தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அவள் அரங்கம்: தமிழ்நாட்டு வாழ்க்கைதான் சூப்பர்! - குஷ்பு

அவள் அரங்கம்: தமிழ்நாட்டு வாழ்க்கைதான் சூப்பர்! - குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் அரங்கம்: தமிழ்நாட்டு வாழ்க்கைதான் சூப்பர்! - குஷ்பு

படங்கள் உதவி: ஞானம்

அவள் அரங்கம்: தமிழ்நாட்டு வாழ்க்கைதான் சூப்பர்! - குஷ்பு

நீங்கள்  விரும்பிப் பார்க்கும் படங்கள்?

எம். மோகனா, வந்தவாசி


கருத்து சொல்ற படங்களோ, அழுகாச்சிப் படங்களோ எனக்குப் பிடிக்காது. டார்க் அண்டு க்ரே ஃபிலிம்ஸ் பார்க்க மாட்டேன். போனோமா... ஜாலியா படம் பார்த்தோமா... விசில் அடிச்சோமானு இருக்கணும். கார்த்தி, விஷால், விஜய் சேதுபதி படங்கள்னா ஜாலியா போய் பார்த்துட்டு விசிலடிச்சிட்டு வந்துடுவேன்.

நடிப்பு, நிகழ்ச்சித் தொகுப்பு, தயாரிப்பு என்று சகல துறைகளிலும் கால் பதித்த நீங்கள் ஏன் இயக்குநர் ஆகவில்லை?

சிந்தூரி கண்ணன், திண்டிவனம்

வீட்டுல ஒரு டைரக்டர் இருந்தா போதும்னு நினைக்கிறேன். அவர் சினிமாவை டைரக்ட் பண்ணிட்டிருக்கார். அவரை நான் டைரக்ட் பண்ணிட்டிருக்கேன்!

தமிழில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்போம் என்று எண்ணியதுண்டா?

பி.சங்கீதா, ராஜபாளையம்

வெற்றிகரமான நடிகையா வரணும்கிற வெறி இருந்தது உண்மைதான். ஆனா, நம்பர் ஒன், நம்பர் டூ-வை எல்லாம் எதிர்பார்க்கலை. எதிர்பார்க்காமலே அந்த இடம் வந்தது. அப்புறம் அதைத் தக்கவெச்சுக்கணுமேங்கிற பயம் இருந்தது. ஏன்னா... இங்கே வெற்றியோ, தோல்வியோ எதுவுமே நிரந்தரமில்லை. வெற்றி சுலபமா கிடைச்சிடும். ஆனா, அதைத் தக்கவெச்சுக்கிறதுதான் இங்கே பெரிய விஷயம். அதுக்காக முயற்சி செய்தேனே தவிர, நம்பர் ஒன் இடத்துக்காக நான் எதுவும் செய்யலை.

உங்களுக்குக் கோயில் கட்டியபோது எப்படி உணர்ந்தீர்கள்?

பத்மாசினி மோகன், மயிலாடுதுறை

கோயில் கட்டறாங்கனு கேள்விப்பட்டபோது ராத்திரி, பகலா நாலஞ்சு ஷூட்டிங் போயிட்டிருந்தது. ரியாக்ட் பண்ண டைம் இல்லை. அப்போ எனக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. யாரோ சொன்னாங்க. அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டேன். கோயில் கட்டி முடிச்சிட்டாங்கனு தெரிஞ்சபோதும் பெருசா ரியாக்ட் பண்ணலை.

அவள் அரங்கம்: தமிழ்நாட்டு வாழ்க்கைதான் சூப்பர்! - குஷ்பு

முப்பதாண்டு தமிழ்நாட்டு வாழ்க்கை எப்படி இருக்கிறது?

