சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

திருமணம் - சினிமா விமர்சனம்

திருமணம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருமணம் - சினிமா விமர்சனம்

திருமணம் - சினிமா விமர்சனம்

வாரிசுகளின் திருமணத்துக்காக லட்சக்கணக்கில் செலவு செய்துவிட்டு அந்தக் கடனை அடைக்கப் பெற்றோரும், திருமணத்துக்குப் பிறகு குடும்பம் நடத்தும் செலவுகளுக்கு மணமக்களும் படும்பாட்டைக் கண்டித்துக் குரல் கொடுத்திருக்கிறார் சேரன். இக்காலத் திருமணங்களில் செய்ய வேண்டிய சில திருத்தங்களைச் சொல்கிறது அவரது ‘திருமணம் : சில திருத்தங்களுடன்.’

மணமகன் உமாபதி ராமய்யா நடிப்பில் ஜஸ்ட் பாஸென்றாலும், நடனத்தில் ஏ கிரேடு வாங்குகிறார். மணப்பெண், காவ்யா சுரேஷ் சில இடங்களில் சோபிக்கிறார், சில இடங்களில் சோதிக்கிறார். பெண்ணின் அண்ணன் அறிவுடை நம்பியாக வரும் சேரன், அட்சதைக்குப் பதில் அட்வைஸ் தூவுகிறார். சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், மனோபாலா, பாலசரவணன் என்று சுற்றமும் நட்பும் படத்தின் தேவையறிந்து நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் தம்பி ராமையாவுக்குக் கால் மணிநேரம் தனியாகவே ஒதுக்கிக் கொடுத்துவிட்டார்கள். இருவரும் நீயா, நானா என நடிப்பில் போட்டிபோட்டு விருந்து வைத்திருக்கிறார்கள்.

திருமணம் - சினிமா விமர்சனம்

படத்தின் கருத்து நன்றாக இருப்பினும் அதை சுவாரஸ்யமாகச் சொல்வதில் கொஞ்சம் திணறியிருக்கிறார் இயக்குநர். சில இடங்களில் சபேஷ் முரளியின் பின்னணி இசை தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்ய, சேனல் மாற்ற ரிமோட் தேடும் அளவுக்கு சீரியல் வாசம். யூத்-களின் டிரெண்டைப் பிடித்துக் காட்சி அமைக்கிறேன் என்ற பெயரில் வாட்ஸ் அப், பேஸ்புக், ஸ்மைலி எனக் காட்டியிருக்கும் ஐடியா, படம் முடிந்தபிறகு வரும் அந்த வாட்ஸ் அப் குரூப்பில் மட்டும் ‘அட’ சொல்ல வைக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தாங்கள் மனதில் நினைப்பதைப் பேசிக்கொண்டே இருப்பது உறுத்தல். ‘அமைதியா இருந்தா ஜெயிக்கலாம்’ என்று நாயகனிடம் சொல்வதை, கதாபாத்திரங்களும் கடைப்பிடித்திருக்கலாம்.

சேரன் ஒவ்வொன்றுக்கும் அட்வைஸ் செய்வது கொஞ்சம் அதிகம்போலத் தோன்றினாலும் அவையெல்லாமே ‘அட... சரிதான்ல!’ என்று பார்வையாளர்களைச் சொல்லவைக்கிறது. உயர் அதிகாரி ஜெயப்பிரகாஷ் கதாபாத்திரம் மூலம், அதிக செலவு செய்து திருமணம் செய்தால் என்ன நடக்குமென்று  புரியவைத்த விதம் சிறப்பு. சேரன்,  சுகன்யா இருவரையும் ஜோடியாக்காமல் அந்தக் கதாபாத்திரங்களை நேர்த்தியாகக் கையாண்டிருக்கும் விதம் சேரன் ஸ்பெஷல்! 

திருமணம் - சினிமா விமர்சனம்

ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு, கல்யாண வீடியோவைப் போல் கலர்புல்லாக இருக்கிறது. பாடல்களில் சித்தார்த் விபினும் பின்னணி இசையில் சபேஷ்-முரளியும் வெயிட்டான மொய் வைக்கத் தவறிவிட்டார்கள். பின்னணி இசை பல இடங்களில் சோதனை.

‘திருமணம் சில திருத்தங்களுடன்’, திரைக்கதையில் இன்னும் பல திருத்தங்கள் பண்ணியிருந்தால் கல்யாணம் களைகட்டியிருக்கும்.

- விகடன் விமர்சனக் குழு