மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 5 - பயம்கிறதே என் அகராதியில் இல்லை!

980s evergreen Heroins - Vijayashanti
பிரீமியம் ஸ்டோரி
News
980s evergreen Heroins - Vijayashanti ( Aval Vikatan )

இந்தியத் திரையுலகின் முதல் ‘லேடி சூப்பர் ஸ்டார்’; டாப் ஹீரோக்களைவிட அதிக சம்பளம் பெற்ற நடிகை...

மிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், விஜயசாந்தி.

இந்தியத் திரையுலகின் முதல் ‘லேடி சூப்பர் ஸ்டார்’; டாப் ஹீரோக்களைவிட அதிக சம்பளம் பெற்ற நடிகை; அதிக ரசிகர் மன்றங்களைக் கொண்டிருந்த நடிகை; சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் தூள் கிளப்பிய ஆக்‌ஷன் நாயகி எனப் பல சாதனைகளைப் புரிந்தவர், விஜயசாந்தி. இப்போது காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகராக முழுநேர அரசியல்வாதியாக இயங்கிக் கொண்டிருக்கும் இவர், ஹைதராபாத்தில் வசிக்கிறார். நிஜ வாழ்விலும் அதிரடி நாயகியான விஜயசாந்தி, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

980s evergreen Heroins - Vijayashanti
980s evergreen Heroins - Vijayashanti
Aval Vikatan

எம்.ஜி.ஆர், சிவாஜியின் ரசிகை!

சின்ன வயசுல படிப்பு, டான்ஸ் வகுப்பு தவிர, வேற எதிலும் ஆர்வம் காட்ட மாட்டேன். பெண் குழந்தை என்பதால், மிகவும் கட்டுப்பாடுகளுடன் வளர்ந்தேன். விளையாடக்கூட வெளியில அனுப்ப மாட்டாங்க.  எதுக்கும் பெரிசா ஆசைப்படாத நான், எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களைப் பார்க்க மட்டும் அடம்பிடிப்பேன். முதலில் படம் பார்த்துட்டு வரும் அப்பா, குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம்னா மட்டும் எங்களை அழைச்சுட்டுப் போவார். என் சித்தி பிரபல நடிகை விஜயலலிதா. அவங்க ஷூட்டிங்குக்கு எப்போதாவது அம்மா என்னைக் கூட்டிப்போவாங்க. அதனால, குடும்பத்துல சினிமாவின் தாக்கம் இருந்துச்சு. ஆனா, ஒருபோதும் எனக்குள் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வரலை. ஒரு கட்டத்தில், `பொண்ணு சினிமாவுக்குப் போகணும்; பெரிய ஹீரோயினாகணும்’னு எங்கப்பாவுக்கு பெரிய ஆசை உண்டாச்சு. என் சம்மதத்துடன் அதற்கான முயற்சிகளைச் செய்தார்.

எம்.ஜி.ஆர் பட வாய்ப்பு... பாரதிராஜா படத்தில் அறிமுகம்!

விஸ்வேஷ்வர ராவ் என்ற தெலுங்குப் படத் தயாரிப்பாளர், என்னை ஒரு படத்தில் ஒப்பந்தம் பண்ணினார். அப்போ நாங்க வசிச்ச கோடம்பாக்கத்தில் இருந்த ஒரு ஸ்டுடியோவுல என்னை போட்டோ எடுத்து, அந்தத் தயாரிப்பாளருக்குக் கொடுத்தோம். அந்நேரம் என்னைப் பத்தி தெரிஞ்சுகிட்ட எம்.ஜி.ஆர், அவருடைய படத்துல என்னை நடிக்கக் கேட்டார். ஆனால், எம்.ஜி.ஆர் அரசியலில் பிஸியானதால், அவர்கூட நடிக்க முடியலை. பாரதிராஜா சார் ஒருநாள் அந்த ஸ்டுடியோ வழியா போகும்போது, அவர் காரின் டயர் பஞ்சராகிடுச்சு. அப்போ அந்த ஸ்டுடியோ கதவுல ஒட்டப்பட்டிருந்த என் போட்டோவைப் பார்த்திருக்கார். உடனே விசாரிச்சுட்டு, என்னை அணுகினார். முதலில் கமிட்டான தெலுங்குப் பட ஷூட்டிங் தள்ளிப்போனதால், உடனே பாரதிராஜா சார் ஹீரோவா நடிச்ச ‘கல்லுக்குள் ஈரம்’ படத்துல நடிச்சேன்.

