
இணையத்திரை

திரைப்படங்கள் என்றில்லாமல் வெப்சீரிஸ்களும் களத்தில் குதித்து ரசிகர்களின் ரசனைக்குத் தீனிபோடும் காலம் இது. வரை யறுக்கப்பட்ட எல்லைகள் இல்லாததால் விதவிதமான சீரிஸ்கள் வருகின்றன.
ஒரு கான்செப்டைப் பிடித்து அதற்கேற்றவாறு தொடராகவும் இருக்கலாம்; அந்த கான்செப்ட்டை ஒட்டி, தனித்தனி எபிசோடுகளாகவும் இருக்கலாம் என்பதே சீரிஸின் சிறப்பு. பிற மொழிகளைப் போலவே தமிழிலும் சீரிஸ்களை கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படி VIU அப்ளிகேஷனில் வெளியான ஒரு சீரிஸ்தான் `Behind Closed Doors.’

இரண்டு கதாபாத்திரங்கள்; ஒரு நிகழ்வு. அந்நிகழ்வை ஒட்டிய உரையாடல். இப்படி சுவாரஸ்யமான கதையமைப்பில் 12 எபிசோடுகளோடு வந்திருக்கிறது இந்த சீரிஸ். வெவ்வேறு கதைகள். எல்லாமே மூடப்பட்ட கதவுகளுப் பின்னே நிகழ்வன.
ஒரே ஒரு எபிசோடில் மட்டும் மூன்றாவது கதாபாத்திரம் மிகச் சொற்ப நொடிகளுக்கு வருகிறது. மற்றவற்றில் பிற கதாபாத்திரங்களின் குரல் திரைக்கு வெளியில் இருந்து ஒலிக்கின்றனவே தவிர, திரைக்கு உள்ளே வரவில்லை. எல்லாமே 12லிருந்து 20 நிமிடங்கள் மட்டுமே உள்ள குட்டிக் குட்டி எபிசோடுகள்... இப்படி ரசிகர்களின் கவனத்தைப் பெறும் அம்சங்கள் நிறைய. 12 எபிசோடுகளும் என்னென்ன என்று சுருக்கமாகப் பார்ப்போம்:
Split: மும்பையில் காதலன்; சென்னையில் காதலி. வீடியோ காலில் இருவரும் பேசிப் பகிர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதை ஒட்டிய உரையாடல்கள்.
Cantilever: இரவு 11.45. இன்னும் 15 நிமிடங்களில் ஆதியின் பெஸ்ட் ஃப்ரெண்ட் ப்ரியங்காவுக்குப் பிறந்தநாள். ப்ரியங்காவின் காதலன் சித்தார்த்துடன் சேர்ந்து அவளை சர்ப்ரைஸ் செய்ய அறையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறான் ஆதி. அப்போது ஆதிக்கும் சித்தார்த்துக்கும் நடக்கும் உரையாடல் மெள்ள மெள்ள சண்டையாக மாறுகிறது.

4 rounds: திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒருவன், தன் வருங்கால மாமனாருடன் சரக்கடிக்கும் ஓர் இரவும், அதை ஒட்டிய உரையாடல்களும்.
Card Boards: விவாகரத்து முடிவாகி, வீட்டின் பொருள்களைப் பிரித்துக்கொள்ள வீட்டுக்குள் கடைசியாய் சந்திக்கும் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் உரையாடல்.
Honey mooners: ஹனிமூனுக்குக் கிளம்ப வேண்டிய விமானம் தாமதம். ஓரிரவு அறை எடுத்துத் தங்கும் புதுமணத்தம்பதிகளுக்கு இடையேயான உரையாடல்கள்.
Wisdom Parte: காதல் தோல்வியில் அழுதுகொண்டிருக்கும் மகனுக்கும் அம்மாவுக்குமான உரையாடல்.
மங்களகரம்: இன்னும் கொஞ்சநேரத்தில் கணவனின் அம்மா வீட்டுக்கு வரப்போகிறார். மனைவியோ தாலியை எங்கே வைத்தேன் என்று தேடிக்கொண்டிருக்கிறாள். டென்ஷனான கணவன், மனைவியைத் திட்டிக்கொண்டே என்ன செய்யலாம் என்று ஒரு ஐடியா செய்கிறான். என்ன ஆகிறது என்பதை அவர்களின் சூடான விவாதங்களுக்கிடையே காட்சிப்படுத்தி யிருக்கிறார்கள்.

