‘ஷில்பா’ விஜய்சேதுபதி... ‘முகில்’ பகத்... ‘வேம்பு’ சமந்தா... ‘லீலா’ ரம்யாகிருஷ்ணன்... ‘அற்புதம்’ மிஷ்கின்... ‘சூப்பர் டீலக்ஸ்’ யார் புலி? யார் பாம்பு?

‘ஷில்பா’ விஜய்சேதுபதி... ‘முகில்’ பகத்... ‘வேம்பு’ சமந்தா... ‘லீலா’ ரம்யாகிருஷ்ணன்... ‘அற்புதம்’ மிஷ்கின்... ‘சூப்பர் டீலக்ஸ்’ யார் புலி? யார் பாம்பு?
ஒரே ஒரு படம்தான் இயக்கி யிருக்கிறார். ஆனாலும் தியாகராஜன் குமாரராஜா பற்றித் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறாமல் இருக்குமா? ‘சூப்பர் டீலக்ஸ்’ குறித்து உற்சாகத்துடன் பேசத்தொடங்கு கிறார் தியாகராஜன் குமாரராஜா!
“ஏன் எட்டு வருட இடைவெளி?”
“ ‘ஆரண்ய காண்டம்’ முடிச்சுட்டு ஒரு கதை எழுதினேன். பெரிய பட்ஜெட் படம் அது. அதனால, அதைக் கைவிட்டுட்டு வேறொரு கதை எழுதினேன். அந்தக் கதையை முடிக்கவே ரெண்டு வருடங்களுக்கு மேல ஆகிடுச்சு... இதுவும் பெரிய பட்ஜெட் படமா இருந்ததனால பண்ண முடியல. சின்ன பட்ஜெட்ல ஒரு படம் பண்ணலாம்னு நினைச்சது, இப்போ மல்ட்டிஸ்டார் கதையா மாறியிருக்கு.”

“ ‘சூப்பர் டீலக்ஸ்’ கதை எப்போ தோணுச்சு?”
“ ‘ஆரண்ய காண்டம்’ முடிச்சதும், எட்டு ஐடியாஸ் தோணுச்சு. அதுல ஒரு பகுதியை எடுத்து, சுதீஷ் காமத் எடுத்த ‘X: Past Is Present’ படத்துக்குக் கொடுத்துட்டேன். பிறகு, மிச்சம் இருக்கிற சில ஐடியாஸ் சேர்த்துதான் ‘சூப்பர் டீலக்ஸ்’ உருவாக்கினேன். அதைப் பண்றதுல கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனாலும் எட்டு வருட இடைவெளி இருந்ததனால பரவாயில்லைன்னு, ‘சூப்பர் டீலக்ஸ்’ எடுத்துட்டேன்.”
“ஏன் தயாரிப்பாளராகவும் மாறிட்டீங்க?”
“‘ஆரண்ய காண்டம்’ படத்தைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் சரண்கிட்ட இருந்து எனக்கு எந்த இடையூறும், நிபந்தனைகளும் வரல. நான் நினைச்சது படமா வந்தது. ‘கரெக்ட்டா நீங்க என்ன சொன்னீங்களோ அதையே எடுத்துட்டீங்க’னு சரணும் சொன்னார். ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் பெரிய பட்ஜெட் கிடையாது. அதனால, படத்தை நானே தயாரிக்கலாம்னு முடிவு செய்தேன். வேறெந்தக் காரணமும் இல்லை.”
“ ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்குள் விஜய் சேதுபதி எப்படி வந்தார்?”
“என் ப்ரெண்ட் கதையை நான் படமா தயாரிக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தேன். அந்தக் கதைக்கு விஜய் சேதுபதி ஹீரோவா நடிச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அவர்கிட்ட போன் பண்ணிக் கேட்டேன், ‘சரி கதை கேட்குறேன்’னு சொன்னார். மீட்டிங் ஏற்பாடு பண்ணிக் கொடுத்துட்டு கிளம்பலாம்னுதான் இருந்தேன். படத்தை நான் தயாரிக்கிறதனால, சில விஷயங்களைப் பேசவேண்டியிருந்தது. அப்போ, ‘நீங்க இப்ப என்ன படம் பண்றீங்க’ன்னு கேட்டார். நான் இந்தக் கதையைச் சொல்லிட்டு ‘ஷில்பா ரோல் பண்றீங்களா’ன்னு கேட்டேன். ‘யோசிச்சுப் பார்த்துட்டுப் பண்றேன்’னு சொன்னார். அப்படியே ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆரம்பிச்சிருச்சு.’’
“கதை எழுத ஏன் இவ்வளவு காலம் தேவைப்பட்டது?”
‘` ‘ஆரண்ய காண்டம்’ படத்தோட ஒன்லைனை ரெண்டுநாள்ல முடிச்சிட்டேன். இந்தப் படத்தோட ஒன்லைன் எழுத ஒரு வாரம் தேவைப்பட்டது. இதுக்கு இடையில ஒரு விளம்பரப்பட வேலை வந்ததால் நலன், நீலன் கிட்ட ‘கதை எழுதித் தரமுடியுமா’ன்னு கேட்டிருந்தேன். ஓகே சொன்னாங்க. மிஷ்கின்கிட்டயும் கேட்டிருந்தேன். அவரும் எழுதுறேன்னு சொன்னார். ஆனா, அவங்க மூணு பேரும் மீட் பண்ணிக்கவே இல்லை. ஒரு போர்ஷன் மட்டும் மிச்சம் இருந்தது. அதை நானே எழுதிட்டேன். ஒருத்தருக்கு மத்தவங்க என்ன கதை எழுதினாங்கன்னு தெரியாது, படம் இதைத்தான் பேசப்போகுதுன்னு மட்டும் தெரியும். எல்லாக் கதையும் வந்தபிறகு, நான் பைனல் டிராப்ட் எழுதினேன். அதுக்கு அஞ்சு மாசம் ஆகிடுச்சு.”

