சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“நண்பன் ஆனது தனுஷின் பெருந்தன்மை!”

“நண்பன் ஆனது தனுஷின் பெருந்தன்மை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நண்பன் ஆனது தனுஷின் பெருந்தன்மை!”

“நண்பன் ஆனது தனுஷின் பெருந்தன்மை!”

‘ஏப்ரல் மாதத்தில்’, ‘ரோஜாக்கூட்டம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘நண்பன்’ எனப்  பல படங்களில் தொடர்ந்து நடித்துவந்த ஸ்ரீகாந்த் இடையில் காணாமல்போய், நீண்ட இடைவேளைக்குப் பின் ஹன்சிகாவுடன் ‘மகா’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

“என்னைப் பொறுத்தவரை, இது எனக்கு நல்ல ஸ்கோப் உள்ள படம். இயக்குநர் ஜமீல், தயாரிப்பாளர் மதியழகன். இது ஒரு இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் படம். நான், ஹன்சிகா, தம்பி ராமையா, கருணாகரன், ஜெனிபர் நடிச்சிருக்கோம். ஜிப்ரான் இசை. ஒரு போலீஸ் அதிகாரியா என் கேரக்டரை ரொம்ப நல்லா வடிவமைச்சிருக்கார், இயக்குநர் ஜமீல். தவிர, இப்போ ஒரு தெலுங்குப் படத்தில் ஹீரோவா நடிக்கிறேன். அந்தப் படத்தின் முதல் ஷெட்யூலை முடிச்சுட்டு, ‘மகா’ ஷூட்டிங், ‘மிருகா’ பட ஷூட்டிங்னு மாறி மாறி போய்க்கிட்டிருக்கேன்.

‘மிருகா’ படத்திற்கு ஒளிப்பதிவாளர், பன்னீர்செல்வம். அவர்தான் திரைக்கதை, வசனமும் எழுதியிருக்கார். இயக்குநர், பார்த்திபன். அவருக்கு இதுதான் முதல் படம். நானும், ராய் லட்சுமியும் ஜோடியா நடிக்கிறோம். இந்தப் படத்தை ரிவர்ஸ்ல எடுக்கிறோம். முதல்ல படத்தின் இரண்டாம் பாதியை எடுத்து முடிச்சுட்டு, பிறகு முதல் பாதி எடுக்கிறதாக ஐடியா.’’

“நண்பன் ஆனது தனுஷின் பெருந்தன்மை!”

‘`தனுஷ் ட்விட்டரில் வாழ்த்தி ஒரு பதிவு போட்டிருந்தார். உங்களுக்கும் அவருக்குமான நட்பு பற்றி?”

‘`நானும் அவரும் ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனத்துக்கு ஒரு படம் பண்றோம். தனுஷ் இயக்கத்தில் அவர், நான், அதிதி ராவ், எஸ்.ஜே.சூர்யா பலரும் நடிச்சிருக்கோம். இப்போ தனுஷ் ‘அசுரன்’ ஷூட்டிங்ல பிஸியா இருக்கார். நான் வயசுல சீனியரா இருந்தாலும், ஒரு நடிகரா அவரை ரொம்ப உயர்வா பார்க்கிறேன். தேசிய விருது வாங்கி திறமையை நிரூபிச்சவர், இயக்குநராகவும் அசத்துறார். டாப் இயக்குநர்கள் வரிசையில ஒருத்தராதான் நான் அவரைப் பார்க்கிறேன். நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், நடனக் கலைஞர்... இப்படிப் பல திறமைகள் அவர்கிட்ட இருக்கு. தனுஷ் என்னை நண்பராக ஏற்றுக்கொண்டது எனக்கு சந்தோஷம். இது அவருடைய பெருந்தன்மைன்னுகூடச் சொல்வேன்.” 

‘`சில வருடங்கள் நடிகர் ஸ்ரீகாந்த்தைப் பார்க்க முடியலையே?!”

‘`இரண்டு வருட இடைவெளி எடுத்துக்கிட்டது உண்மைதான்.  தயாரிப்பாளர் ஆகணும்னு ரொம்பநாள் ஆசை. முதன்முதல்ல நான் தயாரிச்ச படம்தான், ‘நம்பியார்.’ அதுக்குப் பிறகு, என் பேனர்ல பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தணும்னு நினைச்சேன். ஆனா, ‘நம்பியார்’ படம் நான் நினைச்சமாதிரி போகலை. அதனால, தயாரிக்கிற எண்ணத்தைக் கைவிட்டுட்டேன். தவிர, எல்லா நடிகர்களுக்குமே ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எல்லாப் படங்களையும் நான் விரும்பிப் பண்றேன். அப்படி திருப்தி இல்லாம நான் பண்ணுன படம், ‘செளகார்பேட்டை.’ நானே பார்த்து ரசிக்காத படம் இது. இனி, அப்படியில்லாம வெறித்தனமா இறங்கி, விட்ட இடத்தைப் பிடிக்கணும்.’’

“நண்பன் ஆனது தனுஷின் பெருந்தன்மை!”

‘`இந்த இரண்டு வருடத்தில் எதையெல்லாம் மாற்றிக்கொள்ள நினைச்சீங்க?”

‘`அப்படி எதுவும் இல்லை. என் பேமிலியில இருக்கிறவங்க எப்போவும்போல எனக்கு சப்போர்ட் பண்றாங்க. திருமணத்திற்குப் பிறகு என் மனைவிதான் எனக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமா இருக்காங்க. என் எல்லா ஜென்மத்திலும் அவங்களே மனைவியா வரணும்னு நினைக்கிறேன். ஹைதராபாத்ல ஒரு ஷூட்டிங் போயிருந்தேன். ‘சார் உங்க முதல் படத்தை நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது பார்த்தேன். அப்போ எப்படி இருந்தீங்களோ, அப்படியேதான் இப்போவும் இருக்கீங்க’ன்னு ஒரு இளைஞர் சொன்னார். இப்படி ஒரு மோட்டிவேஷன் கிடைக்கிறப்போ, சினிமாவுல இன்னும் பெருசா சாதிக்கணும்னு வெறி வந்திருக்கு.”
 
‘`உங்கள் மகன் அஹில் நடிக்கப்போறதா பேச்சு அடிபடுதே?”

‘`ஆமாம். கடந்த வருடமே ஒரு பெரிய பட்ஜெட் படத்துல, குழந்தை நட்சத்திரமா அறிமுகம் ஆகியிருக்க வேண்டியது. அவன்கிட்ட நடிக்க விருப்பம் இருக்கான்னு கேட்டேன். தயங்கினான். அதனால, வேணாம்னு விட்டுட்டேன். இப்போ அவனை நடிக்க வைக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்.”

அடுத்த வாரிசு ரெடி!

- வே.கிருஷ்ணவேணி