
பறக்கும் டம்போ பலே சாகசம்!
யானை என்ற அந்தப் பெரிய செல்லத்தை விரும்பாத மனிதர்களே இல்லை எனலாம். கோயில்கள், காடுகள் என எங்கும் யானைகள் என்றாலே ஆச்சர்யம் தருபவை. வீடியோக்களில் குட்டி யானைகள் அடிக்கும் லூட்டிகளை எத்தனைமுறை வேண்டுமானாலும் பார்க்கலாம். அப்படியான ஒரு லூட்டி குட்டி யானையின் கதைதான், டம்போ (Dumbo).

டம்போ என்னும் கற்பனையான யானைக்குட்டியை வைத்து 1941ஆம் ஆண்டிலேயே, அனிமேஷன் படம் ஒன்றை எடுத்துள்ளது வால்ட் டிஸ்னி. தற்போது, அதே பெயரில் புதிய கதையுடன் டம்போவை அழைத்துவந்துள்ளது.
அந்த சர்க்கஸில் புதிதாகப் பிறக்கிறது ஒரு யானைக்குட்டி. அனைவரும் ஆர்வத்துடன் பார்க்க வருகிறார்கள், அதிர்ச்சி...
அந்தக் குட்டியின் காதுகள் வித்தியாசமாக தரையைத் தொடும் அளவுக்கு நீண்டுள்ளது. யாருக்குமே அதைப் பிடிக்கவில்லை. எல்லோரும் அதனிடமிருந்து ஒதுங்கிச்செல்கிறார்கள்.
டம்போ எனப் பெயரிடப்பட்ட அந்தக் குட்டியும் எல்லாவற்றுக்கும் பயந்து நடுங்குகிறது. அங்கிருக்கும் இரண்டு சிறார்கள் மட்டும் டம்போ மீது அன்பு செலுத்துகிறார்கள். டம்போவால் பறக்க முடியும் என்ற வியப்பான விஷயம் தெரியவருகிறது. டம்போவுக்குப் பயிற்சி தருகிறார்கள்.

காதுகளையே சிறகுகளாகப் பயன்படுத்தி பறக்க ஆரம்பிக்கிறது டம்போ. இது, நலிவடைந்த அந்த சர்க்கஸ் கம்பெனிக்குப் பெரும் புத்துணர்வாக அமைகிறது. டம்போவை வாங்க முயல்கிறது ஒரு சுயநலக் குழு.
டம்போ அங்கிருந்து எப்படித் தப்பிக்கிறது? டம்போவுக்கும் அந்த சர்க்கஸுக்கும் என்ன ஆகிறது என்பதை சொல்கிறது மீதிக் கதை.
டம்போவைப் பார்த்துக்கொள்ளும் நபராக, காலின் ஃபாரெல். அவரது குழந்தைகள்தான் படத்தின் நிஜ ஹீரோக்கள். வில்லனாக பழைய ‘பேட்மேன்’ படத்தின், மைக்கல் கீட்டன். சர்க்கஸில் வேலை பார்க்கும் பெண்ணாக ஈவா க்ரீன் என கலர்ஃபுல் பட்டாளம்.
கடந்த 30 ஆண்டுகளாக திரைப்படங்களை இயக்கி வருகிறார் டிம் பர்டன். ஹாரர் , குழந்தைகளுக்கான ஃபேன்டஸி படங்கள் என இருவேறு களத்தில் பர்டன் அளவுக்குப் படங்களை வேறுபடுத்தி யாரும் எடுத்ததில்லை.

‘பேட்மேன்’, ஜானி டெப்பை வைத்து தொடர்ச்சியாக படங்கள், குழந்தைகளுக்கான ஃபேன்டஸி படங்கள் என 60 வயதிலும் தன்னை எனெர்ஜிட்டிக்காக வைத்திருக்கிறார் மனிதர்.
பழையன கழியாமல், அப்படியே தூசி தட்டி மீள் உருவாக்கம் செய்து வருகிறது டிஸ்னி. இந்த ஆண்டு டம்போவுக்குப் பிறகு வால்ட் டிஸ்னி சார்பில் அலாவுதீனும், தி லயன் கிங்கும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளை மட்டுமன்றி, பெரியவர்களையும் குழந்தையாக மாற்றி நெகிழவைக்கிறது டம்போ!
-கார்த்தி