
பாரதிராஜா, பாலு மகேந்திரா இருவரின் படங்கள் நடிக்காதது எனக்கு வருத்தமா இருக்கு...
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், பானுப்ரியா.
அழகான கண்கள். வசீகர முகம். இயல்பான நடிப்பு. அபார நடனம். கொஞ்சலான குரல். இத்தகைய தனித்துவ குணங்களால் ரசிகர்களைக் கொள்ளைகொண்டவர், பானுப்ரியா. அவர் தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.
சினிமா வாய்ப்பும் ஏமாற்றமும்
பூர்வீகம், ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரி. எனக்கு ரெண்டு வயசானப்போ சென்னையில் குடியேறிட்டோம். சின்ன வயசில் ரேடியோவில் சினிமாப் பாடல்களைக் கேட்டால் டான்ஸ் ஆடுவேன். இதனால் பெற்றோர் என்னை முறையா டான்ஸ் கத்துக்க அனுப்பினாங்க. ஒருகட்டத்துல டான்ஸ் மேல எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுச்சு. அதனால ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு அடம்பிடிப்பேன். ஒருநாள் அண்ணனை அழைச்சுக்கிட்டு ஸ்கூல் முடியறதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்டேன். அதனால் கோபமான அம்மா, என்னைப் பயங்கரமா அடிச்சாங்க. முதலும் கடைசியுமா நான் அடிவாங்கின தருணம் அதுதான். அப்பா சினிமா விநியோகஸ்தரா இருந்தார். விடுமுறை நாள்களில் அம்மா மற்றும் தங்கையுடன் கோடம்பாக்கம் லிபர்டி தியேட்டருக்குப் படம் பார்க்கப் போவேன். சினிமாவில் நடிகர்களின் டான்ஸ் மற்றும் நடிப்பைக் கூர்ந்து கவனிப்பேன். எனக்குள்ளும் நடிப்பு ஆசை உண்டாச்சு.
பரதநாட்டிய அரங்கேற்றம் முடித்த பிறகு, நிறைய வெளிநிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆட ஆரம்பிச்சேன். இயக்குநர் பாக்யராஜ் சாரின் மனைவி பிரவீணாவும் நானும் டான்ஸ் கிளாஸ் நண்பர்கள். பிரவீணா அக்கா வீட்டில், நாங்க தோழிகள் பலரும் ரிகர்சல் பண்ணுவோம். அப்படி ஒரு தருணத்துல என்னைப் பார்த்த பாக்யராஜ் சார், ‘தூறல் நின்னுபோச்சு’ படத்தில் நடிக்கக் கேட்டார். அதற்கு என் பெற்றோரும் சம்மதம் சொல்ல, ரொம்ப உற்சாகமாகிட்டேன். ஆனா, என் சந்தோஷம் சிலநாள்கூட நீடிக்கலை. போட்டோ ஷூட்டுக்குப் பிறகு, `ரொம்பச் சின்னப் பொண்ணா இருக்கே... எட்டாவதுதானே படிக்கிறே, பத்தாவது முடிச்சுடு. அப்புறம் சினிமாவில் நடிக்கலாம்’னு பாக்யராஜ் சார் சொன்னார். ரொம்ப ஏமாற்றமா போயிடுச்சு.

அமிதாப் பச்சன் அளித்த விருந்து!
சினிமாவில் நடிக்கணும்னு நான் ரொம்ப ஆசைப்பட்டதால, பெற்றோர் அதுக்கான முயற்சிகளில் இறங்கினாங்க. `பானு’ங்கிற என் பெயரை, `பானுப்ரியா’னு மாத்தினோம். பாரதி - வாசு இணையர்களின் இயக்கத்துல `மெல்லப் பேசுங்கள்’ படத்துல ஹீரோயின் வாய்ப்பு கிடைச்சது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜெயராஜ், ஒரு சென்டிமென்ட்டுக்காக தன் அண்ணன், இயக்குநர் பாரதிராஜா சாரை போட்டோஷூட் செய்யச் சொன்னார். அப்போ பாரதிராஜா சார், `உனக்கு வசீகர முக அமைப்பு. சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு’னு வாழ்த்தினார். `அப்பாடா! இனி ஸ்கூல் போகத் தேவையில்லை’னு சந்தோஷப்பட்டேன். தொடக்கத்தில் சினிமா உலகம் எனக்குப் புதுமையான உணர்வைக் கொடுத்துச்சு. ரொம்பப் பயந்தேன். போகப்போக, நடிப்பும் சினிமா சூழலும் பழகிடுச்சு. ஆசை ஆசையாக நடிச்ச அந்த முதல் படம் ஹிட் ஆகலை. இனி என் சினிமா எதிர்காலம் என்ன ஆகுமோனு ஒருவித பயம் எனக்குள் இருந்துச்சு. ஆனாலும், அந்தப் படத்தில் என் நடிப்புக்குப் பாராட்டு கிடைச்சது. அப்போ பத்திரிகைகளில் வெளியான என் போட்டோவைப் பார்த்து, தெலுங்கில் `சித்தாரா’ பட வாய்ப்பு வந்துச்சு. அந்தப் படம் மூலம் ஒரு நடிகையா எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைச்சது.
