`பெண் மானே சங்கீதம் பாடவா', `பாடு நிலாவே’, `ராஜ ராஜ சோழன் நான்', `கற்பூர பொம்மையொன்று' எனப் பல இனிமையான பாடல்களை இளையராஜா இசையில் எழுதியவர், சாகித்ய அகாடமி பரிசு வென்றவர், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முகம் கொண்ட மு.மேத்தா. இளையராஜாவுடனான அறிமுகம், அவருடனான நட்பு பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்.
``இளையராஜாவுக்கும் உங்களுக்குமான அறிமுகம்?"
``எனது கவிதைகள் பிரபலமாகத் தொடங்கிய நாள்கள் அது. கோவையில் பணிபுரிந்த நான், சென்னைக்கு மாற்றலாகி வந்தேன். மாநிலக் கல்லூரிப் பேராசிரியராக இருந்தபோது, எழுத்தாளர் பாலகுமாரனின் நட்பு கிடைத்தது. இருவரும் பரஸ்பரம் எங்கள் படைப்புகளைப் படித்திருந்தோம். `எம்ம வீட்டுப் பொம்மணாட்டிலாம் உம்ம எழுத்தப் பத்திதான்யா பேசுறாங்க’னு சொல்வார். டூவீலர்ல எனக்கு சென்னையைச் சுத்திக் காட்டுவார் பாலகுமாரன். அப்படி ஒருநாள், `கமல்ஹாசன் உம்ம கவிதையைப் பத்திதான் பேசுறார்'னு சொன்னார். `நாம அவரைப் பத்திப் பேசுற மாதிரி, அவர் நம்மளப் பத்திப் பேசுறாருங்க’ என்றேன். பாலு என்னை கமல் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனார். கமல் என்கிட்டப் பேசிக்கிட்டு இருந்தார், நல்ல நட்பு வளர்ந்துச்சு. ஒரு நாள், `இவரை இயக்குநர் மனோபாலாகிட்ட கூட்டிக்கிட்டுப் போங்க, நான் சொன்னேன்னு சொல்லுங்க'னு பாலுகிட்ட கமல் சொன்னார். மனோபாலா தன்னோட முதல் படமான `ஆகாய கங்கை'யை எடுத்துக்கிட்டிருந்த நேரம் அது. `இந்தப் படத்துல பாட்டு எழுதுங்க, அதுக்கு முன்னாடி இளையராஜாவைப் பார்ப்போம்'னு சொல்லி, மனோபாலாதான் என்னை இளையராஜா சாரிடம் அறிமுகப்படுத்தினார். நாங்கள் ஒரே ஊர், ஒரே பகுதி என்றெல்லாம் இருக்க, தமிழ் மூலம் எனக்கு அறிமுகமான பாலகுமாரன் என்னைக் கமலிடம் சேர்த்ததால்தான், மனோபாலா மூலமாக நான் இளையராஜாவுக்கு அறிமுகமானேன்.’’
``மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா... வேறெது இளையராஜாவின் ஸ்டைல்? இளையராஜாவுடன் பாடல் எழுதும் அனுபவத்தைச் சொல்லுங்களேன்?’’
``இசைக்கு இசைந்து வருகிற பாடல்களைத்தான் இளையராஜா இசையமைப்பார். அப்படியானால், மெட்டுக்கு அமைத்த பாடல்கள்தான் அதிகம். நானும் அவரது மெட்டுகளுக்கான பாடல்களையே எழுதியிருக்கிறேன். கணிசமான பாடல்களே வரிகளுக்கு இசையமைத்தவையாய் இருக்கும். இளையராஜா ஒரு படத்துக்கு ஆறு டியூன் போட்டால், அதை எந்தப் பாடலாசிரியர் எழுதணும்னு உதவியாளரிடம் சொல்வார். அந்த உதவியாளர் அந்தந்த பாடலாசிரியர்கள்கிட்ட டியூனைக் கொடுப்பார். சம்பந்தப்பட்ட இயக்குநரோட உட்கார்ந்து பேசி, எழுதிக் கொடுத்துடுவோம். இளையராஜா அண்ணே ரெக்கார்டிங்குக்குக் காலையில எந்தப் பாடலை யார் பாடணும்னு கூப்பிட்டுச் சொல்லிடுவார். ரெக்கார்டிங் அன்னைக்குக் காலையில பாடலாசிரியருடன் உட்கார்ந்து வரிகளைத் தேர்ந்தெடுப்பார். அவருடைய பெரும்பாலான பாடல்கள் மெட்டுக்கு எழுதிய பாடல்களாகத்தான் இருக்கும்.
`உதயகீதம்' படத்தில் `பாடு நிலாவே’ பாடலில் பாடகனான கதாநாயகன் சிறைச்சாலையில் இருப்பான். அவள் நாயகனை நினைத்து, நிலாவைப் பார்த்து `பாடு நிலாவே’ எனப் பாடுவாள். அதுக்குப் பதில் சொல்லும் விதமாக, கதாநாயகனும் `பாடு நிலாவே’ என ஆரம்பித்துப் பாடுவான். ரெக்கார்டிங் போயிட்டு இருக்கு. `அந்த ஹீரோ சிறைக்குள்ளே இருக்கான். அவன் ஏன் நிலாவைப் பார்த்துப் பாடணும்? அதுல ஒரு `ம்’ சேர்த்துக்கலாமா?’ என்றார். கதாநாயகன், `பாடும் நிலாவே’னு கதாநாயகியைக் குறிப்பிடுற மாதிரி வந்தபோது, அவ்வளவு நல்லா இருந்தது. நான் உடனே, `அண்ணே நீங்க சேர்த்த `ம்’ பாட்டை ஜம்முனு ஆக்கிடுச்சு’னு சொன்னேன். இந்தப் `பாடும் நிலா’தான், பின்னாளில் இந்தப் பாட்டை பாடிய எஸ்.பி.பி-க்குப் பட்டமாய் வழங்கப்பட்டது. இன்றும் அவர் `பாடும் நிலா’ பாலுதான்.’’
இளையராஜாவின் ஆன்மிகம் பற்றி?
இளையராஜா மீது வைத்திருந்த பற்றின் காரணமாகப் கோபப்பட்ட கமல்?
'காசி' படத்தில் நீக்க மறுத்த வரிகள்?
இளையராஜா தன் மீது கொண்ட அக்கறை?
- இப்படி இன்னும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார், கவிஞர் மு.மேத்தா. அவரது பேட்டியை வீடியோவில் பார்க்கலாம்!