தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

என் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை! - ஜனனி ஐயர்

என் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை! - ஜனனி ஐயர்
பிரீமியம் ஸ்டோரி
News
என் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை! - ஜனனி ஐயர்

என் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை! - ஜனனி ஐயர்

“நான் காதலித்தது, அந்தக் காதல் பிரேக்-அப் ஆனது... இவை எல்லாவற்றையும் என் குடும்பத்தினரேகூட தெரிந்திருக்கவில்லை. காரணம், வலிகள் அத்தனையையும் எனக்குள்ளேயே புதைத்து வைக்கப் பழகிவிட்டேன். ஆனால், ‘பிக் பாஸ்-2’ நிகழ்ச்சியின்போதுதான் அடக்கி வைக்கப்பட்டிருந்த வலிகளையெல்லாம் உடைத்தெறிந்து வெளியேற... உண்மையிலேயே என் குடும்பத்தினருக்கே அது மிகப்பெரிய ‘ஷாக்’தான்!’’ - துயரம் வடிந்தொழிந்த தெளிவுடன் பேசுகிறார் நடிகை ஜனனி ஐயர்.

‘அவன் இவன்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, ‘தெகிடி’யில் முத்திரை பதித்த நடிகை ஜனனி ஐயர்.

என் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை! - ஜனனி ஐயர்

‘பிக் பாஸ்-2’ நிகழ்ச்சியின்போது, “காதலில் பிரிவு என்பது பலருக்கும் நடக்கக் கூடியதுதான். அதுபோன்ற சூழலில், அந்த வலியை அலட்சியப்படுத்திவிட்டுக் கடந்து செல்வதுதான் சரி. எனக்கும் என் காதலருக்கும் இடையே எந்த விதப் பிரச்னையும் இல்லை. ஆனாலும், எங்களுக்கிடையே பிரிவுக்கான காரணமாக, ஸ்டேட்டஸ் இருந்தது. அவருடைய ஸ்டேட்டஸுக்குப் பொருத்தமாக என்னுடைய ஸ்டேட்டஸ் இல்லை. அதாவது, என்னிடம் பணம் இல்லை. இதை ஒரு காரணமாகக் கூறி அவர் விலகிச்சென்றதுதான் என்னை ரொம்பவே நெருடலாக்கியது. ஆகவே, இனி வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் அந்தச் சம்பவத்தை நான் திரும்பிப் பார்க்கக்கூட விரும்பவில்லை’’ - என்று கண்ணீருக்கிடையே ஜனனி ஐயர் பகிர்ந்துகொண்ட வார்த்தைகள் பிக் பாஸ் வீட்டிலிருந்த போட்டியாளர்களையும் தாண்டி, ஒட்டுமொத்த பார்வையாளர்களையுமே சோகத்தில் உறையச்செய்தது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெற்றிக் கோட்டை நெருங்கிவந்து விலகிச்சென்ற ஜனனி ஐயர், நடிகர் அசோக் ஷெல்வனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில், ‘என் காதல் சொல்ல வந்தேன்’ பகுதிக்காக ஜனனியோடு ஒரு சந்திப்பு.

“கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளியில்தான் படித்தேன். ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு படிக்கும் போதே, என்னுடன் படித்த மாணவன் ஒருவன் எனக்கு காதல் கடிதம் கொடுத்திருக்கிறான்.  அதைக் காதல் என்றுகூடச் சொல்லமுடியாது. எடுத்த எடுப்பிலேயே, கல்யாணம்தான்! அதாவது, ‘Will you marry me?’ என்கிற ஒற்றை வரியைத்தான் அந்தக் கடிதத்தில் அவன் எழுதியிருந்தான்.

காதல் என்றால் என்னவென்றே புரியாத அந்த வயதில், ஏதோ ஒரு சினிமாவைப் பார்த்துத்தான் அவனும் ஆர்வக்கோளாறில் அப்படி எழுதியிருக்க முடியும். அப்போதைய என் புரிதலும்கூட ‘காதல்’ என்றாலே ஒரு கெட்ட வார்த்தை என்கிற அளவில்தான் இருந்தது. அதனால், உடனடியாக க்ளாஸ் டீச்சரிடம் போய் சொல்லிவிட்டேன். அவ்வளவுதான். அந்தப் பையனை திட்டித் தீர்த்தவர், வகுப்புக்கு வெளியேயும் நிற்க வைத்துவிட்டார். இந்தத் தண்டனை ஒரு வாரம் தொடர்ந்தது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நான் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே வரும்வரையிலும் என்னுடன் அவன் பேசவேயில்லை. அவனைப் பற்றி இப்போது நினைத்தாலும் பாவமாக இருக்கிறது.

