற்றிவரும்போது, கண்ணெதிரே தோன்றினார்

பிரபல நடிகர் ஜி.கே.பிள்ள. முன்பு அரசுப் பேருந்தில் பார்த்த பிள்ள அல்ல. இவர் மலையாளச் சினிமாவின் தொடக்கக் காலத்திலிருந்தே அடிக்கடி திரையில் தோன்றும் கொடூர வில்லன், கற்பழிப்பு வித்தகர். பாலாடை நிறமான வேட்டியும் சட்டையும் அணிந்து ஒரு கல்யாண மாப்பிள்ளையைப்போல் தோற்றமளித்தார். முறுக்கு மீசையும் சிரிப்பும் சினிமாவில் பார்ப்பதுபோலவே இருந்தன. நான் அவரிடம் சென்றேன். முகம் முழுவதும் பரவிய சிரிப்புடன் அவர் எனது ஊர், பெயர், வீடு, வேலை என அனைத்தையும் விசாரித்தார். அவரது பேச்சு, சினிமா வசனங்களின் தொனியிலேயே இருந்தது. அவர் அங்கே நிற்பது எதற்கு என்று கேட்டபோது, “ஐயோடா... நான் பின்ன எங்கே நிப்பேன்? இதுதானே என்னோட ஊரு. இங்கே நான் நடிகனில்லப்பா, ஊர்க்காரன். எங்க ஊரு சாதாரண ஊரு கெடயாதுப்பா. பெரிய பெரிய ஆளுங்க பொறந்த மண்ணு. எதுக்கும் நீ இவ்ளொ தூரம் வந்துட்டேல்ல! பிரேம் நஸீரையும் பார்த்திட்டுப் போ”. மலையாள சினிமாவின் எக்காலத்திற்கும் உரிய உச்ச நட்சத்திரம் பிரேம் நஸீர், சிறயன்கீழில் பிறந்தவர். அவரது இயற்பெயர் அப்துல் காதர் என்பதெல்லாம் எனக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயங்கள். நஸீரை நேரடியாகச் சென்று சந்திக்கும் துணிவெல்லாம் அப்போது எனக்கு இருக்கவில்லை. ஆனால், விரைவில் எங்களூரில் வைத்தே பிரேம் நஸீரைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கலாராஜன் எனும் கலைஞன்தான் அதற்கான வழியைத் திறந்தவர்.
கலா யூனியன் தலைவன்
கலாராஜனை நான் முதன்முதலில் பார்த்தது, சிறியதொரு தனியார் கல்லூரியில் நிகழ்ந்த துக்கடா இசை நிகழ்ச்சியில் பாடச் சென்றபோதுதான். கன்னங்கரேல் முகத்தின்மேல் துருத்தி நிற்கும் பாலுண்ணிகளும் மருக்களுமாகக் கறுத்துக் குறுகிய ஓராள். சிவப்புக்குமேல் கட்டங்கள் போட்ட யானைக்கால் கால்சட்டை. அதே துணியினால் கழுத்துப்பட்டை வைத்த நீலவண்ணச் சட்டை. மஞ்சள் வண்ணக் கைக்குட்டை ஒன்றைக் கழுத்துப் பட்டைக்குள்ளே செருகிவைத்திருக்கிறார். தேக்குமர வண்ணத்திலான ஒரு ஹார்மோனியத்தின்மேல் ஒரு மிகச்சிறிய வெள்ளை வண்ண காசியோ மின்னிசைக் கருவியை வைத்து வாசித்துக் கொண்டிருக்கிறார். ‘சமுந்தர் மே நஹா கே…’ புகார் எனும் ஹிந்திப் படத்தில் ஆர்.டி.பர்மன் இசையமைத்துப் பாடிய பாடலை நான் அலறலாகப் பாடினேன். நிகழ்ச்சி முடிந்ததும் கலாராஜன் என்னை அருகில் அழைத்து, “ஒன்னோட பாட்டுல பல பிரச்னை இருக்கு. சுருதி நிக்கவேயில்ல. நல்லா ப்ராக்டீஸ் பண்ணணும். இங்கே இந்தி பாட ஆளில்ல. அதால நம்ம சேந்து எதாவது பண்ணுவோம். அடுத்த வாரம் என்னெ வந்து பாரு” என்று சொன்னார். நான் அவரை விடாமல் பிடித்துக்கொண்டேன். சில சின்னக் கச்சேரிகளிலும் ஐயப்ப சுவாமி பஜனைகளிலும் அவர் என்னைப் பாடவைத்தார்.
