Published:Updated:

கண்ணே கலைமானே - சினிமா விமர்சனம்

கண்ணே கலைமானே - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணே கலைமானே - சினிமா விமர்சனம்

கண்ணே கலைமானே - சினிமா விமர்சனம்

ங்கியில் விவசாயக் கடன் வாங்கும் இயற்கை விவசாயிக்கும், வங்கி மேலாளருக்கும் காதல், கல்யாணம், அதைத் தொடர்ந்து பெரும் துயரம்! இந்த ஒரு வரிக் கதைக்குள் குடும்பம், உறவுச் சிக்கல், சமூகக் கடமை, கிராமத்து வாழ்வியல் எனப் பல விஷயங்களை உள்ளடக்கிச் சொல்ல முயலும் படம் ‘கண்ணே கலைமானே.’

கண்ணே கலைமானே - சினிமா விமர்சனம்

‘மனிதன்’, ‘நிமிர்’ படங்களின் வரிசையில், நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் ஒரு கேரக்டரில் உதயநிதி. கொஞ்சம் கொஞ்சமாகத் தன் நடிப்பில் மெருகேறிவருகிறார். ஊருக்கு ராஜாவாக இருந்தாலும், வீட்டுக்குக் கட்டுப்படும் காட்சிகளிலும், க்ளைமாக்ஸில் பாட்டியைக் கட்டித்தழுவி அழும் காட்சியிலும் நடிப்பில் முதிர்ச்சி. 

கண்ணே கலைமானே - சினிமா விமர்சனம்

வழக்கமான சினிமா ஹீரோயினாக இல்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் தமன்னாவுக்கு.  கேரக்டருக்கு ஏற்ற உடல்மொழி இருந்தாலும், டப்பிங்கில் கவனிக்கப்படாத லிப்சிங்க் அதைக் குலைக்கிறது. நம் கிராமங்களில் இன்னும் வாழும் அப்பத்தாவாக வடிவுக்கரசி. ‘பூ’ ராமு, ஷாஜி, வசுந்தரா என யாருடைய நடிப்பிலும் குறைவில்லை.

யுவனின் பின்னணி இசை படத்தின் ஓட்டத்துக்குப் பரபரப்பைச் சேர்க்கிறது. மதிச்சியம் பாலா குரலில் ‘அழைக்கட்டுமா தாயே அழைக்கட்டுமா’ தாளம்போட வைக்கிறது. கிராமத்து அழகைப் பொருத்தமாய்ப் படம் பிடித்திருக்கிறது ஜலேந்தர் வாசனின் கேமரா.

கண்ணே கலைமானே - சினிமா விமர்சனம்



வழக்கம்போல் சமூக அக்கறை சார்ந்த விஷயங்களை இந்தப் படத்திலும் கதைக்களமாக்கியிருக்கிறார் சீனுராமசாமி. திரைமுழுக்க நிரம்பியிருக்கும் கதாபாத்திரங்கள், சாதி எதிர்ப்பு, பாரம்பர்யம், பெண்ணியம், அரசியல், சுற்றுச்சூழல், நீட் தேர்வு என எல்லாவற்றையும் ஆங்காங்கே பேசுகிறார்கள். ஆனாலும், இத்தனையையும் பேசி, திரைக்கதைக்குள் அதில் எதுவும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் சோகம்.

படத்தின் முதல் பாதியில் கதை எதை நோக்கி நகர்கிறது என்பதை யூகிக்க முடியவில்லை என்றாலும், இரண்டாம் பாதியில் வரிசையாகப் பல பிரச்னைகள் காட்டப் படுகின்றன. இருந்தாலும், அதில் எதுவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் அப்படியே கடந்துவிடுவதால் படத்துடன் ஒன்றமுடியவில்லை. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப கடைசியாக தமன்னா கதாபாத்திரத்துக்குப் பார்வைக் கோளாறு என ஒரு சிக்கலைக் கொண்டுவந்தாலும் அதற்கும் எந்த ஒரு எதிர்வினையும் படத்தில் இல்லாமல்போவது பெரும் ஏமாற்றம்.

ஆழமான சமூக அக்கறை இருந்தாலும் அழுத்தமான திரைக்கதை இல்லாததால் ‘கண்ணே கலைமானே’ என்று கொஞ்ச முடியவில்லை.

- விகடன் விமர்சனக் குழு