அந்தச் சின்ன வயசுல சினிமா உலகம் எனக்கு வித்தியாசமாகவும் குழப்பமாவும் இருந்துச்சு. பாரதிராஜா சார் பொறுமையா எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தார். மைசூரு தலக்காட்டில் ஷூட்டிங். உடன் நடிச்ச அருணா தப்பு பண்ணினாலும், பாரதிராஜா சார் என்னையும் சேர்த்துத் திட்டுவார். ஒருநாள் நான் அழுதுட்டே என் அப்பாகிட்ட போய், ‘நான் நடிக்க மாட்டேன்’னு சொன்னேன். பாரதிராஜா சார், எனக்கு சாக்லேட் கொடுத்துச் சமாதானப்படுத்தினார். படிப்படியாக சினிமா உலகம் எனக்குப் புரிஞ்சது... பிடிச்சது. அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வந்ததால, பத்தாவது படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டேன்.

980s evergreen Heroins - Vijayashanti
980s evergreen Heroins - Vijayashanti
Aval Vikatan



ஆக்‌ஷன் நாயகி... ஒரு கோடி சம்பளம்!

முதல் படம் முடிந்ததுமே, தெலுங்கில் ‘கில்லாடி கிருஷ்ணடு’ படத்தில் ஹீரோயின். `அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் தெலுங்கு ரீமேக்ல ஹீரோயின் வாய்ப்பு எனக்கு வந்தது. அதேநேரம் `நெற்றிக்கண்’ படத்துல ரஜினி சாருக்கு மகளாகவும் தங்கையாவும் நடிச்சதால், அந்தப் படத்துல நடிக்க முடியல. ஒரு வருஷத்துக்கும் மேல ஓடின ‘நெட்டி பாரதம்’ தெலுங்குப் படம்தான் ஒரு ஹீரோயினா எனக்கு நல்ல அடையாளம் கொடுத்தது. பிறகு வரிசையா படங்கள்தான்; வெற்றிதான். நான் தமிழ்ப் பொண்ணு என்பதால, தமிழ் சினிமாவுலயும் புகழ்பெற நினைச்சேன். 1980-களில், பல தமிழ்ப் படங்கள்ல நடிச்சேன். ஆனா, சரியான கதைகளைத் தேர்வு செய்யாத காரணத்தால் அந்தப் படங்கள் பெரிசா பெயர் வாங்கித்தரலை.

அதேநேரம் அப்போதைய தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் எல்லோருடனும் தொடர்ச்சியா நிறைய படங்கள்ல நடிச்சேன். சினிமாவில் ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சூழல் உருவாகணும்னு நினைச்சு, ஹீரோக்களைவிடவும் கூடுதல் உழைப்பைக் கொடுக்க ஆரம்பிச்சேன். ‘கர்தவ்யம்’ படத்துல போலீஸ் ரோல்ல நடிச்சப்போ, சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாம நடிச்சேன். படக்குழுவினர் தயங்கினாலும், நான் தைரியமா செஞ்சேன். நிறைய காயங்கள் ஏற்பட்டது. அதுக்காக  நான் கலங்கி உட்காரலை. படம் மெகா ஹிட்டானதுடன், சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் எனக்குக் கிடைச்சது. அந்தப் படம் ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு, தமிழ்நாட்டிலும் ஹிட்டாச்சு. அந்தப் படத்துக்குப் பிறகு 1991-ம் ஆண்டிலேயே என் சம்பளம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் உயர்ந்தது. அப்போ ஹீரோக்களின் அதிகபட்ச சம்பளமே, 25 லட்சம் ரூபாய்தான்!

