
“தம்பி நாஞ்சில் சம்பத் அவர்களே...”
‘‘நான் ‘ஆர்ஜே’வாக இருந்தப்போ நடிகர் ஆகணும், இயக்குநர் ஆகணும்னெல்லாம் யோசிச்சதில்லை. ஆர்ஜே வேலை மூலமா பட வாய்ப்புகள் வந்துச்சு. என் நல்ல நேரம், ஏ.ஆர்.முருகதாஸ், மணிரத்னம், ஏ.எல்.விஜய் சார், விக்னேஷ் சிவன்... இப்படிப் பல நல்ல இயக்குநர்கள்கூட வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது. ஆனாலும், எனக்குள்ள ஒரு ஏக்கம் எப்பவும் இருந்தது...” - தன் தனித்துவமான ஸ்டைலில் மூச்சு விடாமல் பேச ஆரம்பிக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.

“நமக்கான நல்ல ரோல் இன்னும் கிடைக்கலைன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். அப்போதான், அதுக்கு நாமளே ஸ்க்ரிப்ட் எழுதலாம்னு முடிவு பண்ணினேன். ‘ஐஸ் ஹவுஸ் டு வொயிட் ஹவுஸ்’ங்கிற பெயர்ல அமெரிக்காவுல ஒரு ஷோவுக்காக முதலில் ஸ்க்ரிப்ட் எழுதினேன். இன்னைக்கு இருக்கிற அரசியல் நிகழ்வுகளை வெச்சுப் பண்ணுன ஸ்க்ரிப்ட் அது. அதுக்குக் கிடைச்ச வரவேற்பு, உலகத்துல இருக்கிற பெரிய நகரங்களுக்கெல்லாம் போய் ஷோ பண்ண வெச்சது.

ஒரு படத்துக்கான கதையை எழுதலாம்னு எனக்கு நம்பிக்கை வந்தது அப்போதான். இன்றைய அரசியல் சூழலைப் பார்த்து எல்லோருக்குமே கோபம், வெறுப்பு, விரக்தி இருக்கு. அதையெல்லாம் என் கதையில கொண்டுவந்தேன். அதுதான், ‘எல்.கே.ஜி’ ஆகியிருக்கு. படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் மட்டும்தான் நான், படத்தை பிரபு என்பவர் இயக்கியிருக்கார். நான், துணை இயக்குநராகவும் வொர்க் பண்ணியிருக்கேன்.”
“ ‘எல்.கே.ஜி’ பெயர் காரணம்?”

“லால்குடி கருப்பையா காந்தி-யின் சுருக்கம்தான், எல்.கே.ஜி. லால்குடியில இருக்கிற கருப்பையா காந்தி என்ற கேரக்டரோட கதை இது. ‘எல்.கே.ஜி’ டைட்டிலை அறிவிச்சதும், இது ஒரு ஸ்பூஃப் படம்னு பலரும் நினைச்சுட்டாங்க. இது அப்படி இல்லை. படத்துல ஹியூமர், அரசியல், எமோஷன்னு எல்லாமே இருக்கும்.”

“உங்க முதல் கதை அரசியல் கதையாதான் இருக்கணும்னு நினைச்சீங்களா?”
“அப்படி நினைக்கல. ஆனா, ஒரு முடிவுல ரொம்பத் தெளிவா இருந்தேன். 25 படங்கள் நடிச்சுட்டேன். காமெடி கேரக்டர்ல மட்டுமே என்னைப் பார்த்த மக்களுக்கு என்னைப் பிடிச்சுப் போச்சான்னு தெரியாது. ஆனா, பிடிக்காமப் போகலைன்னு நல்லா தெரியும். அதனால, எனக்குப் பிடிக்காத கேரக்டர்ல இனி நடிக்கக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். கடந்த ரெண்டு வருடத்துல மட்டும் கிட்டத்தட்ட 30 வாய்ப்புகளைத் தவிர்த்தேன். அதுல சில படங்கள் ஹிட். பல காரணங்கள் இருந்ததனால, எனக்குப் பிடிச்ச கதையை நானே எழுதிட்டேன்.”

“படத்தின் இயக்குநராக பிரபுவைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?”
“நானும், ஐசரி கணேஷ் சாரும் கார்ல போகும்போது, அவர்கிட்ட கதையைச் சொன்னேன். பத்தே நிமிடத்துல, ‘இதை நானே தயாரிக்கிறேன்’னு சொன்னார். ‘நீயே டைரக்ஷன் பண்ணப்போறியா’ன்னு கேட்டார். ‘அதுக்கு எனக்குக் கொஞ்சம் டைம் ஆகும்’னு சொன்னேன். அப்போ, அவர்தான் பிரபுவைப் பற்றிச் சொன்னார். பிரபு தேவா, ரவிவர்மன் சார்கிட்ட வொர்க் பண்ணுனவர் பிரபு. திறமையானவர்.”

“அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத்தை அப்பா கேரக்டர்ல நடிக்க வைக்கிற ஐடியா எப்படி வந்தது?”
“கதைப்படி, அப்பாவான அவரும், மகனான நானும் அரசியலில் இருப்போம். அப்பா கேரக்டர்ல இவர் நடிச்சா நல்லா இருக்கும்னு நான்தான் நினைச்சேன். கதையைக் கேட்டவர், உடனே சரின்னு சொல்லிட்டார். ரொம்ப ஜாலியான நபர் நாஞ்சில் சார். ஷூட்டிங் ஸ்பாட்ல நான் அவரைத் தம்பின்னுதான் கூப்பிடுவேன். அவர் என்னை, ‘மகனே’ன்னு கூப்பிடுவார். படத்துல, அழகு மெய்யப்பன் என்ற கேரக்டர்ல நடிச்சிருக்கார். அவர் கேரக்டர் எப்படி இருக்கும்ங்கிறது சர்ப்ரைஸ். அவர்கிட்ட அடிக்கடி, ‘படம் வந்தா, யாருக்கு என்ன நடக்குதோ இல்லையோ... தமிழ் சினிமாவுல முக்கியமான ஆளா நீங்க வந்திடுவீங்க’ன்னு சொல்வேன். குறைந்தபட்சம், இந்தப் படம் ரிலீஸ் ஆனதுக்குப் பிறகு ஒரு 20 படங்களாவது அவருக்கு வரும்.
படத்துல இன்னொரு முக்கியமான கேரக்டர்ல பிரபுவின் அண்ணன் ராம்குமார் நடிச்சிருக்கார். சினிமாவுல 40 வருடமா இருக்கார். ஆனா, மொத்தமே ரெண்டு படத்துலதான் நடிச்சிருக்கார். இப்போ, எனக்காக ‘எல்.கே.ஜி’யில நடிச்சார். அனந்த் வைத்தியநாதன் சார் கெஸ்ட் ரோல் பண்ணியிருக்கார். மிக முக்கியமா, படத்தோட வில்லனா ஒருத்தர் நடிச்சிருக்கார், அவர் யார் என்பது சஸ்பென்ஸ்!”

“ப்ரியா ஆனந்த்?”
“ஹீரோயினை லூசா காட்டுறது, ஹீரோ சொல்றதுக்கெல்லாம் தலை ஆட்டுறது, பாட்டுக்கு மட்டும் வந்துட்டுப் போறது... இதெல்லாம் எனக்கு சின்ன வயசுல இருந்தே சுத்தமா பிடிக்காது. என் படத்தோட ஹீரோயின், அப்படி இருக்கக்கூடாதுன்னு தெளிவா இருந்தேன். இந்தப் படத்துல பெஸ்ட் கேரக்டர், ப்ரியாவுக்கு! லால்குடி கருப்பையா காந்திங்கிற ஒருத்தன் எப்படி லண்டன் வரைக்கும் போனான் அப்படீங்கிற காரணத்துக்கு ப்ரியா ஆனந்த் கேரக்டர்தான் காரணமா இருக்கும்.”

“ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு பல பொதுப் பிரச்னைகளில் உங்களைப் பார்க்க முடியிறதில்லையே..?!”
“ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு, நான் ஒரு விஷயத்துல தெளிவா இருந்தேன். நாம எல்லோராலும் எல்லா இடத்துக்கும் போய்ப் போராட முடியாது, குரல் கொடுக்க முடியாது. ‘அந்தப் போராட்டத்துக்குப் போனீங்களே, இந்தப் போராட்டத்துக்கு ஏன் வரலை?’ங்கிற கேள்வி மனதளவிலும் உடலளவிலும் நம்மளை பாதிக்கும். தவிர, நடைமுறையிலும் அது சாத்தியமில்லை. அதனால, நான் இறங்கி அடிக்கணும்னு நினைக்கிற எல்லா விஷயங்களையும், என் துறை மூலமா சொல்லலாம்னு முடிவெடுத்துட்டேன். கடந்த ரெண்டு வருடமா தமிழ்நாட்டுப் பொதுமக்களில் ஒருத்தனா, நான் என்னென்ன அரசியல் சூழலை உள்வாங்கினேனோ, அதையெல்லாம் இந்தப் படத்துல பார்க்கலாம்; அதுக்குத்தான் ரெண்டு வருடமா எதிலும் கலந்துக்காம ஒதுங்கியே இருந்தேன். என் அமைதி, இந்தப் படம் மூலமா சத்தமா ஒலிக்கும்.”
சனா