மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 6: தமிழ்ல பேசலைன்னா ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுக்கணும்! - ரூபிணி

1980s evergreen Heroins - Rupini
பிரீமியம் ஸ்டோரி
News
1980s evergreen Heroins - Rupini ( Aval Vikatan )

டான்ஸ் இப்போவரை என் வாழ்க்கையில முக்கிய அங்கமா இருக்கு...!

மிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில் ரூபிணி.

1980s evergreen Heroins - Rupini
1980s evergreen Heroins - Rupini
Aval Vikatan

தென்னிந்திய சினிமாவில் ஜொலித்த நாயகிகள் சிலர் இந்தித் திரையுலகுக்குச் சென்று அசத்தினார்கள். ஆனால், இந்தித் திரையுலகில் புகழ்பெற்று, பிறகு தென்னிந்தியத் திரைப்படங்களிலும் அசத்தியவர் ரூபிணி மட்டுமே. அழகு, நடனம், நடிப்பு எனக் குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாகக் கலக்கியவர், தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

டாக்டர் டான்ஸர்!

பூர்வீகம் மும்பை. அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா ஆகியோர் வழக்கறிஞர்கள். என் அம்மாவின் அப்பா சயின்ட்டிஸ்ட், அம்மா டாக்டர். அதனால, நானும் நல்லா படிக்கணும் என்கிற எதிர்பார்ப்பு வீட்டில் நிறைய இருந்தது. நாலு வயசுல டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சேன். பப்ளி குழந்தையா இருந்ததால, நிறைய நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடுவதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. என்கிட்ட யாராவது ‘எதிர்காலத்தில் என்ன ஆகப்போறே?’னு கேட்டா, ‘டிடி’னு (டாக்டர் டான்ஸர்) சொல்லுவேன்.

1980s evergreen Heroins - Rupini
1980s evergreen Heroins - Rupini
Aval Vikatan

ஒருகட்டத்துல, படிப்பு பாதிக்கப்படக் கூடாதுன்னு வீட்டில் எனக்கு டான்ஸுக்குத் தடைபோட்டாங்க. ‘இன்னும் 15 வருஷத்துக்குப் பிறகு உலகம் ரொம்பப் போட்டி நிறைந்ததா மாறிடும். படிப்பு மட்டுமே குழந்தைகளுக்கு முக்கிய மில்லைங்கிற நிலை உருவாகும். அப்போது வருத்தப்படக் கூடாது’னு என் மாமாதான் போராடி மீண்டும் நான் டான்ஸ் கத்துக்க அனுமதி வாங்கிக்கொடுத்தார்.

ஒரு நடன நிகழ்ச்சிக்காக புது டிரஸ் எடுக்க அப்பாகூட கடைக்குப் போனேன். அங்க என்னைப் பார்த்த குஜராத்திப் பட தயாரிப்பாளர் ஒருவர், என்னை நடிக்கக் கேட்டார். ‘ரா நவ்கான்’ உட்பட ரெண்டு குஜராத்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமா நடிச்சேன். பிறகு என் டான்ஸ் குருவின் நண்பரான இயக்குநர் ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி, தன் `மிலி’ படத்தில் என்னை நடிக்கவெச்சார். பெரும்பாலும் ஒரே டேக்ல நடிச்சுடுவேன். டேக் அதிகமானால் அழுதுடுவேன். எனக்கு சாக்லேட், ரசகுல்லா கொடுத்து சமாதானப்படுத்துவாங்க. குழந்தை நட்சத்திரமா 15 படங் கள்ல நடிச்சேன்.

ஒன்பது வயதிலேயே ஹீரோயின்!