1980-களின் மத்தியில் அடூர் பாஸி, திக்குறிசி, எஸ்.பி.பிள்ள போன்ற மாபெரும் திரைநடிகர்களின் உதவியுடன் பிரேம் நஸீர் கேரள கலா யூனியன் எனும் ஓர் அமைப்பை உருவாக்கினார். கேரளத்தின் அனைத்துக் கலைஞர்களையும் ஒரே குடையின்கீழ்க் கொண்டுவருவதும் நலிவடைந்துபோன கலைஞர்களுக்கு உதவுவதும்தாம் அந்த இயக்கத்தின் நோக்கம். அதன் இடுக்கி மாவட்டத் தலைவராக கலாராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்டக் கிளையின் தொடக்க விழா பெரும் நிகழ்ச்சிகளுடன் அரங்கேறப்போகிறது. சாக்ஷாத் பிரேம் நஸீர் வந்து தொடக்கி வைக்கிறார்! கலா யூனியன் ஆர்க்கெஸ்ட்ரா வழங்கும் திரைப்பாடல் கச்சேரிதான் முக்கியக் கலை நிகழ்ச்சி. அதற்கான ஒத்திகையை ஆரம்பித்தனர். மாவட்டத்தின் சிறந்த பாடகர்கள்தாம் பாடுகிறார்கள். ஆதலால், எனக்குப் பாடும் வாய்ப்பு இல்லை என்றார் கலாராஜன்.

பிரேம் நஸீருக்கு முன்னால் ஒருமுறை பாடியபின் உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை. ஒரு பாடலையாவது எனக்கும் தரவேண்டி கலாராஜனிடம் கெஞ்சிக் கூத்தாடினேன். இறுதியில் ஒரேயொரு பாடலை மட்டும் தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால், ஒத்திகையெல்லாம் பார்க்க நேரமிருக்காது என்றார்! அதற்குப் பாடாமலேயே இருக்கலாம். வாத்தியக் கலைஞர்களுடன் ஒத்திகை பார்க்காமல் பாடினால் எல்லாமே நாசமாகிவிடும். எதாவது ஒரு நேரத்தில் எனது பாட்டையும் ஒத்திகைக்கு எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தினமும் நான் அங்கே சென்று நின்றேன். என்னை யாருமே ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. பிரேம் நஸீரை அழைத்துவருவதற்குக் கலாராஜன் புறப்படும்முன் எனது மன்றாடல்களுக்குச் செவிமடுத்து ஒரேயொருமுறை ‘சமுந்தர்’ ஹிந்திப் பாடலைத் தோராயமாகப் பார்த்தனர். மின்னிசைக் கருவியை வாசிக்க அன்றைக்குப் புதிதாக ஒருவர் இணைந்திருந்தார். எனக்கு நன்கு பரிச்சயமானவர். அவரை நான் இறுகப் பற்றிக்கொண்டேன். ஒத்திகையின் இடைவேளையில் அவரும் நானும் வெறுமனே ஓரிரு ஹிந்தி மற்றும் தமிழ்ப் பாடல்களைச் சுருதி பார்த்துவைத்தோம்.
நிகழ்ச்சி நாள். பிரேம் நஸீர் வந்துசேர்ந்தார் என்ற செய்தி வந்தது. ரசிகர்களும் ஊராரும் தொல்லை கொடுக்காமலிருக்க அவரை ஒரு ரகசிய விடுதியில் தங்க வைத்திருக்கிறார்களாம். கச்சேரியின் இறுதிக்கட்ட ஒத்திகை நடக்குமிடத்திற்கு கலாராஜன் வரும்போது, நான் ஒரு புதிய தமிழ்ப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தேன். கலாராஜனுக்குக் கோபம் தலைக்கேறியது. “நிறுத்து... இந்தப் பாட்ட யாரு ஓகே பண்ணான்? லிஸ்டுல இதெல்லாம் கெடயாதே! ஏழு பாட்டுக்காரும் முப்பத்திரெண்டு பாட்டும் இருக்கு. அதுக்கே நேரம் பத்தாது. நடுவுல நீ வேற பாட்ட புகுத்திறியா? வெளியே போ…”-அவர் என்னைக் கடுமையாகத் திட்டினார். பின்னர் சற்று சமாதானமாகி, “சாஜீ... நீ தப்பா எடுத்துக்க வேண்டா... இன்னிக்கு ஒன்னோட எந்தப் பாட்டுமே இல்ல. மத்தவங்களோட பாட்டும் கொறைக்கப் போறேன். ஒண்ணுக்குமே நேரம் பத்தாது. நஸீர் சாரெ தெறந்த ஜீப்புல ஊர்வலம் கொண்டுபோணும். எனக்கு மூச்சுவிடக்கூட நேரமில்லாதபோது நீ இப்டிப் பண்ணா எப்டி? நீ யூனியனுக்கு முக்கியமான ஆளு. இனிமே யூனியன் ஆர்க்கெஸ்ட்ரா நடத்தும் எல்லா புரோகிராமுக்கும் ஓன் இந்திப் பாட்டு இருக்கும். ஆனா, இன்னிக்கு விட்டுடு”.