எப்போதும் என் ஃபேவரைட் அஜித் சார்தான்! சவிதா இன்ஜினீயரிங் காலேஜில் படிக்கும்போது, கல்ச்சுரல் செகரட்டரியாக இருந்தேன். அதனால், கல்லூரி நிகழ்ச்சிகளின் போது எனக்குப் பிடித்த ‘அஜித் சாரையே சீஃப் கெஸ்ட்டாக அழைத்துவர வேண்டும்’ என்று பிடிவாதம் பிடிப்பேன். இதனாலேயே, அப்போது பலரது கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறேன். ஆனாலும் எப்படியாவது அவரை அழைத்துவந்துவிட வேண்டும் என்ற உறுதியோடு, பல்வேறு முயற்சிகள் செய்தேன். ம்ஹூம்... இன்றுவரை அஜித் சாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை!

கல்லூரி வாழ்க்கையிலும் எனக்கு யார் மீதும் ஈர்ப்போ, ஆசையோ ஏற்படவில்லை. யாரையேனும் காதலிக்கிற அளவுக்கு என்னிடம் முதிர்ச்சி இல்லை. என்னைக் காதலிப்பதாகச் சொல்லி வந்த புரபோஸ்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் அப்போது என்னிடம் இல்லை. அதனால், ‘நாம ஃப்ரெண்ட்ஸாவே இருந்துக்கலாமே...’ என்று காதலைத் தவிர்த்த அனுபவங்கள்தாம் நிறைய இருக்கின்றன’’ என்று விலகிச் சென்றவரிடம், ‘பிரேக்-அப்’ அனுபவம் பற்றிக் கேட்டோம்.

“ஸாரி... முடிந்துபோன அந்த விஷயத்தைப் பற்றி இனி எந்தச் சூழ்நிலையிலும் நினைக்கக் கூடாது; பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். பிக் பாஸில் கொடுக்கப்பட்ட அந்த டாஸ்க்கில்கூட, ‘இனி திரும்பிப் பார்க்கக்கூடாத விஷயம் என்னவென்று நினைக்கிறீர்கள்...’ என்றுதான் எங்களிடம் கேட்டிருந்தார்கள். அதனால்தான், நானும் அந்த வலியை அங்கே பதிவுசெய்யவேண்டி வந்தது. அதனால் ப்ளீஸ்...’’ என்று நாகரிகமாக மறுத்தவர் தொடர்ந்து...

என் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை! - ஜனனி ஐயர்

“ஆனாலும், அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ‘கோழைகளை நம்பக் கூடாது’ என்கிற நல்ல விஷயத்தைக் கற்றுக் கொண்டேன். ‘வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்’ என்கிற உந்துதல், ‘ஜெயித்தே ஆக வேண்டும்’ என்கிற உறுதியான நிலையில் வந்து நிற்பதற்கும் அந்தச் சம்பவம்தான் காரணமாக இருந்தது. ‘கெட்டதிலும் ஒரு நல்லது’ என்று சொல்லித்தான் இதைக் கடந்துபோக வேண்டும்’’ என்று விரக்தியை விரட்டியடிக்கிறவர், தொடர்ந்து ‘காதல்’ பற்றிய தனது எண்ணத்தைப் பதிவுசெய்கிறார்.

“காதல் என்பது ரொம்பவே அழகான, எல்லோருமே வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவித்தே ஆகவேண்டிய விஷயம். அதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அது எப்போது, எப்படி அமையும் என்றும் தெரியாது. தானே அமையும். ஆணோ பெண்ணோ... இருவருமே ஒருவருக்கொருவர் எந்தவித நிபந்தனைகளும் விதித்துக்கொள்ளாமல், முழுமையான அன்பை மட்டுமே பரிமாறிக்கொள்வதுதான் உண்மையான காதலாக இருக்க முடியும்.

பொய் பேசியோ, போலியாக நடித்தோ கூட காதலைக் கைப்பற்றிவிட முடியும். ஆனால், உண்மையும் நேர்மையுமாக அன்பைச் செலுத்தினால் மட்டுமே காதலை நீடூழி வாழவைக்க முடியும். என்னுடைய முதல் காதல், ஒருகட்டத்தில் இல்லையென்றாகிவிட்டது. இன்னும் அந்த வருத்தத்தையே தேக்கிவைத்துக்கொண்டு, அதே இடத்தில் உழன்றுகொண்டிருக்க முடியாது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நான் நகர்ந்தே ஆக வேண்டும்.