அப்போ மகாராஷ்டிரா முதல்வராக இருந்த வசந்த்தாதா பாட்டீலின் மனைவி ஷாலினி பாட்டீல், ஒரு மருத்துவமனை கட்ட நிதி திரட்ட பெரிய நிகழ்ச்சியை நடத்தினாங்க. அதுல நான் டான்ஸ் ஆடினேன். சினிமா, அரசியல்னு பல துறை பிரபலங்களும் என் டான்ஸைப் பாராட்டினாங்க. சில வாரத்துல பிரபல ராஜ்ஸ்ரீ தயாரிப்பு நிறுவனத்துலேருந்து எனக்கு ஹீரோயின் வாய்ப்பு வந்தது. எங்கம்மாவுக்கு அதிர்ச்சி. ‘பொண்ணு இப்போதான் ஐந்தாவது முடிச்சு ஆறாம் வகுப்புக்குப் போறா. இந்த வயசுல ஹீரோயினா? இப்போ வேண்டாம்’னு சொல்லிட்டாங்க. ‘உங்க பொண்ணுக்காகவே இந்த டான்ஸ் சப்ஜெக்ட் படத்தை எடுக்குறோம்’னு அவங்க வலியுறுத்த, ‘பாயல் கி ஜன்கார்’ படத்துல ஹீரோயினா அறிமுகமானேன். படம் பெரிய ஹிட்டாகி, ஆஸ்கர் விருதுவரை நாமினேஷன் செய்யப்பட்டது. தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள்  வர, என் பெற்றோருக்கு அதிர்ச்சி. ‘படிப்புதான் முக்கியம். இதுக்குதான் நடிப்பே வேண்டாம்னு சொன்னோம்’னு என் அம்மா மறுத்துட்டாங்க. பிறகு நாலு வருஷங்கள் நான் நடிக்கவேயில்லை.

பத்தாம் வகுப்புக்குப் பிறகு, மீண்டும் நிறைய வாய்ப்புகள் வர, மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சேன். ரிஷி கபூருக்கு ஜோடியா நடிச்ச ‘நாகினா’ மற்றும் `பஹார்’ உட்பட 10 இந்திப் படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். அவை எல்லாமே பெரிய ஹிட். இதுக்கிடையே சினிமாவில் பிஸியானதால் என்னால டாக்டருக்குப் படிக்க முடியலை. அதனால என் பெற்றோருக்கு ரொம்ப வருத்தம். நடிப்புக்கு இடையே பி.காம் முடிச்சேன். என் அம்மா புகழ்பெற்ற டாக்டராயிருந்தாலும், சினிமா கரியரில் நிழல்போல எனக்குத் துணையாக இருந்தாங்க.

1980s evergreen Heroins - Rupini
1980s evergreen Heroins - Rupini
Aval Vikatan

பூர்ணிமா... பாக்யராஜ்... ரூபிணி...

மும்பையைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை பூர்ணிமா பாக்யராஜின் பெற்றோர், என் அம்மாவின் பேஷன்ட்ஸ். நான் ஹீரோயினா நடிச்சுட்டிருந்தப்போ, பூர்ணிமா அக்காவும் இந்தியில நடிச்சுட்டிருந்தாங்க. ‘பட வாய்ப்புகள் இருந்தா ரெபர் பண்ணுங்க’ன்னு அவங்க என் அம்மாகிட்ட கேட்பாங்க. பாசில் சாரின் ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ பட வாய்ப்பு எனக்கு வந்தது. படிப்பு மற்றும் வெளிமாநில ஷூட்டிங் காரணங்களால் அதை மறுத்த அம்மா, அந்தக் கேரக்டருக்கு பூர்ணிமா அக்காவை பாசில் சார்கிட்ட ரெபர் பண்ணினாங்க. இப்படி எங்க ரெண்டு குடும்பத்துக்கும் நல்ல நட்பு இருந்தது.