எனது இதயம் நொறுங்கிப்போனது. இருந்தும் கலாராஜனை என்னால் வெறுக்க முடியவில்லை. “நீ எதுவும் சாப்பிடல இல்ல? வா... போயி ‘பருக்கன்’ அடிக்கலாம்” என்று சொல்லிப் பலமுறை எனக்கு உணவை வாங்கித் தந்திருக்கிறார். ‘பருக்கன்’ என்றால் வெறும் சாதமும் சாம்பாரும்தான். அதுக்கே பணமில்லாமல் உணவுக் கடையில் கடன் சொல்வதையும் பார்த்திருக்கிறேன். ஆனால், இன்றைக்கு என்னைப் பாடவிடாமல் தடுப்பது நியாயமே இல்லை. பிரேம் நஸீரின் முன்னால் பாடும் வாய்ப்பு இந்த வாழ்க்கையில் இனிமேல் எனக்கு வருமா? கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானேன். எல்லாவற்றையும் விட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாமா என்று யோசித்தேன். ஆனால், பிரேம் நஸீரைப் பார்க்க வேண்டுமே. “நீ எதுவுமே யோசிக்காதெ. மேடைக்குப் பின்னால் நின்னுக்கிட்டு அங்கே தேவயான உதவிகளச் செய். அதுதான் இன்னிக்கு ஓன் ட்யூட்டி” என்று சொல்லிக்கொண்டு கலாராஜன் பிரேம் நஸீரை அழைத்துவரச் சென்றார்.
பிரேம் நஸீர் வருகிறார்
அந்தி சாய்கிறது. நிகழ்ச்சி நடக்கும் பள்ளிக்கூட மைதானத்திற்கு முன்னால் உள்ள குமுளி – மூணார் சாலையோரத்தில், மனமுடைந்தவனாக ஆனால் நஸீரை நேரடியாகப் பார்க்கும் ஆவலுடன் நின்றுகொண்டிருந்தேன். பிற இசைக் கலைஞர்களும் உடனிருந்தனர். பாதையின் இருபக்கமும் நல்ல கூட்டம். “கலா கேரளத்தின் பொன் ஓமனப் புத்திரன்... மலையாள சினிமாவின் நித்திய வசந்தம்... கோடானகோடி சினிமா ரசிகர்களின் கண்மணி.... பத்மபூஷன் பிரேம் நஸீர் இதோ இந்த வாகனத்தின் பின்னால் திறந்த ஜீப்பில் ஊர்வலம் வந்துகொண்டிருக்கிறார்…” என்கிற ஒலிபெருக்கி அறிவிப்புடன் ஒரு வாகனம் கடந்துபோனது. தப்பும் தவிலும் தாரைதப்பட்டைகளுமாக மற்றொரு வாகனம். அதன்பின்னால், திறந்த ஜீப்பில் நின்றுகொண்டு அதோ பிரேம் நஸீர் அனைவரையும் பார்த்து கையசைக்கிறார். புகைச்சாம்பல் வண்ணத்திலான சஃபாரி சூட் அணிந்து திரைப்படங்களில் பார்ப்பதைவிட அழகனாக அவர் காட்சியளித்தார். அவர் முகத்திலிருந்து பரவும் ஒளிதான் அந்த இரவை பிரகாசமாக்குகிறது என்று எனக்குத் தோன்றியது. ஏதோ ஒரு மாய உலகத்தில் சென்றிறங்கியவனைப்போல் கண்சிமிட்டாமல் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நஸீரின் பின்னால் நின்றுகொண்டு கலாராஜனும் கையசைத்தார். நஸீரின் பக்கம் நிற்கும்போது நானும் ஒரு நட்சத்திரமானேன் என்று அவர் எண்ணியிருப்பார்! எங்கள் அருகில் வந்தபோது வாகனத்தின் வேகம் குறைந்தது. எங்களைச் சுட்டிக்காட்டிக்கொண்டு “இவங்கள்லாம் கலாக்காரன்மார் சாரே... நம்ம யூனியன் மெம்பர்ஸ்” என்று நஸீரிடம் கலாராஜன் சொன்னார். அந்த வாகனத்தில் குதித்து ஏறி நஸீருடன் கைகுலுக்க நான் வலிந்து முயன்றேன். ஆனால், அதற்குள்ளே வாகனம் என்னைக் கடந்துபோனது.

