Published:Updated:

கச்சேரியில் வந்த காதல் கடிதம்!

கச்சேரியில் வந்த காதல் கடிதம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கச்சேரியில் வந்த காதல் கடிதம்!

மதுரை சோமு 100

‘ராட்சசப் பாடகர்’ என்று அந்த நாளில் வர்ணிக்கப்பட்ட மறைந்த இசை மேதை மதுரை சோமுவுக்கு (1919 - 2019) இது நூற்றாண்டு வருடம். 

கச்சேரியில் வந்த காதல் கடிதம்!

அவர் வாழ்ந்த காலங்களில் மதுரை வீதிகளில் ஒன்றில் நின்று, எதிர்ப்பட்ட ஒருவரிடம் அந்த மகா வித்வானின் விலாசத்தை விசாரித்தால், அவர் முதலில் சிரிப்பார். ‘`மதுரையில் அவருக்கு எதுக்குங்க விலாசம்? பச்சைக் குழந்தைகிட்டே அவர் பேரைச் சொன்னால் போதும், வீட்டு வாசலில் கொண்டு போய் விட்டுவிடுமே...” என்பார்.

ஆமாம். அவரது புகழ், விலாசத்தைக் கடந்தது!

கட்டையான உயரம். வஜ்ரக்கட்டை மாதிரி தேகம். ஆனால், வெண்ணெய் போல் கலை உருகிப் பளபளத்து நிற்பது போன்ற முகம். வெற்றிலை பாக்குக் குதப்பிய வாய். விபூதி, குங்குமம் பூசிய நெற்றி. அரைக் கண்ணை மூடிக்கொண்டு குழந்தையாய்ச் சிரிக்கும் உதடுகள் - இதுதான் சங்கீத வித்வான் மதுரை சோமு.

சிறு வயதிலிருந்தே மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் பாடல்களில் சோமுவுக்கு ஒரு மோகம் உண்டு. ஒரு நாள் கோயமுத்தூரில் மோகனம் பாடியிருக்கிறார் மகாராஜபுரம். அதைக் கேட்ட சோமு, “அண்ணா... நீங்கள் மோகனம் பாடணும். நான் அதுல இருந்து எடுத்துக்கணும்...” என்றார்.

“கலைஞன் ஒவ்வொருவர்கிட்டேயும் ஒரு அம்சம் இருக்கிறது. அதுல எது சிறந்ததா இருக்கோ அதை எடுத்துக்கணும்... அதை மாற்றி விருத்தி பண்ண நமக்கு முடியலேன்னா அதையே பின்பற்றிப் பாடலாம். தப்பில்லே. அது விஷயமா என்னைச் சிலபேர் குற்றம் சொல்லியிருக்காங்க. அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.!” என்று 1970-களில் விகடனுக்கு அளித்த மூன்று வாரப் பேட்டியில் சொல்லியிருக்கிறார் மதுரை சோமு.

தன் இளமை நாள்களைப் பற்றி அதில், அவர் இப்படிக் கூறியிருக்கிறார், “எங்க பாட்டி நாகரத்தினம் அம்மாள் பெரிய டான்ஸர். தியாகபிரம்மத்தின் சிஷ்யைக்கு சிஷ்யை. எங்கப்பா கலெக்டர் ஆபீஸ் ஹெட் கிளார்க். நான் பத்தாவது பிள்ளை. என் பேர்ல வாத்தியார்களுக்கெல்லாம் ரொம்பப் பிடித்தம். அவங்க வீட்டிலே போய்ப் பாடுவேன். ஒரே குஷி. என்னை உயரத் தள்ளினாங்க, ஒரு பாடம் கூடத் தெரியாம!

சின்ன வயசுல நான் ரொம்ப காலிப்பய. அந்தக் காலத்துல கால் துட்டுக்கு மூணு மலபார் பீடி. நம்ப ‘செட்’டோட பிடிப்பேன். வீட்டுக்குத் தெரிஞ்சுபோச்சு. அப்போ எனக்குக் குடுமி நீளம். குடுமியை எட்டிப்பிடிச்சிட்டு வெள்ளிப்பூண் பிரம்பாலே சாத்திப்பிட்டார் அப்பா.

ஆரம்பத்துல சுந்தரேச பட்டர்னு ஒரு மகாத்மா. எனக்கு குரு. அவர்கிட்ட ஓசியிலே படிச்சேன். நல்லா உதையும் வாங்கினேன். குருகுலம் படிப்புன்னா அப்படித்தான். இட்லி மாவு அரைக்கணும். வேட்டி, துணி துவைக்கணும். வீடு பெருக்கணும். 