நான் குச்சுப்புடி டான்ஸ் கத்துக்க, அப்போ அடிக்கடி சென்னை வருவேன். அப்படி ஒருமுறை சென்னை வந்திருந்தபோது, பூர்ணிமா அக்காவுக்குப் பெண் குழந்தை பிறந்திருந்தது. நானும் என் அம்மாவும் குழந்தையைப் பார்க்கப் போனோம். அப்போ, பாக்யராஜ் சார் அவரோட ‘சார் ஐ லவ் யூ’ படத்தில் என்னை ஹீரோயினா நடிக்கக் கேட்டார். குடும்ப நண்பர்கள் என்பதால நாங்க சம்மதிச்சோம். கோமல் மஹூவாக்கர்ங்கிற என் பெயரை மாத்தினால் நல்லா இருக்கும்னு பாக்யராஜ் சார் சொல்ல, பிறகு ரூபிணினு  மாத்தினோம். பாதி ஷூட்டிங் முடிஞ்ச நிலையில், அந்தப் படம் டிராப் ஆகிடுச்சு. ஆனாலும், ‘தீர்த்தக்கரையினிலே’ படத்துக்கு இயக்குநர் மணிவண்ணன் சார்கிட்ட என்னை சிபாரிசு பண்ணினாங்க, பூர்ணிமா அக்கா. அதில் மோகன் சாருக்கு ஜோடியாக நடிச்சேன்.

ஹிட் ஹீரோயின்... ஐந்து ரூபாய் அபராதம்!

‘தீர்த்தக்கரையினிலே’, ‘நினைக்கத் தெரிந்த மனமே’, ‘கூலிக்காரன்’, ‘மனிதன்’னு ஒரே நேரத்தில் நாலு படங்கள்ல நடிச்சேன். ஏற்கெனவே ‘மேரி அதாலத்’ இந்திப் படத்துல ரஜினி சார்கூட நடிச்ச நிலையில, ‘மனிதன்’ படத்துல அவருக்கு ஜோடியானேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்காக எங்கம்மா கொண்டுவரும் ஜூஸ் மற்றும் கேரட் ராய்த்தாவை ரஜினி சார் விரும்பிச் சாப்பிடுவார். `16 வயசுப் பொண்ணுகூட நடிக்கிறேன்’னு எல்லோர்கிட்டயும் சொல்லி சிரிப்பார். அந்தப் படத்துல ‘காளை காளை முரட்டுக்காளை’ பாடல் பேமஸ். ‘நான் உனக்கு இணையா டான்ஸ் ஆடுறேனா? எனக்கும் சொல்லிக்கொடு’ன்னு ஜாலியா பேசுவார்.

விஜயகாந்த் சார் மற்றும் ராமராஜன் சார்கூட நிறைய படங்கள்ல ஜோடியா நடிச்சேன். எங்க கெமிஸ்ட்ரி சிறப்பா பேசப்பட்டது. கார்த்திக் சார் தவிர, முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் நடிச்சேன். ‘என் தங்கை படிச்சவ’, ‘புலன் விசாரணை’, ‘புதிய ராகம்’னு குறுகிய காலத்துல நிறைய ஹிட் படங்கள்ல நடிச்சு முன்னணி நடிகையானேன்.

தமிழ் கத்துக்கணும்கிற ஆர்வத்தில், அப்போ கூட வொர்க் பண்ணினவங்க கிட்டயெல்லாம், ‘எல்லாரும் என்கிட்ட தமிழ்லதான் பேசணும். இல்லைன்னா ஐந்து ரூபாய் அபராதம் அல்லது நீங்க எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுக்கணும்’னு சொல்வேன். பெரிய ஸ்டார்ஸ்ல இருந்து எல்லாரும் என்கூட தமிழ்ல பேசி எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த நிகழ்ச்சிகளெல்லாம் மலரும் நினைவுகள்.

தென்னிந்திய சினிமா மற்றும் மக்களின் அன்பு எனக்குப் பிடிச்சுப்போக, சென்னையில குடியேறிட்டேன். எப்போதாவதுதான் மும்பை வீட்டுக்குப் போவேன். இதனால, இந்திப் படங்கள்ல நடிக்கிறதைத் தவிர்த்துட்டேன். தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் அப்போதைய சூப்பர் ஸ்டார்களுடன் நிறைய நல்ல படங்கள்ல நடிச்சேன். அங்கேயும் நிறைய ஹிட்ஸ் கிடைச்சது. இப்படி என் முதல் இன்னிங்ஸ்ல ஹீரோயினா 80 படங்களுக்கும் மேல் நடிச்சேன்.