பள்ளிக்கூட மைதானத்தில் நிரம்பிக் குழுமிய மக்களிடம் குறைந்த வார்த்தைகளில் பிரேம் நஸீர் பேசினார். “நாற்பதாண்டு காலம் நீங்கள் என்னை நேசித்தீர்கள். எனக்கு உயிருள்ள காலம்வரை உங்களுக்கு என்னால் முடிந்த அளவுக்குச் சேவைசெய்ய விரும்புகிறேன். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியினூடாக நான் அரசியலுக்கு வந்ததை எதிர்க்கும் பல நண்பர்கள் இருக்கிறார்கள். முற்றிலும் கட்சி அரசியல் மாநிலமான கேரளத்தில், எதாவது ஒரு கட்சிவழியல்லாமல் மக்கள்தொண்டு செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஆதலால், நானும் ஒரு கட்சியில் இருக்கிறேன். அவ்வளவுதான்! கலைஞனுக்கு எந்தக் கட்சியும் கிடையாது. அவன் ஒட்டுமொத்தச் சமூகத்திற்குச் சொந்தமானவன். கலைஞர்களின் இந்த இயக்கத்திற்கு உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்” என்று பேசி முடித்தார். இனி, கலை நிகழ்ச்சிதான். மேடைக்குப் பின்னால் நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு பிரேம் நஸீர் வருகிறார். அவர் புறப்படப்போகிறாராம்! நஸீரின் முன்னால் பாடும் வாய்ப்பு யாருக்குமே இல்லை. எனக்குப் பெரிய ஆசுவாசம். திடீரென்று ஏதோ ஓர் உளத்தூண்டுதலால் நான் பிரேம் நஸீர் முன் சென்று அவரது கால்களைத் தொட்டுக் கும்பிட்டேன்.
கால்தொட்டுக் கும்பிடுகிறவர்கள் கேரளத்தில் இல்லை என்பதனாலோ அக்கூட்டத்திலேயே இளையவன் நான் என்பதனாலோ தெரியவில்லை, பிரேம் நஸீர் என்னைக் கூர்ந்து கவனித்தார். நான் என்ன படிக்கிறேன், வீட்டில் யார்யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டார். கலைத்துறையில் என்ன செய்கிறாய் என்று கேட்டதற்குப் ‘பாட்டுப் பாடுவேன்’ என்று சொன்னேன். “இன்னிக்கு இங்கே பாடுறியா?” என்று கேட்டார். “இல்லை” என்று நான் சொன்னபோது, அவர் கலாராஜனைப் பார்த்து, “என்ன ராஜா? இந்தப் பையனுக்கு ஏன் பாட்டுக் கொடுக்கல?” என்று கேட்டார். மூப்பும் மேடைப் பழக்கமும் உள்ள பாடகர்கள் அதிகம் இருப்பதால் புதியவர்களைத் தவிர்க்க நேர்ந்தது என்றார் கலாராஜன். “அப்போ புதியவர்களுக்கு யாரு வாய்ப்பு தருவாங்க? இன்னிக்கு இந்தப் பையனும் ஒரு பாட்டுப் பாடட்டுமே” என்று சொல்லிவிட்டு நஸீர் புறப்பட்டார். நெருக்கியடிக்கும் கூட்டத்தினூடாக மிகவும் சிரமப்பட்டு அவரை வாகனத்தில் ஏற்றி அனுப்பினார்கள். பிரேம் நஸீர் கிளம்பியதும் நிகழ்ச்சிக்கு வந்த கூட்டம் கலைந்துபோனது.

