
அவள் அரங்கம்: எல்லாருக்கும் காதல் வரணும்! - குஷ்பு

சிறிய வயதிலேயே நடிக்க வந்ததில் வருத்தம் உண்டா?
புஷ்பமேரி, அரவக்குறிச்சி
நான் ரொம்ப நல்லா படிப்பேன். படிப்பை முடிக்க முடியலையேங்கிற வருத்தம் இன்னிக்கும் உண்டு. எட்டு வயசுல நடிக்க வந்துட்டேன். ஊர் ஊரா டிராவல் பண்ணலாமேனு ஏர் ஹோஸ்டஸ் ஆகணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். என்னுடைய டிராவல் ஆர்வத்துக்குக்கூட அதுதான் அடிப்படையா இருக்கும்னு நினைக்கிறேன்.
காதல் பற்றி உங்கள் எண்ணம்?
ப.தங்கமலர், தேனி
எல்லாருக்கும் காதல் வரணும். அதை அனுபவிக்கணும், தோல்வியடையணும், மறுபடி காதல் வரணும். அப்புறம் செட்டிலாகணும்.
‘தாலி’ குறித்து எழுந்த விமர்சனங்கள் மற்றும் வழக்குகளைச் சந்தித்து வளர்ந்த நீங்கள், பெண்ணிய வாதியாகப் பெண்கள் உலகை எப்படிப் பார்க்கிறீர்கள்? இன்னும் என்ன மாற்றங்கள் வர வேண்டும் இங்கே?
கே.கற்பகம், திருச்சி
தாலி குறித்து நான் எதுவுமே பேசினதில்லை. மாற்றம் என்பது ஒவ்வொரு பெண்ணிடமிருந்தும்தான் வரணும். `நீ மாறணும்'னு நான் வெளியிலேருந்து சொல்ல முடியாது. ‘ஏபிங் தி வெஸ்ட்’ (Aping the West)னு சொல்வாங்க. மேற்கத்திய கலாசாரத்தைப் பார்த்துட்டு நாம வளர்ந்துட் டோம்னு சொல்றதைவிட மனரீதியா ஒவ்வொரு பெண்ணும் எவ்வளவு முன்னேறியிருக்காங்க என்பதுதான் முக்கியம். அதை அந்தந்தப் பெண்தான் முடிவு செய்யணும்.

நீங்கள் நடிக்க வந்தபோது உங்களுடைய கலரும் உடலும் பாசிட்டிவாக இருந்ததா? நெகட்டிவாக உணர்ந்தீர்களா?
மகாலட்சுமி சுந்தர், தாராபுரம்
ரெண்டுமே பெரிய ப்ளஸ்ஸா இருந்திருக்கு. எந்தளவுக்குனு சொல்றேன். அந்த டைம்ல யாராவது கொஞ்சம் கலராவோ, இட்லி மாதிரியோ இருந்தா, அவங்களை `எங்க வீட்டு குஷ்பு'னு சொல்லியிருக்காங்க. என் பீரியட்ல சைஸ் ஸீரோ பிரஷர் இல்லை. தமிழ்நாட்டுல அதை எந்தக் காலத்துலயும் நான் பார்த்ததுமில்லை. இன்னிக்கு மும்பை நடிகைகளைப் பார்த்துட்டு தமிழ் நடிகைகள் ஒல்லியா இருக்கணும்... உடம்பைக் கச்சிதமா மெயின்டெயின் பண்ணணும்னு நினைக்கிறாங்க. நானெல்லாம் இளைக்கணும்னு யோசிச்சதுகூட இல்லை.
இந்தி சினிமாவில் பிரபலமாக முடியாத வருத்தமுண்டா?
டி.ஆனந்தவள்ளி, சென்னை-15
நிச்சயமா இல்லை. தமிழ்நாட்டு மக்கள் எனக்குக் கொடுத்த ஆதரவு நிச்சயம் வேற எங்கேயும் கிடைச்சிருக்காது.
* மகன் இல்லாத வருத்தம் உண்டா?
* 30 வருட தமிழ்நாட்டு வாழ்க்கை எப்படி இருக்கிறது?
* கமல், ரஜினி இருவரில் உங்களுக்குப் பொருத்தமான ஹீரோ யார்?
* ஸ்ட்ரெஸ் வரும்போது என்ன செய்வீர்கள்?
அடுத்த இதழில் தொடர்கிறார் குஷ்பு
ஆர்.வைதேகி, படம் : க.பாலாஜி