தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

காதல் திருமணம்தான் என் சாய்ஸ். ஆனால்...

காதல் திருமணம்தான் என் சாய்ஸ். ஆனால்...
பிரீமியம் ஸ்டோரி
News
காதல் திருமணம்தான் என் சாய்ஸ். ஆனால்...

சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுமயாஎன் காதல் சொல்ல வந்தேன்

“பெண்களுக்கான தற்காப்புக் கலைகளில், மிகப்பெரிய ஆயுதம் ‘அண்ணா’ என்கிற வார்த்தைதான் என்பார்கள். இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... எனக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும்!’’ - ஓப்பனிங்கிலேயே ரகசியத்தை உடைக்கிறார் சின்னத்திரை ஸ்டார் சுமயா!

‘`என்னுடைய தெளிவான தமிழ் உச்சரிப்பைக் கேட்டுவிட்டு, ஒரு பிரபல டி.வி-யில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரியக் கேட்டார்கள். ஆனால், நிகழ்ச்சியின்போது நான் நெற்றியில் பொட்டு வைத்த நிலையில் தோன்ற வேண்டும். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவள் என்பதால், டி.வி-யில் வருவதற்கே எதிர்ப்பு தெரிவித்த எங்கள் குடும்பத்தினர், பொட்டு வைத்துக்கொள்வதற்குச் சம்மதிக்கவே இல்லை. வேறு வழியில்லாமல், அந்த சேனலின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியிலிருந்து விலக வேண்டிவந்தது’’ என்று தனது பின்னணி குறித்துப் பேசுகிற சுமயா, இப்போது கலைஞர் டி.வி-யில் பிரபலம். இருப்பினும் ஸ்லீவ் லெஸ், ஷார்ட் கட் உடைகளை அணிவதில்லை என்கிறவர், ‘காதல் அனுபவம் பற்றி என்ன சொல்லப் போகிறாரோ?

காதல் திருமணம்தான் என் சாய்ஸ். ஆனால்...

‘`ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை பெண்கள் பள்ளியில்தான் படித்துமுடித்தேன். எல்லா வகுப்பிலும் நான்தான் ஃபர்ஸ்ட். அப்போது படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் இல்லை.
 
கல்லூரி வாழ்க்கை... நானும் இன்ஜினீயரிங் தான் படித்தேன். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கல்லூரிக்குப் போய்வர அதிக நேரம் ஆகும் என்பதால், முதல் வருடம் ஹாஸ்டலில் தங்கி படித்தேன். அப்போது வீட்டுக்குப் பேசுவதற்காக நான் ரிலையன்ஸ் போன் வைத்திருப்பேன். இரவில் அன்லிமிடெட் ஃப்ரீ கால் பண்ணலாம் என்பதால், சீனியர்ஸ் பலரும் அந்த போனை வாங்கிப் பேசுவார்கள். வீட்டுக்குத்தான் பேசுகிறார்கள் என்று நினைத்திருந்தேன். அவர்களோ பாய் ஃப்ரெண்ட்ஸோடு பேசி
யிருக்கிறார்கள் என்பது லேட்டாகத்தான் தெரியவந்தது. அதோடு, ஹாஸ்டல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்!

  இது வேறொரு பிரச்னையையும் எனக்கு ஏற்படுத்தியது. எதிர்முனையில் பேசுகிற மாணவர்களின் செல்போன் திரையில் என் பெயர் வந்ததால், ‘சுமயா என்னிடம் பேசுகிறாள் பார்...’ என்று தன் நண்பர்களிடம் சொல்லிவைக்க... அது தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கிவிட்டது. இந்த அனுபவம் ஆண்களிடமிருந்து தள்ளியே இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை எனக்குள் அதிகப்படுத்திவிட்டது.

ஒரு சீனியர், ‘சுமயா, உனக்கு இன்ட்ரஸ்ட் இருந்தால், நீயும் என்னை லவ் பண்ணு. விருப்பமில்லையென்றால், நோ ப்ராப்ளம். நாளை வேறு யாரும் உன்னை லவ் பண்ணி, அதன்பிறகு  நானும் வந்து என் காதலைச் சொல்ல நேர்ந்தால், `முன்னரே சொல்லியிருக்கக்கூடாதா' என்று நீ கேட்டுவிடும் சூழல் வந்துடும். அதனால்தான் நானே முன்வந்து என் விருப்பத்தைச் சொல்லிவிட்டேன்’ என்று நிறுத்தி நிதானமாகப் பேசி முடித்தார். இப்படியொரு சூழலை எதிர்பாராத நான், ‘அய்யோ அண்ணா... இப்படியெல்லாம் பேசாதீங்கண்ணா. எனக்குப் படிப்பு மேல மட்டும்தான் இன்ட்ரஸ்ட்... ப்ளீஸ் அண்ணா!’ என்று சட்டென்று விலகிவிட்டேன்.