மீதமிருப்பவர்களின் நில்லாத கூச்சல் குழப்பங்களுக்கிடையே கச்சேரி நடக்கிறது. வேறோர் இசைக்குழுவின் உரிமையாளரான ஜோஸுகுட்டிதான் ஒலியமைப்பு. அவர் வேண்டுமென்றே செய்ததோ என்று சந்தேகம் வருமளவில் அந்நிகழ்ச்சியின் ஒலியமைப்பு படுகேவலமாகயிருந்தது. அத்துடன் கருவி இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் தரக்குறைவும் சேர்ந்தபோது, அந்தக் கச்சேரி பெரும்தோல்வியைத் தழுவும் நிலையாகியது. தூக்குபாலம் மணி என்ற பாடகனையும் என்னையும் தவிர அனைத்துப் பாடகர்களும் இரண்டு மூன்று பாடல்களைப் பாடி முடித்திருந்தனர். அத்தனை பாடல்களையும் பெரும் கூச்சலுடன் கூட்டம் நிராகரித்தது. மணியிடம் பாடுமாறு கலாராஜன் கேட்டார். ஆனால், தனது மைத்துனர் துபாயிலிருந்து கொண்டுவந்த ‘எக்கோ மைக்’ பொருத்தி அதில் மட்டுமே பாடுவேன் என்று மணி அடம்பிடித்தார். “அந்தமாரி கண்ட்றாவிய எல்லாம் என்னோட மிக்ஸர் மேல் தொடக்கூட விடமாட்டேன்” என்று ஒலியமைப்புக்காரர் ஜோஸுகுட்டி திட்டவட்டமாகச் சொன்னாராம்.
‘விளிச்சிட்டும் வருந்நில்ல விருந்நுகாரன் என்டெ விருந்நுகா.......ரன்’ கூட்டத்தின் பெரும் மறுப்புக் கூச்சலுடன் கூட்டார் சுலோச்சனா தேவி பாடிமுடிக்கும்போது, மணியின் எக்கோ மைக்கைக் கையில் வாங்கி அதைப் பரிசோதித்துக்கொண்டு மேடைக்குப் பின்னால் நின்றிருந்தேன். “எல்லாப் பாட்டுக்கும் சகிக்கமுடியாத கூச்சலாச்சே… அடுத்த பாட்டு நீ பாடுறியா?” கலாராஜன் என்னிடம் கேட்கிறார். மணியின் மைக்கைக் கையில் வைத்துக்கொண்டு எதையும் யோசிக்காமல் நடந்து மேடையேறினேன். “டேய்... ஏ மைக்கக் குடுத்திட்டுப் போடா... அது எனக்கு மட்டும் பாடறதுக்குத்தான்டா...” என்று பின்னாலிருந்து மணி கத்துவதைப் பொருட்படுத்தாமல் கூட்டத்திற்குமுன் சென்று நின்றேன். கறுப்புக் கால்சட்டையும் தளர்ந்து தொங்கும் கட்டம்போட்ட சொக்காவும் போட்டுக்கொண்டு, காற்றில் அசையும் தென்னங்கீற்றைப்போல் மெலிந்து ஒடுங்கிப்போன ஒரு பையன் மேடையில் வந்து நிற்பதைப் பார்த்து, ‘இவன் எதுக்கு இங்கே வந்தான்?’ என்று யோசிப்பதுபோல் கூட்டம் சற்றே அமைதியானது.
கூட்டத்தைப் பார்த்ததும் எனது கால்கள் நடுங்கத் தொடங்கின. அதை வெளிக்காட்டாமல் துணிவைக் காட்டிக்கொண்டு, “இதக் கொஞ்சம் கணெக்ட் பண்ணுங்க” என்று சொல்லி அந்த எக்கோ மைக்கின் கம்பிக் கயிற்றை ஒலியமைப்புக் கருவிகளை இயக்கிக்கொண்டு மேடைக்கு முன்னால் அமர்ந்திருந்த ஜோஸுகுட்டியிடம் எறிந்து கொடுத்தேன். அதை இணைப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. மைக்கின் எதிரொலித் திரிப்பை முழுவதுமாகத் திரித்துவைத்துக்கொண்டு அதில் நான் ‘ஹலோ’ என்று சொன்னதும் ‘ஹல ஹல ஹல ஹலொ ஹலொ ஹலோ ஓ ஓ ஓ…’ என்று எதிரொலித்தது. அதுவரைக்கும் அம்மேடையில் கேட்காத அந்த விசித்திர ஒலியைக் கேட்ட கூட்டம், சத்தம்போடுவதை நிறுத்தி கவனிக்கத் தொடங்கியது.
