சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“இதிலும் சாதிதான் களம்!”

“இதிலும் சாதிதான் களம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இதிலும் சாதிதான் களம்!”

“இதிலும் சாதிதான் களம்!”

ல்வேறு தடைகளைக் கடந்து வெளியான படம், ‘உறியடி.’ வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை யென்றாலும் பலதரப்பு மக்களால் பெரிதளவில் பாராட்டுகளைப் பெற்ற படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் சூர்யா தயாரிப்பில் உருவாகியிருக்கிறது. படத்தின் இயக்குநரும் நடிகருமான விஜய் குமாரிடம் பேசினேன்.

“ ‘உறியடி’, ‘உறியடி 2’ எடுக்க என்ன காரணம்?”

“எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்பப் பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறதுதான், என் திறமைக்கு நான் கொடுக்கிற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யல. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற விஷயம், சினிமா. ‘Of all the arts, for us Cinema is the most important’னு லெனின் சொல்லியிருக்கார். ‘கலைகளில் சினிமாதான் பெருசு’ன்னு ஒரு கலைஞன் சொல்லியிருந்தா, அது தற்பெருமைன்னு சொல்லலாம். ஆனா, இதைச் சொன்னவர் மாபெரும் புரட்சியாளர். சரி தவற்றைத் தாண்டி, எனக்கு எது சரியோ அதை நான் சினிமா மூலமா பண்ண நினைக்கிறேன். அதேசமயம் எனக்குள்ளே இருக்கிற படைப்பாளியைத் திருப்திப்படுத்தணும். இப்போ இருக்கிற சமூகத்துக்கு சாதிப் பிரிவினைதான் பெரும் பிரச்னை. இதுதான், ‘உறியடி,’ இப்போ ‘உறியடி 2’ எடுத்ததுக்குக் காரணம்.”

“இதிலும் சாதிதான் களம்!”

“சூர்யாகிட்ட நீங்களே கதை சொன்னீங்களா, அவரே கூப்பிட்டுப் படம் பண்ணச் சொன்னாரா?”

“ ‘2டி’ ராஜசேகர் சாரை ஒருநாள் சந்திச்சேன். அப்போ, ‘உறியடி 2’ கதையைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அவருக்கு அது ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனடியா முழுக்கதையையும் கேட்டார். கதையின் முதல் வெர்ஷனைச் சொன்னேன். அப்புறம், சூர்யா சாரைப் பார்த்தேன். அப்போ, கதையை இன்னும் வலுப்படுத்தி அடுத்த வெர்ஷனைச் சொன்னேன். ஒருசில கேள்விகள் கேட்டார். ‘எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, கண்டிப்பா படம் பண்ணலாம்’னு சொன்னதும், எனக்குப் பெரிய நம்பிக்கை வந்தது. காரணம், ‘உறியடி’ பட ரிலீஸ்ல ஏகப்பட்ட பிரச்னைகள். பொருளாதார இழப்பைவிட மனவலி அதிகமா இருந்தது. ‘உறியடி 2’ படத்துக்கு இப்படி ஒரு தயாரிப்பு நிறுவனம் கிடைச்சது, நிம்மதியா இருக்கு. சூர்யா சாரும் ஒரு படைப்பாளிக்கு என்ன சுதந்திரம் கொடுக்கணுமோ, அதை எனக்குக் கொடுத்தார். ஷூட்டிங் முடியிற வரைக்கும் எந்தவிதமான பிரஷரும் இல்லாம முடிச்சுட்டோம். படம் சம்மர் ரிலீஸ்.”

“ ‘உறியடி’ படத்துல சண்டைக்காட்சிகளில்கூட நம்பகத்தன்மை அதிகமா இருந்தது. ‘உறியடி 2’ படத்திலும் அதை எதிர்பார்க்கலாமா?”

“கண்டிப்பா! ஜானர் மட்டும்தான் கொஞ்சம் வித்தியாசம். இன்னொரு விஷயம், ‘உறியடி’ படத்தின் தொடர்ச்சியா இது இருக்காது. முழுக்க வேற ஒரு கதை. ஆனா, களம் அதேதான். ஏன், ‘உறியடி 2’ன்னு டைட்டில் வெச்சோம்னா, படம் சாதிய விஷயங்களை எதிர்த்து நிற்கும், அதுக்குப் பதிலடியும் கொடுக்கும். கல்லூரி படிக்கிற இளைஞர்கள், குறிப்பிட்ட சாதி அரசியலில் சிக்கித் தப்பிக்கிறதுதான், ‘உறியடி.’ ஆனா, இதை வெகுஜன மக்களுக்கான படமா எடுத்திருக்கோம். படத்துல வன்முறை ரொம்ப இருக்காது. ‘உறியடி’ படத்துல இன்டர்வல் காட்சிதான் பெரிய பலம். அப்படி ஒரு இன்டர்வல் இதிலும் இருக்கு. படத்தின் ஷூட்டிங் தென்காசிக்குப் பக்கத்துல இருக்கிற மந்தியூர் கிராமத்துல நடந்தது. அங்கே இருக்கிற மக்கள் ரொம்ப அர்ப்பணிப்புடன் நடிச்சிருக்காங்க. போராட்டம் பண்ற மாதிரி ஒரு காட்சியில நடிச்ச எல்லோருமே உண்மையிலேயே கீழ விழுந்து புரண்டு நடிச்சிருக்காங்க.”