காதல் திருமணம்தான் என் சாய்ஸ். ஆனால்...

இவர் இப்படியென்றால், தடாலடியாகக் காதலைச் சொல்லி கலங்கடிக்கிற நபர்களும் உண்டு. ஒருமுறை காலேஜ் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது, என்னருகே வந்தமர்ந்த நண்பன் திடீரென, ‘சுமயா நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? ஜாலியா இருக்கும்ல...’ என்று பட்டென்று போட்டுடைத்தான். நானும் பதிலுக்கு, ‘அண்ணா... என்னண்ணா பேசுறீங்க... எழுந்திருச்சி போங்கண்ணா...’ என்று சட்டென்று முகம் சுளித்துவிட்டேன்.

உண்மையிலேயே எனக்குப் படிப்பைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் கவனம் இல்லாததால், இதுபோன்ற காதல் அப்ளிகேஷன்களை இரக்கமேயின்றி ரிஜெக்ட் செய்துவிட்டேன். இதன்பிறகு, சிக்கல்களைத் தவிர்க்கும் விதமாக எல்லா ஆண் நண்பர்களையுமே ‘அண்ணா’ என்று அழைக்கப் பழகிக்கொண்டேன். அந்த யுக்தி இப்போது வரை தொடர்கிறது.

அது ஒரு விளம்பரப் பட ஷூட்டிங். அழைத்துப்போக வீட்டுக்கே கார் வந்துவிடும். அந்தக் காரிலேயே டைரக்டரும் வந்துவிடுவார். பொறுமையாகக் காத்திருந்து அழைத்துப் போவார். அரைமணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர், ஜூஸ், பழங்கள் என்று டைரக்டரே நேரில் வந்து, தந்துவிட்டுப் போகுமளவு ராஜஉபசரிப்பு. ஷுட்டிங்கிலும் நான் என்ன பேசுகிறேனோ அதுதான் டயலாக்... எப்படி நடித்தாலும் ஓகே ஆகிவிடும். ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என நான் நினைத்ததுபோலவே ஷூட் முடிந்ததும் தனது காதலைத் தெரிவித்தார் டைரக்டர். ‘ஸாரிண்ணா... எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.

இப்படி, காதலைச் சொல்கிறேன் என்கிற பெயரில், அதீத அன்பும் அக்கறையுமாக நடந்துகொள்பவர்கள்மீது எனக்குப் பெரிதாக ஈடுபாடு வருவதில்லை. இவையெல்லாம் உண்மையான அன்பாக இருக்க முடியுமா என்கிற சந்தேகம்தான் காரணம். மதம், சாதி, படிப்பு, அந்தஸ்து என எல்லாத் தகுதிகளும் கொண்ட ஒருவரைத் தேடிப்பிடித்து, காதல் செய்வதிலும் அர்த்தமே இல்லை. ஏனெனில், அது காதலே இல்லை! 

காதல் திருமணம்தான் என் சாய்ஸ். ஆனால்...

எப்போது, யார் மீது, எந்தச் சூழ்நிலையில் எனக்குக் காதல் எண்ணம் தோன்றும் என்று இதுவரை எனக்குத் தெரியவில்லை. அப்படியோர் அர்த்தமுள்ள சூழ்நிலையைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். அதுவரையில்... இப்படியே மகிழ்ச்சியாக இருந்துவிட்டுப் போகிறேனே..!’’ - என்று சொல்லிச்சிரிக்கிற சுமயாவுக்கு, காதல் பற்றிய புரிதல்... வேற லெவல்!

