
மும்மூர்த்திகளின் மேடை!
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளைப் பற்றி சீதா ரவி தனித்தனி சிறு கதைகள் தமிழில் எழுதினார். இவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் நீதிபதி (ஓய்வு) பிரபா ஸ்ரீதேவன். இப்போது மூன்றையும் இணைத்து மெட்ராஸ் பிளேயர்ஸ் பேனரில் 95 நிமிட ஆங்கில நாடகமாக மேடையேற்றி வருகிறார் பி.சி.ராமகிருஷ்ணா. Trinity என்பது தலைப்பு.

எபிசோடு ஒன்று
முத்துசுவாமி தீட்சிதரின் வருகைக்காக மாயூரத்தில் சிலர் காத்திருக்கிறார்கள். அரங்கத்தின் வழியே தன் சீடர்களுடன் டிராமடிக்காக மேடைக்கு தீட்சிதர், அதாவது வித்வான் விஜயசிவா, வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஊர் மக்களிடம் நலம் விசாரிக்கிறார். இங்கு பிரபலமான மயூரநாத கோயிலில் குடி கொண்டிருக்கும் அபயாம்பிகைமீது தான் இயற்றியுள்ள பாடலை உணர்ச்சி கொப்புளிக்கப் பாடுகிறார். உருவத்திலும் உடல்மொழியிலும் தீட்சிதராகவே மாறிவிடுகிறார் இவர்! பாடும்போது சீடர்களும் உடன் இணைந்து பாட, அமர்க்களம். அட, சீடர்களில் ஒருவராக பாடகர் பாலக்காடு ராம்பிரசாத்.

இன்னொரு காட்சியில் தீட்சிதர் உறங்கிக் கொண்டிருக்கிறார். மேடையின் மறுபக்கம் சீடர்கள் தங்கள் குருநாதர் இயற்றிய பாடல்கள் சிலவற்றை சிலாகித்து ஆளுக்கு சிலவரிகளை மெட்லி ஸ்டைலில் பாடிக்கொண்டிருக்க, திடீரென்று விழிக்கும் தீட்சிதர் ஒரு பாடலின் போது நடுவே புகுந்து பாடி ‘வாவ்’ சொல்ல வைக்கிறார்.
எபிசோடு இரண்டு
“எங்க வீட்டுக்காரர் விடியற்காலை கிளம்பிப் போனா ராத்திரி எப்போ வீடு திரும்புவார்னே தெரியாது. சில சமயம் மறுநாள் காலைகூட வருவதுண்டு...” என்று சொல்லி, பெருமூச்சு விடும் குடும்பத் தலைவிகள் இன்று நிறையவே இருக்கிறார்கள். சியாமா சாஸ்திரியின் மனைவி லலிதாவுக்கும் அதே நிலைமைதான். ஆனால் லலிதா அலுத்துக்கொள்வதில்லை. காலையில் புறப்பட்டுப் போன கணவர் திரும்பி வரும்வரை கொலைப்பட்டினி கிடக்கும் பத்தினி!

மேடையில் லலிதாவை உயிருடன் நடமாடச் செய்திருக்கும் பாடகி காயத்ரி வெங்கட்ராகவன், ஏற்ற பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். கணவர் சியாமா சாஸ்திரி இயற்றியிருக்கும் எல்லாப் பாடல்களுமே இவருக்கு அத்துப்படி! அவற்றைப் பாடிக்கொண்டே (மேடையில் லைவ்!) தம்புராவைத் துடைத்து, அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்து, பூஜைப் பொருள்களை ஒழுங்குபடுத்தி வைத்து, வெற்றிலைகளைச் சுத்தப்படுத்தி வைத்து, கலக்குகிறார் காயத்ரி. சியாமா சாஸ்திரியின் யதுகுலகாம்போதி ராக ஸ்வரஜதியை காயத்ரி வெங்கட்ராகவன் காஷுவலாகப் பாடுவது ஜோர்!
நாடகத்தில் இந்தப் பகுதி ஒன் வுமன் ஷோ! “மேடம்... எங்க புது நாடகத்துல ஒரு நல்ல ரோல் இருக்கு... நீங்க பண்ணா நல்லா இருக்கும்... ப்ளீஸ் மேடம்...” என்று நிறைய நாடக இயக்குநர்கள் காயத்ரி வெங்கட்ராகவனை அணுகுவார்கள்!
எபிசோடு மூன்று
தியாகராஜரின் மகள் சீதம்மா, வீட்டு ஹாலில் தோழியுடன் தட்டாமாலை சுற்றிக் கொண்டிருக்கிறாள். இவளுக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. ஒரு மாதிரியான சந்தோஷ மனநிலை. கூடவே, அப்பாவையும், அவர் பூஜிக்கும் ராமனையும் பிரிய வேண்டுமே என்கிற ஏக்கம்.

சீடர் வேங்கடரமண பாகவதருடன் வருகிறார் தியாகராஜர். வேடமேற்பவர், பாடகர் டாக்டர் எஸ்.சுந்தர் அடாணா ராகத்தில் தான் இயற்றிய ‘ஏல நீ தயராது’ கீர்த்தனையைப் பாடுகிறார். மகளின் சந்தேகங்களையெல்லாம் தீர்த்து வைக்கிறார். முக்கியமாக, ஏன் அனைத்துப் பாடல்களிலும் ‘தியாகராஜர்’ என்ற முத்திரையை அப்பா வைக்கிறார் என்ற கேள்வி.

“சீதம்மா... நான் பாடற எல்லாக் கீர்த்தனைகளுக்கும் ராமன்தான் காரணம்னு இந்த உலகத்துக்கே தெரியும். அதனால பாட்டுல எதாவது குற்றம் குறை வந்துட்டா ராமனை யாரும் தப்பு சொல்லிடக் கூடாது இல்லையா? அதனால்தான் என் பெயரையே முத்திரையா வச்சு பாடறேன்...” - தியாகராஜரின் நெத்தியடி பதில் இது!
தமிழ் புரிந்துகொள்ள முடியாத, ஆங்கிலம் மட்டுமே தெரிந்த ‘டமில்’ வீட்டு இளசுகள் இந்நாடகத்தில் மும்மூர்த்திகள் வரலாறு தெரிந்துகொள்ள முடியாது. காரணம், இது ‘பயோபிக்’ கிடையாது!
பின்குறிப்பு : இந்த ஆங்கில நாடகம் ஒரு நடை அமெரிக்கா சென்று வரலாம். இதில் நடிக்கும் பாடகர்களுக்கெல்லாம் பத்து வருட அமெரிக்க விசா நிச்சயம் இருக்கும்!
வீயெஸ்வி