Published:Updated:

டு லெட் - சினிமா விமர்சனம்

டு லெட் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
டு லெட் - சினிமா விமர்சனம்

டு லெட் - சினிமா விமர்சனம்

‘வீடு’ என்ற பெயரில் காற்றோட்டமும் வெளிச்சமும் இல்லாத நான்கு சுவர்கள் உங்களுக்குக் காட்டப் படும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்? இத்தனை ஆண்டுக்காலம் உங்கள் காதலில், மகிழ்ச்சியில், கூடலில், ஊடலில், குழந்தைகளின் ஒவ்வொரு பருவத்திலும் உடன் பயணித்த ஒரு வீட்டைக் காலி செய்ய, இருக்கும் அத்தனை பொருள்களையும் மூட்டை கட்டி வைத்திருக்கும் போது ஒரு வெறுமை உங்களை அப்பியிருக்கிறதா? நீங்கள் குடியிருந்த வாடகை வீடு, இன்னொருவருக்கு வாடகைக்கு விடப்படும் போது, ஒவ்வொரு குடும்பமாய் உங்களின் அந்தரங்கத்தைக் குலைக்கும்படி வந்து வீட்டைச் சுற்றிப்பார்க்கும் அவஸ்தையை அனுபவித்தி ருக்கிறீர்களா? - இந்த உணர்வுகளை எந்தப் பாசாங்கும் இல்லாமல் இயல்பாய்ப் பதிவு செய்திருக்கும் படம் ‘டு லெட்.’ 

டு லெட் - சினிமா விமர்சனம்

வணிக சினிமாவின் சுவடுகள் இல்லாமல் ஒரு வாழ்வியல் சுவடுகளைத் தந்ததற்காகவும் அதை உலக அரங்கில் காட்சிப்படுத்திப் பல சர்வதேச விருதுகளை வென்றதற்காகவும் வாழ்த்துகள் செழியன்!

நிரந்தர வருமானம் இல்லாத குருவிக்கூட்டுக் குடும்பம், இளங்கோவுடையது. மனைவி அமுதா, மகன் சித்தார்த். வாழ்க்கை, வாடகை வீடுகளைத் தேடி ஓடவைக்கிறது.  குறுகிய கால அவகாசத்தில் வீட்டைக் காலி செய்யவேண்டிய கட்டாயத்தில் கணவனும் மனைவியும் சென்னைப் பெருநகரில் வீடு தேடுகிறார்கள். இந்தத் தேடலுக்கிடையிலான மகிழ்ச்சியும் துயரமும் நிறைந்த சம்பவங்களே கதை. 

டு லெட் - சினிமா விமர்சனம்

இளங்கோவாக, சந்தோஷ் நம்பிராஜன். கலைக்கனவு கைகூடாமல் அலைந்துதிரியும் படைப்பாளியாக, தன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற இயலாத இயலாமைப் பொசுங்கலில் வதைபடும் குடும்பத் தலைவனாக, இயல்பான உணர்வுகளைப் பதிவுசெய்திருக்கிறார். மனைவி அமுதாவாக, ஷீலா ராஜ்குமார். தன் கணவனின் கலைமுயற்சிகளுக்குத் துணைநிற்க வேண்டும் என்ற மனவிருப்பத்துக்கும் அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகளுக்கும் இடையில் அல்லாடும் மனைவியாக யதார்த்தத்தைத் தன் நடிப்பில் வார்த்திருக்கிறார் ஷீலா.  ‘லூசுப் பய’  என்று செல்லம் காட்டும்போதும், ‘நான் ஒண்ணு சொல்வேன், திட்டமாட்டியே!’ என்று தயங்கித் தயங்கி உரையாடலைத் தொடரும்போதும் வீட்டு உரிமையாளர்முன் அடங்கிப் பணிந்து நிற்கும் அவலக்காட்சிகளின்போதும் நாம் அன்றாடம் காணும் பெண்களை அப்படியே கண்முன் கொண்டுவந்திருக்கிறார்.  ‘நீ எலி, நான் சிங்கம்’, ‘நான் இனிமே சுவத்தில கிறுக்கமாட்டேன்’ என்று குழந்தைமையை இயல்பாய்ப் பதிவு செய்யும் குழந்தை நட்சத்திரம் தருணும் நம் மனங்களில் நிறைகிறார். மூவரும் நடிக்கிறார்கள் என எண்ணவைக்காமல் ஓர் அசலான குடும்பத்தின் வாழ்வைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றவைத்திருக்கிறது இவர்களின் பங்களிப்பு. 

