
இவரா அவர்?
சமூகத்தில் சவால்களுடன் வாழும் மனிதர்களிடம், நாம் காட்ட வேண்டியது பேரன்பு மட்டுமே என்பதை அழகாக உணர்த்துகிறது, `பேரன்பு’ திரைப்படம். `தங்கமீன்கள்’ டு `பேரன்பு’... இரண்டாவது படத்திலும் தன் நடிப்பால் அசத்தியிருக்கும் சாதனா, அவர்மீது நம்மைப் பேரன்புகொள்ள வைக்கிறார். `அந்தப் `பாப்பா’வா இந்தப் பொண்ணு?’ என்கிற ஆச்சர்யத்துடன், அவருடனான சந்திப்பு தொடங்கியது.
`பேரன்பு’ படத்தில் எப்படி கமிட் ஆனீங்க?
`தங்கமீன்கள்’ படத்துல நடிச்சு முடிச்சதும், நாங்க வசிக்கிற துபாய்க்குப் போய் படிப்பைத் தொடர்ந்தேன். வழக்கம்போல இயக்குநர் ராம் அங்கிள் ஒருநாள் போன் பண்ணினார். `உனக்குக் கூடிய சீக்கிரம் இன்னொரு தேசிய விருது கிடைக்கப்போகுது செல்லம்மா... அடுத்த படத்துல நீ மாற்றுத்திறனாளி ரோல்ல நடிக்கப்போறே’னு சொன்னார். அவர் என்பதால எந்த யோசனையும் இல்லாம `ஓகே’ சொல்லிட்டோம். அவுட்லைன் ஸ்டோரி மட்டும்தான் தெரிஞ்சுக்கிட்டேன். பிறகு, ஷூட்டிங் போயிட்டேன்.
‘பாப்பா’ ரோலுக்குப் பயிற்சி தேவைப் பட்டிருக்குமே..?
ஆமாம்! சென்னை அருகிலுள்ள ‘நிப்மெட்’ (NIEPMD - National Institute for Empowerment of Persons with Multiple Disabilities) மையத்துல பயிற்சி எடுத்துக்கிட்டேன். மூளை முடக்குவாதக் குறைபாடு உடையவங்க எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணநலன் இருக்கும். அதை யெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். தவிர, பல தெரபிஸ்ட்டுகளைச் சந்திச்சுப் பேசினேன். நான் கத்துகிட்ட விஷயங்களையெல்லாம் ராம் அங்கிள் கேட்பார். அவரும் ஆலோசனை கொடுப்பார். இப்படி ரெண்டு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கிட்டேன். கண்ணாடி முன்னாடி நிறைய முறை நடிச்சுப் பார்ப்பேன்.

சவாலான கேரக்டர்... ஷூட்டிங் அனுபவம் எப்படி இருந்தது?
படத்தின் முதல் பகுதி முழுக்க, கொடைக் கானல்ல ஷூட்டிங் நடந்துச்சு. முதல்நாள். ஆத்துமேல இருக்கும் ஒரு மரப்பாலத்தில் என்னை `பாப்பா’ மாதிரி நடந்துவரச் சொன்னார், ராம் அங்கிள். நானும் நடந்து வர, எல்லோரும் கைதட்டி வாழ்த்தினாங்க. அதன்பிறகே, மொத்த டீமுக்கும் என் கேரக்டர் பத்தித் தெரிஞ்சது. டல் மேக்கப் போட்டாங்க; முடியை ஷார்ட்டா கட் பண்ணிவிட்டாங்க. ஒவ்வொரு நாளுமே எனக்குப் புதுமையா இருந்துச்சு. ஒரு கண் மட்டும் எப்போதும் சுருங்கியே இருக்கணும்; வாய், கை கால்களைக் கோணலா வெச்சு நடிக்கும்போது வலி அதிகமா இருக்கும். ஷூட்டிங் முழுக்க என்னோடு ஒரு டாக்டரும் உடனிருந்து உதவினார். என்னை எப்படி நடிக்க வைக்கணும்னு ராம் அங்கிளுக்கு நல்லா தெரியும். மத்தவங்களோடு நான் நடிக்கிற காட்சியில், சுத்தியும் நிறைய பேர் இருப்பாங்க. என்னுடைய தனிப்பட்ட போர்ஷனா இருந்தால், நான், ராம் அங்கிள், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் அங்கிள் மட்டும்தான் அந்த இடத்தில் இருப்போம். அப்போ ரொம்பச் சீக்கிரமா டேக் `ஓகே’ ஆகிடும். அது என்ன மேஜிக்னு தெரியலை!
ஷூட்டிங் இடையே படிப்பேன். 45 நாள்கள் நடந்த முதல் ஷெட்யூல் முடிஞ்சதும், ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வுக்காக துபாய் போயிட்டேன். பத்தாம் வகுப்புத் தொடக்கத்தில், மீண்டும் வந்தேன். படம் முழுக்க என் அம்மா என்னுடனே டிராவல் பண்ணினாங்க. என் அப்பா அப்பப்போ ஷூட்டிங் வருவார்.
மம்முட்டியுடன் நடித்த அனுபவம்...
