சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஒரு வீடு... ஒரு குடும்பம்... ஒரு குழு!

ஒரு வீடு... ஒரு குடும்பம்... ஒரு குழு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வீடு... ஒரு குடும்பம்... ஒரு குழு!

ஒரு வீடு... ஒரு குடும்பம்... ஒரு குழு!

வுஸ் ஓனருக்குக் கட்டுப்படும் வாடகைதாரர்கள் மாதிரி, அத்தனைபேரும் செழியன் வார்த்தைக்குக் கட்டுப் படுகிறார்கள்.
 
“ஹவுஸ் ஓனர் தொல்லை யெல்லாம் வெளிநாடுகள்ல இப்படிக் கிடையாது. பிரான்ஸ்ல ஹவுஸ் ஓனர்ஸ், வாடகைதாரர் வீட்டுக்குள்ளேகூட வரமுடியாது. அதனால் வீட்டு உரிமையாளர் ஆதிக்கம், வெளிநாட்டு ரசிகர்களுக்குப் புதுசா இருந்தது” என்று சிரிக்கும் செழியன், ‘டுலெட்’ டீம் உருவான கதையை விவரித்தார்.

“கதையை எழுதிட்டு, தயாரிப்பாளரைத் தேடினேன், கிடைக்கலை. என் மனைவி பிரேமாதான், ‘நாமளே தயாரிக்கலாம்’னு சொன்னாங்க.

ஹீரோ, என் உதவி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் நம்பிராஜன். ஷீலாவின் திறமை எனக்குத் தெரியும். அவங்ககிட்ட இருந்து நான் எதிர்பார்க்கிற நடிப்பை வாங்கிடலாம்னு நினைச்சேன். ஹவுஸ் ஓனர் கேரக்டருக்கு மட்டும் கொஞ்சம் அலைஞ்சோம். ஷூட்டிங் கிளம்புற சமயத்துலதான், ஆதிரா ஞாபகத்துக்கு வந்தாங்க. பார்க்க நோஞ்சானா இருக்கிற, ஹீரோ-ஹீரோயின் சாயலிலேயே ஒரு குட்டிப் பையனைத் தேடினோம். தருண் கிடைச்சான். சந்தோஷ், ஷீலா, தருண்... மூணுபேரும் படத்துல எதார்த்தமா இருந்ததுக்கு இதுவும் காரணம்.

படத்துல முக்கியக் கதாபாத்திரமாவே வர்ற அந்த வீட்டைக் கண்டுபிடிக்கிறதுதான் பெரும்பாடா இருந்தது. கிட்டத்தட்ட 300 வீடுகளைப் பார்த்து, இந்த வீட்டைத் தேர்ந்தெடுத்தோம். குழந்தைக்கு சாக்லேட் எல்லாம் கொடுத்துப் பேசுற ஒரு ஹவுஸ் ஓனரைக் காட்டியிருப்போம்ல... அவங்கதான், இந்த வீட்டின் ஒரிஜினல் ஓனர்ஸ். ஆரம்பத்துல வீட்டை ஷூட்டிங்கிற்குக் கொடுக்க ரொம்பவே யோசிச்சாங்க. கதையோட முக்கியத்துவத்தைச் சொல்லி, அனுமதி வாங்கினோம்.  ‘ஷூட்டிங் முடிஞ்சதும் வெள்ளை அடிச்சுக் கொடுக்கிறோம்’னு சொல்லி, நாலைஞ்சு குழந்தைகளை அனுப்பி, சுவரைக் கிறுக்க வெச்சோம். பழைய டி.வி.எஸ் ஸ்கூட்டரை வாங்கி ஷீலா, தருண், சந்தோஷ் மூணுபேரும் கடைக்குப் போறதும், வர்றதுமா அதுல போயிட்டு வரட்டும்னு பழக்கப்படுத்தினோம். பிராக்டிஸ்ல இப்படி ஒரு வாழ்க்கையை அவங்களுக்குள்ள உருவாக்கிட்டுதான், ஷூட்டிங் போனோம். அதுதான் இயல்பைக் கொடுத்தது” செழியன் முடிக்க, ஹீரோ ஆன கதை சொல்கிறார், சந்தோஷ் நம்பிராஜன்.

ஒரு வீடு... ஒரு குடும்பம்... ஒரு குழு!

“இயக்குநர் ஆகும் முயற்சியில தயாரிப் பாளரைத் தேடிட்டிருந்தேன், கிடைக்கலை. செழியன் சார், ‘இந்தப் படத்துல நடிக்கிறியா?’ன்னு கேட்டார், உடனே தலையாட்டிட்டேன். நடிகர் ஆகிட்டா, என்னை நம்பி தயாரிப்பாளர்கள் வருவாங்கன்னு நினைக்கிறேன். நான் செழியன் சார்கிட்ட உதவி ஒளிப்பதிவாளரா இருந்தப்போ சில வேலைகளை என்கிட்ட சொல்லி சரி பண்ணச் சொல்வார். ஆனா, ‘டுலெட்’ல எல்லா வேலைகளையும் அவரே பார்த்துக்கிட்டார். வேற ஒரு செழியன் சாரை, இந்தப் படம் மூலமா பார்த்தேன். அவர் சொல்லிக்கொடுத்ததைச் சரியா பண்ணியிருக்கேன்னு நம்புறேன்” என முடிக்க,  ஷீலா தொடர்ந்தார்.
 