1980s evergreen Heroins - Rupini
1980s evergreen Heroins - Rupini
Aval Vikatan

அப்பா எடுத்த அந்த முடிவு!

‘நடிச்சவரைக்கும் போதும். இனி சினிமா வேண்டாம். பீக்ல இருக்கும்போதே கல்யாணம் பண்ணிகிட்டா நல்லா இருக்கும். வாய்ப்பு குறையும்போது தாழ்வு மனப்பான்மை வரும். ரியல் லைஃப், ரீல் லைஃப் ரெண்டுக்குமான வித்தியாசத்தைப் புரிஞ்சுக்கோ. உடனே மும்பை வந்திடு’ன்னு என் பெற்றோர் சொல்லிட்டேயிருந்தாங்க.

அப்போ ‘பத்தினிப் பெண்’ படத்துக்காகக் கிடைச்ச சிறந்த நடிகை விருதால் உற்சாகத்தில் இருந்தேன். இன்னும் கொஞ்ச காலம் நடிக்கணும்கிற ஆசை இருந்தது. ஆனா, பொறுமையை இழந்த என் அப்பா, மும்பையிலிருந்து சென்னை வந்துட்டார். திடீர்னு எல்லா பொருள்களையும் பேக் பண்ணி, வலுக்கட்டாயமா என்னை சென்னை விமான நிலையத்துக்குக் கூட்டிட்டுப்போயிட்டார். நான் மூணு சூட்கேஸ் மேல ஏறி உட்கார்ந்துட்டு, ‘எனக்கு சினிமாவிலிருந்து விலக மனசில்லை’ன்னு குழந்தை மாதிரி அழுது அடம்பிடிச்சேன். தற்கொலை செய்துப்பேன்னு மிரட்டினேன். ‘உன்னைக் கூட்டிட்டுப்போகாம நான் போகமாட்டேன். உன் நல்லதுக்குதான் சொல்றேன். எதிர்காலத்துல நீயே புரிஞ்சுப்பே’னு அப்பாவும் என் பக்கத்துலேயே உட்கார்ந்துட்டார்.

‘நாளைக்குப் போகலாம்ப்பா’ன்னு சொல்லியே ஆறு நாள்களைக் கடத்திட்டேன். பிறகு சினிமாவிலிருந்து விலகி, மும்பை போயிட்டேன்.

ரெண்டு வருஷங்கள் எங்க வீட்டில் இருந்தபடி இந்தி, மராத்தி சீரியல்கள் மற்றும் விளம்பரப் படங்களை இயக்கினேன்; நடிச்சேன். இந்திப் பிரபலங்கள் பலரையும் என் விளம்பரப் படங்களில் நடிக்க வைத்தேன். அதிலும் பெரிய வெற்றிகளைப் பார்த்தேன். பிறகு அதுக்கும் வீட்டில் தடை விதிச்சுட்டாங்க. பின்னர், அமெரிக்காவில் நேச்சுரோபதி டிப்ளோமா கோர்ஸ் படிச்சேன். லண்டன்ல சில காலம் வசிச்ச நிலையில், கல்யாணம் பண்ணிக்கிட்டு மும்பையில் மீண்டும் குடியேறினேன். என் கணவர் மோகன் குமார் ராயணா, எனக்கு எல்லா வகையிலயும் சுதந்திரம் கொடுத்து ஊக்கப்படுத்தினார். அவர் மருத்துவத் துறையில பிசினஸ் பண்றார். நாங்க ஒரு ஹாஸ்பிடல் தொடங்கினோம்.

சேவை... ரீ-என்ட்ரி... டான்ஸ்...