அப்போ மதுரைல சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை கச்சேரி எங்கே நடந்தாலும் போய்க் கேட்பேன். அந்த மகா வித்வானின் புலமை என் நெஞ்சிலே போட்ட விதை, என்னைப் பைத்தியமா அடிச்சுது. அதே மாதிரி, சுற்று வட்டாரத்திலேயும் அவர் கச்சேரி நடந்தா ஓடிப்போய்க் கேட்பேன். செலவுக்கு என் பிரெண்ட் கோவிந்தராஜ் நாயுடுதான் பணம் கொடுப்பார்.”  

கச்சேரியில் வந்த காதல் கடிதம்!

சங்கீதத்தில் சோமுவுக்குப் பற்று வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில், அவருக்கு வாய்ப்பாட்டைவிட நாகஸ்வரத்தின் மீது ஈர்ப்பு அதிகமாயிற்று. நாகஸ்வர மேதை ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பைக் கேட்டதிலிருந்துதான் இப்படி! தந்தை மிரட்டினார். மகன் மசியவில்லை. சுப்பிரமணியம் என்பவரிடம் நாகஸ்வரம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். ஒரு நாள் சீவாளி குத்தி வாயெல்லாம் புண்ணாகிவிட்டது. `இனிமே நாயனத்தைக் கைல தொட்டியோ தொலைச்சுப்புடுவேன்’ என்று வீட்டில் மிரட்ட, வாய்ப்பாட்டுக்குத் திரும்பினார் சோமு.

தனது பத்தொன்பதாவது வயதில் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையிடம் முறையாக வாய்ப்பாட்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக் கிறார். அப்போது டெபுடி கலெக்டராக இருந்த எஸ்.நாகசுந்தரம் பிள்ளை வாங்கிக்கொடுத்த ஒரு சவரன் பொற்காசுகளை குருவின் பாதங்களில் வைத்துத் தொடங்கி, பதின்மூன்று வருடங்கள் அவரிடமே தொடர்ந்திருக்கிறார். சிட்சை முடிந்ததும் மதுரை சோமுவுக்கு முதல் கச்சேரி 1946-ல் திருச்செந்தூர்முருகன் கோயிலில் நடந்திருக்கிறது. சன்மானமாக ஒரு சவரன் மெடலும், 75 ரூபாயும் கிடைத்திருக்கின்றன!

மதுரை சோமுவின் கச்சேரிகளில் முடிவு நெருங்கும் நேரம் நிறைய துண்டுச் சீட்டுகள் வருவதுண்டு. ஒரு சமயம் கோயம்புத்தூரில் கச்சேரி. கூட்டமான கூட்டம். ரசிகர்களிடமிருந்து கத்தை கத்தையாகச் சீட்டுகள் வந்தன. அவற்றில் காதல் கடிதமும் ஒன்று!

‘உங்கள் மேல் அளவிலாத பிரியம் கொண்டிருக்கிறேன். கச்சேரி முடிந்து என் வீட்டுக்கு வந்து தங்க வேண்டியது. - டி.சுலோசனா’ என்பதாக எழுதப்பட்ட சீட்டு, வீட்டு முகவரியுடன்!

யார் இந்த சுலோசனா என்பது சோமுவுக்குப் புரியவில்லை. பெண்கள் பகுதியைப் பார்த்துப் பாடவே என்னவோ போல் இருக்கிறது. மேடையை விட்டு இறங்கியதும், அந்தப் பெண் குறிப்பிட்ட விலாசம் எங்கிருக்கிறது என்பதை நண்பர்களிடம் நாசூக்காக விசாரித்திருக்கிறார். தான் தங்கியிருந்த லாட்ஜை காலி பண்ணச் சொல்லிவிட்டு, ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து தங்கிக் கொண்டார். பின் ரயிலில் ஏறி உட்கார்ந்து, ரயில் புறப்பட்டதும்தான் ‘அப்பாடா’ என்று இருந்திருக்கிறது அவருக்கு!

“அநேகமாக கலைஞர்கள், எழுத்தாளர்கள் எல்லோருக்குமே இப்படிப்பட்ட நெருக்கடிகள் ஏற்படுவது சகஜம். அது கலையின் கவர்ச்சி. அதில் நிதானமாகவும், பொறுப்புணர்ச்சியோடும் நடந்துகொள்ளும்போதுதான் அந்தக் கலைஞன் பெயரும் பெருமையும் அடைகிறான்...” என்று இந்தச் சம்பவம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார், மதுரை சோமு.

வீயெஸ்வி - ஓவியம்: பிரேம் டாவின்ஸி