இப்படிச் சொல்வதாலேயே ‘தினம் தினம் ஒருவரைக் காதல் செய்யுங்கள்’ என்று நான் சொல்வதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. காதலில், ‘பிரேக்-அப்’ என்பது தாங்கமுடியாத வலிதான். எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வம் இருக்காது. மந்தமாகவே இருப்போம். இந்த வலியை நானும் உணர்ந்திருக்கிறேன் என்கிற அனுபவத்தில்தான் சொல்கிறேன். காதல் தோல்வியை நினைத்து மனம்புழுங்கி, அழுத்தத்துக்கு உள்ளாவதும், அடுத்தகட்டமாக ‘வாழ்க்கையே முடிந்துவிட்டது’ என்கிற தெளிவற்ற புரிதலில் தவறான முடிவுகளை எடுப்பதும் கூடவே கூடாது. ‘நாம் எந்தத் தவறும் செய்யவில்லை’ என்ற மனச்சாட்சி இருந்தாலே போதும்!

என் அனுபவத்தில், காதல் பிரிவினால் ஏற்பட்ட வலியைப் போக்கிக்கொள்ள, நம் சூழ்நிலையை மாற்றியமைத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் அப்படித்தான், வெளிநாட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். ஊசியென குத்திக்கிழிக்கும் காதல் பிரிவின் ரண வேதனையிலிருந்து முழுவதுமாக என்னை மீட்டெடுத்த பின்னரே, நான் சென்னை திரும்பி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டேன். ‘இதுவும் கடந்துபோகும்’ என்று உறுதியாக இருந்துவிட்டால் போதும். அடுத்த சந்தோஷம் விரைவில் வரும்.

இயற்கையின் படைப்பில், உயிரின் மதிப்பு என்னவென்று யாராலும் சொல்லிவிட முடியாது. அப்படிப்பட்ட உன்னதமான உயிரை, காதலுக்காகத் தியாகம் பண்ணுகிறேன் என்பதோ, யாருக்காகவோ உயிர் துறக்கிறேன் என்பதோ புத்திசாலித்தனம் கிடையாது. துன்பங்களும்கூட வாழ்க்கையின் ஒரு பகுதி தான். அதையும் கடந்து வந்துதான் ஆக வேண்டும்’’ என்று தெளிவான விளக்கம் கொடுத்தவர், காதலுக்குப் பிந்தைய மண வாழ்க்கையில், ஆண் - பெண் உறவு குறித்த தனது கருத்தையும் பகிர்ந்துகொண்டார்.

“ஆணோ பெண்ணோ... யாராக இருந்தாலும் அவர்கள் எத்தனை நெருக்கமான உறவில் இருந்தாலும்கூட, அவரவருக்கெனத் தனிப்பட்ட உரிமைகள் இருக்கின்றன. அந்தத் தனிமையைத் தட்டிப் பறிக்க யார் ஒருவருக்கும் உரிமை இல்லை. காதலின் பெயரால் ஒருவர் மேல் இன்னொருவர் ஆதிக்கம் செலுத்துவதும், சொந்தம் கொண்டாடி அடிமைப்படுத்துவதும் எந்த அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

‘என் மனைவி ஆகிவிட்டாள்... எனக்கே எனக்கான சொந்தமாகிவிட்டாள்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, அவள்மீது தன் விருப்பத்தை, ஆதிக்கத்தைச் செலுத்தக் கூடாது. எல்லோருக்குமே தனிப்பட்ட கனவுகள் உண்டு. பெண் என்பதாலேயே திருமணத்துக் குப் பிறகு வீட்டோடு அடைந்துவிட வேண்டுமா? பணிக்குச் செல்ல வேண்டும் என்கிற அடிப்படை ஆசையில் ஆரம்பித்து அவளுக்கெனத் தனிப்பட்ட விருப்பங்கள், லட்சியங்கள் எத்தனையோ இருக்கலாம். அவற்றையெல்லாம் திருமணம் என்ற ஒற்றை வார்த்தையில் கட்டிப்போட்டுவிடக் கூடாது. கணவன் மனைவி இருவருமே ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கைதான் வலுவான வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கிறது. ஆண் - பெண் இடையிலான அடிப்படைப் புரிதலே நிரந்தர மகிழ்ச்சியைக் கொடுக்கும்’’ என்று நீண்ட விளக்கம் கொடுக்கிறார் ஜனனி.

‘சரி... ஜனனிக்கு அடுத்த காதல் எப்போது வரும்?’

“நான் காதலைத் தேடிப் போகத் தயாரில்லை. யாருக்குத் தெரியும்... எனக்கும் இன்னொரு காதல் வரலாம். ஆனால், அது எப்போது வரும்? ஸாரி... எனக்கும் பதில் தெரியவில்லை’’ என்கிறார் மெல்லிய புன்னகையோடு!

- த.கதிரவன் 

படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்