“அன்பானவர்களே… சமீபத்தில் வெளியான புன்னகை மன்னன் எனும் தமிழ்த் திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவன் பாடிய ஒரு பாடலைத்தான் பாடப்போகிறேன். ஆனால், மிகுந்த பதற்றத்துடன்தான் நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். இந்த மேடையில் இதுவரை பாடப்பட்ட எந்தவொரு பாட்டையுமே நீங்கள் ஆதரிக்கவில்லை. அதைரியப்படுத்தவும் ஊக்கமிழக்கவைக்கவும் யாராலும் முடியும். ஆனால், ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் மனது இறைத்தன்மையுடையது. எளிய கலைஞர்களாகிய எங்களை உங்களது சகோதரர்களாக நினைத்து தயவுகூர்ந்து உற்சாகப்படுத்துங்கள். இனிவரும் ஒவ்வொரு பாடலையும் சிறப்பாகப் பாடி உங்களை மகிழ்விக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தாருங்கள்...” என்று ஒரு சிறு பிரசங்கத்தையே நடத்தினேன். ஆனால், அதன் கருத்துகளோ வார்த்தைகளோ எதுவுமே என்னுடையதல்ல.
சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையார் தேவாலயத் திருவிழாவில், தொடுபுழையிலிருந்து வந்த ஓர் இசைக்குழுவை இதைவிட மோசமாக மக்கள் கூச்சலிட்டு அவமதித்தனர். அப்போது, அக்குழுவின் தலைவரான பாதிரியார் மேடைக்கு வந்து, இதே வார்த்தைகளைப் பேசி மன்றாடினார். அத்துடன் கூட்டம் கூச்சலை நிறுத்தி அமைதியானதை மனதில் நினைத்து ஏதோ ஒரு துணிச்சலில் நான் செய்த சாகசச் செயல்தான் அப்பிரசங்கம். கூட்டம் அதை ஏற்றுக்கொண்டது எனப்பட்டது. “நீ பாடுடா செறுக்கா...”, “நீ தைரியம்மா பாடு மகனே...” போன்ற சத்தங்கள் கூட்டத்திலிருந்து எழுந்தன. இசை ஆரம்பித்தது. பாடத் தொடங்கினேன்.
‘மாமாவுக்கு குடும்மா குடும்மா
அடி ஒண்ணே ஒண்ணு,
உன் மாமன் போல வருமா வருமா
என் கண்ணே கண்ணு...’
வேகம்கொண்ட, துள்ளலான அப்பாடலை எப்படியோ ஒருவழியாகப் பாடி முடித்தவுடன் கூட்டம் ஆர்ப்பரித்துக் கைதட்டியது. “இனி எல்லாப் பாட்டும் நீ பாடினாப் போதும்டா மோனே...” என்றெல்லாம் யார்யாரோ சத்தமாகச் சொல்வதைக் கேட்டேன். பின்னர் ஆர்.டி.பர்மனின் ‘சமுந்தர்’, பப்பி லஹிரியின் ‘ஹாலிடே’ என இரண்டு ஹிந்திப் பாடல்களையும் பாடினேன். மணியின் எக்கோ மைக்கின் சிறப்பா அல்லது பாடிய பாடல்களின் துள்ளலும் வேகமுமா, அல்லது சின்னப்பையன் எனும் பரிவினாலா என்று தெரியவில்லை, அன்றைக்கு நான் பாடிய மூன்று பாடல்களுமே நேயர்களுக்குப் பிடித்துப்போயின.
ஹாலிடே பாடும்முன், “இது இந்த மேடையில் எனது கடைசிப்பாடல். எனக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு ஆயிரம் நன்றிகள்” என்றும் தெரிவித்தேன். அது கூட்டத்திற்குச் சம்மதமாகவில்லை எனப்பட்டது. “சாஜீ... நீ இன்னும் ரெண்டு மூண்ணு பாட்டுப் பாடணும்” கலாராஜன் வந்து என்னிடம் சொல்கிறார்! ஒத்திகை பார்த்த பாடல்கள் வேறு எதுவுமில்லை என்று அவரை நினைவுபடுத்தினேன். அப்போது அவர் “அதெல்லாம் விடு. தெரிந்த ஏதாவது பாடு” என்றார். அரைகுறைப் பாடகனான நான் ஒத்திகை பார்க்காமல் பாடினால் என்ன நடக்கும் என்று எனக்கு நன்கு தெரியும். அந்த விஷப் பரீட்சைக்கு முயலாமல் நிகழ்ச்சி முடியும்முன் மேடையின் பின்வாசல் வழியாக அங்கிருந்து கிளம்பினேன். இனி இருட்டில் பதினைந்து மைலுக்குமேல் நடந்தால்தான் வீட்டுக்குப்போக முடியும்.