சார் ஒரே டேக்ல நடிச்சுடுவார். அதனால நானும் கவனமா நடிப்பேன். ஒருகட்டத்தில் அவரும் நானும் ரொம்ப ஃப்ரெண்ட்லியாகிட்டோம். நிஜ அப்பா - மகள் மாதிரி எங்களுக்குள் ஒரு பந்தம் உண்டாகிடுச்சு. பிரேக் டைம்ல அவரோட சினிமா அனுபவங்களை ஆர்வத்தோடு கேட்டுட்டிருப்பேன். வாய் கோணி நடிச்சதில், ஒருமுறை நிஜமாவே வாய் கோணலாகி சிக்கிக்கிச்சு. அவர் உட்பட, எல்லோரும் பதறிட்டாங்க. `சிரமப்பட்டு நடிக்க வேண்டாம்’னு ஆலோசனை சொன்ன மம்முட்டி சார், எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருந்தார்.
ஷூட்டிங் முடிந்து, படத்தில் உங்க நடிப்பைப் பார்த்த தருணம்...
என்னைச் சிறப்பா நடிக்க வெச்சுடுவார்னு ராம் அங்கிள் மேல எனக்கு முழு நம்பிக்கை உண்டு. அதனால, மானிட்டர்ல ஒருநாள்கூட பார்க்கலை. டப்பிங் பேசப் போனப்போ, என் நடிப்பைப் பார்த்து அசந்துபோயிட்டேன். நல்லா நடிச்சுட்டாலும், `பாப்பா’ ரோலுக்கு உயிர்கொடுக்க டப்பிங் பேசுறதுதான் நடிப்பைவிட பெரிய சவாலாக இருந்தது. அதுக்காக, `பாப்பா’ மாதிரியே வாய், கைகள் மற்றும் கால்களைக் கோணலா வெச்சுகிட்டுதான் டப்பிங் பேசினேன். டப்பிங் பேசிய ஒன்றரை வாரமும் மீண்டும் `பாப்பா’வாகிட்டேன்.
`பேரன்பு’ படத்தால் கிடைத்த மறக்க முடியாத அனுபவம் மற்றும் பாராட்டு?
பட வேலைகள் எல்லாமே முடிஞ்சுடுச்சு. ஆனா, ஒருநாள் நான் ‘பாப்பா’ கேரக்டர் மாதிரியே தூங்கியிருக்கேன். பயந்துபோன என் அப்பா, அதை அடுத்த நாள் என்கிட்ட சொன்னார். அந்த அளவுக்கு `பாப்பா’ எனக்குள்ள வந்துட்டா.
`நிஜ மாற்றுத்திறனாளி குழந்தைக்குப் பயிற்சி கொடுத்து நடிக்க வெச்சிருக்காங்க’னு சத்யராஜ் சாரும் பாரதிராஜா சாரும் நினைச்சாங்களாம். அப்புறம் உண்மை தெரிஞ்சு அதிர்ச்சியாகி என்னைப் பாராட்டினாங்க. `இந்தப் பொண்ணோட நடிப்பு ஆச்சர்யமா இருக்கு’னு பா.இரஞ்சித் சார் சொன்னார். இதெல்லாம் மறக்க முடியாத பாராட்டுகள். கடந்த ரெண்டு வருஷமா டான்ஸ்ல அதிகமா கவனம் செலுத்தினதால் என் எடை குறைஞ்சுடுச்சு. அதனால, `படத்துல நடிச்சது நீங்கதானா? அடையாளமே தெரியலை’னு பலரும் சொல்றாங்க.

உங்க மேல இயக்குநர் ராமுக்கு இருக்கும் பேரன்பு பற்றி...
`தங்கமீன்கள்’ படத்துக்குப் பிறகு அவருடன் அடிக்கடி போன்ல பேசுவேன். சென்னை வரும்போதெல்லாம் அவரை மீட் பண்ணுவேன். அவர் என்னுடைய அப்பா போல; என் சினிமா குரு; நண்பர்; நலன் விரும்பி. இன்னும் சொல்லிட்டே போகலாம்.
இரண்டாவது தேசிய விருது உறுதி என்கிற குரல் பலமா ஒலிக்குதே...
(சிரிக்கிறார்) எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என்னைவிட ராம் அங்கிள்தான் இந்தப் படத்துக்காக அதிகம் உழைச்சார். அவருக்குத் தேசிய விருது கிடைச்சா, அதிகமா சந்தோஷப்படுவேன்.
எதிர்கால சினிமா பயணம்?
இப்போ ப்ளஸ் ஒன் படிக்கிறேன். ராம் அங்கிள் படம் என்பதால்தான், படிப்பு பாதிக்கப்பட்டாலும் நடிச்சேன். சினிமா என் கரியரானு தெரியலை. எதிர்காலத்துல வேறு இயக்குநர்கள் படத்துலகூட நான் நடிக்கலாம். ஆனா, என் வாழ்க்கையில எல்லாச் செயல்பாடுகளிலும் ராம் அங்கிளின் ஆதரவு இருக்கும். தவிர, கிளாசிக்கல் டான்ஸ்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். டான்ஸ் என் வாழ்க்கையில் பெரிய அங்கமா இருக்கும் என்பது உறுதி.
சாதனாவின் பேச்சும் பதில்களும் முதிர்ச்சியாக இருக்குதே... எப்படி?
என் பெற்றோர், குடும்பம், ராம் அங்கிள் ஆகியோர் என்னை நல்லா மோல்டு பண்ணியிருக்காங்க. நல்லா படிப்பேன். படிப்பைத் தாண்டியும் நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிறேன். அதுவும் காரணமா இருக்கலாம்.
வாழ்த்துகள் அன்பே!
- கு.ஆனந்தராஜ், படம் : ரா.வருண் பிரசாத்