
“திருந்தியவர்களுக்கு நன்றி!”
குறுகிய காலத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்கள். புதிதாகக் கட்டிய யோகிபாபு வீட்டுக்குள், டிவி சேனலில் யோகிபாபு காமெடி காட்சிகள் ஓடிக்கொண்டிருக்க... “கவுண்டமணி - செந்தில், வடிவேலுனு லெஜண்ட்ஸை இதே சேனல்ல பார்த்து ரசிச்சிருக்கேன். இப்ப நானும் வர்றேன்ங்கறது சந்தோஷம் ப்ரோ” என்றபடி வந்தார் யோகிபாபு. `ஓடி ஓடி’ நடித்துக் கொண்டிருப்பதால் இன்னும் இளைத்திருந்தார்.

“நான்காவது முறையா விஜய்யுடன் நடிக்கப்போறீங்க. எப்படி இருக்கு இந்த அனுபவம்?”
“ ‘தெறி’, ‘மெர்சல்’, ‘சர்கார்’ படங்கள்ல அவர்கூட நடிச்சேன். ‘தெறி’ படத்துல சில காட்சிகளுக்குத்தான் வந்தேன். ‘மெர்சல்’ படத்துல அப்பப்போ கலாய்க்கிற கேரக்டர். ‘சர்கார்’ படத்துலதான், கதையோடு பயணிக்கிற கேரக்டர் கிடைச்சது. ‘தெறி’ ஷூட்டிங் சமயத்துலேயே ‘அண்ணே, செம கேரக்டர் ஒண்ணு வெச்சிருக்கேன். நீங்கதான் பண்ணணும்’னு அட்லீ சொல்லியிருந்தார். சொன்ன மாதிரியே ‘விஜய் 63’ படத்துல எனக்கு நல்ல ரோல் கொடுத்திருக்கார். தீபாவளிக்கு ரிலீஸ் பிளான் வெச்சிருக்காங்க, வேற லெவல்ல வருது! வெயிட் பண்ணிப் பாருங்க.”
“ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினி இணையும் படத்திலும் நடிக்கிறீங்களாமே?!”
“ ‘பேட்ட’ படத்திலேயே ரஜினி சார்கூட நடிக்க வேண்டியது. அவர்கூடவே வர்ற ரோல்தான். வேற படங்கள் போய்க்கிட்டிருந்ததனால, வாய்ப்பு கை நழுவிப் போயிடுச்சு. வருத்தமா சுத்திக்கிட்டிருந்தேன். இப்போ, இந்த வாய்ப்பு, அந்த வருத்தத்தைப் போக்கிடுச்சு. ‘சர்கார்’ ஷூட்டிங்ல, ‘அடுத்து ஒரு நல்ல செய்தி இருக்கு. நாம பண்ணுவோம்’னு முருகதாஸ் சார் சொன்னார். அந்த நல்ல செய்தி, ரஜினி சார் படம்னு தெரிஞ்சப்போ, அவ்ளோ சந்தோஷம். ஷூட்டிங் ஷெட்யூல் பிளான் பண்ணிட்டிருக்காங்க. இந்த முறை வாய்ப்பை மிஸ் பண்ணமாட்டேன்.”

“இடைவெளியே இல்லாம, ஷூட்டிங்ல பிஸியா இருப்போம்னு என்னைக்காச்சும் நினைச்சிருக்கீங்களா?”
“நான் நடிச்ச காட்சிகளுக்கு மக்கள் சிரிச்சு கை தட்டுறதைப் பார்த்திருக்கேன். ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத் தியேட்டர்ல பார்க்கிறப்போ, ஜெர்க் ஆகிட்டேன். காரணம், என் என்ட்ரிக்கு மொத்தத் தியேட்டரும் கை தட்டி, விசில் அடிச்சு என்ஜாய் பண்ணுனாங்க. ‘ரைட்டு... மக்கள் நம்மளையும் கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இனிமே ரொம்ப ஜாக்கிரதையா நடிக்கணும்’னு தோணுச்சு. என்னை இந்தளவுக்கு ரசிப்பாங்கன்னு நான் நினைச்சதில்லை. ஆனா, 15 வருடம் ஓடியாடி அலைஞ்சதுக்கு பதில் கிடைக்காம இருக்காதுன்னு நினைச்சிருக்கேன். அந்தப் பதில்தான், மக்களோட கைத்தட்டலா எனக்குக் கிடைக்குது.”