பேரிகைத் தாளத்தில் பாடித் துதிப்போம்
கூட்டத்தின் கண்ணில்படாமல் மைதானத்தின் ஓரமாக வெளியே நடக்கும்போது, எனக்குப் பரிச்சயமான மூன்று பேர் என்னை முற்றுகையிட்டனர். ஒரு மகாகலைஞன் என்று தன்னை நினைத்துவைத்திருக்கும் போசு ராஜன், ஒரு மரச்சாமான் கடைக்காரர் என்றாலும் தான் ஒரு கிட்டார் கலைஞன் என்று பெருமிதம்கொள்ளும் தச்சில் ஓச்சப்பன், இவர்களுடன் ஆண்ட்டியும் அங்கே நின்றுகொண்டிருந்தார். மூவரும் எனக்கு வாழ்த்துத் தெரிவிக்க நின்றார்களாம். ஆண்ட்டியின் வாயிலிருந்து குமுகுமுவெனப் பிராந்தி வாடை அடித்தது. “எடா செறுக்கா, ஒந்நே ஒந்நே சுறுமா சுறுமா... தமிழு பாட்டு நீ கலக்கியடா... டேஜில் ஏறிவந்நு ஒனக்கு ஒரு கடி தரணும்போல இருந்ததுடா எனக்கு... நீ இப்ப எங்கூட வரணும்... இன்னிக்கு ஒன்னோட எல்லாச் செலவயும் நான்தான் பாப்பேன்.” ஆண்ட்டி போதை மகிழ்ச்சியில் பொங்கிக்கொண்டிருந்தார். பளப்பளா பாலியெஸ்டெர் வேட்டியைக் கட்டி, ஸ்பன் துணியில் தைத்த புள்ளிப்படச் சட்டையின் பொத்தான்களைத் திறந்துவிட்டு அதனூடாக நீளமான தங்கச் சங்கிலி ஒன்றைக் கழுத்தில் மின்னவிட்டிருந்த ஆண்ட்டி, கையில் காசு வைத்திருக்கும் ஒரு கிறிஸ்தவர். ஆன்டனி எனும் அவரது பெயரைச் சுருக்கி ஊரார் அவரை ஆண்ட்டியாக மாற்றினர்.

“ஓம்பாட்டு ஓய்கே.. ஆனா மியூசிக்கும் சௌண்டும் படுமட்டம்” கச்சேரியில் தனக்கு கிட்டார் வாசிக்க வாய்ப்பு தராததன் பொறாமையை ஓச்சப்பன் மறைக்கவில்லை. யானைமிதி அப்பச்சன் எனும் பெந்தகோஸ்தே போதகரின் அடிப்பொடியாக அக்காலத்தில் வாழ்ந்துவந்த போசு ராஜன், “சாஜீ... நீ எங்கூட வாடா... பாஸ்டரும் பாஸ்டரம்மாவும் உனக்காக வெயிட் பண்றாங்க. நீ பாடும்போது அவங்க இந்த வழியா காருல போனாங்க. பாடறது ஏ ஃபிரண்டுன்னு சொன்னப்பொ இங்கே நின்னுக்கிட்டு ஓம்பாட்டக் கேட்டாங்க. ரொம்பப் புடிச்சுப்போச்சு. ஒன்னக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வான்னு சொன்னாங்க”. ஆண்ட்டியை ஒரு வழியாகச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு நான் ராஜனுடன் சென்றேன். இரவில் நிம்மதியாகத் தூங்க ஓரிடம் வேண்டுமே. போகும் வழியில் யானைமிதிப் போதகரின் அருமை பெருமைகளை ராஜன் விரிவாக விளக்கினான். “சாதாரண ஆளில்ல. பாட்டு, கலை, இலக்கியம் எல்லாம் உண்டு. புத்தகமெல்லாம் எழுதியிருக்காரு. மாசம் மாசம் அமேரிக்கா போய் வர்றாரு. ஒனக்கு ஒரு கணெக்சன் கெடக்கட்டும். நல்லது தா”