‘`காதலைச் சொல்லி வருகிற அழைப்புகளை யெல்லாம் இப்படித் தவிர்த்துவருவதாலேயே, நான் ஏதோ துறவு நிலைக்குப் போய்விட்டதாக நினைத்துவிடாதீர்கள். எல்லோரையும்போல் எனக்கும் காதல் மனம் உண்டு. என் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற, நான் தேடுகிற ஆண் இன்னும் என் கண்ணில் படவில்லை. பார்ப்பதற்குப் பாவமாக, அதேநேரம் அழகும் அறிவுமாகப் பக்கத்து வீட்டுப் பையன் லுக்கில் உள்ள மேன்லியான ஆண்களை எனக்குப் பிடிக்கும்.

நீண்டகால காதல்கூட ஏதோவொரு காரணத்தால் ப்ரேக்அப் ஆகிறதென்றால், பரஸ்பர புரிதலுடன் இருவரும் அந்தப் பந்தத்திலிருந்து பிரிந்துவிடுவதுதான் நல்லது. மேலும் மேலும் மனக்கசப்புகளோடு அந்த உறவைத் தொடர்ந்துகொண்டிருப்பதை விடவும், இனிவரும் காலங்களிலாவது அவரவர் பாதையில் மகிழ்ச்சியாகப் பயணிக்க வேண்டுமென்றால், பிரிதலும் நன்றே!

காதல் கைகூடுமா, தோல்வியில் முடியுமா என்ற ஆரூடமெல்லாம் யாருக்கும் முன்னரே தெரிவதில்லைதான். ஆனால், நடைமுறை எதார்த்தத்தை ஓரளவு யூகித்துக்கொள்ள அனைவராலும் முடியும். எனவே, காதலைச் சொல்லும் முன்னரே, ‘வீட்டில் ஒப்புக்கொள்வார்களா, எதிர்ப்பு வருமா...’ என்பதையெல்லாம் நன்றாக யோசித்து நிதான மாக முடிவெடுத்து, காதலைத் தெரிவிப்பதுதான் நல்லது. காதலைச் சொல்லிவிட்டு, அப்புறம் வருகிற சிக்கல்களையெல்லாம் எதிர்கொள்ள முடியாமல் ஓடி ஒளிவதென்பது சரியான நடைமுறையாக இருக்காது.

காதல் திருமணம்தான் என் சாய்ஸ். ஆனால்...

‘முயற்சி செய்வோம்... முடிந்தால், சேர்ந்துவாழ்வோம். இல்லையென்றால், பிரிந்துவிடுவோம்’ என்ற உறுதியில்லாத நிலைப்பாடு காதலுக்கு நல்லதல்ல. இந்த மனநிலை இருப்பதால்தான், என் திருமண முடிவைக்கூட நான் இப்போதும் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறேன்...’’ என்று சிறியதொரு இடைவெளி விட்டவர்,  இன்னொரு காரணத்தையும் சொல்லத் தொடங்கினார்.

‘`முன்பின் யாரென்றே தெரியாத ஓர் ஆணை, வீட்டில் பேசி முடித்து, திருமணம் செய்துகொண்டு வாழும் வாழ்க்கையில்... என்ன காதல், அந்நியோன்யம், புரிதல் இருக்க முடியும்? ஆனால், எனக்குப் பிடித்துவிட்டது என்பதாலேயே என் குடும்பத்தினரின் விருப்பத்துக்கு மாறாக ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வதிலும் எனக்கு ஒப்புதல் இல்லை. எனக்கும் பிடிக்க வேண்டும்... அந்தக் காதலுக்கு என் குடும்பத்தினரின் ஒப்புதலையும் பெற வேண்டும்.

நான் எல்லா மதப் பண்டிகைகளின் அழகையும் ரசிப்பவள். எனக்குக் கணவராக வரப்போகிறவர் இன்னொரு மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால், ரம்ஜான் மட்டுமல்லாமல் அவரது வீட்டுப் பண்டிகையையும் சேர்த்துக் கொண்டாடுகிற வாய்ப்பு எனக்குக் கிடைக்குமே!

இப்படி அந்தப் புதிய உறவுச் சூழலே அதுவரை இல்லாத ஒரு புது உலகை எனக்குக் கொடுக்குமல்லவா? அந்த மகிழ்ச்சியை நான் ஏன் தவிர்க்க வேண்டும்? அதனால், நிச்சயம் நான் காதல் திருமணம்தான் செய்துகொள்வேன்! ஆனால், அது யார், எப்போது என்பதெல்லாம் எனக்கே தெரியவில்லை!’’ - வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் சுமயா!

-த.கதிரவன் 

படங்கள் : ப.சரவணகுமார்