
“எனக்குப் பிடிச்சமாதிரி ஒருத்தர் வருவார்!”
‘7ஜி ரெயின்போ காலனி’, ‘காதல் கொண்டேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் பெற்றவர், சோனியா அகர்வால். பிறகு, இயக்குநர் செல்வ ராகவனைக் காதல் திருமணம் செய்தார். சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய, சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தார், சோனியா. மீண்டும் சினிமாவுக்கு வந்தவர், இப்போது நான்கு படங்களில் பிஸி!
“ ‘7ஜி ரெயின்போ காலனி’ மாதிரி ஒரு கேரக்டர்ல எப்போ நடிப்பீங்கன்னு ரசிகர்கள் கேட்டிக்கிட்டே இருந்தாங்க. விஷாலுடன் நடிச்சிருக்கிற ‘அயோக்யா’ படத்துல கெஸ்ட் ரோல்ல நடிச்சிருந்தாலும், அது அப்படியான ஒரு கேரக்டரா இருக்கும். விஷால் எனக்கு நல்ல நண்பர். அவருடன் நடிச்சது சந்தோஷம். அடுத்து, ‘தனிமை’ என்ற படத்தில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம். இதுல, இலங்கைத் தமிழ்ப் பெண்ணா நடிச்சிருக்கேன்.
தவிர, அருண் விஜய் நடிச்சிருக்கிற ‘தடம்’ படத்துல எனக்கு ஒரு பவர்புல்லான கேரக்டரைக் கொடுத்திருக்கார், இயக்குநர் மகிழ் திருமேனி. ‘சாதரம்’ங்கிற கன்னடப் படத்துல வழக்கறிஞரா நடிக்கிறேன். இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம் என இப்போ கொஞ்சம் பிஸியாகிட்டேன். எனக்கு இது எனர்ஜியா இருக்கு” என்றவரிடம், சில கேள்விகள்.

‘`திருமணத்திற்குப் பிறகான அந்த இடைவெளியை எப்படிக் கடந்தீர்கள்?’’
‘`அதை நான் பெரிய இடைவெளியா நினைக்கலை. அந்த நாள்களும் என் வாழ்க்கையில் முக்கியமான நாள்கள்தான். என்னை நானே இன்னும் அழகா புரிஞ்சுக்கிறதுக்கான வாய்ப்பைக் கொடுத்தது. தவிர, அப்போவும் நான் நடிக்கத் தயாராதான் இருந்தேன். சூழல் அமையலை. இப்போ, அதிலிருந்து மீண்டு வந்து, மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். ரொம்ப ரிலாக்ஸா உணர முடியுது.”
‘`திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்ததுக்கு என்ன காரணம்?”
“கல்யாணத்துக்குப் பிறகு நடிக்கவேணாம்னு மாமியார் வீட்டுல சொன்னாங்க. எனக்கான சுதந்திரத்தையும் கனவுகளையும் புதைச்சுக்கிட்டு என்னால இயங்க முடியலை. தேவையில்லாத பிரச்னை வேணாம்னு நானே சுமுகமா பிரிஞ்சு வந்துட்டேன். வந்த பிறகு, நான் நடிப்பேனா மாட்டேனான்னு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எல்லோருக்கும் யோசனையா இருந்திருக்கும்னு நினைக்கிறேன். அதனால, யாரும் என்னை நடிக்கக் கேட்டு அப்ரோச் பண்ணலை. ‘வானம்’ படம்தான் சினிமாவில் எனக்கு ரெண்டாவது இன்னிங்ஸைத் தொடக்கி வெச்சது. பிறகு, கிடைக்கிற எல்லாப் படங்களிலும் கமிட் ஆகாம, நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கலாம்னு முடிவு பண்ணினேன்.”
‘`பிரபல ஹீரோயின், பிரபல இயக்குநரின் மனைவி... இந்த அடையாளத்திலிருந்து வெளியேறி, இப்போ தனியா இயங்குறீங்க... அது எவ்வளவு சவாலான விஷயமா இருக்கு?”