‘சினிமா உனக்கு நிறைய புகழையும் வருமானத்தையும் கொடுத்திருக்கு. இதற்குக் காரணமான மக்களுக்கு ஏதாவதொரு வகையில் நீ நல்ல விஷயங்களைச் செய்யணும்’னு எங்கம்மா ஆலோசனை கொடுத்தாங்க. அத்துடன், மும்பையில் ‘ஸ்பர்ஷா பவுண்டேஷன்’ என்ற அமைப்பை 1996-ல் தொடங்கி, அதன் பொறுப்பை என்கிட்ட கொடுத்தாங்க. இப்போவரை இயங்கிவரும் இந்த அமைப்பில், ஏழைக் குடும்பத்து மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான கல்வி, மருத்துவம், உளவியல் உட்பட பல வகையிலயும் இலவச சேவை வழங்குறோம். வாழ்க்கைக்கு நிஜ அர்த்தம் கொடுக்கும், மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் பணி இது. இதற்குப் பிரபலங்கள் பலரும் உதவுறாங்க.

நான் சினிமாவில் நடிச்ச காலகட்டம், கனவு மாதிரிதான் இருக்கு. மக்கள் இன்னும் என் மேல் அன்பு காட்டுறாங்க. நல்ல கதைகள் வந்தால், மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுக்கலாம்!

பரபரப்பா நடிச்சிட்டிருந்த காலத்துலயும், உலகின் பல நாடுகளிலும் டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடனமாடினேன். ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியிலயும் டான்ஸ் ஆடினேன். ‘ராக் அனுராக்’னு டான்ஸ் இன்ஸ்டிட்யூட்டை 20 வருஷத்துக்கும் மேல நடத்திட்டிருக்கேன். டான்ஸ் இப்போவரை என் வாழ்க்கையில முக்கிய அங்கமா இருக்கு!

- நாயகிகள் பேசுவார்கள்!

கு.ஆனந்தராஜ்

சமாதானம் செய்த ஊர்வசி!

முதலில் சிங்கிள் ஹீரோயின் சப்ஜெக்ட்டா இருந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்துல நான் மட்டும் நடிச்சேன். திடீர்னு கதையில் மாற்றம் நடந்து, இன்னொரு ஹீரோயினா கெளதமி இணைந்தாங்க. எனக்கு விருப்பம் இல்லைன்னாலும், கமல் சார்தான் அப்பு கேரக்டருடன் டிராவல் பண்ற ரோல்ல என்னை நடிக்க வெச்சார். பிறகு ‘மைக்கேல் மதன காம ராஜன்’ படத்துல மீண்டும் அவர்கூட நடிச்சேன். அப்போ, அவர்கூட கிளாசிக்கல் டான்ஸ் ஆடுற மாதிரி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்க ஆசைப்பட்டேன். அதனால ‘சிவராத்திரி’ங்கிற கிளாமர் பாட்டுக்கு டான்ஸ் ஆடமாட்டேன்னு ஸ்டுடியோ வாசலில் கார்ல உட்கார்ந்து அழுதேன். நடிகை ஊர்வசியும், கமல் சாரும் என்னைச் சமாதானம் செய்து, அந்தப் பாட்டுக்கு ஆடவெச்சாங்க.

ஜெயலலிதாவின் அன்பு!

‘பத்தினிப் பெண்’ படத்தில் சவாலான போலீஸ் கேரக்டர்ல நடிச்சேன். அந்தப் படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கையால் கிடைச்சது. அவங்க சில நாள்களில் போயஸ் கார்டன் வீட்டுக்கு என்னை அழைச்சாங்க. ‘உங்க நடிப்பும் அழகும் வித்தியாசமா இருக்கு’ன்னு பாராட்டினாங்க.

எங்க ரெண்டு பேரின் குச்சுப்புடி டான்ஸ் குருவும் ஒருவர்தான். ‘டான்ஸ்ல இப்பவும் எனக்கு ஆர்வம் குறையலை. உடல்நிலையும் அரசியல் பணிகளும் அதுக்கு இடம்கொடுக்கலை’ன்னு மனம்விட்டுப் பேசினாங்க. என் கையைப் பிடிச்சப்போ, ‘உங்க கை ரொம்ப மென்மையா இருக்கு’ன்னு அவங்க சொல்ல, ‘என் கையைவிட உங்க கை ரொம்ப மென்மையா, வெண்ணெய் மாதிரி இருக்கு’ன்னு நான் சொல்ல, ஜெயலலிதா மேடம் சிரிச்சுட்டாங்க!