கறுத்து மெலிந்து முழுதும் மழித்த முகத்துடன் அழகாகத் தோற்றமளித்த போதகரும் வெளுத்துத் தடித்த அவரது மனைவியும் வேறுசில ஆண்களும் பெண்களும் அங்கிருந்தனர். “ஷ்யாஜி பிரதரைப் பத்தி ராஜ்யன் பிரதர் நிரம்பச் சொல்லியிருக்காரு. சாங்ஙு கேட்டோம். நல்ல சிங்ஙிங்ஙு. ரைட்டிங்ஙும் உண்டு இல்ல? நானும் ஒரு புக் ரைட் பண்ணி பப்லிஷ் பண்ணியிருக்கே. போகும்போது தாரேன்..”. இறைச்சியும் மீனுமாகச் சுவையான உணவு கிடைத்தது. உண்டு முடித்து ராஜனும் நானும் வரவேற்பு அறைக்கு வரும்போதும் முன்பு பார்த்தவர்கள் அங்கேயே அமர்ந்திருந்தனர். “ஷ்யாஜி பிரதர் பாடிய அந்தத் தமிழ்ப் பாட்டு கமலாஹாஸன் படத்தில் வந்ததுதானே? வேற எந்தெந்த பாட்டு பாடினீக?” அமிதாப் பச்சன் நடித்த ‘புகார்’ படத்தில் வந்த ‘சமுந்தர்’ பாடினேன் என்று சொன்ன உடன், “நல்ல பாட்டு. அதக் கொஞ்சம் பாடுங்க” என்றார். “அய்யோ.. அது ஹை பிட்ச்சு. இப்பப் பாடமுடியாது” என்று ராஜன் என்னைக் காப்பாற்றினான். போதகர் விட்டபாடில்லை. “அப்போ அமிதாப் பச்சனோட ‘ஷோலே’யில வரும் ‘ஏ தோஸுத்தீ’ பாடுங்க. அது ஈசியான பாட்டு இல்ல? எல்லாரும் பாடலாமே”. இந்தப் பாஸ்டர் சினிமாப் பாட்டு விஷயத்தில் ஒரு மாஸ்டர் என்று நினைத்துக்கொண்டு, நான் ‘ஷோலே’யின் ‘யே தோஸ்தீ’ பாடத் தயாரானேன். உடன் போதகர், “ராஜ்யன் ப்ரதர்... அந்தப் பேரிகைய எடுங்க. அத அடிச்சு நாம எல்லாரும் சேர்ந்து பாடிக் கர்த்தரைத் துதிப்போம்” என்று சொன்னார். எனக்குத் தலை சுற்றியது. பேரிகை அடித்துக்கொண்டு யே தோஸ்தீ! நான் ஒவ்வொரு நாலு வரி பாடும்போதும் உரத்த பேரிகை அவதாளத்துடன் அனைவரும் அதை ஏற்றுப் பாடினர். ஆர்.டி.பர்மனின் ஆத்மா ததும்பும் பாடலை யானைமிதிப் போதகரும் கும்பலும் சேர்ந்து ஒரு பெந்தகோஸ்தே கோஷ்டிகானமாக மாற்றினர்.
அடுத்த நாள் மதியம் அங்கிருந்து புறப்படும்போது, தான் எழுதி வெளியிட்ட சிறு புத்தகத்தை போதகர் எனக்குக் கையொப்பம் போட்டுப் பரிசளித்தார். புத்தகத்தின் பெயர் ‘சினிமா எனும் வெறிக்கூத்து’. இளவயதினர் சினிமா பார்ப்பதனால் உண்டாகும் மோசமான விளைவுகளைப் பற்றியான எச்சரிக்கைகள்!
நேற்று இரவு என்னைவிட சினிமா வெறிகொண்ட ஒருவரைப்போல் பேசிய இவரா இப்புத்தகத்தை எழுதினார்? அல்லது இவர் வயதை எட்டியவர்கள் மட்டும்தான் சினிமா பார்க்க வேண்டும் என்கிறாரா? ஒன்றுமே புரியாமல் அந்தப் புத்தகத்தைப் புரட்டியவாறு சாலையில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று எனக்கு முன்னால் ஆண்ட்டி அவதரித்தார். சுற்றுமுற்றும் பார்த்தேன். நாங்கள் நிற்பது ஹில்டா சொகுசு மதுபான விடுதியின் முன்பக்கம் உள்ள பாதையில். பாரிலிருந்து என்னைப் பார்த்து ஓடிவந்திருக்கிறார் ஆண்ட்டி. “வாடா செறுக்கா... நாம ஒரு சுமால் அடிக்கலாம். செலவெல்லாம் எனது. நேத்தே சொன்னேனே!” ஆண்ட்டி என் கையைப் பிடித்து இழுக்கிறார். அன்றுவரைக்கும் நான் மதுவைத் தொட்டதில்லை. ஆனால், அதைக் குடித்தால் எப்படியிருக்கும் என்று அறிய ஆவல் இருந்தது. ஒருமுறை குடித்துப் பார்க்கலாமா? வருவது வரட்டும். ஆண்ட்டியுடன் நான் அந்த மதுபானக் கடைக்குள் நுழைந்தேன்.
(தொடரும்)