‘`ரொம்ப கஷ்டமா இருந்தது. தனித்துவிடப்பட்ட மாதிரி உணர்வு. மனசு ஒன்றுபடாம, ரெண்டுபேரும் சேர்ந்து வாழ்ந்து ஏன் நோகடிச்சுக்கணும். அதனால, வந்துட்டேன். அடுத்து என்ன பண்ணப் போறோம்னு தெரியாம, மறுபடியும் ஜீரோவுல இருந்து வாழ்க்கையைத் தொடங்கணும். அதுக்கு எனக்குக் கொஞ்சம் டைம் தேவைப்பட்டுச்சு. தனியா வந்த பிறகு எனக்குள்ள குழப்பங்கள் இருந்துச்சு. அந்தக் குழப்பத்துக்கும் தனிமைக்கும் தீர்வு... மறுபடியும் எனக்குப் பிடிச்சதைப் பண்றதுதான்னு முடிவெடுத்தேன். பிடிச்ச வேலையைச் செஞ்சா எல்லாமே மறக்கும் இல்லையா... இப்போ, பழசையெல்லாம் நினைக்கிற அளவுக்கு நேரமில்லை. நடிக்கிறேன், நடிப்பேன். அம்மா ஆயிஷா, தம்பி செளரவ்... ரெண்டுபேரும்தான் இப்போ என் உலகம். செளரவ் மியூசிக் கம்போஸர். சீக்கிரமே அவனை மியூசிக் டைரக்டரா பார்ப்பீங்க.”
‘`பல துறைகளில் சாதித்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அட்வைஸ்?’’
‘`எல்லாப் பொண்ணுங்களுக்கும் குடும்பத்தைத் தாண்டி ஆசைகளும் கனவுகளும் இருக்கும். கல்யாணம் ஆகிடுச்சுன்னு அதையெல்லாம் ஓரம் கட்டி வெச்சுடாம, அதைத் துரத்திப் பிடிங்க. ஏன்னா, உங்க வாழ்க்கையை உங்களைத் தவிர வேற யாராலும் வாழ முடியாது.”
‘`முதல் முதல்ல நடித்த காட்சி ஞாபகம் இருக்கா?”
‘`ஹய்யோ... அது ஹாரிபிள் எக்ஸ்பீரியன்ஸ், எப்படி மறப்பேன்?! நான் 16 வயசுல சினிமாவுக்கு வந்தேன். ஜீ டிவி சீரியலுக்காக ஒரு ஆடிஷன் நடந்தது. நானும் கலந்துக்கிட்டேன். முதல் முதலா கேமரா முன்னாடி நிற்கிறதால, கை கால்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. மொத்த யூனிட்டும் என்னைப் பார்க்க, ‘ஸாரி’ சொல்லிட்டு, அங்கிருந்து வந்துட்டேன். அம்மாதான் என்னை என்கரேஜ் பண்ணாங்க.

அடுத்தநாள் ஆடிஷனுக்குப் போனேன். நல்லா பர்பார்ம் பண்ணுனேன். என் பெயர்ல இன்னொரு பொண்ணும் வந்திருந்துச்சு. ‘சோனியா’ன்னு கூப்பிட்டதும், அவங்கதான் செலக்ட் ஆகியிருக்காங்கபோலன்னு கெளம்பி வெளியே வந்தா, மறுபடியும் ‘சோனியா அகர்வால்’னு கூப்பிட்டு, ‘நீங்கதான் செலக்ட் ஆகியிருக்கீங்க’ன்னு சொன்னாங்க. அது, ‘லோரி’ என்ற பஞ்சாபி சீரியல் ஆடிஷன். அந்த சீரியல் செம ஹிட்!”
“அப்போ, இப்போ... சோனியா அகல்வால்கிட்ட என்ன மாற்றம்னு நினைக்கிறீங்க?”
‘`வாழ்க்கையைப் புரிஞ்சுக்கிற பக்குவம் வந்திருக்கு. எது சரி, எது தப்புன்னு முடிவெடுக்கிற பக்குவம் கிடைச்சிருக்கு. நான் எமோஷனலான ஆள். எல்லோரையும் நம்புவேன், அன்பு செலுத்துவேன். சினிமாவுக்கு வந்து 15 வருஷம் ஆகிடுச்சு. இப்போவும் என்னால சினிமாவுல இயங்க முடியுதுன்னா, நான் சம்பாதிச்சு வெச்சிருக்கிற நல்ல நண்பர்களாலதான்!”
‘`மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருக்கா?”
‘`எனக்குப் பிடிச்சமாதிரி ஒருத்தர் என் வாழ்க்கையில வருவார்னுதான் நினைக்கிறேன். அதுக்கான நேரமும் காலமும் இன்னும் அமையலை. ஒருவேளை, அப்படி ஒண்ணு அமையாமகூடப் போகலாம். என்ன நடந்தாலும் ஏத்துக்கிற மனநிலையிலதான் நான் இருக்கேன். எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அம்மா ஆசைப்படுறாங்க. நான் கடவுளை நம்புறவள். அவர் நமக்கு என்ன தேவையோ அதைக் கொடுப்பார்!”
- வே.கிருஷ்ணவேணி