Published:Updated:

இது அறத்துக்கு கிடைத்த ஆஸ்கர்!

இது அறத்துக்கு கிடைத்த ஆஸ்கர்!
பிரீமியம் ஸ்டோரி
News
இது அறத்துக்கு கிடைத்த ஆஸ்கர்!

இது அறத்துக்கு கிடைத்த ஆஸ்கர்!

``வீடு நிறையும் அளவுக்கு விருதுகள் வாங்கியாச்சு. விருது வாங்கும்போது இருக்கும் சந்தோஷத்தைவிட மிகப்பெரிய விருதுகள் கிடைக்கும்போது, ‘ஏன் அவருக்கு இந்த விருது கொடுத்திருக்காங்க, அப்படி அவர் என்ன செஞ்சுட்டார்’னு மக்கள் தேடுவாங்க; அதைப் பற்றி விவாதிப்பாங்க. அப்படியான தேடல்களும் விவாதங்களும்தான் எனக்குத் தேவை” தெளிந்த நீரோடையைப்போலப் பேசுகிறார் முருகானந்தம்.

இது அறத்துக்கு கிடைத்த ஆஸ்கர்!

ஆவணப்  படங்களுக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது ‘பீரியட். எண்டு ஆப் சென்டென்ஸ்’ (Period. End of Sentence) என்கிற ஆவணப் படம்.  மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கைகள் இந்தியப் பெண்களை எப்படி வதைக்கிறது என்பதையும், அதை எதிர்கொள்ள அவர்கள் நடத்தும் போராட்டத்தையும் அசலாக ஆவணப்படுத்தியிருக்கிறார் ஈரானிய–அமெரிக்கரான ரைகா ஜெஹ்தாப்சி. 26 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படத்தின் ஆணிவேர்  கோவையைச்  சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பதுதான்  தமிழர்களுக்கான பெருமிதம்.

அருணாச்சலம் முருகானந்தம்... அறிமுகம் தேவையில்லாத ஆளுமை. ஏழை எளிய பெண்களும் நாப்கின் உபயோகிக்க வேண்டும் என்கிற உயர்ந்த எண்ணத்தில்  பல வலிகளைக் கடந்து மலிவு விலை நாப்கின்கள் தயாரிக்கும் இயந்திரத்தைப் உருவாக்கிக் காட்டியவர். .  அக்‌ஷய்குமார் நடிப்பில் வெளியான ‘PAD MAN’  திரைப்படம், பத்மஸ்ரீ விருதுபெற்ற இவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான். ‘PAD MAN’ முருகானந்தத்தையும் அவருடைய கண்டுபிடிப்பையும் இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தது. இப்போது கிடைத்திருக்கும் ஆஸ்கர் அங்கீகாரம் அவர் மீதான வெளிச்சத்தை  அதிகப் படுத்தியிருக்கிறது.

 “விஜயவாடாவைத் தாண்டிப் போனால் உண்மையான இந்தியாவின் முகத்தைப் பார்க்கலாம். அங்கே ஒரு பெண் மாதவிடாய்க் காலத்தில் பயன்படுத்திய பழைய துணியை எடுத்து டெஸ்ட் செய்து பார்த்தோம் அதில் 12 மில்லியன் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. அந்தப் பெண்ணால் எப்படி ஆரோக்கியமாக வாழ முடியும்?

ஒரு கிராமத்தில் இருபது முப்பது பெண்களைச் சேர்த்து அவர்களிடம் மெஷினைக் கொடுத்து நாப்கின் செய்யும் முறையும் சொல்லிக் கொடுத்துவிட்டால் போதும்! அது அந்த இருபது முப்பது பேருக்கான வேலை வாய்ப்பு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பெண்களுக்கு மலிவான விலையில் நாப்கின்களைக் கொண்டு சேர்ப்பதற்கான மிகப்பெரிய யுக்தி.

இது அறத்துக்கு கிடைத்த ஆஸ்கர்!