“திரைக்கதையில் தனித்தனிப் புள்ளிகள் ஒண்ணா இணையுமா?”
“அது தனித்தனிப் புள்ளிகள் மாதிரியே தெரியாது. ஒரு மரத்தின் வெவ்வேறு கிளைகள் மாதிரி தெரியும்.”
“ஒவ்வொரு காட்சிக்கும் கலர்டோன்ல வித்தியாசம் காட்டுறீங்களே... அதுக்கு என்ன காரணம்?”
“இது பொதுவான ப்ராஸஸ்தான். ஒரு காட்சி இப்படி எடுத்தா நல்லா இருக்கும்னு தோணும், எழுதும்போது குறிப்பிட்ட காட்சி இந்தக் கலர் டோன்ல இருந்தா நல்லா இருக்கும்னு தோணும். அந்த சீன்ல வர்ற கதவு இப்படி இருக்கலாம், சுவர்ல ஒட்டியிருக்கிற படங்கள் இப்படி இருக்கலாம், சில காட்சிகளுக்கு லாங் ஷாட், சில காட்சிகளுக்கு க்ளோஸப் இப்படி சிலவற்றை முன்னாடியே எழுதி வெச்சுப்பேன். ஆனா, அதை அப்படியே ஸ்பாட்ல எடுக்கணும்னு அவசியம் இல்லை. எங்களுக்குத் தோன்றியதை விஷூவலாவும் கொண்டுவர முயற்சி செய்வோம்.’’

“பஹத்தும், சமந்தாவும் படத்துக்குள்ள எப்படி வந்தாங்க?”
“நான் தயாரிக்கிறதா இருந்த படத்துல பஹத் நடிக்கிறதா இருந்தது. அவரை நேர்ல சந்திச்சுப் பேசினேன். நீங்க டைரக்ட் பண்ணுனா நடிக்கிறேன்னு சொல்லியிருந்தார். அப்புறம் அந்த புராஜெக்ட்டும் வொர்க்கவுட் ஆகலை. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துல விஜய் சேதுபதி கமிட் ஆனதுக்குப் பிறகு, பஹத் கிட்ட கதையைச் சொன்னேன். பிடிச்சிருக்கு, பண்றேன்னு சொல்லிட்டார். சமந்தா கேரக்டருக்குத்தான் கொஞ்சம் கஷ்டப்பட்டோம். அவரைச் சந்திச்சுக் கதை சொன்னேன். எல்லாரையும் போல, டைம் கேட்டாங்க. சென்னைக்கு வர்றதுக்காக ஏர்போர்ட்ல இருந்தேன். அப்போ, போன் பண்ணி ‘ஓகே’ சொல்லிட்டாங்க.’’
“ரம்யாகிருஷ்ணன் கேரக்டர் எப்படி இருக்கும்?”
“இந்தப் படத்துக்கு முதல்ல கமிட் ஆனது அவங்கதான். ஆனா, சில காரணங்களால வொர்க் பண்ணமுடியாமப் போயிருச்சு. அதனால் நதியாவை கமிட் பண்ணினோம். சில காரணங்களால் அவங்களாலும் தொடர்ந்து நடிக்க முடியாமப் போயிருச்சு. அதனால, திரும்பவும் பெரும் தயக்கத்தோட ரம்யாகிருஷ்ணன் மேடம்கிட்ட கேட்டோம். ரொம்ப கூலா, ஓகே சொன்னாங்க. ஷூட்டிங் ஸ்பாட்லகூட நடந்த எதையும் மனசுல வெச்சுக்காம டெடிக்கேட்டடா நடிச்சாங்க.’’
“தியாகராஜன் குமாரராஜா யார்?”
“சொந்த ஊர் சென்னைதான். ஒரு கூட்டத்துல ஆவரேஜான ஆள் ஒருத்தன் இருப்பான்ல, அது நான்தான்! இப்போ சினிமாவுல இயக்குநரா வேலை பார்த்துக்கிட்டிருக்கேன்.”