‘சித்தாரா’ படத்தில் எனக்கு கிளாசிக்கல் டான்ஸர் ரோல். ‘வெண்நெல்லோ கோதாரி அந்தம்’கிற என் சோலோ பாடல் ஷூட்டிங் ராஜமுந்திரியில் உள்ள ஆற்றங்கரையில் நடந்துச்சு. பயங்கர வெயில். படம் ஹிட்டாகணும்னு, ரொம்ப மெனக்கெட்டு டான்ஸ் ஆடினேன். `எதுக்கு இப்படி ரிஸ்க் எடுத்து டான்ஸ் ஆடுறே?’னு பலரும் கேட்டாங்க. படம் ஹிட்டானதோடு, நிறைய விருதுகளும் கிடைச்சது. அந்தப் படத்தைப் பார்த்த அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் தம்பதி எங்க படக்குழுவினரை அழைச்சு விருந்து கொடுத்தாங்க. அவங்க ரெண்டு பேரும் என் நடிப்பையும் நடனத்தையும் வாழ்த்தியதை மறக்கவே முடியாது. பிறகு தெலுங்கில் மட்டுமே அதிக வாய்ப்புகள் வர, அங்கு முன்னணி நடிகையானேன். இதற்கிடையில், பத்தாம் வகுப்புக்கு மேல படிப்பைத் தொடர முடியலை.

நானா அந்த `சைதை தமிழரசி’?
ஒருநாள் பாக்யராஜ் சார்கிட்ட இருந்து அழைப்பு வந்துச்சு. `ஆராரோ ஆரிரரோ’ படக்கதையைச் சொல்லி என்னை ஹீரோயினா கமிட் பண்ணினார். இந்த முறை பாக்யராஜ் சார் படத்துல நடிக்கிறோம்னு சந்தோஷம். அப்போ நான் ரொம்பக் கலகலப்பா இருப்பேன். படத்துலயும் எனக்குத் துறுதுறு கேரக்டர். அந்தக் கதை ரொம்பப் பிடிச்சுப்போய், மரத்துல தாவிக்குதிக்கிறது, குறும்பு பண்றதுனு ரசிச்சு நடிச்சேன். அந்தப் படத்துக்காக எனக்குத் தமிழக அரசின் சிறந்த நடிகை விருது கிடைச்சது. பிறகு தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். `சத்ரியன்’, `பிரம்மா’, `கோபுர வாசலிலே’, `அழகன்’, `புது மனிதன்’, `காவியத்தலைவன்’னு நிறைய ஹிட் படங்கள்ல நடிச்சேன். அப்போ சினிமாவைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது. ரொம்ப பிஸியா, சந்தோஷமா நடிச்சிட்டிருந்தேன்.
சத்யராஜ் சார், கவுண்டமணி சார், `ஆச்சி’ மனோரமாகூட பல படங்கள்ல நடிச்சதால, எனக்கும் ஹியூமர் இயல்பா வந்திடுச்சு. `என்ன... பானும்மா எப்படி இருக்கே?’னு கவுண்டமணி சார் என்னைக் கேட்பார். காமெடி ரோல்ல நடிக்க நிறைய ஆலோசனைகள் கொடுப்பார். அதனால, `பங்காளி’ படத்துல `சைதை தமிழரசி’ ரோல்ல ரொம்ப ரசிச்சு நடிச்சேன். குறிப்பா, மேடையில் அரசியல்வாதியா வசனம் பேசி நடிச்சு முடிச்சுட்டு, விழுந்து விழுந்து சிரிச்சேன். அந்த ரோல்ல நடிச்சது நான்தானான்னு எனக்கே பலமுறை சந்தேகமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும். `காவியத்தலைவன்’ படத்துல நெகட்டிவ் ரோல்ல நடிக்க முதலில் தயங்கினேன்.
இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், நம்பியார், மனோரமா ஆகியோர் எனக்கு ரொம்ப ஊக்கம் கொடுத்தாங்க. இப்படி சீனியர்கள் பலரும் எனக்கு உதவியா இருந்ததால, துணிச்சலா பலவித ரோல்கள்லயும் நடிக்க முடிஞ்சது. ஷூட்டிங் இடைவேளை களில், ஆச்சி மனோரமா, அவங்க காலத்து சினிமா நிகழ்ச்சிகளை எங்களுக்குச் சொல்லுவாங்க. நடிப்பைத் தாண்டி, நிறைய பேசுவோம். மகிழ்ச்சியான காலகட்டம் அது. இதற்கிடையே, `தோஸ்தி துஷ்மன்’ல அறிமுகமாகி, நிறைய இந்திப் படங்கள்லயும் நடிச்சு பாலிவுட்லயும் பிரபலமானேன். கன்னடம் மற்றும் மலையாளத்திலும் நிறைய நல்ல படங்கள்ல நடிச்சேன். என்னைத் தொடர்ந்து, என் தங்கை சாந்திப்ரியாவும் நடிக்க வந்தாள்.
கமல் சார் அட்வைஸ்!
தமிழில் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் நடிச்சேன். `தளபதி’ படத்தில் ரஜினிகாந்த் சார்கூட நடிச்சாலும், அவருக்கு ஜோடியா நடிக்கலை. ஆனா, ஓர் இந்திப் படத்தில் நாங்க காதலர்களா நடிச்சோம். கமல்ஹாசன் சார்கூட ‘சுவாதி முத்யம்’ படத்துல நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தும், கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியலை. ஆனா, `மகராசன்’ படத்துல கமல் சார்கூட ஜோடியா நடிச்சேன். `நடிக்கிறதைத் தாண்டி, பிலிம் பெஸ்டிவல்களில் கலந்துக்கோங்க. பல மொழிப் படங்களையும் பாருங்க. அப்போதான் நடிப்பில் வெரைட்டி காட்ட முடியும். நம் திறமையை வளர்த்துக்க முடியும்’னு அவர் எனக்குப் பயனுள்ள அட்வைஸ் கொடுத்தார்.
ஒருபோதும் நான் வாய்ப்பைத் தேடி போனதில்லை. என் ஒரு படம் ஹிட்டானால், புதுசா நாலு பட வாய்ப்புகள் வரும். ஒரு படம் தோல்வியடைந்தால், வாய்ப்புகள் குறையும். சினிமாவில் இது இயல்பு என்பதால், ஒரு படத்தின் வெற்றி தோல்வி என்னை அதிகம் பாதிக்காது.
கூச்சம், ஈகோ பார்க்காம நல்ல கதைகளில் நடிச்சேன். நிறைய டான்ஸ் சப்ஜெக்ட் பட வாய்ப்புகள் எனக்கு ப்ளஸ்ஸாக அமைஞ்சது. 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருக்கேன். பாரதிராஜா சார் இயக்கத்தில் நடிக்காதது மட்டும் சின்ன வருத்தம். பாலு மகேந்திரா சாரின் படங்கள்லயும் என்னால நடிக்க முடியலை. `பொல்லாதவன்’ பட ஷூட்டிங்குக்கு, ஒருநாள் பாலு மகேந்திரா சார் வந்திருந்தார். `இவங்க திறமையான நடிகை. நல்ல கேரக்டர்ல இவங்களை நடிக்க வை’னு இயக்குநர் வெற்றிமாறன்கிட்ட சொன்னார். `பொல்லாதவன்’ல தொடங்கி இப்போவரை அம்மா ரோல்ல நடிச்சிட்டிருக்கேன். ஆனா, முன்புபோல சவாலான ரோல்கள் வருவதில்லை. அதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு. இதனாலயே இப்போ பெரும்பாலான படங்களைத் தவிர்த்திடுறேன்.

இதுவும் கடந்து போகும்...
இரு குடும்பத்தினரால் திருமணம் முடிவான பின்னர், என் கணவர் ஆதர்ஷ் கெளசலும் நானும் காதலர்களாகி, கல்யாணம் பண்ணிக்கிட்டோம். பிறகு நடிப்பை நிறுத்திட்டு கணவர், குழந்தைகள்னு வாழ ஆசைப்பட்டேன். என் கணவர் அமெரிக்காவுல ஒரு தனியார் சேனல்ல வேலைசெய்ய, அங்கே செட்டில் ஆனோம். அப்போ மீண்டும் எனக்கு சினிமா, சீரியல் வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. `வந்த வாய்ப்பை ரிஜெக்ட் பண்ணாதே... போய் நடிச்சுட்டு வா’னு கணவர் சொன்னார். அதன்படி பல மொழிகளில் நடிச்சேன். ஷூட்டிங் முடிச்சு அமெரிக்கா போனால், மறுபடியும் புது வாய்ப்பு வரும். அதனால என் கணவர்கூட அதிக நாள்கள் என்னால இருக்க முடியலை. இது தெரியாம பல மீடியாக்களில், எங்க ரெண்டு பேருக்கும் விவாகரத்தா கிடுச்சுனு எழுதினாங்க. அதனால வருத்தப்பட்டேன்.
