Published:Updated:

குயில்களின் கூட்டணி!

குயில்களின் கூட்டணி!
பிரீமியம் ஸ்டோரி
News
குயில்களின் கூட்டணி!

குயில்களின் கூட்டணி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சுட்டிகளின் இசை அதிரடி,  ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6'.  தற்போது டாப் 5 போட்டியாளர்களுடன் ஃபைனலை நெருங்கியுள்ளது. அந்த 5 பேருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு ஜாலி ரவுண்ட்-அப்!

கானா பாடல்களை கெத்தாகப் பாடியபடியே மற்றவர்களைக் கலாய்த்துக்கொண்டிருந்த பூவையார், ‘‘நான் எட்டாம் வகுப்புப் படிக்கிறேன். இங்கே பாட வந்ததுக்கு அப்புறம் ரொம்ப ஃபேமஸ் ஆகிட்டேன். எங்க ஏரியாவுல நான்தான் மாஸு. ஸ்கூலுக்கு லீவு போட்டாலும் மிஸ் திட்டறதில்லே. என் அண்ணன் சொந்தமா கானா பாட்டு எழுதிப் பாடுவாங்க. அதைப் பார்த்துதான் எனக்கும் ஆசை வந்துச்சு. இப்போ, விஜய் சாரின் படத்தில் நடிக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசையில் பாடும் ஆசையும் இந்தப் படம் மூலமா நிறைவேறிடுச்சு. விஜய் சார், ‘சூப்பரா பாடறே, செமையா கலாய்க்குறே’ன்னு பாராட்டினார். எங்க அப்பா இறந்ததுக்கு அப்புறமா கானா பாடியே நானும் அண்ணனும் அம்மாவைப் பார்த்துக்கறோம். இன்னும் நல்லா பார்த்துக்கணும்'' என்று பொறுப்பாகப் பேசுகிறார்.

குயில்களின் கூட்டணி!

மெலடி கிங் ஹிரித்திக், பேசும்போதே குரலில் அவ்வளவு இனிமை. ‘‘நான் மலையாளி. தமிழ் அவ்வளவா பேசத் தெரியாது. வேலம்மாள் வித்யாலயா இணைப்புப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புப் படிக்கிறேன். எங்க ஸ்கூல்ல எல்லோரும் எனக்கு கிளாப்ஸ் பண்ணி கொடுத்த தன்னம்பிக்கைதான் இவ்வளவு தூரம் ஜெயிக்க வெச்சிருக்கு.  எஸ்.பி.பி சார் மாதிரி பெரிய பாடகர் ஆகணும்’’ என்று அழகாகச் சிரிக்கிறார்.

கனடாவிலிருந்து போட்டியாளராக வந்திருக்கும் சின்மயி, ‘‘வணக்கம் அக்கா! நான் கனடாவில் கிரேடு 9 படிக்கிறேன். அஞ்சு வயசுலயிருந்தே கர்னாடிக் மியூசிக் கத்துட்டிருக்கேன். எட்டு வயசில் ஸ்டேஜ் புரோகிராம் ஆரம்பிச்சிட்டேன். இந்த நிகழ்ச்சிக்காக படிப்புக்கு பிரேக் எடுத்திருக்கேன். ஃபைனல் முடிஞ்சதும் கனடா போய்டுவேன். அம்மாவோடு இங்கே இருக்கேன். அப்பா, பாட்டி, தங்கச்சியைப் பார்த்து நாலு மாசம் ஆகுது. அவங்களை மிஸ் பண்றேன்’’ என்றார் கொஞ்சம் ஏக்கமாக.

சின்சியராக பிராக்டீஸ் செய்துகொண்டிருந்த அக்‌ஷயா மற்றும் சூர்யாவிடம் சென்றோம். ‘‘இல்லே... இப்படிப் பாடக் கூடாது’', ‘‘இந்தப் பாட்டையே தேர்ந்தெடுக்கலாம்’' என்று பயிற்சியின் உச்சத்தில் இருந்தார்கள். ‘‘நாங்க ஜெயிச்சுட்டுப் பேசறோம். அதுக்குப் பதில் பாடிக் காட்டறோம். ஓகேவா?'' என்றபடி பாட ஆரம்பிக்க, கோடை வெயிலுக்கு ஐஸ்க்ரீம் போன்று குளிரவைத்தது.

ஜெயிச்சு வாங்க குயில்களா!

பூவையார் மற்றும் ஹிரித்திக் பேட்டியை வீடியோவாக காண...

https://www.youtube.com/watch?v=Dp3wzZG59Lc

-வெ.வித்யா காயத்ரி

படங்கள்: ப.பிரியங்கா