'சர்வம் தாளமயம்' படத்தில், நெடுமுடி வேணுவின் மனைவியாக ''மேடையில் வாசிக்கிறப்போ நடக்கிற போட்டி போலத்தானே... அவன் டி.வி-யில் போட்டிப் போடப்போகிறான்' என்று வசனம் பேசுகிற அந்த சாந்தமான முகத்தைப் பார்த்ததும் மனது 'வாவ்' என்று கூவியது. யெஸ், அந்த சாந்தமான முகத்துக்கு சொந்தக்காரர், நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான நாட்டிய மேதை சாந்தா தனஞ்செயன். இரண்டு வருடங்களுக்கு முன்னாள், கணவர் தனஞ்செயனுடன் வோடஃபோன் விளம்பரத்தில் கலக்கியவர் சர்வம் தாளமயத்தில் நெடுமுடி வேணுவின் மனைவி கேரக்டரில் நடித்திருக்கிறார்.
சினிமாவில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது என்றோம். படு உற்சாகமாக அனுபவம் பகிர்ந்தார்.
''நீங்க படம் பார்த்துட்டீங்களா? நான் இன்னமும் படம் பார்க்கலை. பட், அமெரிக்காவில் இருக்கிற என் ஃபிரெண்ட்ஸெல்லாம் பார்த்துட்டு 'ரொம்ப நல்லா பண்ணியிருக்கேன்'னு சொன்னாங்க. ராஜீவ்மேனன்தான், 'சர்வம் தாளமயத்தில் ஒரு கேரக்டர் பண்றேளா'ன்னு கேட்டார். எனக்கு நடிப்பு பிடிக்கும்னாலும், அதுக்குள்ள போறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்காம இருந்தது. ரெண்டாவது, எனக்கு ராஜீவை குழந்தையில் இருந்தே தெரியும்கிறதால உடனே ஓகே சொல்லிட்டேன். அப்புறம், சின்னதா ஒரு டெஸ்ட் வைச்சார். டயலாக் சொல்லச் சொன்னார். புதுசா ஒரு சேலஞ்ச் வந்தா டிரை பண்ணிப் பார்ப்போம்னு தோணும் இல்லையா, அப்படி நினைச்சுத்தான் நடிச்சேன். அது க்ளிக் ஆயிடுச்சு'' என்று சிரிக்கிறார் சாந்தா.
(கணவர் தனஞ்செயனுடன் சாந்தா)
நெடுமுடி வேணுவுக்கு மனைவியாக நடித்த அனுபவத்தைப் பற்றி சொல்லும்போது, ''அச்சோ, அவர் நடிப்பில் சீனியர். நம்மளால அவர்கூட சேர்ந்து நடிக்க முடியுமான்னு நினைச்சேன். அதனால, மனசுக்குள்ள சின்ன பயம் வரத்தான் செய்தது'' என்று சிரித்தவர், இந்தப் படத்தில் தனக்குக் கிடைத்த மகிழ்ச்சித் தருணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.
''படத்தில் என்னோட கேரக்டருக்கு டப்பிங்கெல்லாம் கிடையாது. நான் என் சொந்தக் குரலிலேயே வசனம் பேசியிருக்கிறேன். அதிலும், வாய்ஸ் ஓவர்கூட இல்லாம ஷூட்டிங்கின்போதே நேரடியா வசனம் பேசினேன். அது ஓகேவாகிடுச்சு'' என்று கலகலத்தார்.
கலக்குங்க சாந்தாம்மா!