“இதுவரை நடிச்ச கேரக்டர்களில், பர்சனலா உங்களுக்குப் பிடிச்ச கேரக்டர் எது?”
“ ‘ஆண்டவன் கட்டளை’ முத்துப்பாண்டி கேரக்டர் ரொம்பப் பிடிக்கும். அந்தப் படத்தில் ஒரு கேரக்டரா மக்கள் என்னைப் பார்த்தாங்க. அந்த மேஜிக், இயக்குநர் மணிகண்டனுக்குத் தெரியும். பத்து நிமிடம் வந்தாலும், அந்தக் கேரக்டருக்கான எமோஷன் அதிகம். எனக்கு ரொம்பப் பிடிச்ச இன்னொரு கேரக்டர், ‘பரியேறும் பெருமாள்’ ஆனந்த். சமூகத்துக்கு இப்போ என்ன தேவையோ அதை இந்தப் படமும், என் கேரக்டரும் பேசியிருக்கும். அதனாலேயே ஆனந்த் கேரக்டர் எனக்கு ரொம்ப நெருக்கம்!”
“ ‘பரியேறும் பெருமாள்’ படம் பேசுன அரசியலை, நிஜ வாழ்க்கையோட தொடர்புபடுத்திப் பார்த்தீங்களா?”
“அப்படியே கம்முனு போயிடணும்னு தோணுது. ஒண்ணு சொல்லி எல்லாமே சரியா நடந்தா, போராடலாம். இங்கேதான் எல்லாமே வேறமாதிரி இருக்கே! அதனால, அது எதிலும் நான் தலையிட மாட்டேன். அந்தப் படத்துல கதிர் கடைசியா, ‘நீங்க நீங்களா இருக்கிற வரைக்கும், நான் நாயாதான் இருக்கணும்னு நீங்க எதிர்பார்க்கிற வரைக்கும் இங்கே எதுவும் மாறாது’ன்னு சொல்வார்ல, அதுதான் விஷயம். இதைப் பார்த்துட்டு யாராவது மாறியிருந்தா, அவங்களுக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன்.”
“இப்போ எத்தனை படத்துல ஹீரோவா நடிக்கிறீங்க?”
“நான் எந்தப் படத்திலேயும் ஹீரோ இல்லை. ‘கூர்க்கா’ படத்துல மெயின் கேரக்டர்ல நடிக்கிறேன். படம் பார்த்தா, யார் ஹீரோன்னு உங்களுக்குப் புரியும். ‘தர்மபிரபு’ படத்திலும் நான் ஹீரோ இல்லை. ‘லக்கிமேன்’ படத்துல கவுண்டமணி - செந்தில் எப்படி வந்தாங்களோ, அதுமாதிரி நானும், ரமேஷ் திலக்கும் வருவோம். இதுவரை ஹீரோவா எந்தப் படத்திலும் நடிக்கலை. என்னுடைய ஸ்க்ரிப்ட்ல ஒரு டிஸ்கஷன் போய்க்கிட்டிருக்கு. ‘யா யா’ பட இயக்குநர் ராஜசேகர்கிட்ட கதையைச் சொல்லியிருக்கேன். தயாரிப்பாளர் கூடவும் மீட்டிங் நடந்தது. கதை நல்லா இருக்குன்னு சொல்லியிருக்காங்க. ஹீரோவா வேற ஒருத்தரை வெச்சுப் பண்ணலாம்னு நான் சொன்னேன். தயாரிப்பாளரும் இயக்குநரும் ‘லைவான விஷயமா இருக்கிறதால, நீங்களே பண்ணுங்க’ன்னு சொல்லியிருக்காங்க. அதைப் பண்ணுனா, என் கரியர்ல அது மட்டும்தான் ஹீரோ சப்ஜெக்ட்ல வரும்.”
“பெரிய ஹீரோக்கள் எல்லாம் உங்க கால்ஷீட்டுக்கு வெயிட் பண்றாங்களாமே... இதைக் கேட்கும்போது, எப்படி இருக்கு?”