ஜீவா ரத்தினம், பெங்களூரு

சூப்பரா இருக்கு. இப்படியொரு வாழ்க்கை எனக்குக் கிடைக்கும்னு கனவுலகூட நினைச்சுப் பார்க்கலை. பாஸ்போர்ட்ல மட்டும்தான் நான் பிறந்த ஊர் மும்பைனு சொல்லுது. மத்தபடி 100 சதவிகிதம் மதராசியாகிட்டேன். அது எனக்குப் பிடிச்சிருக்கு. உலகத்துல எந்த மூலைக்குப் போனாலும் சென்னையில வந்து இறங்கி அந்தக் காற்று முகத்துலபட்டாதான் ஒரு நிம்மதி கிடைக்குது. எனக்குப் பெயர், புகழ், பணம், நண்பர்கள், குடும்பம்னு எல்லாம் கொடுத்தது தமிழ்நாடுதான். இங்க இருக்கிற வாழ்க்கைதான் சூப்பர்!

கமல், ரஜினி இருவரில் உங்களுக்குப் பொருத்தமான ஹீரோ யார்?

ஜி.உஷாராணி, பட்டுக்கோட்டை

என்னைப் பொறுத்தவரை கார்த்திக்தான். இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தரைத்தான் சொல்லணும்னா கமல் சார். எங்க ரெண்டு பேருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறதா ஃபீல் பண்றேன்.

 யாருடைய பயோபிக்கில் நடிக்க உங்களுக்கு ஆர்வம்?

ஹேமா நாகராஜ், சென்னை-4

எனக்கு பயோபிக் படிக்கிறதும் பிடிக்காது. நடிக்கிறதும் பிடிக்காது. ‘பெரியார்’ படம் பண்ணும்போது அதை நான் பயோபிக்கா பார்க்கலை. பெரியார் கொள்கைகள் தமிழ்நாட்டின் வரலாற்றில் கலந்திருக்கு. அதனாலதான் நடிச்சேன். பயோபிக்லதான் நடிக்கணும்னா,     `வேண்டாம் சாமி'னு வீட்டுலேயே இருந்துடுவேன்.

அம்மா குஷ்பு, மனைவி குஷ்பு  இருவரும் எப்படி?

கே. வினோதினி, நாமக்கல்

அம்மாவா நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஈஸியான மனைவி. ரொம்ப பொசசிவான மனைவி. இன்னிக்கும் என் கணவர்கிட்ட எந்தப் பெண்ணாவது பேசினா, மண்டைக்குள்ளே மணியடிக்கும். சந்தேகப்பட மாட்டேன். ஆனா, பொசஸ் பண்ணுவேன். அவர் எனக்கு மட்டும்தான்.

மகன் இல்லாத வருத்தம் உண்டா?

ஷில்பா சார்லஸ், ஈரோடு

சான்ஸே இல்லை. என் ரெண்டு பெண் குழந்தைகள்தான் என் உலகம். கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கையில செட்டிலாகணும்னு நினைச்ச காலத்துலேயே ரெண்டு பெண் குழந்தைகள் வேணும் என்பதுதான் எனக்கும் என் கணவருக்கும் ஆசையா இருந்தது. பையன் இருந்திருக்கலாமோனு நாங்க ரெண்டு பேருமே நினைச்சதில்லை. சந்தோஷமா இருக்கோம்.

அவள் அரங்கம்: தமிழ்நாட்டு வாழ்க்கைதான் சூப்பர்! - குஷ்பு

நீங்கள் பிரமாதமா சமைப்பீங்களாமே.... கணவருக்கும் குழந்தைகளுக்கும் உங்கள் சமையலில் ஃபேவரைட் எது?

கவிதா கந்தசாமி, சேலம்

தேங்க்ஸ் ஃபார் தி காம்ப்ளிமென்ட். வீட்டுலயும் அப்படித்தான் சொல்றாங்க.  சமைக்கத் தெரியும் என்பதைவிட,  சமைக்கப் பிடிக்கும்னு சொல்றதுதான் சரியா இருக்கும். பிரியாணி, கேரமல் கஸ்டர்டு, நெய் தோசை, பேப்பர் ரோஸ்ட்... இதெல்லாம் என் கணவருக்கும் பொண்ணுங்களுக்கும் ஃபேவரைட்.