லேடி சூப்பர் ஸ்டார்!


`கர்தவ்யம்’ படத்தின் வெற்றியால் எனக்குள் தன்னம்பிக்கை, தைரியம், பலம் கூடியது. என் படங்களுக்கு மக்கள் பெரிய அளவில் ஆதரவு கொடுத்தாங்க. எனக்கு ரசிகர் மன்றங்கள் அதிகமாக உருவாகின. `இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் மூன்று நடிகர்கள்: அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், விஜயசாந்தி’னு இந்தியா டுடே பத்திரிகையில் 1992-ம் ஆண்டு வெளியான கவர் ஸ்டோரி, பரபரப்பானது. தொடர்ந்து `லேடி சூப்பர் ஸ்டார்’னு மக்கள் எனக்குப் பட்டம் கொடுத்தாங்க. அந்தப் பட்டம் பெற்ற முதல் இந்திய நடிகை நான்தான். அதுக்குப் பிறகு எனக்கான பொறுப்புகள் பல மடங்கு அதிகமாகிடுச்சு. ஒரு நாளைக்கு ஆறு ஷிஃப்ட்னு, தூக்கமின்றி தொடர்ந்து 24 மணி நேரமெல்லாம் நடிச்சிருக்கேன். 

980s evergreen Heroins - Vijayashanti
980s evergreen Heroins - Vijayashanti
Aval Vikatan

தெலுங்குத் திரையுலகில், `விஜயசாந்தி ஒரு படத்தில் சில காட்சிகளிலாவது நடித்தால் போதும்’னு இருந்த காலம் அது. இந்நிலையில் நான் `நம்பர் ஒன்’ நடிகையானது பிடிக்காத ஹீரோக்கள், என்னுடன் நடிக்க மறுத்தாங்க. `நீங்க என்கூட நடிக்கலைன்னா என்ன? இனி என் படங்கள்ல நான்தான் ஹீரோ; நான்தான் ஹீரோயின்’னு முடிவெடுத்தேன். பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க ஆரம்பிச்சேன். என் உழைப்பு வீண்போகலை; ரசிகர்களும் என்னைக் கைவிடலை. முன்னணி ஹீரோக்கள் இல்லாமலேயே, என் படங்கள் ஹிட்டாயின. அப்போ தினமும் விடியற்காலையில் ரசிகர்கள் என்னைச் சந்திக்க வருவாங்க. ரெண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு ரசிகர்களின் வாகனங்கள் நிற்கும். அவங்களைச் சந்திக்கிறதுக்காகவே தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்குவேன்.

சண்டைக்காட்சிகள் என் படங்களில் பிரதானமா இருக்கும். ஒருமுறை தலைக்கோணத்தில் நடந்த ஷூட்டிங்ல, சண்டைக்காட்சியில் என் கால் உடைஞ்சுடுச்சு. வலியில துடிச்சேன். ரெண்டு மாசம் ஓய்வெடுக்கச் சொன்னார் டாக்டர். ஆனா, ஒருவாரம்கூட ஓய்வெடுக்காம ஷூட்டிங் கிளம்பிட்டேன். இடது காலில் பேலன்ஸ் பண்ணியே மீண்டும் சண்டைக்காட்சிகளில் நடிச்சேன். இப்படி நிறைய அனுபவங்கள் உண்டு. போலீஸ் கேரக்டர்கள் நிறைய பண்ணினேன். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சிரமமான சண்டைக்காட்சிகளிலும் டூப் இல்லாமலேயே நடிச்சேன். பயம்கிறதே என் அகராதியில இல்லை!

