
விக்ரம் நடிக்க கமல் போட்ட கண்டிஷன்! - ‘கடாரம் கொண்டான்’ சீக்ரெட்...
`தூங்காவனம்’ படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா, விக்ரமை வைத்து `கடாரம் கொண்டான்’ படத்தை எடுத்திருக்கிறார். டப்பிங் வேலைகளில் பிஸியாக இருந்தவரைச் சந்தித்துப் பேசினேன்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ்ல விக்ரம். எப்படி சாத்தியமானது?
“இது சந்திரஹாசன் சாரோட டிரீம் புராஜெக்ட். `தூங்காவனம்’ படம் முடிஞ்சதுக்கு அப்புறம் உடனடியா எனக்கு இந்தப் பட வாய்ப்பைக் கொடுத்தாங்க. முதலில் கமல் சாரை ஹீரோவா வெச்சு ஆரம்பிக்க வேண்டியது. சில காரணங்கள், கமல் சார் அரசியலில் இறங்கியது ஆகியவற்றால் அது நிறைவேறலை. நானும் சந்திரஹாசன் சாரும் சேர்ந்துதான் விக்ரம் சாரை நடிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணினோம். ராஜ்கமல் ஃபிலிம்ஸில் கமல் சாரைத் தவிர வெளியில இருந்து நடிச்ச ஹீரோக்களில் விக்ரம் சார் நாலாவது ஆள். இதுக்கு முன்னாடி நாசர் சார், சத்யராஜ் சார், மாதவன் நடிச்சிருக்காங்க.
விக்ரம் சாரை நடிக்க வைக்கலாம்னு சொன்னதும், ஒரே ஒரு கண்டிஷனை மட்டும் கமல் சார் சொன்னார். ‘இது கமல்ஹாசன் தயாரிக்கிற படம்கிறதனால எந்த அட்வான்டேஜும் எடுத்துக்காம, விக்ரம்கிட்ட முறைப்படி அப்ரோச் பண்ணுங்க’ன்னு சொன்னார். அதுக்கப்புறம் நான் விக்ரம் சாரிடம் கதை சொன்னதும் அவருக்குக் கதையும் பிடித்தது. கமல் சார் நடிக்க வேண்டிய கேரக்டர் என்ற காரணமும் பிடித்தது.’’
அரசியல் வேலைகளில் பிஸியா இருக்கிற கமல், இந்தப் படத்தைப் பற்றி உங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுப்பாரா..?

``முதல் நாள் ஷூட்டிங்கிலிருந்து இன்னைக்கு என்ன சீன் டப்பிங் போகுதுங்கிற வரைக்கும் அவருக்கு அப்டேட் போயிடும். எல்லாமே மெயில் கம்யூனிகேசன்தான். அவர் அந்த மெயில் எல்லாம் பார்க்க மாட்டார்னு நாம நினைக்கவே முடியாது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிற எந்தப் படமும் ஒரு நாளுக்கு 10 மணி நேரத்துக்கு மேல ஷூட் பண்ணக்கூடாதுங்கிறது கமல் சாரோட ரூல். ஆனால், இந்தப் படத்துக்கு ஒரு நாள் 15 மணி நேரம் ஷூட் பண்ணினோம். மெயில்ல பார்த்துட்டு போன் பண்ணினார். `ஏன் ராஜேஷ் 15 மணி நேரம் ஷூட் பண்றீங்க? நடிக்கிறவங்களுக்கும் ப்ரஷர்; டெக்னீஷியன்ஸும் டயர்டு ஆகிடுவாங்கல்ல’ன்னு கேட்டார். `இல்ல சார், ஒரு நாள் மட்டும் அவ்வளவு நேரம் போயிடுச்சு. இனிமேல் அப்படிப் போகாம பார்த்துக்கிறேன்’னு சொன்னேன். எவ்வளவு பிஸியா இருந்தாலும், எல்லா விஷயத்தைப் பற்றியும் தெரிஞ்சுப்பார்.’’
விக்ரமுடன் பணிசெய்த அனுபவம்..?
“நாம ஒரு சீனைச் சொல்லும்போதே அவருக்குத் தெரிஞ்சிடும், இதில் என்ன பண்ணணும்னு. அதுமட்டுமல்லாம ராஜ்கமல் ஃபிலிம்ஸோட வொர்க்கிங் ஸ்டைலே வேற. ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி முக்கியமான கேரக்டர்களில் நடிக்கிறவங்களை ஒண்ணா வெச்சு ஒரு முறை கதை சொல்லுவோம். அப்போ அவங்களுக்கு எதாவது சந்தேகம் வந்தா கேட்பாங்க. விக்ரம் சார் இதுக்கு ஓகே சொல்லுவாரான்னு தெரியலைன்னு அவரோட வொர்க்கிங் ஸ்டைல் எப்படியிருக்கும்னு டைரக்டர் விஜய்கிட்ட கேட்டேன். அவர் பாசிட்டிவ்வா நிறைய விஷயங்கள் சொன்னார். அவர் சொன்னதைவிட, பழகுறதுக்கு ரொம்பவே எளிமையான மனிதரா இருந்தார். எல்லா டிஸ்கஷனுக்கும் வந்தார். ஸ்க்ரிப்ட்டுக்காக அவர் சில விஷயங்கள் மெனக்கெட்டார். படம் முழுக்க அவர் செம ஸ்டைலிஷா இருப்பார்.’’