“ ‘சூப்பர் டீலக்ஸ்’ டைட்டிலுக்கு என்ன காரணம்?”
“படம் பார்த்தாதான் அது தெரியும். அஞ்சு வயசுக் குழந்தையா இருக்கும்போது, அவங்களுக்கு எந்தக் காலேஜ்ல படிக்கப் போறோம், என்ன படிக்கப் போறோம், என்னவா ஆகப்போறோம்... எதுவும் தெரியாது. எல்லாம் தெரிஞ்சுட்டா, வாழ்க்கையில சுவாரஸ்யமே இருக்காதுல்ல! அதைத் தெரிஞ்சுக்க வேண்டிய நேரத்துல தெரிஞ்சுக்கும்போது, ஒரு சந்தோஷம் கிடைக்கும். அதுமாதிரி, இந்தப் படத்தின் டைட்டில், யார் என்னென்ன கேரக்டர், அவங்களுக்குள்ள என்ன கனெக்ஷன் எல்லாம் படம் பார்க்கிறப்போ தெரியும். தெரியலைன்னா, ஏன் சூப்பர் டீலக்ஸ்னு பெயர் வெச்சீங்கன்னு அப்போ நீங்க கேட்கலாம்.”
“டிரெய்லர்ல கதை சொல்றதுதான் உங்க ஸ்டைலா?”
“ரெண்டு படத்தின் டேஸ்ட்டும் வேற! பொதுவான கான்செப்ட் என்னன்னா, மக்களுக்கு டிரெய்லர் பிடிச்சிருந்தா படமும் பிடிக்கும். படத்துல இருக்கிற முக்கியமான விஷயங்களை டிரெய்லர்ல காட்டிட்டா, தியேட்டர்ல படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் போயிடும்.”
“2010-ல ஆன்லைன் விமர்சனங்கள் குறைவு. இப்போ ரொம்ப அதிகம். இந்தச் சூழல்ல உங்க படம் வர்றதை எப்படிப் பார்க்குறீங்க?”
“அவங்க கருத்தை அவங்க சொல்றாங்க. என் வேலை படம் எடுக்கிறது மட்டும்தான். ஆன்லைன்ல விமர்சனம் வர்றதுக்கு முன்னாடி படம் பார்த்துட்டு வாய் வார்த்தையா பேசுவாங்க. அதுவும் விமர்சனம்தான். இப்போ ஆன்லைன்ல பலபேர்கிட்ட சொல்றாங்க. படத்தை நல்லா இருக்குன்னு கொண்டாடினா சந்தோஷப்படுறோம். அப்போ திட்டுனாலும் வாங்கிக்கணும்தானே!’’
‘`ஆரண்ய காண்டம் படத் தொடக்கத்தில் ‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்று குறிப்பிட்டிருந்தீர்கள். பணம் மட்டும்தான் முக்கியம், அறம் முக்கியமில்லை என்று சொன்ன உங்கள் படத்துக்குப் பின்பு ‘மங்காத்தா’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’ என்று அறத்தைப் பொருட்படுத்தாத படங்கள் வந்ததே, இது சரிதானா?’’
‘`அதை சரி, தவறுனே சொல்ல முடியாது. ஏன்னா, எது தேவையோ அதுவே தர்மம்ங்கிற கூற்றே இது மாதிரியான கட்டுகளையும், மூடநம்பிக்கைகளையும் உடைப்பதற்காக இருக்கிறதுதான்.’’

“உலக சினிமா என்ற பெயரில் பலர் இந்த மண்ணின் தன்மைக்கே தொடர்பில்லாமல் வெறும் குறியீடுகள், வினோதமான உடல்மொழி ஆகியவற்றை வைத்துப் படமெடுத்து ‘உலக சினிமா’ என்கிறார்களே?’’
“நான் அந்த மாதிரியான படங்களை அவ்வளவாகப் பார்ப்பதில்லை. அவங்க அதை உலக சினிமான்னு நம்பி எடுத்தாங்கன்னா... அது அவர்களின் விருப்பம்தானே. அப்படிப் படம் எடுக்கிறதுக்கு அவங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கே” என்றவரிடம்,
“உங்ககிட்ட விஜய் சேதுபதி ரெண்டு கேள்வி கேட்கச் சொன்னார்’’ என்று சொன்னோம்...
சிரித்துக்கொண்டே... ‘கேளுங்க!’ என்றார். விஜய் சேதுபதி கேட்கச்சொன்ன அந்தக் கேள்விகளைக் கேட்டோம்.
“மிஷ்கின் அறைவாங்கும் காட்சிக்கு எதுக்கு 80 டேக்... ஒவ்வொரு நடிகர்கள்கிட்டேயும் எப்படி வேலை வாங்குறீங்க?”
“ஒரு நடிகர்கிட்ட இருந்து என்ன வரும்னு அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். ஒரு சில காட்சி இன்னும் பெட்டரா வரணும்னு நினைக்கும்போது சில விஷயங்களைக் கேட்டு வாங்குவேன். அவ்வளவுதான்.”
“திரைக்கதையை எப்படிக் காட்சி அமைப்புக்குள்ள கொண்டு வர்றீங்க?”
“எனக்கே தெரியல! ஒரு காட்சிக்கு என்ன தேவையோ அதை எடுக்கிறேன், முக்கியமா படத்தின் மூடு கெடாம பார்த்துக்கிறேன்” என்றபடி சிரிக்கிறார்.
- தார்மிக் லீ, சனா