டு லெட் - சினிமா விமர்சனம்

வீட்டு உரிமையாளராக வரும் ஆதிரா, அவரின் கணவராக வரும் ரவி சுப்ரமணியம், மீடியேட்டராக வரும் அருள் எழிலன், ஐடியில் பணிபுரிவதாக விசிட்டிங் கார்டு அடிக்கச் சொல்லும் இயக்குநராக ஆறுமுகவேலு, ஆயிரம் சம்பிரதாயங்கள் பார்க்கும் சேட்டு என்று ஒவ்வொரு பாத்திரமும் சித்திரமாய்ச் செதுக்கப்பட்டிருக்கிறது.

குருவி ஒன்று வீட்டின் மின்விசிறியில் அடிபட்டு இறக்கும் காட்சி, ஜன்னல் வழியே முதியவர்களைப் பார்த்துவிட்டு, ‘வீடு வேண்டாம்’ எனத் திரும்புகிற காட்சி, இடிக்கப்படும் வீடு, அந்தச் சுவரில் படர்ந்து சிரிக்கும் சின்னக் குழந்தையின் கிறுக்கல்கள் என எளிமையான காட்சிகளை வலிமையாகக் கடத்தியிருக்கிறார், ‘இயக்குநர்’ செழியன்.

டு லெட் - சினிமா விமர்சனம்



அடிக்கடி இருட்டிப்போகிற அந்த வீடு, இருளுக்குள் உரையாடுகிற தம்பதிகள், நினைவுகளைச் சுமக்கும் சுவர்கள், காலி செய்த வீட்டின் மூலையில் கிடக்கும் பென்சில் துண்டு, அடிக்கடி பதற்றப் படவைக்கும் வாசல் கதவுகள்... ஒரு வீட்டின் அத்தனை சதுர அடியையும் அளந்து விழுங்கியிருக்கிறது, செழியனின் கேமரா. காட்சிகளை வில்லை வில்லையாக எடுத்து அடுக்கியிருக்கிறார், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். சூழலில் சுழன்று கொண்டிருக்கும் சப்தங்களையே பின்னணி இசையாக்கியிருக்கும் விதமும் ரசனைதான்.

ஆனால் டைட்டிலில் காட்டப் படுவதுபோல் ஐ.டி.துறை வளர்ச்சி குறித்த காட்சிகள் படத்தில் இல்லையே, நாயகனின் பிரச்னை பொருளாதாரப் பற்றாக்குறையா, சமரசமற்ற கனவுகளா, இவர்களை  வீட்டைக் காலி செய்யச் சொல்வதற்கான காரணம் என்ன, 2007-ல் மினி பேருந்துகள் ஓடுவது தர்க்கமீறல் இல்லையா, இத்தனை பொருளாதார நெருக்கடிக்கு இடையில் குழந்தை படிக்கும் வசதியான பள்ளி என்று பல கேள்விகளும் எழுகின்றன.

என்றபோதும் ‘‘இந்த டி.வி நம்மோடது. இந்த வண்டி நம்மோடது. இந்த வீடு மட்டும் ஏன்பா நம்மோடது இல்லை?” என்ற கேள்விகள், படம் முடிந்து வந்தபிறகும் நம் மனதில் எதிரொலிப்பது, ‘டு லெட்’ படத்தின் வெற்றி.

- விகடன் விமர்சனக் குழு