ரஜினியின் வலியுறுத்தல்... தமிழில் ரீ-என்ட்ரி!

தமிழ்ப் படங்கள்ல நான் நடிக்காம இருந்தாலும், ‘பூ ஒன்று புயலானது’, ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ உட்பட என் நிறைய தெலுங்குப் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு, பெரிய ஹிட்டானது. இந்நிலையில், `மன்னன்’ படத்துல நடிக்க ரஜினி சார் என்னிடம் வலியுறுத்தினார். பி.வாசு சார் என்கிட்ட கதை சொன்னப்போ, `ரஜினி சாரை நான் அடிக்கிற சீன் மட்டும் வேண்டாம்’னு வலியுறுத்தியும் அவர் ஒப்புக்கலை. `என்னை அடிக்கிற ஒரே தகுதி விஜயசாந்திக்கு மட்டும்தான் இருக்கு’னு ரஜினி சார் சொல்லி, அந்தக் காட்சியில் என்னை நடிக்க வெச்சார். அந்தப் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தேன்.

அப்போ ஒருமுறை சிவாஜி சாரை மீட் பண்ணப்போனேன். `வர்றா பாரு என் வளர்ப்புப் பொண்ணு. தி கிரேட் ஹீரோயின்’னு எல்லோர் முன்னிலையிலும் புகழ்ந்தார். மேலும்,  `மன்னன்’ படப் பெயருக்குப் பதிலா, `மன்னி’னு வெச்சிருக்கலாம்னு சொல்லி வாழ்த்தினார். பிறகு, ‘ராஜஸ்தான்’ உட்பட மூணு தமிழ் படங்கள்லதான் என்னால நடிக்க முடிஞ்சது. ஆனா, தமிழ்நாடு என் தாய்வீடு என்பதை எப்போதும் மறக்க மாட்டேன். தமிழ் மக்களின் அன்புக்கு நன்றியுடன் இருப்பேன்.

28 ஆண்டுகால சினிமா...

14 வயசுல சினிமாவில் அறிமுகமானேன். என் 15 வயசுல அப்பாவும், 17 வயசுல அம்மாவும் இறந்துட்டாங்க. கூடப்பிறந்த அண்ணனுடன் பெரிசா அன்பில்லை. சினிமா உலகத்துல ஒரு பெண் தனியா இருந்தால், எவ்வளவு பிரச்னை வரும்... எப்படியான மனநிலையில இருந்திருப்பேன்னு நினைச்சுப் பாருங்க. நல்லது, கெட்டது, எதிர்காலம்னு எல்லாத்தையும் தனியாளாகவே எதிர்கொண்டேன். தனிமை என்னைக் கவலைப்படுத்தக்கூடாதுனு, நடிப்பே கதியா இருந்தேன். ஐந்து மொழிகளில் நடிச்சேன்.

வாழ்க்கையில் என் கணவர் ஸ்ரீநிவாஸ் பிரசாத் இணைந்தார். 1988-ம் ஆண்டு மிக எளிமையாக எங்க கல்யாணம் நடந்துச்சு. கல்யாணம் ஆகிட்டா, ஹீரோயின்களுக்கு வாய்ப்புகளும் புகழும் குறைஞ்சுடும். இந்த விஷயத்துலயும் நான் வித்தியாசமானவள்தான். கல்யாணத்துக்குப் பிறகே நான் `நம்பர் ஒன்’ நடிகையானேன். அந்தப் பரபரப்பான ஓட்டத்தில், என் நிறைய படங்களை இதுவரை நான் பார்க்கலை. ஒரு ஹீரோயின் 10 வருஷங்கள் ஃபீல்டில் இருந்தாலே பெரிய விஷயம். நான் 28 ஆண்டுகள் பீக்ல இருந்ததுடன், ஹீரோயினா மட்டுமே நடிச்சேன். இந்தச் சாதனையும் இதுவரை முறியடிக்கப்படலை. வெற்றி மற்றும் தோல்வி இரண்டையும் ஒரே கண்ணோட்டத்துலதான் பார்ப்பேன். என்னைப் பெரிய நடிகையாகப் பார்க்க ஆசைப்பட்ட என் பெற்றோரின் இழப்புதான், வாழ்நாளில் என்னை அதிகம் பாதிச்ச விஷயம்.

