சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தடம் - சினிமா விமர்சனம்

தடம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
தடம் - சினிமா விமர்சனம்

தடம் - சினிமா விமர்சனம்

ட்டுமானப் பொறியாளர் எழில், வாழ்க்கையில் கிட்டத்தட்ட செட்டில் ஆகிவிட்ட இளைஞன். அவனும் அவன் காதலுமாய் வாழ்ந்துவருகிறான். சின்னச் சின்னத் திருட்டு வேலைகள் செய்துவரும் கவின், அவன் நண்பன் சுருளியின் கடனை அடைக்க, பெருந்தொகை ஒன்றை ஒரே இரவில் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது. அப்போது நகரில் நடக்கும் ஒரு கொலையில் காவல்துறைக்குச் சிக்கிய புகைப்படம் ஒன்றை வைத்து, எழிலைக் கைது செய்கிறார்கள். அதே நேரத்தில் போதையில் போலீஸிடம் சிக்கும் கவினைப் பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி. கவினும் எழிலும் ஒரே மாதிரி உருவ அமைப்பு கொண்ட வர்கள். டி.என்.ஏ முதற்கொண்டு எல்லாம் இருவருக்கும் ஒன்றாகவே இருக்க, இருவரில் கொலை செய்தவர் யார் என்று இரண்டு நாள்களில் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய சூழல். என்ன செய்தது காவல்துறை?

இப்படியான ஒரு சுவாரஸ்யமான கதையை அருண்விஜய் மூலம் கதகளி ஆடியிருக்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி.  உருவம், செய்கைகள் என்று பலவும் ஒரே மாதிரி இருப்பவர்கள்தாம் Identical Twins. சின்னச் சின்ன விஷயங்களில்தான் வேறுபாடு காண்பிக்க முடியும். அதைச் செவ்வனே செய்திருக்கிறார் அருண் விஜய். காதல், நட்பு, திமிர், கோபம், கிண்டல் என்று எல்லாவற்றையும்  ஜஸ்ட் லைக் தட் வெளிப்படுத்துகிறார்.

தடம் - சினிமா விமர்சனம்

நாயகிகளாக வரும் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் இருவரையும் தன் நடிப்பில் அநாயாசமாக ஓவர் டேக் செய்கிறார் உதவி ஆய்வாளராக வரும் வித்யா பிரதீப்.  கான்ஸ்டபிள்களிடம் கறார்த்தன்மை காட்டும்போதும், ஆய்வாளர் பெப்சி விஜயன் தன்னிடம் எதையோ மறைக்கும்போது திணறுவதையும் அவருடைய பெரிய கண்கள் அசலாகப் பிரதிபலிக்கின்றன. சுயநல ஆய்வாளர் பெப்சி விஜயன், ‘திருட்டுச் சேச்சி’ மீரா கிருஷ்ணன், ‘குறுக்கு மூளை’ யோகி பாபு, ‘சிங்கிள் மதர்’ சோனியா அகர்வால் என்று ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அவர்களின் நடிப்பும் படத்திற்கு பலம். 

ஆரம்பக் காட்சிகள் மெதுவாக நகர்வது மைனஸ். படத்தின் முக்கியக் கட்டமான, கைரேகை தேடும் காட்சியை அத்தனை மலிவாகச் சித்திரித்திருக்க வேண்டாம். கொலையாளியைக் கண்டுபிடிக்க இவ்வளவு சிரமப்படும் காவல்துறை, கொலையான ஆகாஷின் பின்னணியை  முறையாக ஆராய்ந்திருந்தாலே கொலையாளியை நெருங்கியிருக்கலாமே? இப்படி சிற்சில குறைகள் மட்டுமே.

இரண்டு அருண்விஜயையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க ரசிகர்களே ஒருசில நிமிடங்கள் குழம்பும்போது, படத்தை கவனமாகக் கத்தரி போட்டுக் கொடுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்தின் உழைப்பு பாராட்டுக்குரியது. அருண்ராஜின் பின்னணி இசை ‘தடம்’ பதிக்கவில்லை. கொஞ்சம் பிசகினாலும் பார்வையாளர்களால் புரிந்துகொள்ள முடியாமல்போகும் கதையை, தன் கச்சிதமான திரைக்கதையாலும், கூர்மையான வசனங்களாலும் மெருகேற்றியிருக்கிறார் மகிழ்திருமேனி. அந்த க்ளைமாக்ஸ்... தரம்!

தடம் - சினிமா விமர்சனம்

இரட்டையர்களை வைத்து எத்தனையோ கதைகள் வந்துவிட்டபோதிலும், எல்லாவற்றைவிடவும் தனித்துத் தெரியும் தடம், அருண்விஜய் - மகிழ்திருமேனி இருவருக்குமான மகுடம்.  

- விகடன் விமர்சனக் குழு