அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

நட்பே துணை - சினிமா விமர்சனம்

நட்பே துணை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
நட்பே துணை - சினிமா விமர்சனம்

நட்பே துணை - சினிமா விமர்சனம்

‘ஃப்ரெண்ட்ஷிப்தான் எல்லாம்’ என நட்பைப் பாராட்டும் 2k கிட்ஸின் ‘முஸ்தபா முஸ்தபா’ இந்த ‘நட்பே துணை.’

நட்பே துணை - சினிமா விமர்சனம்

ஊரிலுள்ள எல்லா விளையாட்டு வீரர்களும் வந்தடையும் கூடு அந்த மைதானம். கடலுக்கு அருகே இருக்கும் அந்த மைதானத்தைக் குறிவைக்கிறார்கள் சில முதலாளிகள். அவர்களிடமிருந்து அந்த இடத்தைப் பாதுகாக்க முள்ளை முள்ளால் எடுக்கும் ஃபார்முலாவைப் பயன்படுத்தி விளையாட்டில் தோற்கடித்து விரட்டுகிறது ஹிப்ஹாப் ஆதி மற்றும் நண்பர்கள் குழு. இதை அதிரடி திருப்பங்கள் எதுவும் இல்லாமல் ஒரேமாதிரியாகச் செல்கிறது படம்.

துள்ளல் எனர்ஜியோடு ஜம்பிங் பாலாகச் சுழன்று செல்கிறார் ஹிப்ஹாப் ஆதி. தன் ரசிகர்கள் யார், அவர்களுக்கு என்ன தேவை என்பதை சரியாகப் புரிந்துவைத்திருக்கிறார். அதைத் திரையிலும் கொண்டுவந்துவிடுகிறார். ஹீரோயின் அனகா வழக்கமாக ஒரு ஹீரோயிச படத்தில் நாயகி என்ன செய்வாரோ அதையெல்லாம் செய்கிறார். கூடவே நன்றாக ஹாக்கியும் ஆடுகிறார். 

நட்பே துணை - சினிமா விமர்சனம்

‘நல்லவரா கெட்டவரா’ அரசியல்வாதியாக வரும் கரு.பழனியப்பன், மேனரிசத்தில் மணிவண்ணனை நினைவுபடுத்துகிறார். சில வசனங்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்.

நட்பே துணை - சினிமா விமர்சனம்



ஏகப்பட்ட யூட்யூப் நட்சத்திரங்கள் இருந்தாலும் கவனம் ஈர்ப்பது ‘எரும சாணி’ விஜய்யும் ஷா ராவும்தான். குறிப்பாக ஷா ராவின் சில ஒன்லைனர்கள் குலுங்க வைக்கின்றன. முதல் பாதியில் சூப்பர் கோச்சாக வரும் ஹரிஷ் உத்தமன் இரண்டாம் பாதியில் கருத்துமழை பொழிந்து நம்மை நனையவைக்கிறார்.

இசையும் ஹிப்ஹாப் தமிழாதான். மாஸ் நடிப்பில் சிஎஸ்கேவாக ஜொலிக்க... இசையில் ஆர்சிபியாகச் சறுக்கியிருக்கிறார்! இடைவெளியின்றி பி.ஜி.எம் வாசிக்கும் தவற்றை எல்லாப் படங்களிலும் செய்கிறார் ஆதி. ஜாலியான கலர்ஃபுல்லான முதல் பாதியிலும் பரபரப்பான க்ளைமேக்ஸிலும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கின் உழைப்பு தெரிகிறது.

ஹீரோயிச படம்தான். அதற்காக இத்தனை பில்டப் காட்சிகளா? இன்ட்ரோ காட்சிகளே ஸ்கிரிப்ட் புக்கில் பாதி இடத்தை அடைத்திருக்கும் போல! திரைக்கதை 30 ஆண்டுக்கால பழைய ஃபார்முலா என்பதால் ‘அடுத்தென்ன இதானே?’ என சுலபமாகக் கணிக்க முடிகிறது.

பாட்ஷா பாய் லெவல் ஃப்ளாஷ்பேக்கும் சரி, அரசியல்வாதிகளோடு ஆடப்படும் கண்ணாமூச்சி ஆட்டத்திலும் சரி, 0.1 சதவிகித லாஜிக் கூட இல்லை. என்ட் ரிசல்ட் தெரிந்ததுதான் என்றாலும் கதையை பரபரப்பாகச் சொன்னவிதத்தில் படக்குழுவிற்கு தம்ஸ் அப்!

- விகடன் விமர்சனக் குழு