பின்வாங்குவது என் அகராதியில் கிடையாது!

தெலுங்கு மக்கள் எனக்குக் கொடுத்த அங்கீகாரம், புகழ், அன்பு எல்லாமே ரொம்பப் பெரிசு. அதனால், மக்களுக்குப் பணி செய்ய முடிவெடுத்து 1998-ம் ஆண்டு அரசியலுக்கு வந்தேன். தொடர்ந்து நடிச்சுட்டும் இருந்தேன். 2006-ம் ஆண்டு `நாயுடம்மா’ படம் ரிலீஸானதும் சினிமாவிலிருந்து விலகினேன். பிறகு தெலங்கானா மக்களுக்கான முழுநேர அரசியல் பணிக்கு, சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்குக் குடியேறினேன். அப்போ என் அரசியல் வருகையால் ஆந்திராவே அதிர்ந்தது. சினிமா உலகத்தைப்போல, அரசியலிலும் என் வளர்ச்சிக்கு எதிராக நிறைய சதிகளை எதிர்கொண்டேன். அந்தச் சவால்கள் மற்றும் பிரச்னைகளே என்னை இரும்பு மனுஷி மாதிரி ஆக்கிடுச்சு. ஒரு விஷயத்தை செய்யணும்னு முடிவெடுத்துட்டா, எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதையெல்லாம் மீறி வெற்றி பெற்றே தீருவேன். பின்வாங்குவது என் அகராதியில் கிடையாது. சினிமாவில் வெற்றி பெற்றதுபோல, அரசியலிலும் சாதிக்காமல் என் வாழ்க்கை முற்றுப்பெறாது!

- நாயகிகள் பேசுவார்கள்!

 கு.ஆனந்தராஜ் - படங்கள் : சு.குமரேசன்

எனக்கே ஆச்சர்யம்தான்!

இளமைக்காலத்துலயும், சினிமாவுக்கு வந்தப் புதுசுலயும் நான் ரொம்ப அமைதியா இருப்பேன். பெரிசா யார்கூடவும் பழக மாட்டேன். ஒவ்வொருவரின் அமைதிக்குப் பின்னும் வலுவான காரணங்கள் இருக்கும். அப்படித்தான் நானும். அப்படி இருந்த என் பிற்கால செயல்பாடுகள் எனக்கே ஆச்சர்யம்தான். என் படப் பெயர்போல, பூவாக இருந்த நான் புயலாக மாறினேன். ஆனா, மாறாத விஷயம் ஒண்ணு இருக்கு. அப்போதிலிருந்து இப்போவரை என்னுடைய ஒரே ஸ்ட்ரெஸ் பஸ்டர், இளையராஜா சாரின் பாடல்கள்தான். ஒருபோதும் அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடிப்பதில்லைனு முடிவெடுத்துட்டதால, இனி நான் நடிப்பது மிகவும் அரிதுதான்!

மக்களே என் குழந்தைகள்!

நான், மக்கள் உருவாக்கிய ஹீரோயின். குழந்தை இருந்தால் தாயாக நான் சுயநலமாக இருக்க நேரிடும். எனவேதான், குழந்தை வேண்டாம்னு நான் எடுத்த முடிவை என் கணவரும் ஆதரித்தார். எங்களுக்குப் பிறகு எங்க சொத்துகள் எல்லாம் மக்களுக்கான கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்குச் செல்லும். அதுக்காக டிரஸ்ட் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் நடந்துட்டிருக்கு. என்றும் மக்கள்தான் என் குழந்தைகள்.