`நீங்க சென்னைக்கே வந்துடுங்க. இங்க ஏதாவது பிசினஸ் பண்ணலாம்’னு கணவர்கிட்ட சொன்னேன். தன் வேலை மேல அவ்வளவு பிரியம் அவருக்கு. அதனால அவர் வரமுடியாத சூழல். நான் நடிப்பதைத் தவிர்த்துட்டு, 2007-ம் ஆண்டு அமெரிக்காவுக்குத் திரும்பினேன். எங்க வாழ்நாளில் மகிழ்ச்சியான காலம் அது. தவிர்க்க முடியாத சில படங்கள்ல மட்டும் நடிச்சிட்டிருந்தேன். அப்படித்தான் கடந்த ஆண்டு `கடைக்குட்டி சிங்கம்’ படத்துல நடிக்க, தமிழ்நாட்டுக்கு வந்திருந்தேன். அப்போ அமெரிக்காவில் இருந்த என் கணவருக்கு திடீர்னு மாரடைப்பு ஏற்பட்டு, இறந்துட்டார். தென்காசியில ஷூட்டிங்ல இருந்த எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டப்போ, `இப்படி ஒருநாள் என் வாழ்க்கையில வரணுமா'னு நொறுங்கிப்போயிட்டேன்.
என் கணவரின் மறைவு, ஈடுசெய்ய முடியாத இழப்பு. என்னை நம்பி இருக்குற எங்க பொண்ணு அபிநயாவின் எதிர்கால வாழ்க்கைக்கான பொறுப்பு நான்தான். அதை நான் நல்லபடியாகச் செய்யணும். சிங்கிள் பேரன்ட்டாக இருப்பது கஷ்டம்தான். என் அம்மாவும் அண்ணனும் துணையாயிருக்காங்க. என்னை நான் மீட்டெடுக்க தொடர்ந்து நடிப்பதுடன், டான்ஸ் கிளாஸும் தொடங்கப்போறேன்.
கு.ஆனந்தராஜ்,
படங்கள் : ப.சரவணகுமார்
அழகும் டயட்டும்
நான் மாநிறம். என் முகத் தோற்றத்துக்கும் உடலமைப்புக்கும் என் டஸ்கி ஸ்கின்தான் ப்ளஸ்னு முன்பு பேசப்பட்டுச்சு. குறிப்பா, என் கண்களும் பெரிய ப்ளஸ்ஸா அமைஞ்சது. அதனால், 90-களில் நிறைய கண் மை விளம்பரங்கள்ல நடிச்சேன். அப்போ டயட் கன்ட்ரோல்ல தீவிரமா இருப்பேன். என்னதான் பிடிச்ச உணவுகளா இருந்தாலும், ரொம்ப லிமிட்டாதான் சாப்பிடுவேன். ஜூஸ், மோர், இளநீர்தான் என் பிரதான உணவா இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்ல ஹீரோக்கள் பலரும் நான்-வெஜ் சாப்பிடும்போது, `நீயும் சாப்பிட வா! ஒருநாள் சாப்பிட்டா உடல் எடை கூடிடாது’னு சொல்லுவாங்க. ஆனாலும் நான் சாப்பிடமாட்டேன். உடலைக் கட்டுக்கோப்பாக வெச்சுக்க நீச்சல் மற்றும் டென்னிஸ் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்தினேன். அழகு விஷயத்துலயும் அதிக அக்கறை காட்டுவேன். இதனால நீண்ட காலத்துக்கு ஹீரோயினா எனக்குனு ஓர் அடையாளத்தைத் தக்கவெச்சுக்க முடிஞ்சது.
என் அமைதிக்குக் காரணம்!
சினிமாவில் புகழ், செல்வம்னு நிறைய கிடைச்சிருக்கு. இந்தத் துறையால் எனக்கு இதுவரை நல்லதுதான் நடந்திருக்கு. அடுத்த ஜென்மத்திலும் நடிக்கவே விரும்பறேன். ஹீரோயினா இருந்தப்போ சினிமாவிலும் நிஜத்திலும் ரொம்பக் கலகலப்பா இருந்தேன். வயசும் அனுபவங்களும் மாறிட்டு வருதே! கணவரின் மறைவுக்குப் பிறகு, இப்போ பேசுறதை குறைச்சுக்கிட்டேன். அமைதியா, எளிமையா இருக்கேன். இப்படி இருக்குறதுல எனக்கு ஒரு நிம்மதி கிடைக்குது.