“சாதிய அரசியல்தான் ‘உறியடி 2’ வின் அடிப்படையா?”

“ ‘உறியடி’யில ஹீரோ மோட்டிவ் கிடையாது. சாதியை வெச்சு அரசியல் பண்ற வில்லன்தான், மோட்டிவ். ‘உறியடி 2’ படத்திலும் இது கண்டிப்பா இருக்கும். இதைத்தாண்டி ஒரு கட்டத்துக்குப் போயிருக்கோம். இதுல அரசியல் மட்டுமல்லாம, அரசியல்வாதிகளை ஆட்டிப்படைக்கிற முதலாளித்துவம் பற்றியும் பேசியிருக்கோம். யார் இங்கே பெருசுன்னு இப்பெல்லாம் வெளிப்படையாவே தெரியுது. முன்னாடியெல்லாம் சாதியும், சாதிப்பற்றும் ஒருத்தனுடைய தனிப்பட்ட விஷயமா இருந்தது. இப்போ அது அரசியலா மாற்றப்பட்டிருக்கு. இந்த மாதிரி நிறைய விஷயங்களை ‘உறியடி 2’ பேசும்.”

“இதிலும் சாதிதான் களம்!”

“சாதியை எதிர்த்துப் படம் பண்றது ஆரோக்கியமான விஷயம். அதேசமயம், சாதியைப் பெருமைப்படுத்தி வர்ற சில சினிமாக்களை எப்படிப் பார்க்கிறீங்க?”

“என்னைப் பொறுத்தவரை, இதுவும் ஒருவித அரசியல்தான். அதுல இருக்கிற பிசினஸ்ஸைப் புரிஞ்சுக்கிட்டுப் பண்றது ரொம்பத் தப்பான விஷயம். வளர்ச்சியை நோக்கிப் படம் எடுக்காம, இன்னும் பின்னோக்கிப் போறது ஆரோக்கியமான விஷயமில்லை. அன்பை போதிக்காம, சாதிப் பெருமையைப் போதிக்கிறது, விரோதத்தைப் போதிக்கிறதுக்குச் சமம். ஆனா, மக்கள் இப்போ ரொம்பத் தெளிவா இருக்காங்க. சிலர் அந்த மாதிரியான படங்களை ஆதரிச்சாலும், பலரும் எதிர்க்கத்தான் செய்றாங்க. இனிமேலும் அதைச் செய்யணும்.”

“படத்துல யாரெல்லாம் நடிச்சிருக்காங்க... டெக்னிக்கல் டீம் பற்றிச் சொல்லுங்க?”

“முதல் பாகத்துல நடிச்ச சில கேரக்டர்கள்ல நடிச்சவங்க, இதிலும் இருக்காங்க. தவிர, பலரும் புதுமுகங்கள்தான். எல்லோருக்கும் பரிச்சயமான முகம்னா, ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சுதாகர் நடிச்சிருக்கார். அவருடைய கதாபாத்திரத்துல ஒரு இயல்பு இருக்கும். இந்தப் படம் பார்த்துட்டு, படத்துல பத்து கதாபாத்திரத்தையாவது மக்கள் பெருமையா பேசுவாங்க. ஹீரோயின், விஸ்மயா. இந்தப் படம் மூலமா அறிமுகமாகுறாங்க. படத்தின் கதைசொல்லி நான்தான். இயக்குநரைத் தாண்டி, ஒரு நடிகனாவும் இதுல எனக்கு நிறைய வேலை இருந்தது. சங்கர் தாஸ், துரை ரெண்டுபேரும் வில்லனா நடிச்சிருக்காங்க. இசை, கோவிந்த் வஸந்தா. ‘அசுரவதம்’ படத்துக்காக இவர் போட்டிருந்த தீம் மியூசிக் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனால, அவரை புக் பண்ணிட்டோம். ‘96’ படத்திலும் வேற லெவல்ல மியூசிக் பண்ணியிருந்தார். இதெல்லாம் தாண்டி, ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ல இருந்தவர். அதனாலே கோவிந்த்தை எனக்கு ரொம்பப் பிடிக்கும். மத்தபடி, முதல் பாகத்துல வொர்க் பண்ணுன டெக்னிக்கல் டீம்தான் இதுலயும்.”

- தார்மிக் லீ