சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சர்வம் தாளமயம் - சினிமா விமர்சனம்

சர்வம் தாளமயம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வம் தாளமயம் - சினிமா விமர்சனம்

சர்வம் தாளமயம் - சினிமா விமர்சனம்

சைக்கு பேதங்கள் இல்லை என்பது ‘சர்வம் தாளமயம்’ சொல்லும் சங்கதி.

மிருதங்கம் செய்யும்  தஞ்சை ஜான்சனின் ஒரே மகன் பீட்டர் ஜான்சன். பீட்டருக்கு நண்பர்களும் விஜய் சினிமாவும்தான் ஹார்ட் பீட். சினிமாவின் வெளிச்சம் விரும்பாத, கர்னாடக இசைக் கச்சேரிகளில் மட்டும் மிருதங்க வித்தை காட்டும் வேம்பு ஐயரிடம் சீடனாகச் சேர பீட்டர் ஜான்சன் ஆர்வம்கொள்ள, அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார் வேம்பு ஐயரின் பிரதான சிஷ்யர்  மணி.  பழி ஒரு பக்கமும், சாதிய அடையாளம் மறுபக்கமும் பீட்டரை அழுத்த, எப்படி நீரில் அழுத்திய பந்தாய் பீறிட்டு எழுகிறான்... சாதிக்கிறான் என்பதே கதை! 

சர்வம் தாளமயம் - சினிமா விமர்சனம்

பீட்டர் ஜான்சனாக ஜி.வி.பிரகாஷ். படத்துக்காக மிருதங்கம் கற்றுக்கொண்டதில் ஆரம்பித்து ‘பீட்டர் பீட்டை ஏத்து’ என தர லோக்கல் கேரக்டரில் நடித்ததுவரை வெரைட்டியில் பின்னுகிறார்.

சர்வம் தாளமயம் - சினிமா விமர்சனம்



படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் வேம்பு ஐயராக நடித்திருக்கும் நெடுமுடி வேணு. “என்னடா அவசரம்? ரயிலைப் பிடிக்கப் போறியா..? என்ஜின் டிரைவரா ஆகணுமா?” என தாளம் தப்பும் பிரகாஷைக் கிண்டல் செய்யும்போதும், பிறகு, “இப்ப டிரெய்ன் ஓடுறதில்ல... மெதுவா ஸ்டேஷன்ல போய் நிக்கிது” என பின்னால் மனதாரப் பாராட்டும்போதும் நம்மை அறியாமல் சிரிக்க வைக்கிறார்.

வறுமை தின்ற கெச்சல் உடம்புடன் கனவைத் தொலைத்துவிட்டு இருமலும் பொருமலுமாய் வாழும் அப்பாவாக குமாரவேல் கச்சிதம். பொறாமையையும் வஞ்சகத்தையும் நன்றாகவே வெளிப்படுத்தி யிருக்கிறார் வினீத். கனவைத் துரத்த பீட்டருக்கு சூடு வைக்கும் காதல் மீட்டராய் அபர்ணா பாலமுரளி!

டிடி, பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், உன்னி கிருஷ்ணன், சிக்கில் குருசரண், கார்த்திக் என அசலான  கேரக்டர்கள் அவர்களாகவே வந்துபோகிறார்கள். இவர்கள் வரும் ரியாலிட்டி ஷோ காட்சிகள் சுவாரஸ்யமும் அயர்ச்சியுமாய். கதைக்குப் பின்னணி இசையில் உயிரூட்டியிருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ரவியாதவ்வின் ஒளிப்பதிவும் ஆண்டனியின் எடிட்டிங்கும் ‘குறையொன்றுமில்லை’ ரகம்!

நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் ராஜீவ் மேனன், ஆழமான ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்தது பாராட்டத்தகுந்தது. ஆனால், ஒரு தனியார் மியூசிக் ஷோவில் ஜெயிப்பதே வெற்றி என்றாகிடுமா என்ற கேள்வி எழுகிறது. ‘இசைக்கு சாதியில்லை’ என்று சொல்ல முயலும் படத்தில் ‘இசையைத் தீர்மானிப்பதே குறிப்பிட்ட சாதிதான்’, ‘இந்த சங்கீதம்தான் கிளாசிக்’ என்பது அடிப்படை நோக்கத்துக்கு எதிரான நெருடல்.

இசை என்பது எந்தவொரு குறிப்பிட்ட சாதிக்கும் சொந்தமான கிணற்று நீர் இல்லை. அருவியாக, நதியாக, எல்லோருக்குமான பாதையில் சென்று சமுத்திரத்தில் கலக்க வேண்டிய ஒன்று என்பதை இன்னும் கருத்தியல் தெளிவோடு சொல்லியி ருக்கலாம் என்றாலும் அந்த முயற்சியும் நோக்கமும் வரவேற்கத்தக்கவை.

- விகடன் விமர்சனக் குழு