கண்ணாடிக் கதவிற்குள்ளே: பெட்ரோல் பங்கில் பணிபுரியும் காதலன். கஃபே ஒன்றில் வெய்ட்டராகப் பணிபுரியும் அவனின் - அவனை விட சம்பளம் அதிகம் வாங்கும் - காதலி. கஃபே மூடும் முன் இருவரும் சந்திக்கும் ஓர் இரவு.
இசையில் தொடங்குதம்மா: பேச்சிலர் பார்ட்டியில் எல்லாரும் ‘மட்டை’யாகிவிட திருமணம் ஆகப்போகும் பெண்ணும், இசையார்வம் உள்ள இளைஞனும் அந்த இரவைப் பாடலும் பேச்சுமாகக் கடக்கிறார்கள்.
In Pursuit of: நான்கு வருடக் காதல். வெளிநாட்டிலிருந்து வரும் காதலனை காமமும் காதலுமாகத் தன் அறையில் சந்திக்கிறாள் காதலி. ஏதோ ஒரு தயக்கத்துடன் காதலன். இருவருக்குமான சில நிமிடங்கள்.
Firs t Kiss: டீனேஜ் மாணவன் ஒருவனின் முதல் முத்த முயற்சி.
Urgent one Bathroom: நண்பர்கள் எல்லாரும் இல்லாத ஓர் நாளில் காதலியை அழைக்கிறான் காதலன். அவளோ வரும்போதே சிறுநீர் கழிக்கும் அவசரத்தில் வருகிறாள். இவன் அறையின் பாத்ரூமில் எதுவும் ஒழுங்காக இல்லை! சண்டை வலுக்க... ஒரு ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்புக்கு என்னவெல்லாம் வேண்டும் என்பதை இருவரின் உரையாடல் மூலம் கடத்துகிறார்கள்.

இப்படி பன்னிரண்டும் வெவ்வேறு களங்கள்தாம். ஆனால் இவற்றை எழுதிய எழுத்தாளர்கள் தங்கள் வசனங்களில், சூழலை அவ்வளவு பட்டை தீட்டியிருக்கிறார்கள். `அட... நாம இப்படித்தான் பேசியிருப்போம்ல’ என்று எல்லாவற்றிலும் நம்மை ஏதோ ஒரு சூழலுடன் பொருந்திப்போகச் செய்வதே இந்தக் குறும்படங்களின் சிறப்பு.
நவீன் குமார் ஐந்து எபிசோடுகளையும், பார்கவ் ப்ரசாத் நான்கையும், ராகேஷ் லெனின் மூன்றையும் இயக்கியிருக்கிறார்கள். இவர்களோடு இணைந்து ராஜிவ் ராஜாராம், சம்யுக்தா, சுகன்யா உமேஷ், பாலகுமாரன், ஹரீஷ் ராஜகோபால், ராஜகோபால் கணேசன் என இந்த எபிசோடுகளின் எழுத்துக்குப் பங்களித்தவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
பெரும்பாலும் முற்போக்குக் கருத்துகளை ஆதரிக்கிற குறும்படங்களே. எதையும் புனித பிம்பத்துக்குள் கொண்டு சென்று அறிவுரைகள் சொல்லி நம்மை சோதிப்பதில்லை. அதேபோல, இவற்றில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவருமே சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் பூஜா தேவரையா பங்காற்றியிருக்கிறார் என்கிறது டைட்டில் கார்டு. அவருக்கும் ஸ்பெஷல் மென்ஷன்! குறிப்பாக `கண்ணாடிக் கதவிற்குள்ளே’ என்று காதலை அவ்வளவு அழகியலோடு சொல்லும் படத்தில் அனுஷா பிரபு, ராஜகோபாலன் கணேசன் இருவரின் தேர்வும் நடிப்பும் பிரமாதம். எல்லா எபிசோடுகளிலும், இசையும் வசனங்களும் மிகப் பெரும் பங்காற்றியிருக்கின்றன.
பெரிய நடிகர்கள், பிரமாண்ட செட்டுகள், பேர்பெற்ற டெக்னிஷியன்கள் என்றெல்லாம் இல்லாமல், எளிமையாகவும் அழகாகவும் மிகக் குறைந்த நேரத்தில் ரசிகனைக் கவரமுடியும் என்பதற்கு Behind Closed Doors ஒரு நல்ல எடுத்துக்காட்டு!
பரிசல் கிருஷ்ணா