“ஒரு பக்கம் பயமா இருக்கு, இன்னொரு பக்கம் சந்தோஷமா இருக்கு. விஜய் சார் ஆகட்டும், அஜித் சார் ஆகட்டும்... அவங்களுக்கும் இது தெரியும். ‘விஸ்வாசம்’ பண்ணும்போது, ‘உங்களுக்கு இன்னொரு பட ஷூட்டிங் இருக்குல்ல. முடிச்சுட்டு வந்திடுங்க’ன்னு சொல்லி அனுப்பி வெச்சார், அஜித் சார். விஜய் சார்கூட என்னை இப்படிச் சொல்லி அனுப்பி வெச்சிருக்கார். ஜெயம் ரவி சார் எனக்கு ரொம்ப க்ளோஸ். என்னை வெச்சு டைரக்ஷன் பண்ணப்போறதா சொல்லியிருக்கார். அதுக்காக ரெண்டு மாசமா, வீட்டுலதான் இருக்கார். ‘என்னய்யா இப்படி உட்கார வெச்சிட்ட’ன்னு அப்பப்போ ஜாலியா கலாய்ப்பார். ஆனா, என் கன்டிஷன் என்னன்னு அவருக்குத் தெரியும். ‘நல்லபடியா எல்லாத்தையும் முடிச்சுட்டு வாங்க, பண்ணுவோம்’னு சொல்லியிருக்கார். பல நடிகர்கள், ‘அவரை அனுப்பிவிடுங்க, போயிட்டு வரட்டும்’னு சொல்வாங்க. இப்போகூட விஷால் சார் பட ஷூட்டிங்கை முடிச்சிட்டு, இன்னொரு படத்துக்கான ஷூட்டிங் கிளம்பிட்டேன். அதை முடிச்சுட்டு ஜோதிகா மேடம் பட ஷூட்டிங்கிற்குப் போகணும். இப்படித்தான் வண்டி ஓடிக்கிட்டிருக்கு!” என்றவர், டாட்டா காட்டிவிட்டு ஷூட்டிங் கிளம்புகிறார்.
தார்மிக் லீ - படங்கள்: தி.குமரகுருபரன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ஆனந்தவிகடன் ட்விட்டர் பக்கத்தில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு யோகிபாபுவின் பதில்கள்:
twitter.com/TweetRealityMan : “கவுண்டமணிக்கு செந்தில் மாதிரி, யோகி பாபுவுக்கு யாரைச் சொல்வீங்க?”
“ ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் அண்ணன் செட் ஆவார்.”
twitter.com/BALAJIn3737 : “நடிகர் ஆவதற்கு முன் யோகி பாபு எப்படி, ஆன பிறகு எப்படி?”
“நடிக்கிறதுக்கு முன்னாடி ரொம்ப அதிகமா முடி வெச்சிருந்தேன். நடிகர் ஆனதுக்கப்புறம் கொஞ்சம் கம்மி பண்ணியிருக்கேன்.”
twitter.com/sreemk29: “முதல் ‘கோலமாவு கோகிலா’ யார்?”
“கோலம் போடும்போதுதான் பார்த்தேன். அவங்க அப்பா துரத்தினார்னு ஓடிட்டேன்.”
twitter.com/NameisRamganesh: “திரைத்துறையில் சாதிக்கத் தேவை திறமையா, நேர்மையா?”
“திறமையை நேர்மையா வெளிப்படுத்துறதுதான்!”
twitter.com/gmuruganandi : “சிக்ஸ்பேக் வெச்சு ஹீரோவா நடிப்பீங்களா?”
“நீங்க வேற... சோறு வெச்சா நல்லா சாப்பிடுவேன். சிக்ஸ்பேக்லாம் வேலைக்கு ஆகாது. நான் காமெடி பீஸு. நமக்கு என்ன வருமோ, அதைப் பண்ணிட்டுப் போயிட்டே இருக்கணும்.”
twitter.com/sathish31121990 : “உங்க முதல் சம்பளம்?”
“ ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில கிடைச்ச 50 ரூபாய்.”
twitter.com/yakoopsam: “நடிக்க வந்தப்போ, ‘இவன்லாம் நடிக்க வந்துட்டான்’னு யாராவது கஷ்டப்படுத்தியிருக்காங்களா? அதை எப்படி ஃபேஸ் பண்ணீங்க?”
“100-க்கு 25 பேர்தான் சொல்லாம இருந்தாங்க. பாக்கி 75 பேரும் இதைச் சொன்னாங்க. அதையெல்லாம் இப்போ இருக்கிற ஃபேஸை வெச்சுதான், அப்போவும் ஃபேஸ் பண்ணினேன்.”