ஒன்றுமே அறிந்திராத, கட்டுப் பாடுகளும் பழைமை வாதங்களும் நிறைந்திருக்கும்  ஒரு குக்கிராமத்திற்குச் சென்று நாப்கின் தொடர்பாகப் பேசி இருபது முப்பது பெண்களைத் திரட்டுவது அவ்வளவு எளிதான வேலை இல்லை. சொந்தக் கணவனிடமே  இதைப்பற்றிப் பேச தயங்கும் நம்   சமூகக் கட்டமைப்பில் இது எவ்வளவு சிக்கலான விஷயம் என்பதை உங்களால் உணர்ந்துகொள்ள முடியும். வட மாநிலங்களில் ஏராளமான மூடநம்பிக்கைகள். காப் பஞ்சாயத்து என்று ஒரு சிஸ்டம் வைத்திருக்கிறார்கள். அவர்கள் பெண்களுக்கு விதித்துள்ள கட்டுப் பாடுகளெல்லாம் கொடுமையானது. பெண்களை நாப்கின் தயாரிக்கவே அனுப்ப மாட்டார்கள், வரும் ஒரு சில  பெண்களைக்கூட ஆண்கள் வந்து அடித்து இழுத்துச் செல்வார்கள். அதுபோன்ற ஏராளமான் இடங்களில் என்னுடைய மெஷின் தடம் பதித்திருக்கிறது. எனக்கும் பல அடிகள் விழுந்திருக்கின்றன. ஒரு மெஷினைத் தயாரிப்பதைவிட அதை ஒரு குக்கிராமத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் பெரிய சவால்.

மெஷின் தயாரிப்பதற்கு நான் பட்ட கஷ்டங்கள் `PAD MAN’ படமானது. ‘பீரியட். எண்டு ஆப் சென்டென்ஸ்’ படத்தில் மெஷின்களை கிராமங்களுக்குக் கொண்டு செல்வதில் உள்ள சவால்களைத்தான் ஆவணப் படுத்தியுள்ளார்கள்.

இது அறத்துக்கு கிடைத்த ஆஸ்கர்!

12 ஆண்டுகளில் 5,160 கிராமங்களில் என்னுடைய மெஷின்களை நிறுவிக்கொடுத்துள்ளேன். அதன்மூலம் 1,18,000 பெண்களுக்கு நேரடி வேலை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளேன். இந்தியாவைத் தவிர 24 நாடுகளுக்கு என்னுடைய மெஷின் சென்றடைந்திருக்கிறது.  இதை யாருக்கும் நேரடியாக விற்பனை செய்வதில்லை. ஒவ்வொரு கிராமமாகச் சென்று பெண்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். அதன்பிறகு என்னுடைய மெஷினை அந்த கிராமத்தின் ஏதாவதொரு இடத்தில் நிறுவி நாப்கின் தயாரிக்கப் பயிற்சி கொடுப்போம். மெஷினுக்கான தொகைக்கு வங்கிக்கடன் ஏற்பாடு செய்து கொடுத்துவிடுவோம். அவர்கள் தயாரிக்கும் நாப்கினுக்கு அவர்கள் விருப்பப்படி பெயர் வைத்துக்கொள்ளலாம். மெஷினுக்கான வங்கிக் கடனை அடைத்த பிறகு,  அதில் வரும் மொத்த லாபமும் அந்தப் பெண்களுக்கே; அவர்களே அதன் உரிமையாளர்கள். அதன் பிறகு எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை’’ என்றவரிடம், ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதைப் பற்றிக் கேட்டேன், “ஆஸ்கர் கிடைத்ததில் மகிழ்ச்சிதான். ஆனால், எந்த விருதும் நான் தேடிச் செல்லும் நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் சாலைகளே இல்லாத கிராமப் பெண்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி விடாது. அங்கு நான் வெறும் முருகானந்தம்தான்’’ என்றவர், ``எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. உத்தரகாண்ட்ல தெகிரிங்கிற கிராமத்துக்கு மெஷின் நிறுவச் சென்றிருந்தேன். எருமைமாடுகளை மேய்ப்பதையே வாழ்க்கையாகக் கொண்ட குஜ்ஜர்ஸ் இன மக்கள் நிறைந்த கிராமம் அது. மெஷின் நிறுவிவிட்டு வந்த சில மாதங்கள் கழித்து அந்த கிராமத்திலிருந்து ஒரு பெண் எனக்கு போன் செய்தார், `அண்ணா, நீங்க இங்கே வரும்போது பள்ளிக்கூடத்தைப் பாதியிலேயே நிறுத்தின ஒரு பெண்ணைப் பார்த்து வருத்தப்பட்டீங்கள்ல... அந்தப் பொண்ணு இப்போ ஸ்கூலுக்குப் போறா’ன்னு சொன்னாங்க. அதுதான் எனக்கான ஆஸ்கர்’’ என்று முடிக்கும்போது முருகானந்தம் குரலில் அவ்வளவு நிறைவு.

எம்.புண்ணியமூர்த்தி - படங்கள்: தி.விஜய்