“நானும் வாடகை வீட்டுலதான் இருக்கேன். கதையில பல சம்பவங்கள் எனக்கு நடந்த மாதிரியே இருந்தது. இப்படி கனெக்ட் ஆனதனாலதான், அமுதா கேரக்டரை ஈஸியா புரிஞ்சுக்கிட்டு நடிக்க முடிஞ்சது. பத்துப் படங்கள்ல கிடைக்கிற அனுபவம் இந்த ஒரு படம் மூலமா கிடைச்சிருக்குன்னுதான் சொல்லணும். தவிர, நடிகர்களால கதை பேசப்படக் கூடாது. கதையால் நடிகர்களோட திறமை தெரியணும்னு நினைப்பேன் நான். எல்லோரும் இப்போ, ‘டுலெட்’ ஷீலான்னு என்னை அடையாளப்படுத்தும்போது, என் பாதையில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்!” என நெகிழ்கிறார், ஷீலா. ஹவுஸ் ஓனராகப் படத்தில் அட்ராசிட்டி செய்த ஆதிரா, நிஜத்திலும் ஹவுஸ் ஓனர்!

“படத்துல வர்றமாதிரி இல்லைங்க நான். நிஜத்துல, ஹவுஸ் ஓனரா நான்தான் ஏமாளியா இருந்திருக்கேன். ஏன்னா, என் வீட்டுல குடியிருந்தவங்க, ‘ஈபி பில்லை ஓனர்தான் கட்டணும்’னு சொல்லி, குடியிருந்தாங்க. பிறகுதான், அதெல்லாம் வாடகைக்கு வர்றவங்கதான் கொடுப்பாங்கன்னு தெரிஞ்சது. நான் துபாய்ல இருந்து சென்னைக்கு வந்திருந்த சமயம் அது. எனக்கென்ன தெரியும்... பல மாசம் இப்படியே ஏமாந்திருக்கேன். பிறகு, வீட்டை வாடகைக்கே விடலையே!” எனச் சிரிக்க, படத்தில் நடித்த அனுபவம் சொன்னார்கள், ஷீலாவும் சந்தோஷும்.

“எந்தக் காட்சியிலும் நான் நடிச்சமாதிரி உணரலை. கஷ்டப்பட்டு நடிச்சதுன்னா, அந்த சிங்கிள் டேக் காட்சியைச் சொல்லலாம். கதையைப் படிச்சிருந்ததனால, ரியலா இருந்தா தான் ஆடியன்ஸை ஏமாத்த முடியாதுன்னு நினைச்சேன். சந்தோஷ் அடிக்கிற காட்சியிலும், அவரைக் கட்டிப்பிடிக்கிற காட்சியிலும் எந்தத் தயக்கமும் இல்லாம உண்மையா நடிச்சேன்.  இந்தப் படத்துல எனக்கு க்ளோஸப் காட்சிகள் நிறைய இருந்தது. இந்த அங்கீகாரம் இப்போ இருக்கிற நடிகைகள்ல யாருக்குக் கிடைக்கும், சொல்லுங்க...” என்கிறார், ஷீலா.

“செழியன் சார்கிட்ட வேலை பார்த்ததால அவரை எனக்குத் தெரியும். அவர் சொல்லிக் கொடுக்கிறதைப் பண்ணுனா போதும்னு இருந்தேன். சித்தார்த் கேரக்டர்ல நடிச்ச தருணை நடிக்க வைக்க, அவனை ஈஸியா ஹாண்டில் பண்ணுனது, ஷீலாதான். அவனை அடிக்கிற மாதிரி ஒரு காட்சி எடுக்கப்போறோம்னா, அந்தப் பையன்கிட்ட ஷூட்டிங் ஸ்பாட்ல பேசவே மாட்டாங்க. அவனே, ‘ஏன் நம்மகிட்ட பேசமாட்றாங்க’ன்னு டல்லாகிடுவான். அதைப் படத்துக்காகப் பயன்படுத்திக்குவோம்” என்றார், சந்தோஷ்.

“கமர்ஷியல் அம்சங்கள் இல்லாத இந்தப் படத்தை தியேட்டர்ல ரிலீஸ் பண்ற யோசனை வரலை. தேசிய விருதுக்குப் பிறகுதான், ‘ஏன் தியேட்டரில் ரிலீஸ் பண்ணக்கூடாது?’ன்னு ஒரு கேள்வி வந்தது. அப்போவும், ஒரு விஷயத்துல தெளிவா இருந்தேன். இங்கே ஒரு படத்தைத் திரைப்பட விழாக்களுக்கு ஒரு வெர்ஷனாகவும், தியேட்டர் ரிலீஸுக்கு ஒரு வெர்ஷனாகவும் ரெடி பண்ணுவாங்க. அதாவது, தலையை ஒரு இடத்திலும், வாலை ஒரு இடத்திலும் காட்டுற கதை. அப்படி இல்லாம, திரைப்பட விழாக்களில் உலக ரசிகர்கள் என்ன பார்த்தாங்களோ, அதையே தமிழ் ரசிகர்களும் பார்க்கணும்னு நினைச்சேன்” என்று செழியன் புன்னகைக்க, மொத்தப் படக்குழுவும் புன்னகையில் இணைகிறது.

- கே.ஜி.மணிகண்டன், சனா

படங்கள்: ப.பிரியங்கா