உங்கள் மகள்களைப் பற்றி என்ன கனவுகள் வைத் திருக்கிறீர்கள்? அவர்கள் யாருடைய ரசிகைகள்?

எஸ். ஜெகதீஸ்வரி, ஸ்ரீவில்லிப்புத்தூர்

என் மகள்களைப் பற்றி பெரிய கனவுகள் எனக்கில்லை. அவங்க நல்ல மனிதர்களா வரணும். அடுத்தவங்களுடைய வலியைப் புரிஞ்சுக்கணும். என் மகள்களுக்கு 16 வயசும், 18 வயசும் ஆகுது. ஆனா, அவங்க இன்னும் ஆறு வயசுக் குழந்தைங்க மாதிரிதான் இருக்காங்க. ரெண்டு பேரும் அப்பா செல்லம். ராத்திரி ரெண்டு மணிக்குத் தூக்கத்துல எழுப்பி ‘நீ யார் செல்லம்’னு கேட்டாலும், ‘அப்பா செல்லம்’னு சொல்வாங்க. ‘அம்மா செல்லம் இல்லையா’னு கேட்டா, ‘நோ’ சொல்லிட்டு, கோவிச்சுக்கிட்டுத் தூங்கிடுவாங்க. காலையில நாலு மணிக்கு எழுப்பிக் கேட்டாலும் இதே பதில்தான் வரும். அவங்களுக்கு அப்பாதான் உலகம். சின்னவ பயங்கரமான வடிவேலு ரசிகை. கார்த்திக், விஷால், ஜெயம் ரவியெல்லாம் சித்தப்பா, மாமா முறை. ரெண்டு பேருக்கும் விஜய் ரொம்பப் பிடிக்கும்.

30 வருஷங்களா அப்படியே இருக்கீங்களே... என்ன சீக்ரெட்ஸ்?

என். மங்கையர்க்கரசி, திருப்பூர்

 ஒரு சீக்ரெட்டும் இல்லை. நீங்க நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. அது அகத்தின் அழகு. மனசுல இருக்கிறது முகத்துல தெரியுது. சந்தோஷமா இருக்கேன். தேவையில்லாத பிரச்னைகளை மனசுல போட்டுக் குழப்பிக்கவே மாட்டேன். ஒரு விஷயம் நடந்திருச்சா... அதை ரிவர்ஸ் பண்ண முடியாது. தீர்வுதான் காண முடியும். நான் பிரச்னை நடந்திருச்சேனு ஒப்பாரி வைக்கிற கேரக்டர் இல்லை... தீர்வை யோசிக்கிறவள்!

ஸ்ட்ரெஸ் வரும்போது என்ன செய்வீர்கள்? 

வனிதா சேகர், மதுரை

வாழ்க்கையில் உச்சகட்ட ஸ்ட்ரெஸ்சில் இருந்த நாள்கள் நிறைய... எனக்கு ஃபிட்ஸ் வரும். அதிலும், ஸ்ட்ரெஸ் அதிகமானா உடனே ஃபிட்ஸ் வந்துடும். என் கரியரில் நான் பீக்கில் இருந்த டைம் அது. ‘பிரம்மா’ படம் பண்ணிட்டிருந்த நேரம். வேலை தொடர்பான ஸ்ட்ரெஸ் அதிகமானதால், ஃபிட்ஸ் வந்திருச்சு. என் அண்ணனுக்கு ஃபிட்ஸ் வரும். அதனால ஜெனெடிக்கா எனக்கும் வந்திருச்சு. அப்புறம் மருந்துகள் எடுத்துக்கிட்டு சரியாயிடுச்சு. ஆனாலும், நான் எந்த விஷயத்துக்காகவும் ஸ்ட்ரெஸ் ஆகவே கூடாதுங்கிறது டாக்டர்ஸின் அட்வைஸ்.  அதனாலேயே வீட்டிலும் என்னை ஸ்ட்ரெஸ் ஆக விடாம வெச்சிருக்காங்க.

-ஆர்.வைதேகி

 படங்கள் உதவி : ஞானம்