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறதனால அக்ஷராவை நடிக்க வெச்சீங்களா..?
``இந்தப் படத்துக்கு ஏன் அக்ஷரான்னு கேட்கிற கேள்விக்கு நான் பதில் சொல்றதைவிட, படம் பதில் சொல்றதுதான் நியாயம். படத்தைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும்.’’
படத்தில் விக்ரமுக்கும் அக்ஷராவுக்கும் என்ன உறவு?
``இரண்டு வெவ்வேறு தளங்களில் இருக்கிற விக்ரமுக்கும் அக்ஷராவுக்கும் நடக்கிற ஒரு சம்பவத்தால இந்த ரெண்டு பேரோட வாழ்க்கையும் அவங்களுக்குப் பிடிக்காமலே ஒண்ணாகிடுது. அதுக்கப்புறம் அந்த வாழ்க்கையையிலேயே அவங்க தொடர்ந்து போறாங்களா, இல்ல வெளியில வராங்களா என்பதுதான் கதை.
அக்ஷராவுக்கு ஜோடியா நாசர் சாரோட பையன் அபி நடிச்சிருக்கார். முதலில் இந்த ரோலுக்காக நாங்க பல பேரை ஆடிஷன் பண்ணினோம். வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் ஆள்களை வரவெச்சு ஆடிஷன் பண்ணினோம். யாருமே செட்டாகலை. ஒரு நாள் கமல் சார், ‘நம்ம நாசரோட பையன் அபி இந்தக் கேரக்டருக்கு செட் ஆவார்னு தோணுது. ஆடிஷன் பண்ணிப் பார்’னு சொன்னார். அப்புறம் அவரை வெச்சு ஒரு வாரம் ஆடிஷன் பண்ணினோம். அப்புறம் ஒரு வொர்க் ஷாப் வெச்சு அவரை நடிக்க வெச்சோம்.’’
வொர்க் ஷாப்பா..?
’’ஆமா. விக்ரம் சாரைத் தவிர மற்ற கேரக்டரில் நடிக்கிற வங்களுக்கு ஒரு வொர்க் ஷாப் வெச்சோம். ஒரு வாரம் நடந்துச்சு. நடிகை பூஜா குமார்தான் இந்த வொர்க் ஷாப்பை நடத்தினாங்க. கடைசி இரண்டு நாள் மட்டும் கமல் சார் வந்து க்ளாஸ் எடுத்தார்.’’

டெக்னிக்கல் டீம்..?
“ ‘தூங்காவனம்’ படத்துக்கு கேமரா பண்ணுன ஷனு வர்கீஸ்தான் இந்தப் படத்துக்கு வேணும்னு கேட்டேன். அவர் பிஸியா இருந்ததால இந்தப் படத்தில் அவரால வொர்க் பண்ண முடியலை. அதனால ஷனுவோட உதவியாளர் ஸ்ரீனிவாஸ் பண்ணியிருக்கார். ஜிப்ரான் மேல எனக்கு பெரிய காதலே இருக்கு. அதுனாலதான் இந்தப் படத்துக்கும் அவரையே இசையமைப்பாளரா கமிட் பண்ணிட்டேன். பிரவீன் கே.எல் எடிட்டிங்.’’
ராஜேஷ்னா ராஜ்கமல் ஃபிலிம்ஸ்ல வொர்க் பண்றவர்னுதான் பல பேருக்குத் தெரியும்; அதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டிருந்தீங்க..?
``நான் ஒரு டிசைனர். பல படங்களுக்கு டிசைனிங் வொர்க் பண்ணியிருக்கேன். `வசூல்ராஜா’ படத்தில் சினேகாவோட ஐடி கார்டை கமல் சார் உத்துப்பார்ப்பாரே, அந்த ஐடி கார்டு நான் டிசைன் பண்ணுனதுதான். இந்த மாதிரி சின்னச் சின்ன டிசைன் வொர்க்கில் இருந்துதான் என் வேலை ஆரம்பமாச்சு. அப்புறம் விளம்பரங்கள், பல டிவி நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன். கமல் சாரோட `மர்மயோகி’ படத்துக்கு அனுபவம் இருக்கிற உதவியாளர்கள் வேணும்னு கேட்டாங்க. அப்போதான் 2008-ல் நான் ராஜ்கமல் ஃபிலிம்ஸ்ல வேலைக்குச் சேர்ந்தேன்.’’
`இந்தியன் 2’தான் தன்னோட கடைசிப் படம்னு கமல் சொல்லியிருக்காரே... அதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..?
``இல்லைங்க... அவர் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்னு நினைக்கிறேன். அவர் வேற ஏதோ சொல்லப்போய், அது இந்த மாதிரி கன்வே ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன். கண்டிப்பா அவர் சினிமாவுல தொடர்ந்து இருப்பார். அவருக்குள்ள இருந்து சினிமாவை வெளிய எடுக்கவே முடியாது. அரசியலில் பிஸியாகிட்டு அவரால நடிக்க முடியாமப்போனாலும், எழுத்து மூலமா அவர் சினிமாவில் இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன்; அதை ஒரு கோரிக்கையாகவும் அவர்கிட்ட சொல்லிக்கிறேன்.’’
மா.பாண்டியராஜன்